அன்புள்ள சேனனுக்கு…

அன்புள்ள சேனனுக்கு,

நான் மொழிபெயர்த்த ஊரின் மிக அழகான பெண் என்ற சிறுகதைத் தொகுப்பை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியாது. நீங்கள் லண்டனில் இருப்பதால் அநேகமாக வாசித்திருக்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் கிண்டிலில் கிடைக்கிறது. வாசித்துப் பாருங்கள். அந்தத் தொகுதியில் லெபனிய எழுத்தாளர் காதா ஸம்மான் (Ghada Samman) எழுதிய பெய்ரூட் கொடுங்கனவுகள் என்ற நாவலிலிருந்து சில பகுதிகளை மொழிபெயர்த்திருக்கிறேன். சனிக்கிழமை நடக்க இருக்கும் உங்கள் நாவல் சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் பற்றி நான் பேசும் போது பெய்ரூட் கொடுங்கனவுகள் பற்றியும் பேசுவேன். நீங்கள் அதற்குள் என்னுடைய மொழிபெயர்ப்பைப் படித்து விட்டால் நம்முடைய உரையாடலுக்கு வசதியாக இருக்கும். கிண்டிலில் வாங்கலாம். இல்லாவிட்டாலும் அந்தப் பகுதியை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

வாசக நண்பர்களுக்கும் ஒரு வார்த்தை, ஊரின் மிக அழகான பெண் தொகுப்பு இந்தப் புத்தக விழாவில் ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் அரங்கு எண் 10, 11 இல் கிடைக்கும். வாங்கிப் படிக்குமாறு சிபாரிசு செய்கிறேன்.

பெய்ரூட் கொடுங்கனவுகள்

அந்த இடத்தில் எட்டு மாதங்கள் சண்டை நடந்தது. கதைசொல்லி மூன்றாவது மாடியில் தங்கியிருந்தாள். அவளும், அந்தக் குடியிருப்பின் உரிமையாளனும், அவனுடைய முதுகெலும்பில்லாத கோழையான மகனும், சூடானைச் சேர்ந்த வேலைக்காரரும்தான் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் எஞ்சியிருந்தவர்கள். எளிதில் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய அந்தப் பழைய கட்டிடம் போரிட்டுக் கொண்டிருந்த இரண்டு குழுக்களுக்கும் நடுவில் அமைந்திருந்தது. எதிரிலிருந்த உயரமான ‘ஹாலிடே இன்’னை துப்பாக்கி ஏந்திய சிப்பாய்கள் ஆக்ரமித்திருந்தார்கள். அந்த ஓட்டல் அவர்களின் குடியிருப்பை ஒரு காங்க்ரீட் மலையைப் போல் மறைத்துக் கொண்டிருந்தது. ஏற்கனவே கதைசொல்லி தன் காதலனை இழந்திருந்தாள். வேறொரு மதத்தைச் சேர்ந்தவன் என்பதால், நடந்து கொண்டிருந்த மதக் கலவரத்தில் அவன் அவள் கண்முன்னாலேயே படுகொலை செய்யப்பட்டான். முற்றுகைக்கு உள்ளான இந்த இடத்தை விட்டுத் தப்பிய அவள் சகோதரன், கடைசியில் போலீஸால் கைது செய்யப்பட்டு இப்போது சிறையில் இருக்கிறான். நாலா பக்கங்களிலும் துப்பாக்கிகள் சுட்டுக்கொண்டிருந்ததால் அந்தக் குடியிருப்பை யாராலும் நெருங்க முடியாதிருந்தது. “எங்கள் இடம் குஷ்டரோகிகளின் உறைவிடத்தைப் போலிருந்தது. யாராலும் எங்களை அணுக முடியவில்லை, திருடர்களால் கூட. எங்கள் சுவர்களிலும் கதவுகளிலும் தோட்டாக்கள் வந்து விழுந்து கொண்டிருந்தன.”

 0

                                                      கொடுங்கனவு 49

அவள் தன் கணவனிடம் எதுவும் சொல்லவில்லை. அவன் காலையில் மிகுந்த மனவருத்தத்துடன் படுக்கையிலிருந்து எழுந்தான். இந்தக் கட்டுமஸ்தான உடம்பு, இந்த உயரம், இந்த மீசை, மார்பில் அடர்ந்து படர்ந்திருக்கும் முரட்டுத்தனமான முடி – இது எதுவுமே அவள் தேகத்தை வெல்வதற்கு அவனுக்குப் பயன்படவில்லை.

