இதுவரை எனக்கு எத்தனையோ பேர் உதவியிருக்கிறார்கள். உதவிக் கொண்டும் இருக்கிறார்கள். உங்களின் உதவியினால்தான் என் ஜீவனோபாயமே நடந்து கொண்டிருக்கிறது. அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். இந்த அளவுக்கு ஒரு வாசகர் குழு ஒரு எழுத்தாளனை வாழ வைக்குமா என்று உலக சரித்திரத்திலேயே பார்க்க இயலாது என்றுதான் நினைக்கிறேன். ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு எழுத்தாளர் – பெயர் மறந்து விட்டது, சீனி சொன்னார் – அவர் புத்தகத்தை அவரேதான் வெளியிடுவாராம். விலை என்று எதுவும் இல்லை. நீங்கள் கொடுப்பதுதான். ஆனால் குறைந்த பட்ச விலை என்று ஆயிரம் ரூபாய் என நீங்களே நிர்ணயித்துக் கொள்ளுங்கள், ஒரு லட்சம் கூடக் கொடுக்கலாம், என் எழுத்துக்கு விலையே இல்லை என்று பின்னட்டையில் போட்டிருப்பாராம். ஆனால் என் விஷயம் வேறு. ’பணத்தைப் பற்றி நீ கவலையே படாதே, அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீ எழுதிக் கொண்டே இரு’ என்று சொல்லும் ஒரு நூறு வாசகர்களாவது எனக்கு உண்டு. பதினைந்தாயிரம் ரூபாய் ஊதியத்தில் ஐநூறு ரூபாய் அனுப்புகின்ற வாசகரிலிருந்து “உங்களுக்கு எப்போது என்ன தேவையென்றாலும் போன் கூடப் பண்ண வேண்டாம், எனக்கு ஒரு மெஸேஜ் அனுப்புங்கள், போதும்” என்று சொல்கிற நண்பர்கள் வரை எனக்கு உண்டு. ஒருமுறை அதை சோதித்துப் பார்ப்பதற்காக ”சந்த்தியாகோ வரை போய் வர டிக்கட் வேண்டும்” என்று மெஸேஜ் அனுப்பினேன். நம்ப மாட்டீர்கள். டிக்கட் வரவில்லை. ஒரு மஞ்சள் பை வந்தது. பிரித்துப் பார்த்தால் கத்தை கத்தையாகப் பணம். மூணு லட்சம். இதில் டிக்கட் வாங்கிக் கொள்ளுங்கள். வீசா கிடைத்ததும் செலவுப் பணத்தை அனுப்புகிறேன் என்று ஒரு சிறிய காகிதக் குறிப்பு. நான் சீலேவுக்கு ஏன் கடுங்குளிர் காலத்தில் போனேன் என்றால் இதுதான் காரணம். பணம் கிடைத்தவுடன் போய் விட வேண்டும் என்று இருபது ஆண்டுகளாக யோசித்துக் கொண்டிருந்தேன் இல்லையா, கிளம்பி விட்டேன். மிக மிகக் கொடுமையான பனிக்காலத்தில் – சுற்றுலாப் பயணிகள் வராவே வராத மாதத்தில் கிளம்பி விட்டேன். அதனால்தான் பொலிவியாவில் எனக்கு மூச்சு விட முடியாமல் போய் ஆறு லட்சம் பட்ஜெட் பனிரண்டு லட்சமாக மாறியது. அந்த ஆறு லட்சத்தையும் என் வாசக நண்பர்கள்தான் அனுப்பினர். அதுவும் ஒரே வாரத்தில். அதுவும் நான் சந்த்தியாகோவில் அமர்ந்து கொண்டு பணம் கேட்டேன். அந்த மாதிரி ஒரு ஏமாற்றுவேலை உலகளாவிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் ஒரு தமிழ் ஆள் என்னுடைய ஹாட்மெயில் ஐடியைக் களவாடி, நான் எழுதுவது போலவே எழுதி – நான் ஆங்கிலத்தில் capital எழுத்தைப் பயன்படுத்த மாட்டேன் – நான் இப்போது மலேஷியாவில் பாஸ்போர்ட்டைத் தொலைத்து விட்டேன், போலீஸ் பிரச்சினை, 3000 டாலர் உடனடியாக