153. ஒரு ஜாலியான மேட்டர்…

படித்து செம ஜாலியாக ஆகி விட்டதால் இதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எழுதுகிறேன்.  மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள டி. தர்மராஜ் என் மதிப்புக்கு உரியவர்.  தமிழ்நாட்டில் நான் மதிக்கும் ஒன்றிரண்டு புத்திஜீவிகளில் அவர் ஒருவர்.  அவரது சமீபத்திய மரண ஆசை என்ற கதை மாதிரியான கட்டுரை பிரமாதமாக இருந்தது.  அவர் இப்போது என்ன எழுதியிருக்கிறார் என்று பார்த்த போது யாரோ எழுதிய ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.  அது அவரது மரண ஆசை கதை கட்டுரையைப் பாராட்டும் ஒரு பதிவு.  ஆனால் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை சாரு புராணம்தான்.  எடுத்த எடுப்பில் ”இந்த தமிழகத்தின் சாபக்கேட்டுக் கழிசடைகளில் ஒன்றான சாருநிவேதிதா என்ன உளறினார், பீலா விட்டார் எனத் தெரியாது – ஆனால் அவர் போலி எழுத்தாள அறச்சீற்றத்தின் ஏகபோக அதிபதி என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை” என்று ஆரம்பிக்கிறது.  யாராவது பாராட்ட வேண்டும் என்றால் கூட போடு சாரு நிவேதிதா பிள்ளையார் சுழி.  கழிசடை சாரு நிவேதிதா.  அது பற்றியெல்லாம் தர்மராஜுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.  நம் சாருவை இப்படியெல்லாம் திட்டாவிட்டால்தானே ஆச்சரியம் என்று தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து விட்டார்!  மற்றவன் மீது சாக்கடை கொட்டினால் என்ன?  நம் மீது சந்தனம் பட்டால் சரி.  இருந்தாலும் எனக்கு செம குஷியாகி விட்டது.  ஏனென்றால் இந்த சாக்கடை அபிஷேக பூசாரி கடும் படிப்பாளி போல் இருக்கிறது.  ஃபூக்கோ, தெரிதா என்று ஒரே ரகளை.  ஆனால் ஃப்ரெஞ்ச் உச்சரிப்புதான் சரியாக வரவில்லை.  நம் தமலர்கள் தமில் பேசுவது போல் இருக்கிறது.  அமெரிக்கவாசி.  நமக்கு உலகளாவிய ரசிகர் குழாம் இருக்கிறது என்று மட்டும் தெரிந்து விட்டது.  அதும் கன்னபின்னா என்று படித்திருக்கிறார்.  என்ன இருந்தாலும் படிச்சவன் திட்னா ஒரு கிக்காதான் இருக்கு!