இன்று மாலை நான்கு மணிக்கு ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். எத்தனை மணி வரை இருப்பேன் என்பது உங்கள் கையில். பா. ராகவனும், அராத்துவும் கூட வருகிறார்கள் என்பதால் கிலி அடிக்கிறது. அ. மார்க்ஸ் நாளை தான் வருகிறார். கவலை இல்லை. பாரா, அராத்து என்ற இளவட்டங்களிடம் நாலு கையெழுத்து என்றால் என்னிடம் ஒரு கையெழுத்து வாங்க வேண்டும். இல்லையென்றால், எஸ்.ரா. ஸ்டாலுக்குப் போய் விடுவேன். நான் அனுபவசாலி என்பதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. உயிர்மையில் என் புத்தகங்கள் வந்து கொண்டிருந்தபோது நானும் எஸ்.ரா.வும்தான் அங்கே சூப்பர் ஸ்டார்ஸ். ஆனால் மனுஷ் இருந்தால் அவரிடம்தான் கல்லூரி மாணவிகள் எல்லாம் கியூவில் நிற்பார்கள். ஆனால் மனுஷ் மனிதாபிமானி என்பதால் சாருவிடமும் கையெழுத்து வாங்குங்கள் என்று என் பக்கம் நகர்த்துவார். நானும் அவர் கவிதைப் புத்தகங்களில் கையெழுத்துப் போடுவேன். பிறகு வேலை இருக்கிறது என்று சொல்லி நைஸாக நழுவி விடுவேன். எஸ்.ரா. ஞானி என்பதால் இதைப் பற்றியெல்லாம் கவலையே பட மாட்டார்!ஆனால் ஜெ.மோ. மட்டும் ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் வந்து விட்டார் என்றால் நான் புக்ஃபேர் பக்கமே வர மாட்டேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.