அந்த மென்மையான, இளம் பெண்ணை அவன் தன் மூன்றாவது மனைவியாக சேர்த்துக் கொண்டதிலிருந்து அவளது மிருதுவான தேகம் அமைத்து வைத்திருக்கும் அரண்களை அவனால் வெல்ல முடியவில்லை. பதினைந்து நாட்களாகிவிட்டன. ஒரே வெட்டில் ஆடுகளின் தலையைத் துண்டாக்க முடிகின்ற இந்தக் கைகள் அவள் முன்னால் செயலற்றுப் போகின்றன. தனக்கு என்ன ஆனது என்றே அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாற்பதேழு வயது ஆகிவிட்டது உண்மைதான். ஆனால் அவன் தந்தையார் தன் ஐந்தாவது மனைவியைத் திருமணம் செய்துகொண்டபோது அவர் வயது அறுபதுக்கு மேல் ஆகியிருந்தது… அவனுடைய வேதனையை அதிகமாக்கிக்கொண்டிருந்தது எதுவென்றால், அவன் வாங்கி வந்த அந்தப் பாவப்பட்ட பெண் – ஆம், அவனை விடவும் பாவப்பட்டவள் அவள் – வாயை மூடிக்கொண்டிருந்தாள். ஒரு பேச்சு இல்லை. ஒரு எதிர்ப்புக் குரல் இல்லை. எதைப் பற்றியும் புகார் இல்லை. ஆனால் அவள் கண்களில் பெண்களுக்கே உரிய அச்சமூட்டுகின்ற, குரூரமான ஏளனப் பார்வை மின்னி ஓடுவதை அவன் கண்டான்… ஆனால் சமீப நாட்களாக அவளுடைய தலை அவனுக்கு ஆட்டுத் தலையை போலவும், பெரும்பசியுடன் ஒரே வெட்டில் அந்தத் தலையை அவன் வெட்டுவது போலவும் அவனுக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது.

அன்றைய தினம் காலை அவனுடைய கசப்புணர்வு, அவள் தலையை நிஜமாகவே வெட்டி எறிந்து விடலாம் என்ற அளவுக்கு சீற்றங்கொண்ட எரிமலையாய் வெடித்தது. அவளை நடத்தை கெட்டவள் என்று சொல்லி விட வேண்டியதுதான்… ஆனால் அது இப்போது சாத்தியமில்லை. ஏனென்றால் அவள் இன்னும் கன்னிப்பெண்ணாகவே இருந்தாள்… இவள் செத்தால் இவள் பிணத்தை அறுத்துச் சோதிக்கவா போகிறார்கள்? இருந்தாலும் அவள் மார்க்கெட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வரும்போது அவளை ஏன் இன்னமும் அவன் சுட்டுத் தள்ளாமல் இருக்கிறான்? கொலைக் குற்றம் என்னவோ அவன் மீது விழப்போவதில்லை. யாரோ ஒருவன் சுட்டுவிட்டதாகத்தான் முடிவு செய்யப்படும்! அதனால் அவளை வீட்டில் சுடாமல் தெருவில் வைத்துச் சுடுவதுதான் நல்லது. இந்த பெய்ரூட் நகரில் அப்படி ஆயிரக்கணக்கானவர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி இங்கே யாருக்குக் கவலை? அந்தப் பிணங்களோடு இவளும் ஒரு பிணமாகக் கிடந்து நாறுவாள்… நகரிலுள்ள இடுகாட்டில் புதைக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளின் பட்டியலில் அவள் பெயர் இருக்காது. அவ்வளவுதான்.

தொலைபேசி மணி அடித்ததும் அவன் சிந்தனை கலைந்து எழுந்தான். முதலாளி அவனிடம் ஒரு உதவி கேட்கிறார். “இதோ பதினைந்து நிமிடங்களில் அங்கே இருக்கிறேன், சார்.”

ஐந்து இளைஞர்கள் அவனிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். அவர்களுக்குப் பதினாறு வயதுக்குள்தான் இருக்க வேண்டும். அவர்களை இழுத்துச் சென்று நல்ல ‘பாடம்’ கற்பிக்கச் சொல்லி உத்தரவு. அவன் மிகவும் திருப்திகரமாக உணர்ந்தான். சட்டையைக் கழற்றினான். உருண்டு திரண்ட தனது உடற்கட்டைக் காண்பித்தான். பிறகு தன் பெல்ட்டைக் கழற்றினான்…

மூன்று மணி நேரம் கழித்து சாலையின் ஓரத்தில் தலை துண்டிக்கப்பட்ட ஐந்து உடல்கள் கிடந்தன. கற்பனை செய்ய முடியாத மிருகத்தனமான சித்ரவதைகளுக்குப் பிறகு கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது அந்த உடல்களிலிருந்து தெரிந்தது.

பிறகு அந்த கசாப்புக் கடைக்காரன் தன் வீட்டுக்குச் சென்றான். ஐந்து கன்னிப் பெண்களை ஒருவர் மாற்றி ஒருவராகப் புணர்ந்து விட்டு வந்தது போன்ற களைப்பு. அடித்துப் போட்டது போல் நிம்மதியாக உறங்கினான்… மதியம் தூங்கியவன் மறுநாள் காலைதான் எழுந்தான்… அவனுடைய இளம் மனைவியால் ஏற்பட்ட கவலை அதற்குமேல் அவன் மனதை அலைக்கழிக்கவில்லை. இந்தப் புதிய வேலை அவனுக்கு மனநிறைவாக இருந்தது. பாக்கெட்டையும் நிறைத்தது.

0

                                                கொடுங்கனவு 64

கடலை நோக்கியிருந்த ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான் அந்தச் சிப்பாய். அவன் முகத்தின் நடுவே ஒரு பெரிய கண் தனித்திருந்தது. மாதக் கணக்கில் அவன் தன் நிலையை மாற்றிக் கொள்ளாமல் ஒரே நிலையில் அமர்ந்திருந்தான். இந்தக் காரியத்திற்கு ஏன் வந்தான், எப்படி வந்தான் என்பதெல்லாம் அவனுக்கு நினைவில்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் எவ்வளவு அதிகமாகக் கொல்ல முடிகிறதோ அவ்வளவுக்கு நல்லது.