வேண்டும், ஆளுக்கு முன்னூறு டாலர் அனுப்பினால் போதும் என்று என் நெருங்கிய வாசகர்கள் அத்தனை பேருக்கும் மின்னஞ்சல் போட்டிருக்கிறான். நல்லவேளை, எல்லோருக்கும் என் போன் நம்பர் தெரியும் என்பதால் போன் செய்து கேட்டார்கள். இந்தக் காலத்தில் தகவல் தொழில்நுட்பம் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாதபடி வளர்ச்சி அடைந்து விட்டதால், ‘நான் இந்த நாட்டில் மாட்டிக் கொண்டேன், பணம் அனுப்பு’ என்று கேட்டால் அதன் நம்பகத்தன்மையை ஒரு நொடியில் கண்டுபிடித்து விடலாம். நான் சந்த்தியாகோவிலிருந்து பணம் கேட்டபோது யாரும் என் வேண்டுகோளைப் பற்றி அப்படி நினைக்கவில்லை. அதுவரை என்னிடம் தொடர்பில் இல்லாதவர்கள் கூட பணம் அனுப்பினார்கள். ஆனால் எனக்கு அப்போது இரண்டு சாத்தியங்கள் இருந்தன. ஒன்றுமே செய்யாமல் சந்த்தியாகோ தெருக்களைச் சுற்றி வந்து கொண்டிருக்கலாம். அப்படி ஒருநாள் செய்து பார்த்தேன். இரண்டாவது சாய்ஸ், வாசகர்களின் பணத்தில் பல ஊர்களுக்குப் போகலாம். ஒற்றை ஆள் என்பதால் கன்னாபின்னா என்று செலவு ஆகும். ஆனது. பணமும் அனுப்பினார்கள். அதனால்தான் சொன்னேன், என் அளவுக்கு வாசகர்களால் கொண்டாடப்படக் கூடிய ஒரு எழுத்தாளன் அரிதுதான் என்று. அதே சமயம், ஸ்தாபனம் என்னைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது, இருட்டடிப்பு செய்கிறது என்பதிலும் சந்தேகம் இல்லை. குறிப்பாக, பழுப்பு நிறப் பக்கங்கள் ஸ்தாபனத்தால் கவனிக்கப்பட்டிருக்க வேண்டும். நடக்கவில்லை. அதனால் எனக்கு நஷ்டமும் இல்லை. முன்னோடிகளின் பெயர் தெரிந்திருக்குமே என்று எதிர்பார்த்தேன். நடக்கவில்லை.
நீங்கள் எப்படி என்னைக் கொண்டாடுகிறீர்களோ அதேபோல்தான் நானும். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களை அப்படித்தான் நானும் கொண்டாடுகிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு – இல்லை, அதற்கும் மேலே இருக்கும் – பழுப்பு நிறப் பக்கங்களுக்காக ஆ. மாதவனைப் படித்த போது எட்டாவது நாள் கதையையும் படித்தேன். உலகிலேயே மிகச் சிறந்த பத்து சிறுகதைகளில் ஒன்று எனத் தோன்றியது. குறுநாவல். எனக்கு ரொம்ப நாளாகவே வெள்ளித்தட்டில் சாப்பிட வேண்டும் என்று ஆசை. பலரும் சிறிய தட்டுகளில் சாப்பிடுவார்கள். எனக்குத் தட்டு பெரிதாக இருக்க வேண்டும். குழம்பு சோறு சாப்பிடும் போது பொறியல் வறுவல் கீரை எல்லாவற்றையும் சாப்பாட்டுத் தட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கென்று சின்னச் சின்ன தட்டு வைக்கக் கூடாது. பெரிய வெள்ளித் தட்டுக்கு எங்கே போவது? இன்னமும் ஆசை நிறைவேறவில்லை. ஆனால் இன்னொருத்தருக்குக் கொடுக்கலாம் இல்லையா? நல்ல கனமான பெரிய வெள்ளித்தட்டு ஒன்றை வாங்கினேன். திருவனந்தபுரம் போய் மாதவனை நேரில் பார்த்து தட்டைக் கொடுத்தேன்.
