நேற்று ஒரு பேரழகியைச் சந்தித்தேன். பாலைவன வாழ்க்கையில் இப்படி எப்போதாவது நடப்பதுண்டு. பேரழகி பேசும் போது ஸ் ஸ் ஸ் என்று ஒலி எழுப்பிக் கொண்டிருந்தார். என்ன பிரச்சினை என்றேன். வாயில் கொப்புளம் என்றார். அதற்கு ஒரு பவர்ஃபுல் மருந்து எனக்குத் தெரியும். சொன்னால் வயதானவர், பெருசு என்பார்கள் என்பதால் சும்மா இருந்து விட்டேன். இருந்தாலும் மனசுக்குள் அடித்துக் கொண்டது. இப்படி மருந்து தெரிந்தும் சும்மா இருக்கிறோமே என்று. இன்றைய தினம் தற்செயலாக அதிர்ஷ்டவசமாக அந்தப் பேரழகியை மீண்டும் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. பேரழகி என்பதால் மேட்டுக்குடி என்று சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
எடுத்த எடுப்பில் blisters எப்படி இருக்கு, பரவாயில்லையா என்று கேட்டேன். ulcers are slowly getting cured என்றார் புன்முறுவலுடன். அல்சர்ஸ் என்பதில் கொஞ்சம் அதிக அழுத்தம் கொடுத்தாரோ என்று சந்தேகமாக இருந்தது.
செம மொக்க வாங்கினோமே என்று நினைத்துக் கொண்டேன். பிறகுதான் வந்து அல்ஸருக்கும் ப்ளிஸ்டருக்குமான வித்தியாசத்தைப் படித்துத் தெரிந்து கொண்டேன். அல்சர் உடம்பின் உள் உறுப்பில் வருவது. ப்ளிஸ்டர் வெளியே.
சே, இனிமேல் மேட்டுக்குடிப் பேரழகிகளிடம் தமிழிலேயே பேசுவது என்று முடிவு செய்து விட்டேன்.