இந்தக் காரியம் மிகவும் சிரமமாக இருக்கும், மொட்டைமாடியில் அங்குமிங்கும் ஓடியலைந்து மக்களை வேட்டையாட வேண்டியிருக்கும் என்றே ஆரம்பத்தில் அவன் நினைத்திருந்தான். பறவைகளை வேட்டையாடுவதைவிட மனிதர்களை வேட்டையாடுவது கடினம் என்பது அவன் எண்ணம். ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில் அவனிடம் தாமாகவே வந்தனர் மக்கள்… இந்தக் கட்டிடத்திலிருந்து அவன் சுட ஆரம்பித்த போது, மக்கள் இதைத் தவிர்க்க நினைப்பார்கள், அதனால் வேறோர் இடத்திற்கு மாற வேண்டியிருக்கும் என்றே அவன் நினைத்தான். ஆனால் நம்ப முடியாதபடி, மக்கள் தாமாகவே கூட்டம் கூட்டமாக அவன் துப்பாக்கியின் முன்னே விருப்பத்துடன் வந்து நின்றார்கள். ஒவ்வொரு நாளும் வந்தார்கள்.  ஒவ்வொரு குடும்பமாக வந்தார்கள். வயதானவர், இளைஞர் என்ற பாகுபாடில்லாமல் குடும்பத்தினர் மொத்தமாகவே வந்தார்கள். அவன் அவர்கள் எல்லோரையும் சுட்டுத் தள்ளினான். தோட்டா உடலில் பாய்ந்ததும் அவர்கள் மிகுந்த நன்றியுணர்வுடன் ஒருசில அடிகள் கடலை நோக்கி முன்னே நடந்து விழுந்தார்கள். ஓரிரு நிமிடங்களில் வரும் கடலலை அடுத்த குடும்பத்திற்கு இடம் வேண்டும் என்பதால் அந்த உடல்களைக் கடலுக்கு இழுத்துச் செல்லும்… இப்படியே தொடர்ந்து நடந்தபடியிருந்தது.

இப்படி, சாவதற்கு விருப்பப்பட்டே வருவதால் பெய்ரூட் நகர மக்கள் ஒரு கூட்டுத் தற்கொலை முயற்சியைச் செயல்படுத்தி வருகிறார்களோ என்று அவனுக்குத் தோன்றியது. ஒரு சாதாரண சிப்பாய் என்பதிலிருந்து ஒரு வேட்டைக்காரன் என்று மாறக்கூடிய சாத்தியத்தையும், வேட்டையிலுள்ள பரவசத்தையும் அவனுக்குத் தர அவர்கள் மறுத்தார்கள். மனித வேட்டையென்றால் முதலில் ஒரு மனிதனின் காலுக்கு முன்னே சுட்டு அவனை பீதியுறச் செய்து, பிறகு அவன் வயிற்றில் சுட்டு, கொஞ்சம் கொஞ்சமாகச் சாக வேண்டும். அப்படிப்பட்ட வேட்டைக்காகவே அவன் ஏங்கினான். ஆனால் பெய்ரூட் நகர மக்கள் தங்களின் ஆச்சரியமான கூட்டுத் தற்கொலை ஆர்வத்தாலும், மரணத்தின் மீதான அதீத விருப்பத்தினாலும் அவனைக் குழம்பச் செய்தனர்.

வேட்டைக்காரனால் துரத்தப்பட்டு ஓடிவரும் விலங்கைப்போல் ஒரு சந்திலிருந்து மிக எச்சரிக்கையாக நடந்து வந்துகொண்டிருக்கும் ஒரு மனிதனைப் பார்த்தான் அவன். அவன்தான் இந்த நகரத்தின் கடைசி மனிதனோ என்னவோ. அப்படியானால் தான் தனியனாகி விடுவோம், அதனால் அவனை விட்டு விட வேண்டியதுதான் என்று எண்ணினான் சிப்பாய். ஆனால் அவன் ரத்தம் கொதிப்படையத் துவங்கியது. அவன் பயம் விலகியது. ரத்த வேட்கை திரும்பவும் அவனைத் தொற்றிக் கொண்டது. அவன் சக்தியும், வேட்டைக்கான உந்துதலும் கூடியது. குறி பார்த்துச் சுட்டான். அவன் விருப்பப்பட்ட இடத்திலேயே, அதாவது அவன் கால்களுக்கு எதிரே பூமியில் சரியாகப் பாய்ந்தது குண்டு… அவனை முதலில் பயமுறுத்தவே நினைத்தான் சிப்பாய். அடுத்த குண்டு அந்த மனிதனின் கையில் பாய்ந்தது. ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. தன் கையிலும் சரியாக அதே இடத்தில் ரத்தம் வருவதையும் கவனிக்காமல் சந்தோஷமடைந்தான் சிப்பாய். மூன்றாவது குண்டு அந்த மனிதனின் தொடையைத் துளைத்தது. அவன் கீழே விழுந்தான். அவன் தொடையிலிருந்து ரத்தம் கொட்டியது. தன் தொடையிலிருந்தும் ரத்தம் கொட்டுவதை சிப்பாய் கவனிக்கவில்லை. நான்காவது குண்டு அந்த மனிதனின் வயிற்றில் பாய்ந்தது. அதற்கு மேல் அந்த மனிதனால் தரையில் தவழ முடியவில்லை. தான் சாகப் போவது அவனுக்குத் தெரிந்துவிட்டது. தன்னுடைய வயிற்றிலும் சரியாக அதே இடத்தில் ரத்தம் கொட்டுவதை சிப்பாய் பார்க்கவில்லை. அவனுக்கு மிகவும் களைப்பாக இருந்தது. தன்னிடம் பலியானவனை மன்னித்து ஒரே குண்டில் கொன்று விடலாம் என்று தீர்மானித்தான் சிப்பாய். ஆனால் அவன் முகத்தைப் பார்த்துவிட வேண்டும் போல் ஒரு தீவிர ஆர்வம் ஏற்பட்டது. அவனிடம் ஓடிய சிப்பாய் அவன் முகத்தைத் திருப்பிப் பார்த்தால் அது தன்னுடைய முகமாகவே இருக்கக் கண்டான். ஏதோ கண்ணாடியில் தன்னையே பார்த்துக் கொள்வது போல் இருந்தது. அப்போதுதான் அவன் தன் வயிற்றில் பயங்கரமாக வலிப்பதை உணர்ந்தான். தான் வலியுடன் சிறுகச் சிறுக சாகப் போகிறோம் என்று அவனுக்குத் தெரிந்து விட்டது. இந்த வேதனையிலிருந்து மீள, தலையில் சுட்டுக் கொண்டு உடனடியாகச் சாகலாம் என்று பார்த்தால் துப்பாக்கியைத் தூக்கவே முடியவில்லை.