அந்த அளவுக்கு என்னைக் கொண்டாடும் நண்பர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர் பேராசிரியர் டாக்டர் குமரவேள். பிராணிகள் நல மருத்துவத் துறையில் பேராசிரியர், ஆராய்ச்சியாளர், அந்தத் துறையில் விஞ்ஞானி. நல்ல சோதிடரும் கூட. (இன்னும் நான் கட்டம் கொடுக்காத ஒரே சோதிடர் அவர்தான்) அவர் நேற்று எனக்குச் செய்த உதவியை என் வாழ்நாளில் மறக்க இயலாது. அது ரொம்பப் பெரிய கதை. விரிவாக எழுத இப்போது நேரமில்லை. க.நா.சு. குறித்த ஸூம் சந்திப்புக்காகப் படித்துக் கொண்டிருக்கிறேன். சுருக்கமாகச் சொல்கிறேன். ஸிஸ்ஸி தாய்ப் பூனை. அது தன் முதல் பிரசவத்தில் போட்ட இரண்டு குட்டிகளை அதன் அஜாக்கிரதையால் சாகக் கொடுத்து விட்டது. பொத்திப் பொத்தித்தான் பாதுகாத்தது. ஆனால் ஒருநாள் இரவு கடுமையான மழை பெய்த போது ஸிஸ்ஸி வேறு எங்கோ போய் விட்டது போல. குட்டிகள் ரெண்டும் செம வால். வெளியே வந்து மழையில் நனைந்து இறந்து விட்டன. குட்டிகள் மழையில் நனைந்தால் உடனடியாக இறந்து விடும். பிறந்து இருபது நாள் இருக்கும். அதன் பிறகு அது புஸ்ஸி என்ற தாய்ப் பூனை போட்ட மூன்று குட்டிகளைத் தத்து எடுத்துக் கொண்டது. ஏனென்றால், புஸ்ஸி ஒரு பொறுப்பற்ற தாய். சென்ற ஆண்டோ என்னவோ ஒரு தாய் தன் காதலனுக்காகத் தன் மகனையே விஷம் கொடுத்துக் கொன்றாள் இல்லையா, மனித இனத்தில் அப்படிப்பட்ட தாய்மார்களெல்லாம் இருக்கும் போது புஸ்ஸி கொஞ்சம் பாசமற்று இருக்கக் கூடாதா? நிஜத் தாய் பாசமற்று இருந்ததால் அதன் மூன்று குட்டிகளையும் ஸிஸ்ஸி தன்பால் எடுத்துக் கொண்டது. ஏற்கனவே தன் அஜாக்கிரதையினால் குட்டிகளை இழந்த துயரம் வேறு.
அப்போதுதான் ஒரு மழை இரவில் அந்த மூன்று குட்டிகளும் இறந்து விடக் கூடாதே என்று கத்தோ கத்து என்று கத்தி ஊரைக் கூட்டியிருக்கிறது ஸிஸ்ஸி. நள்ளிரவு. நான் சீலேயில் இருந்தேன். மனிதர்களுக்குக் கவலையே இல்லை. எது கத்தினால் நமக்கு என்ன? Survival of the fittest. எது வலுவானதோ அது பிழைக்கும். இப்படிப்பட்ட அயோக்கியப் பதர்களைப் படைத்ததற்காகக் கடவுளே வெட்கப்படுவான். அந்த நள்ளிரவில் ஸிஸ்ஸியின் கதறல் கேட்டு கீழே இறங்கிப் போன அவந்திகா மூன்றையும் எடுத்துக் கொண்டு வந்தாள். வெளியிலேயே வளர்ந்த எங்கள் ஸிஸ்ஸியும் வீட்டுக்குள் வந்தது. அந்த நள்ளிரவில் வந்ததுதான். அதற்கு மேல் நான்குமே வீட்டை விட்டுப் போகவே இல்லை. ஸிஸ்ஸி மட்டும் அவ்வப்போது வெளியே போய் தன் ஆண் துணையைப் பார்த்து விட்டு வரும்.