                                                                       0

                                                          கொடுங்கனவு 65

குண்டு வீச்சு முடிந்து மீண்டும் ஒரு கனத்த அமைதி நிலவியது. அந்த அமைதி மிகவும் வித்தியாசமானது. அதை நீங்கள் செவி கொடுத்துக் கேட்க முடியும். அந்த அமைதியின் சத்தத்தைக் கூர்ந்து கேட்டால் நிறைய விஷயங்கள் உங்கள் கவனத்துக்கு வரும். பக்கத்தில் செல்லப் பிராணிகள் விற்கும் கடையிலிருந்து பிராணிகளின் சலசலப்பு ஓசை கேட்டது. ஆக, அவை இங்கிருந்து தப்பிக்கவில்லை! இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களால் தப்ப முடிந்ததா என்பதும் எனக்குச் சந்தேகமாகவே இருந்தது.

என் வீட்டு ஜன்னலைப் போலவே எல்லா ஜன்னல்களும் மூடிக் கிடந்தன. ஒரு பால்கனியில் குழந்தையின் துணிகள் கொடியில் தொங்கிக் கொண்டிருந்தன. அக்குழந்தையின் தாய்க்கு அத்துணிகளை எடுக்கும் அளவுக்கு துணிச்சல் வந்திருக்காது அல்லது அந்த வீட்டில் இருந்தவர்கள் வேறு இடத்துக்குச் சென்று விட்டார்களோ? இப்போது அந்த பால்கனியின் கதவு லேசாகத் திறந்தது. ஒரு பயந்த முகம் எட்டிப் பார்த்து விட்டு மறைந்தது. உள்ளேயிருந்து ஒரு கை நீண்டு அத்துணிகளைத் தொட்டுப் பார்த்தது. பிறகு ஒரு கர்ப்பிணிப் பெண் – அவள் வயிறு அவளுக்கு முன்னே துருத்திக் கொண்டிருந்தது – மிக மிக மெதுவாக நகர்ந்து வந்து அத்துணிகளை எடுத்தாள். பயந்து போயிருந்தாள். கைகள் நடுங்கியபடி குழந்தையின் துணிகளை ஏதோ திருடுவதைப் போல் எடுத்துக் கொண்டிருந்தாள். திடீரென்று ஒரு தோட்டா பாய்ந்து வந்தது. அதன் குறி அவளுடைய வயிறா? வயிற்றிலுள்ள கருவின் இதயமா? பால்கனியின் தரையில் விழுந்தாள் அந்தப் பெண். என்னால் அதற்கு மேல் அவளைப் பார்க்க முடியவில்லை. அந்தப் பகுதி மக்களுக்கு தனக்குத் தெரிந்த முறையில் ‘காலை வணக்கம்’ சொல்கிறான் சிப்பாய். யாரும் அந்த பால்கனியின் பக்கம் வரவில்லை. அவளை வீட்டுக்குள் இழுப்பதற்கு அவள் கணவனுக்குத் துணிச்சல் இருந்திருக்காது என்பது நிச்சயம். அங்கிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. ஒரு வேளை அது அவளுடைய குழந்தையாக இருக்கலாம். அக்குழந்தையின் துணிகளை இனிமேல் அவள் துவைக்கவே போவதில்லை.

0

                                                        கொடுங்கனவு 109

ஷகீர் ஒரு இரும்புக் கடை வைத்திருந்தான். அவன் பணக்காரனும் அல்ல. ஏழையுமல்ல, அழகானவனும் அல்ல. அசிங்கமானவனும் அல்ல. ஞானியும் அல்ல. திருடனும் அல்ல.

பெய்ரூட் நகரின் மையத்திலிருந்த மார்க்கெட்டில் இருந்தது ஷகீரின் கடை.  ஓரளவு வருமானம் வந்து கொண்டிருந்தது.  தன் ஏழு குழந்தைகளின் பள்ளிக்கூடச் செலவுக்குத் தேவையான அளவு மட்டும் வியாபாரத்தில் தில்லுமுல்லு செய்து கொள்ளுவான். ஒவ்வொரு முறை கட்டணம் உயர்த்தப்படும் போதும் தில்லுமுல்லு விகிதத்தை அதற்கேற்ப கூட்டிக்கொள்வான். விலைவாசி உயரும் போதும் அதே கதைதான். கூடவே இறைவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டு காலம் கெட்டுப் போய்விட்டது பற்றிச் சலித்துக் கொள்வான்.

ஒருநாள் காலை அவன் கடைக்குச் செல்லும் வழியில் போலீஸார் சாலையை மறித்திருந்தனர். மார்க்கெட் எரிந்துவிட்டது என்றார்கள். இப்போது கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் கதியை அறிந்து கொள்ளச் செல்வதைத் தடுப்பதற்குப் பதிலாக, மார்க்கெட் எரிந்தபோது அதைத் தடுக்காமல் எங்கே போயிருந்தார்கள் என்று அவன் அவர்களிடம் கேட்டான். யாரும் பதில் சொல்லவில்லை. அன்றைய தினம் பதற்றத்திலேயே கழிந்தது. வருமானத்துக்கு ஒரே வழியாக இருந்த அவனுடைய கடையும் எரிந்துபோய் விட்டதா? எல்லா தினசரிகளையும் வாங்கி அதிலிருந்த புகைப்படங்களையெல்லாம் ஆராய்ந்தான். எரிந்துபோன கடைகளில் தன் கடையின் தடயம் தென்படுகிறதா என்று தேடினான்… இல்லை… இருக்காது… எரிந்துபோன இந்தக் கடைக்கு இரண்டு ஜன்னல்கள் இருக்கிறதே… நம் கடைக்கு ஒரு ஜன்னல் தானே… ஒருவேளை, இந்தக் கடையோ… இல்லை, அவன் கடையின் விதானத்தில் ஒரு பழைய மர வேலைப்பாடு செய்யப்பட்ட பகுதி உண்டு.  இந்தக் கடையில் அப்படி எதுவும் தெரியவில்லையே?

இந்தப் பதற்றத்திலேயே இரவும் அவன் தூங்கவில்லை. தன் குழந்தைகளையும், மனைவியையும் சபித்தான். காரணமில்லாமலேயே அவர்களோடு சண்டை போட்டான். அவனிடமிருந்து தப்பி அவர்கள் படுக்கையறைக்குச் சென்றார்கள். நம்மை நம்பி வாழும் அவர்கள் குறட்டை விட்டுத் தூங்கும்போது நம்மால் தூங்க முடியவில்லையே என்பதை எண்ணி மேலும் கோபமடைந்தான்.

மறுநாள் காலை கடைக்குப் புறப்பட்டான். அதுவே தன் சமாதியாக ஆனாலும் பரவாயில்லையென்று நினைத்துக் கொண்டான்… எந்தச் சூழ்நிலைக்கும் தயார்ப்படுத்திக்கொண்டே வந்திருந்தாலும், மார்க்கெட்டில் கடைக்காரர்களையும், பத்திரிகைகாரர்களையும், புகைப்படக்காரர்களையும் பார்த்தபோது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

முதலில் அவனால் தன் கடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம், எங்கு பார்த்தாலும் எரிந்துபோன பொருட்களும், இடிந்த சுவர்களும், கரியுமாகக் கிடந்தது. கடைசியில் அவன் கடையைக் கண்டுபிடித்தபோது அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

அவன் கடையில் மிஞ்சிக் கிடந்த பொருளை எடுத்துக்கொண்டு திரும்பும் போது அதைப் பார்த்து அவனால் நம்பவே முடியவில்லை.  காயலாங்கடைக்காரன்கூட அதை வாங்கிக்கொள்ள மாட்டான். அப்படி எரிந்து போயிருந்தது அது!

0

                                              கொடுங்கனவு 110

குழந்தைகளின் பசியைப் போக்குவதற்காக, வீட்டிலிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு அல் – ஆம்ரா தெருவிற்குத் தன் பழைய காரில் கிளம்பினான் ஷகீர். அந்தச் சிறிய காரின் மேல் பொருட்களைப் பரப்பினான். சில பீங்கான் பாத்திரங்கள், தட்டு, ஸ்பூன் – இந்த மாதிரி பொருட்கள். மீதியை நடைபாதையில் வைத்து அதை வாங்குபவர்களுக்காகக் காத்திருந்தான். கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. ஆனால் யாரும் வாங்குவதாகத் தெரியவில்லை. எல்லாம் ஒருமாதிரி விரோத பாவத்தில் இருப்பதாகத் தெரிந்தது. முன்பெல்லாம் அல் – ஆம்ராவின் நடைபாதைகளில் நடப்பதென்றால் அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். காரணம், அங்கு வரும் பெண்களின் கால்களைத் திருட்டுதனமாகப் பார்த்து ரசிக்க முடியும். மனைவியின் கால்களை எங்கே ரசிப்பது? ஏகப்பட்ட குழந்தைகளின் தாயான அவள் கால்கள் ஏதோ புராதனமான மரங்களின் சைஸுக்கு அல்லவா பெருத்துக் கிடந்தன! விழாக் காலங்களில் அவன் தன் குழந்தைகளில் ஒன்றை அழைத்துக் கொண்டு இந்த வழியில்தான் சினிமாவுக்குச் செல்வான். அப்போது இந்த இடமெங்கும் ஒரே வண்ணமயமாகவும், கோலாகலமாகவும், கொண்டாட்டமாகவும் இருக்கும். அதே சமயம், நடைபாதைகளில்

உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களும் – அதில் பெரும்பான்மையானவர்கள் மோசடிப் பேர்வழிகள் – அமர்ந்திருப்பதையும் கவனித்திருக்கிறான்.