இது 200 பக்க மேட்டர் என்பதால் கதையைச் சுருக்குகிறேன். இப்போது மொத்த பூனை நான்கு. ஸிஸ்ஸியும் ஒரு குட்டி போட்டது. மொத்த பூனை ஐந்து. அதன் பெயர் லக்கி. அது calico ரகப் பூனை. ஸிஸ்ஸியின் மூன்று வளர்ப்புப் பூனைகளின் பெயர் ஸ்கோக்கி, பெல்லா, கிட்டி. முதல் இரண்டும் ஆண். கடைசி பெண். பூனைகளுக்கும் இன்ஸெஸ்ட் taboo எல்லாம் உண்டு. தாயிடம் ஒருபோதும் போகாது. தாய் தாய்தான். ஆனால் சகோதர சகோதரி இன்செஸ்ட் பூனைகளில் இல்லை. (நாய்களிலும் கடுமையான பாலியல் ஒழுக்க விதிகள் உள்ளன) அதன் காரணமாக, பெண் பூனை கிட்டி இரண்டு குட்டிகளை ஈன்றது. இப்போது பூனைகளின் எண்ணிக்கை ஏழு. இதுவே கீழ்த்தள வீடு என்றால், இருபது பூனைகள் கூட வளர்க்கலாம். இப்போது கீழ்த்தளத்தில் இருக்கும் பத்துப் பனிரண்டு பூனைகளுக்கு உணவு கொடுக்கிறோம். அவை வந்து சாப்பிடும். போய் விடும். ஆனால் இந்த ஏழு பூனைகளின் மலஜலம்? ஒரு பெரிய பிளாஸ்டிக் பேசினில் கடல் மண்ணைப் போட வேண்டும். அதில்தான் ஐந்தும் மலஜலம் போகும். குட்டிகள் மட்டும் அந்தப் பழக்கத்தைக் கொள்ளாமல் கண்ட இடத்தில் போயின. கிட்டி குட்டி போட்டு விட்டதால் ஸ்மோக்கிக்கும் பெல்லாவுக்கும் பெண் துணை இல்லை. பூனைக்குக் காம நிவர்த்தி கிடைக்காவிட்டால் பைத்தியம் பிடித்து விடும். அதனால் ஸ்மோக்கி நாள் பூராவும் கறாபுறா என்று கத்த ஆரம்பித்தது. தகரத்தை சிமிட்டித் தரையில் தேய்த்தால் எப்படி இருக்கும்? அது போல் இருபத்து நாலு மணி நேரமும். அது உறங்கும் நேரம் தவிர. இதனால் ஒட்டு மொத்த பூனைக் குடும்பத்தின் லயம் கெட்டு கிட்டியும் ஸ்மோக்கியும் கண்ட இடங்களில் மூத்திரம் போக ஆரம்பித்தன. ஏற்கனவே இரண்டு குட்டிகளும் கண்ட இடங்களிலும் மூத்திரம். ஸ்மோக்கிக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை, கண்ட இடத்திலும் மூத்திரம். ஃப்ரிஜ்ஜுக்கு மேலே. தண்ணீர்க் கேனில். சமையல் பாத்திரங்களின் மேலே. (எல்லா பாத்திரங்களையும் திரும்பவும் தேய்க்க வேண்டும்) என் கணினியின் மேல் (இரவில்). ஸ்மோக்கியின் எதிர்ப்பு என்னவென்றால், இங்கிருந்து அது வெளியே போக வேண்டும். கடுவன் பூனைகள் எல்லாமே வீட்டில் தங்காது. ஆனால் வெளியில் எடுத்துப் போனாலே அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்தது. கிட்டத்தட்ட வீடே மெண்ட்டல் அஸைலம் மாதிரி மாறியது.