அதில் ஒரு குருட்டுப் பிச்சைக்காரனும் உண்டு. எப்போதும் அவன் புலம்பும் குரலில் உரத்துப் பாடிக் கொண்டிருப்பான். அவன் தன் கரகரத்த சத்தத்தை சற்றுக் குறைத்துக் கொள்ளட்டும் என்று நினைத்து அவனுக்கு பிச்சை போடுவான் ஷகீர்… ஆனால் விதியின் விளையாட்டுத்தான் என்னே! இப்போது அந்தக் குருட்டுப் பிச்சைக்காரன் நின்ற அதே இடத்தில் தன் பொருட்களை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறான் ஷகீர். ஆனால் அவனால் அந்த நடைபாதையிலிருந்த மற்ற விற்பனையாளர்களைப்போல் கூவிக்கூவி விற்க முடியவில்லை.

நாள் முழுதும் நின்றும் அவனால் அதிக பொருட்களை விற்க முடியவில்லை. ஒரு பெண் மற்றொருத்தியிடம் எல்லாப் பொருட்களும் திருடு போய்விட்டதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஒரு குழந்தை குதித்துக் கொண்டு நடந்ததில் அவனுடைய விலையுயர்ந்த பொருள் ஒன்று உடைந்து போனது. ஆனால் அக்குழந்தையின் தாயோ தன் குழந்தை அவனால்தான் கீழே விழுந்தது என்று அவனைத் திட்டினாள்.

இவ்வளவுக்கும் அவன் அன்றைய நாள் முழுவதும் அல் – ஆம்ராவின் நடைபாதையில்தான் நின்று கொண்டிருந்தான், ஏதாவது ஒரு பொருள் விற்பனையாகும் என்ற எண்ணத்தில்.  அவ்வப்போது, மார்க்கெட்டிலிருந்த தன் கடையையும் அதில் தான் சொகுசாக அமர்ந்திருந்ததையும் எண்ணி வருத்தப்படுவான்.  இருட்டிய பிறகும் வீட்டுக்குத் திரும்பிய போது வீட்டுக்குப் பக்கத்திலிருந்த ஒரு சந்து முனையில் நின்று கொண்டிருந்த சிப்பாய் அவன் எவ்வளவு பணம் வைத்திருக்கிறான் என்று கேட்டான். கொஞ்சம்தான் பணம் கையிலிருந்தது. அதுதான் குழந்தைகளின் உணவுக்காக இருப்பது. அந்தத் திருடனைப் பார்த்து “நீ யார்?” என்று கேட்டான் ஷகீர்.

“நான் ஒரு வேட்டைக்காரன்” என்றான் சிப்பாய்.

“அப்படியா? உங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான் அந்தப் பரிதாபத்துக்குரிய விற்பனையாளன்.

0

                                               கொடுங்கனவு 111

மறுநாள் அல்-ஆம்ரா தெருவுக்குச் செல்லும் வழியிலேயே ஷகீரைத் தடுத்து விட்டார்கள் போலீஸார். எனவே அவன் தன் சகாக்களுடன் பக்கத்திலிருந்த கிந்த்தாரி என்ற பகுதிக்குச் சென்று தன் பொருட்களைப் பரப்பி வைத்தான். உடனே மழை பெய்தது. காற்றும் பலமாக அடித்தது. வாடிக்கையாளர்களெல்லாம் கலைந்து சென்றார்கள். ஒரே ஒரு பெண்தான் காய்கறி நறுக்கும் கத்திக்காகவும், சில ஸ்பூன்களுக்காகவும் அவனோடு ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தாள். பிறகு கத்தியை விட்டுவிட்டு ஸ்பூன்களை மட்டும் வாங்கிக் கொண்டு போனாள். இரவில் வீட்டுக்குத் திரும்பும்போது, முந்தின தினம் பார்த்த அதே வேட்டைக்காரன் அவனை வழிமறித்து, அதேபோல் பணம் கேட்டான். கொஞ்சம்தான் பணம் கையிலிருந்தது. அதுதான் குழந்தைகளின் உணவுக்காக இருப்பது. இருந்தாலும் அவன் தயக்கமின்றி அதைக் கொடுத்தான். அவனுக்குக் களைப்பாகவும், பயமாகவும் இருந்தது. பணத்தைக் கொடுக்கும்போது “எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றான்.

மூன்றாவது நாள் ஷகீர் தன் பொருட்களை அல் – கிந்த்தாரிக்கு எடுத்துச் சென்றபோது அந்த இடமே மழையாலும், புயலாலும், சண்டையாலும் சர்வ நாசமாகிக் கிடந்தது. தரையெங்கும் துப்பாக்கித் தோட்டாக்கள் சிதறிக் கிடந்தன. எனவே அவன் அல்-ராஷாவுக்குச் சென்று அங்கே தன் கடையைப் பரப்பினான்…. ஆனால் காற்றுதான் அவனுடைய வாடிக்கையாளன். மழைதான் தூக்குக்கயிறு.