எனக்கு ஒரு மெண்ட்டல் அஸைலத்திலிருந்து கொண்டு எழுதுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நம் குருநாதர் மார்க்கி தெ ஸாத் (Marquis de Sade) மெண்ட்டல் அஸைலத்திலிருந்து எழுதினார். சிறையிலிருந்து எழுதினார். காகிதம் கூட மறுக்கப்பட்ட நிலையில் கக்கூஸில் உள்ள டிஷ்யூ பேப்பரில் எழுதினார். அவரோடு ஒப்பிட்டால் என் நிலை பரவாயில்லை. இத்தனை ஆண்டுகள் படு வசதியில் எழுதியிருக்கிறேன் இல்லையா, அதனால் இப்போதைய நிலையை விமர்சிக்கக் கூடாது.
ஒரு கட்டத்தில் வெளியே விடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆனது. மூத்திரப் பிரச்சினையோடு இன்னும் இரண்டு பிரச்சினைகள் சேர்ந்தன. ஒன்று, ஸ்மோக்கியும் பெல்லாவும் கிட்டியை முன்வைத்து உலக யுத்தம் நடத்தியது. இருபத்து நாலு மணி நேரமும் உறுமலும் சண்டையும். அவந்திகாவினால் தூங்கவே முடியவில்லை. அடுத்து, லக்கி பெண் என்பதால் லக்கியை ஸ்மோக்கியும் பெல்லாவும் வன்கலவி செய்ய ஆரம்பித்தன. ஆம், வன்கலவிதான். ஏனென்றால், calico பூனைகள் அவ்வளவாக லிபிடோ இல்லாமல் இருக்கும். அல்லது, லக்கி அப்படி. ஒரே கதறல், ஒரே சத்தம், ஒரே அடிதடி. லக்கியின் கதறல், ஸ்மோக்கி பெல்லா இரண்டின் ரகளை.
ஸிஸ்ஸியையும் லக்கியையும் தவிர மற்ற ஐந்தையும் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கொண்டு போய் விட்டுவிடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தோம். அங்கே விட்டால் அவற்றின் உயிருக்குக் கூட உத்தரவாதம் இல்லை. சாப்பாடு கிடைக்கும். படகில் இறங்குபவர்கள் போடும் மீன் கட்டாயம் கிடைக்கும். ஆனாலும் இது நம் குழந்தைகளைக் கொண்டு போய் கடற்கரையில் விடும் செயலைப் போன்றது. எங்களுக்கோ வேறு வழி தெரியவில்லை. இப்படி ஒரு முடிவுக்கு வந்ததன் காரணம், மூத்திரம் கூட இல்லை. இரவில் ஸ்மோக்கியும் பெல்லாவும் போட்டுக் கொண்ட ரகளையும் ஊளையும்தான். வீடே இரண்டு பட்டது. இன்னும் வைத்திருந்தால் அண்டை அயலார் வீடுகளிலிருந்து புகார் வருவது நிச்சயம்.