(அல்-ராஷா: மேற்கு பெய்ரூட்டிலுள்ள கடற்கரை. உள்நாட்டுப் போருக்கு முனனே அந்த இடத்தில் நீச்சல் குளங்களும், ஆடம்பரமான கஃபேக்களும், பணக்காரக் குடியிருப்புகளுமாக இருந்தது. ஆனாலும் பெய்ரூட்டின் மையப் பகுதியில் சண்டை மும்முரமாகி அங்கிருந்த மார்க்கெட் எரிக்கப்பட்டதும், அந்த வியாபாரிகள் அனைவரும் அல்- ராஷாவின் கடற்கரையில் ரெடிமேட் கடைகளைத் துவக்கினர்.)

வீடு திரும்பும்போது சந்து முனையில் நின்றுகொண்டிருந்தான் சிப்பாய். அவன் பேசுவதற்கு முன்னதாகவே அன்றைய வசூலை எடுத்துக் கொடுத்த ஷகீர் “என்ன வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான்.

நான்காவது நாள் ஷகீர் வேலைக்குச் செல்லவில்லை. நாள் பூராவும் வீட்டில் படுத்துத் தூங்கினான். இரவானதும் அந்த விற்காமல் போன காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு சந்து முனைக்குச் சென்று, வீட்டுக்குத் திரும்பும் விற்பனையாளன் ஒருவனுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.

0

                                             கொடுங்கனவு 119

“சே… சகிக்க முடியாமல் குவிந்து விட்டது.”

ஒரு லாரி பிணங்கள் வந்து சேர்ந்ததும் இந்த வார்த்தைகளைத்தான் திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டான் சாபிர்.

இப்போதுதான் அவனுக்கு முன்னால் பிணங்களைக் கொட்டி விட்டுச் சென்றது ஒரு லாரி. அவன்தான் அந்த நகரின் சவக்கிடங்குப் பாதுகாப்பாளன். அங்கு வரும் பிணங்களைப் பாதுகாக்க வேண்டியது அவன் பொறுப்பு. வேறு வார்த்தைகளில் சொன்னால், ‘உறைந்த கல்லறை’ யின் காவலன்.

“சே…. சகிக்க முடியவில்லை”. கை கால்கள் துண்டிக்கப்பட்டு சிதைந்துபோன பிணங்கள் அவனைச் சுற்றிலும் கிடந்தன. எந்தப் பக்கம் போனாலும் அவன் பிணங்களைத்தான் மிதித்துக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது… இந்தக் குவியலெல்லாம் அவனை ஒன்றும் பாதிக்காது என்பது உண்மைதான்…

பொதுவாக அவனுடைய மேற்பார்வைக்கு உட்பட்ட சவக்கிடங்குகள் நிரம்பியிருப்பது பற்றி அவன் மகிழ்ச்சியடைவதே வழக்கம். ஆனால் இந்த சவக்கிடங்கில் 36 பிணங்களைத்தானே வைக்க முடியும்?

சினிமா தியேட்டரில் டிக்கட் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, எல்லா இருக்கைகளும் நிரம்பி, அதற்கு மேலும் கூட்டம் வந்தால் “அவ்வளவுதான், டிக்கட் இல்லை? ஹவுஸ்புல்…” என்று சொல்வதில் மிகவும் சந்தோஷமடைவான். அதுதான் அவனுக்குத் தொழில் ரீதியான மன நிறைவை அளிக்கிறது.

ஆனால் பிரச்சினை என்னவென்றால், சவக்கிடங்கு நிறைந்துவிடுவதால் இங்கே வரும் நூற்றுக்கணக்கான பிணங்களை என்ன செய்வதென்று தெரியவில்லை.

மன்னிப்புக் கேட்டுக் கொண்டு “இடமில்லை” என்று சொன்னால் சினிமா ரசிகர்கள் மாதிரி இந்தப் பிணங்கள் சென்று விடுவதில்லை. அவனுக்கு முன்னாலேயே ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிந்துவிடுகின்றன. அழுகிப் போவதற்கு முன்னால் ஐஸ் பெட்டிகளுக்குள் சென்று விட வேண்டும் என்று அவைகள் அவன் முகத்துக்கு நேரே ஊளையிடுகின்றன.

பெய்ரூட் நகரம் லாரி லாரியாகப் பிணங்களை அவன் மீது வீசியெறியும் போது அவனால் என்ன செய்ய முடியும்?

ஒரு பிணம் கத்தியது. “இதோ பார், நான் மந்திரியின் மைத்துனன்…. ஸன்னி முஸ்லீம், எனக்கு நீ இடம் கொடுக்காவிட்டால் என் மாமா உன்னை வேலையிலிருந்து நீக்கி விடுவார்.”

மற்றொரு பிணம், “நானும் ஒரு மந்திரிக்கு மைத்துனன்தான். கிறிஸ்தவன். எனக்கு நீ சவக்கிடங்கில் இடம் கொடுக்கவில்லையானால் நம் நாட்டின் மதச் சார்பற்ற தன்மை சீர் குலைந்துவிடும். எனவே இட ஒதுக்கீட்டின்படி எனக்குரிய இடத்தைக் கொடுத்துவிடு. இல்லாவிட்டால் என் மாமா, உன் தலையைச் சீவி விடுவார்” என்று கத்தியது.

மூன்றாவது பிணம் “நான் ஒரு யூதன். என்னுடைய இடம் எங்கே?” என்று அமைதியாகக் கேட்டது.

நான்காவது பிணம் சொன்னது. “இதோ பார். நான் ஒரு ஆதிவாசி. எனக்கு இடம் கொடுக்கவில்லையானால் என் உறவினர்கள் வந்து உன்னைப் பழிக்குப் பழி வாங்கிவிடுவார்கள். இல்லாவிட்டால் என் பேரன் பேத்திகள் உன் பேரன், பேத்திகளைப் பழி வாங்குவார்கள்.”

ஐந்தாவது பிணம், “நான் பாராளுமன்றப் பிரதிநிதியின் மகன். இந்த பிணங்களையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு என்னை உள்ளே போகச் செய். இல்லாவிட்டால் என் அப்பாவின் ராணுவம் உங்கள் அனைவரையும் மறுபடியும் கொல்லும். சாபிர்… உடனடியாக நான் உள்ளே போக வேண்டும். இல்லாவிட்டால்… சரி, இல்லாவிட்டாலுக்கு என்ன அர்த்தம் என்று உனக்குத் தெரியும்!” என்று சொன்னது.

அவன் சவக்கிடங்கைத் திறந்தான். அடையாளம் இல்லாத பிணங்களைத் தூக்கியெறிந்தான். பிறகு வாசலில் நின்றுகொண்டு சொன்னான். “டிக்கட்ஸ்… டிக்கட்ஸ், ப்ளிஸ்… உங்கள் டிக்கட்டுகளைக் காட்டுங்கள். ஏழைப் பிணங்களும், சிபாரிசு இல்லாத பிணங்களும் சீக்கிரம் வெளியேறி விடுங்கள். டிக்கட்டோ அடையாள அட்டையோ இல்லாதவர்கள் இங்கிருந்து சென்று விடலாம். அவர்களுக்கு இங்கே இடமில்லை. ஏனென்றால் இது அரசாங்க சவக்கிடங்கு!”

0  

                                                கொடுங்கனவு 144

தீயின் பெருஞ்சுவாலைகள் அந்த சிறைச்சாலையை விழுங்கிக்கொண்டிருந்தன. ஷாதி பயப்படவில்லை. அவனுக்குப் புரியவில்லை…

அவன் தொட்டதெல்லாம் பற்றிக்கொண்டது… எதை விட்டெறிந்தானோ அது கையெறி குண்டாக மாறியது… லெபனானின் ‘மிதாஸாக’ மாறிவிட்டான் அவன்.

புல்லில் கால் வைத்தால் புல் எரிந்தது. அவனால் வன்கலவி செய்யப்பட்ட பெண்கள் சாம்பலாகிப் போனார்கள். அவனைப் பார்த்த மாத்திரத்தில் சிறுவர்கள் விளையாட்டை நிறுத்திக்கொண்டார்கள். ஏன், தெருவில் திரியும் பூனைகளும் நாய்களும் கூட அவனைக் கண்டால் ஏதோ பேய் பிசாசைப் பார்த்து விட்டது போல் ஒதுங்கின.

முதலில் அவன் இதெல்லாம் தன்னுடைய வீணான கற்பனை என்றுதான் நினைத்தான். ஒருவேளை ஒரு நல்ல பெண்ணால், அவனைச் சூழ்ந்துள்ள இந்தப் பித்தத்தைத் தெளிவிக்க முடியலாம்.

அவன் தன் சகோதரியை நினைத்துப் பார்த்தான். அவளுக்கு ஒரு கடிதம் எழுதி அதை அவளுடைய படுக்கையறை ஜன்னலின் வழியே விட்டெறிந்துவிடலாம் என்று நினைத்தான்.

அவள் காதல் வயப்பட்டிருக்கும்போது படு முட்டாளாகவும், உணர்ச்சிவசப்பட்டவளாகவும் இருப்பதை கவனித்திருக்கிறான். அது அவனுக்குப் பிடித்திருந்தது. சொல்லப்போனால், அது அவனுக்குத் தேவையாகவும் இருந்தது. கடிதத்தை எழுதினான். அதை ஒரு பந்தில் வைத்துக் கட்டி அவளுடைய அறை ஜன்னலின் வழியே எறிந்தான். நடந்தது என்னவென்றால், அந்தப் பந்து ஒரு கையெறி குண்டைப் போல் வெடித்தது. அவன் சகோதரியின் உடல் ஆகாயம் வரை தூக்கியெறிப்பட்டு சுக்குநூறாய்ச் சிதறியது. திகிலுடன் அவன் தன் கைகளையே பார்த்தான். அவன் தொடுவதெல்லாம் அழிவில் முடிந்தது. உண்மையில் அவன் ஒரு கேடு கெட்ட லெபனிய மிதாஸ்!

வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களுக்கு என் புத்தகங்கள் கிடைப்பதில்லை அல்லவா? ஆனால் கிண்டிலில் சில புத்தகங்கள் கிடைக்கின்றன. அதில் ஒன்று ஊரின் மிக அழகான பெண். வாங்கிப் படியுங்கள்.