இருந்தாலும் அவந்திகாவுக்கும் எனக்கும் பூனைகளை அனாதையாக பட்டினப்பாக்கத்தில் விட இஷ்டமில்லை. நாகேஸ்வர ராவ் பூங்காவில் விடலாம் என்றால் கொரோனா காரணமாக பார்க் இன்னமும் மூடியிருக்கிறது. அங்கே ஏற்கனவே இருந்த பத்து பூனைகளின் கதை தனிக் கதை. இதையே நான் படு சுருக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். என்ன செய்யலாம் என்று தெரிந்த நண்பர்கள் அத்தனை பேரிடமும் விசாரித்தேன். யாருக்கும் வழி தெரியவில்லை. அப்போதுதான் டாக்டர் குமரவேள் முன்வந்து ஒரு பிராணிகள் நல சரணாலயத்தை அறிமுகப்படுத்தினார். அங்கே கொண்டு போய் விடுவது ஒன்றும் சாதாரண காரியம் இல்லை. அதற்கும் முன்பாக டாக்டர் குமரவேள், பூனைக்குட்டிகள் வளர்க்கப் பிரியம் உண்டா என்று அவரது முன்னாள் மாணவர்கள் ஒரு நூறு பேரிடம் கேட்டிருக்கிறார். அவரது மாணவர்கள் யாவரும் இப்போது பிரபலமான பிராணி நல மருத்துவர்கள். என் பூனை என்று சொல்லாமல் இதற்கு சம்பந்தம் இல்லாத தன் நண்பர்கள் பலரிடமும் கேட்டிருக்கிறார். தமிழச்சி எம்.பி.யிடம் கூடக் கேட்டிருக்கிறார். கடைசியில் கிடைத்ததுதான் Society for the Prevention of Cruelty to Animals. வெப்பேரியில் பிராணி நல வைத்தியசாலைக்கு எதிரே உள்ளது. நேரில் வந்து நாலு பூனைகளை எடுத்துக் கொண்டு போனார்கள். ஒரு வரியில் எழுதி விட்டேன். அதெல்லாம் பெரிய கதை. ஸ்மோக்கியும், கிட்டியும் அதன் இரண்டு குட்டிகளும் போய் விட்டன. இப்போது ஸிஸ்ஸியும், பெல்லாவும், லக்கியும் மட்டுமே உள்ளன. அவையும் தங்கள் குடும்பத்தைப் பிரிந்ததால் எதுவும் சாப்பிடாமல் பேசாமல் பதுமை போல் அமர்ந்திருக்கின்றன. இந்த மூன்றையும் அனுப்பாததற்குக் காரணம், பெல்லாவை யாரும் பிடிக்க முடியாது. மேலும், ஸிஸ்ஸி இப்படி எதிர்வினை செய்யும் என்று தெரியாது.
பெல்லாவும் ஸ்மோக்கியும் போட்டுக் கொண்ட சண்டையில் அவந்திகா ஒரு வாரமாக உறங்கவில்லை. இன்று காலையில் திருப்தியான குரலில் நேற்றாவது நன்கு உறங்கினாயா என்று கேட்டேன். நம் குழந்தைகள் அங்கே நன்றாக இருக்குமா என்றாள் அழுது கலங்கிய முகத்துடன். அதற்குப் பிறகு டாக்டர் குமரவேளிடம் மீண்டும் பேசினேன். அவர் பிராணிகளின் மூளைச் செயல்பாடு பற்றிய ஆராய்ச்சிகள் செய்து பட்டம் வாங்கியவர். பிராணிகளிலேயே பூனைகளுக்குத்தான் adaptability அதிகம் என்றார் டாக்டர் குமரவேள். பூனைகள் நாய் போல் அல்ல. நாயை எஜமானனிடமிருந்து பிரித்தால் பட்டினி கிடந்து செத்துப் போகும். பூனைக்கு அப்படி அல்ல. மூளையில் அந்த செல் இல்லை. சுலபமாக புதிய சூழலுக்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும்.
வீட்டு மூத்திரக் காட்டை சுத்தம் செய்து விட்டு அவந்திகா காலை உணவு உட்கொள்ள மதியம் பனிரண்டு மணி ஆகிக் கொண்டிருந்தது. தினமும். இனி நிலைமை சீரடையும். டாக்டர் குமரவேள், என்னையும் அவந்திகாவையும் காப்பாற்றினீர்கள். வாழ்நாள் முழுதும் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன்.
***
மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai