முன்குறிப்பு: சாரு
பின்வரும் சிறுகதை ராம்ஜி நரசிம்மன் எழுதியது. முகநூலில் இருந்தது. கவனிக்காமலேயே போயிருப்பேன். இன்று காயத்ரி சொன்னதால் அவர் முகநூல் பக்கத்தில் போய்ப் பார்த்து படித்தேன். இந்தக் கதையை அவர் என்னிடம் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லியிருக்கிறார். இதேபோல் அவரிடம் ஒரு 2000 கதை இருக்கும். அந்த ரெண்டாயிரத்தில் ஒரு ஆயிரத்தை என்னிடம் சொல்லியிருப்பார். அவரும் நானும் சவேரா ஓட்டல் ப்ரூ ரூம் திறந்த வெளி காப்பிக் கடையில்தான் சந்திப்போம். அங்கே பொதுவாக சினிமாக்காரர்களும் (அவர்கள் அத்தனை பேரும் ராம்ஜியின் அருகில் வந்து மரியாதையுடன் பேசி விட்டுப் போவார்கள்), கஞ்சா அடிக்கும் இளம் பெண்களும், சில சமயம் கல்யாணம் ஆகாத இளம் ஜோடிகளும் மட்டுமே வருவர். உடனே ப்ரூ ரூமில் கஞ்சா அடிக்கலாமா என்று கேட்காதீர்கள். கஞ்சா புகை என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். திறந்த வெளி என்பதால் யாரும் கவனிக்க மாட்டார்கள்.
அங்கே போனால் எங்களுக்கு சுமார் மூன்று மணி நேரம் ஆகும். சமயங்களில் ஐந்து மணி நேரமும் ஆகியிருக்கிறது. நாங்கள் ரெண்டே பேர்தான். ஆனால் தவறாமல் கவனித்திருக்கிறேன். மூன்றாவது ஆள் யார் வந்தாலும் ராம்ஜியின் பேச்சு வேறு எங்கோ போய்விடும். அதில் எனக்கு எந்த சுவாரசியமும் இருக்காது. ரொம்ப நாள் குழம்பின பிறகுதான் கண்டு பிடித்தேன். அவரும் நானும் மட்டுமே இருக்கும்போதுதான் அவர் பேச்சு எனக்கு சுவாரசியப்படுகிறது என்று.
அந்த மூன்று மணி நேரமும் அவர் இந்த மாதிரி கதைகளைத்தான் சொல்லிக் கொண்டே இருப்பார். எனக்கு மட்டும் கொஞ்சம் ஞாபக சக்தி இருந்திருந்தால் அப்போதைக்கப்போதே இதையெல்லாம் கதைகளாக எழுதியிருப்பேன். ராம்ஜியெல்லாம் ஒரு காலத்தில் எழுத்தாளராகி இதையெல்லாம் எழுதுவார் என்று நான் அப்போது – ரெண்டு வருஷம் முந்தி – கனவு கூட கண்டதில்லை. அப்படி நான் “இவரெல்லாம் இந்த ஜென்மத்தில் எழுத்தாளராக முடியாது” என்று சர்வ நிச்சயமாக நினைத்த ரெண்டு பேர். அராத்து. இப்போது ராம்ஜி. நல்லவேளை, ராம்ஜி சொன்ன கதைகளையெல்லாம் நான் அப்போது எழுதவில்லை. எழுதியிருந்தால் இதில் உள்ள nuances தவறி இருக்கும். இல்லாவிட்டால் எனக்கு செம்பூரைத் தெரியுமா, கொலாபாவைத் தெரியுமா?
பின்வரும் ராம்ஜியின் சிறுகதை எனக்கு ஒரு முராகாமியின் சிறுகதையைப் படித்தது போல் இருக்கிறது. அதிர்ஷ்டம் இருந்தால் – அல்லது தமிழைத் தவிர வேறு மொழியில் எழுதினால் உலகப் புகழ் அடையலாம். தமிழில் எழுதினால் நாலு பேர் பாராட்டுவார்கள். அவ்வளவுதான். வாழ்த்துகள் ராம்ஜி. இது போல் மீதி 1999 கதைகளையும் நீங்கள் எழுத வேண்டும்.
இப்படியும் சிலர்… – சிறுகதை – ராம்ஜி நரசிம்மன்
“ ”எனக்கு சென்னை எவ்வளவு பரிச்சயமோ அதைவிட சென்னைவாசியான என் நண்பன் பிரணவுக்கு பம்பாய் பரிச்சயம் , அவன் இல்லை என்றால் பம்பாயை விட்டு தலைதெறிக்க ஓடிவந்திருப்பேன். அன்று மாலை எனக்கு ஒரே சந்தோஷம்… அவன் பம்பாய் வருகிறான். வெள்ளி ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டால், நான்கு இரவுகள் ஊர் சுற்றலாம். நேரம் போவதே தெரியாது. என் கைபேசி ஒலித்தது. “கீழ வா மச்சான் என்றான்” பிரணவ். அவன் நண்பனின் கார் ஒன்றை இரவல் வாங்கிக் கொண்டு வந்திருந்தான். ஏறிய ஐந்தாவது நிமிடம் உள்ளமெல்லாம் குளிரும் வண்ணம் ஒரு சில் பீர் என் கையில் கொடுத்து “அடி மாமா” என்றான். “என்னடா பிளான்?” “எதுவும் கேட்காதே எல்லாமே சர்ப்ரைஸ்” என்றான் பிரணவ். “எவ்வளவு குடிக்க முடியுமோ குடி. பார்லே ஒரே ஒரு பீர் தான் மச்சான் குடிப்போம்” . இது என்ன புதுக்கதை மாசக் கடைசி பிரச்சினை எல்லாம் நமக்குதானே. இவனுக்கு இந்தப் பிரச்சினை எல்லாம் கிடையாதே? என்ற கேள்வி மனதில் ஓடத்தான் செய்தது.
மயிலாப்பூர் போன்ற செம்பூரிலிருந்து புறப்பட்ட வண்டி, போயஸ் கார்டன் போன்ற கொலாபாவிற்குச் சென்றது. நான் “அவனிடம் எவ்வளவு அழகான இடம் மச்சான். பத்து லட்சம் இருந்தா எவ்வளவு சதுரடிக்கு வீடு கிடைக்கும்” என்று கேட்டேன். “இப்போதைக்கு ஒரு ஜன்னல் கதவு கிடைக்கும் பிறகு பணம் சேர்த்து, ஹால், பெட்ரூம், கக்கூஸ் எல்லாம் வாங்கிக் கொள்ளலாம்” என்று பெரிதாகச் சிரித்தான்.
“என்ன மச்சான் சொல்ற அவ்வளவு விலையா?” என்றதற்கு, “அது முக்கியம் இல்ல… மாப்ள வாங்க இடம் இருக்கணும். அதுதான் முக்கியம்” என்று சொல்லிக்கொண்டே, கறுப்புப் பெயிண்ட் அடித்த ஒரு பெரிய இரும்பு கேட் இருக்கும் பங்களாவிற்கு வெளியில் கார் நின்றது. யாரையோ அழைத்துப் பேசிய பிறகே கேட் திறக்கப்பட்டது.
“என்னடா இது கொள்ளைக்கூட்ட தலைவனை பார்க்க போறா மாதிரி போறோம் என்ன மச்சான் இது” என்றேன்.
எந்தப் பதிலும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே இருந்தான். காரை பார்க் செய்து அந்த பங்களாவின் கதவுகளை நெருங்கும்போதே வெளியில் மெல்லியதாக இசை கேட்டது. ஏதோ இசை கச்சேரி என்றுதான் நினைத்தேன்.ஒரே வினாடியில் சொக்கிப்போவது என்பது எனக்கு அங்குதான் முதல்முறை நிகழ்ந்தது. கலர் கலர் வாட் கலர் டூ யு சூஸ் என்று பள்ளி நாட்களில் விளையாடிய விளையாட்டெல்லாம் நினைவில் வந்தது. தம், தண்ணி எல்லாம் இருந்தாலும் இன்னும் பையனாகவே இருப்பவனை ஆளாக்க வந்த நண்பனே என்று அவனைப் பார்த்தேன். என் எண்ண ஓட்டங்களை அப்படியே படித்தவனாய், “நினைத்துக்கூட பார்க்காதே விரல் பட்டாலே விளக்கமாறு பிஞ்சுடும்” என்றான். “அமைதியா உட்கார்ந்து நடப்பதைக் கவனி” என்று இரண்டு பீர் ஆர்டர் செய்தான் பிரணவ்.
பாரில் நாம் ஒரு பீர்தான் ஆர்டர் செய்வோம் என அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்தது. ஒரு பீர் ஆயிரம் ருபாய். பில்லை பார்த்து மலைத்துப்போய் அவனைப் பார்த்தேன். இதைக் கையில் வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரம் குடிக்க வேண்டும் என்றான். வெறும் கையோடு அங்கு வெகு நேரம் உட்கார்ந்தால் என்னவோ போல் இருக்கும். அதனால் அவசரப்பட்டுக் குடிக்காமல் பொறுமையாக குடிக்க வேண்டும் என்று புரிந்தது.1000 ருபாய் அதிர்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை. அதுவே அந்த இடத்தின் முதல் வெற்றி எனலாம்.
உலகின் அத்தனை அழகிகளையும் ஒரே இடத்தில் அடைத்து விட்டார்களோ என்ற பிரமை. எல்லோரும் நன்றாக ஆட மாட்டார்கள், சிலர் அட்டகாசமாக ஆடுவார்கள். ஆட்டம் மட்டும் அல்ல, ஒலிக்கும் பாடல்கள், அதிகமும் கம்மியும் இல்லாத பல வண்ணங்களில் அணைந்து எரியும் மின் விளக்குகள் என, மொத்தமாக இவை அனைத்தும் அந்த இடத்திற்கு ஓர் அழகைத் தந்தது என்பதுதான் உண்மை.
பழைய படத்தில் எல்லாம் மன்னர், மந்திரி என பெரும்புள்ளிகள் எல்லோரும் அமர, நாட்டியப் பேரொளிகள் அவர்களைச் சுற்றி ஆடுவதைப் பலமுறை பார்த்ததனால், நமக்கும் ஒரு மன்னர் பீலிங் வருதோ என்றெல்லாம் ஒரே சந்தேகம். ஆனால், உண்மையாகவே மன்னர் போல உணர்ந்த தருணம் அது. எங்களைத் தவிர அங்கு இருந்த அனைவரும் சர்வநிச்சயமாகப் பெரும் பணக்காரர்கள்தான் என்பது பார்த்தாலே தெரிந்தது!நானும் அவனும் மட்டும்தான் தமிழ். சத்தமாகத்தான் பேசவேண்டும். அந்தச் சத்தத்தில் எங்கள் பக்கத்திலேயே இருந்தும், அதுவரை எங்கள் கண்ணில்படாத, கறுப்புக் கண்ணாடி போட்ட ஒருவர் திடீரென்று “தமிழ் நாட்டில் எந்த ஊர்” என்றார்.
அதென்னவோ நம் ஊர் ஆட்களை நம் ஊரில் பார்ப்பதை விட வெளியூரில் பார்ப்பதில்தான் பரவசம் அதிகம் என்று நினைக்கிறேன். சென்னை, என்று சொல்லிக்கொண்டே அவரை நன்றாக பார்த்தவுடன் நம்மை போல் ஒருவர் இரண்டு மணி நேர ஒரு பீர் பார்ட்டி என்று நினைத்தவுடன் சிரிப்பு வந்தது. “என்ன பார்த்தவுடனே சிரிக்கிறீங்க?” என்றார்
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார்… எங்களைப் போலவே ஒரே பீரை இரண்டு மணிநேரம் கையில் வைத்துக்கொண்டு ஆட்டத்தை ரசித்துக்கொண்டே பைசா வசூல் செய்ய நம்ப ஊர்லேர்ந்து ரெண்டு பேர்தான் என்று நினைத்தோம். இதோ நீங்களும் வந்ததும் சிரிப்பு வந்தது சார்…” என்றதும் காண்ட்ராஸ்ட்டாக பளீர் என்று வரிசையாகப் பல் தெரிய பெரிதாக நகைத்தார். எங்கள் கூடவே அமர்ந்தவர் மடமடவென்று குடித்து முடித்தார். அங்கு யாருக்கோ அவர் சைகை செய்ய உடனே இன்னொரு முழு பாட்டில் வந்தது. எங்களிடம் வாங்கியதைப் போல் அவரிடம் முன்பணமெல்லாம் வாங்கவே இல்லை. ஆஹா! இவர் நம்மைப் போல் இல்லை. பெரிய ஆட்டக்காரன்தான் எனப் புரிந்துகொண்டு அமைதியாக இருந்தோம்.
வந்திருக்கும் விருந்தாளிகள் அனைவரையும் அங்கிருக்கும் பெண்கள் ஆடிக்கொன்டே பார்த்துச் சிரிப்பார்கள். அந்தச் சிரிப்போடு கண்களாலும், கைகளாலும் சில சமிக்கைகள் கொடுக்கப்படும். அவர்களுக்கு நன்றாகத் தெரியும், எந்த இளிச்சவாயன் அன்று வகையாக சிக்குவான் என்று. நானும் பிரணவும் எங்களைப் பார்த்து சிரித்த அனைத்துப் பெண்களைப் பார்த்தும் சிரித்தோம். இதில் எங்களுக்குள் வாக்குவாதம் வேறு, என்னை பார்த்துதான் அவள் முதலில் சிரித்தாள் என்று. அங்கு ஆட்டம் என்னவென்றே தெரியாமல், முட்டாள் மாதிரி எல்லோரையும் பார்த்து மாறி மாறிச் சிரித்துக்கொண்டேதான் இருந்தோம். சற்றுநேரத்திற்கெல்லாம் ஆட்டம் தெரிந்தாலும், நம்மால் அதை விளையாட முடியாது என்பது நன்றாகப் புரிந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த தமிழ் நண்பர், ஒரு குறிப்பிட்ட பெண் வந்ததும் அமைதியாக இருந்தவர் திடீர் என்று அவர்கள் ஆடும் வளையத்திற்குள் சென்று கத்தை கத்தையாக (பத்தாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் இருக்கும்) அதை ஏதோ ஒரு தினுசாகக் கையில் அடுக்கி வைத்து ஒத்தை விரலால் ஒவ்வொரு நோட்டாக அந்தப் பெண்ணிற்கு அர்ச்சனை செய்து அமைதியாக வந்து மறுபடியும் அமர்ந்து கொண்டார். ஒரே வினாடியில் நானும் பிரணவும் ஒருவரை ஒருவர் புருவத்தை உயர்த்திக்கொண்டு பார்த்துக்கொண்டோம். எத்தனை பெண்கள் அங்கு இருந்தாலும் வந்த வாடிக்கையாளர்களின் கண்கள் அங்கு இருக்கும் யாரோ ஒருவரின் மீதுதான் இருந்து கொண்டே இருந்ததைக் கவனித்தேன். அந்தப் பெண் செல்லும் இடம் எல்லாம் அவர்கள் கண்ணும் சென்றுகொண்டே இருந்தது.
அன்று இரவு இரண்டு மணிக்கு அங்கிருந்து கிளம்பி வீடு வந்தோம். சாக்ஸ் கூட கழட்டவில்லை. அப்படியே தூக்கம். மறுநாள் அதிமதியம் 12 மணிக்கு எழுந்து பல் மட்டும் துலக்கி ஹோட்டல் சென்று காபி குடித்து முடித்த கையோடு மீண்டும் அலைய வேண்டாம் என மதிய உணவையும் அங்கேயே முடித்து , அப்படியே அருகில் இருக்கும் ஒரு பாருக்குச் சென்று இரண்டு பீர் குடித்து மீண்டும் வீட்டிற்கு வந்து, 7 மணி வரை ஒரு தூக்கம் .
மாலை எழுந்து நன்றாகக் குளித்து மீண்டும் அந்த டான்ஸ் பார் செல்லலாம் என்று சென்றோம். நேற்று பார்த்தவர் இன்றும் இருந்தார். “அட வாங்க வாங்க என்ன சாப்பிடறீங்க..?” என்றார் சார். “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் சார்” என்றோம். “அட இருங்க” என்று எங்களுக்கு பீர் ஆர்டர் செய்தார். இந்த இடத்தோட அழகே இதுதான். நட்பு முதல்ல வந்துடும். அப்புறம்தான் பெயர் எல்லாம் தெரிஞ்சுப்போம். பிரணவும் நானும் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். அவரும் தன் பெயர் ரகு என்றும், தான் 20 வருடங்களாக பம்பாயில் இருப்பதாகவும், ஒரு ஸ்டாக் புரோக்கர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
எங்களுடன் பேசிக்கொண்டு அமைதியாக இருந்தவர், மீண்டும் அந்தக் குறிப்பிட்ட பெண் வந்ததும் ஆட்ட வளையத்துள் சென்று, மீண்டும் ஒரு பத்தாயிரம் ரூபாயைப் பறக்கவிட்டு எதுவுமே நடக்காதது போல் மீண்டும் வந்து குடிக்க ஆரம்பித்தார். நான் அவரிடம் “நீங்கள் தினமும் இங்கு வருவீர்களா” என்றேன் “ஆறு மாதங்களாக ஒரு நாள் கூட தவறாமல் வருகிறேன்” என்றார். “இதுவல்லவோ கடமை உணர்ச்சி” என்றான் பிரணவ். என்னுள் பல கேள்விகள். அத்தனையும் இரண்டாவது நாளே எப்படி கேட்பது என்று விட்டு விட்டேன்.
மூன்றாவது இரவும் அங்குதான் சென்றோம், நான்காவது இரவும் அங்குதான் சென்றோம். அந்த இடம் அவ்வளவு அழகு. மேலும் சர்வ நிச்சயமாக, ரகு சார் நாங்கள் எதுவுமே சொல்லாமல் எங்கள் நிலைமை புரிந்து எங்களுக்கு வந்து போகும் பெட்ரோல் செலவைத் தவிர வேறு செலவு இல்லாமல் பார்த்துக்கொண்டார். நான்காவது இரவு பிரணவ், ரகு சாரிடம் “நாளை புறப்படுகிறேன். அடுத்த மாதம்தான் வருவேன்” என்றான். “மறக்காமல் என்னை வந்துச் சந்தியுங்கள்” என்றவர் என்னிடம் “நீங்கள் இங்குதானே இருப்பீர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் என் பெயரை சொல்லிவிட்டு வாங்க” என்றார். அவர் பெயரை சொல்லிக்கொண்டு வெள்ளி, சனி நிச்சயமாக டான்ஸ் பார் சென்று ரகு சாருடன் பீர் அடித்துவிட்டு வீடு திரும்புவது வாடிக்கை. இப்படியே ஆறு மாதங்கள். பிரணவ் வரும்போதும் அங்கு வந்துவிடுவான்.
ஆறுமாத காலத்திற்குப் பிறகு ஒரு சனிக்கிழமை அங்குச் சென்றிருந்தேன். ரகு சார் இல்லை. சற்று பகீர் என்றுதான் இருந்தது. என்ன ஆனதோ இவருக்கு. ஒரு பீர் ஆர்டர் செய்தேன். பீர் முடிந்தவுடன் கிளம்பினேன். பாரில் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. “ரகு சார் நான் எப்பொழுது வந்தாலும் பணம் வாங்கக்கூடாது என்று சொல்லிவிட்டார்” என்று சொன்னார்கள். சொல்லிவிட்டுச் சென்றார் என்றால் நிச்சயமாக நாளை வருவார் என்று அடுத்த நாளும் அங்கு சென்றேன். அவர் வரவில்லை. என்னிடம் பணமும் வாங்கவில்லை. சரி எங்காவது ஊருக்குச் சென்றிருப்பார் என்று அடுத்த வாரம் அங்கு வந்தேன். அன்றும் அவர் வரவில்லை. ஏதோ மனதிற்கு மிகவும் சங்கடமாகவே இருந்தது.
அதுவரை ஆனந்தமாக மட்டுமே இருந்த இடத்தில் சற்றும் நிம்மதி இல்லை. அன்று இரவு ஒருமணிக்கு அங்கிருந்து கிளம்பும்போது வெளியில் அவளைப் பார்த்தேன். அவளைப் பார்த்தவுடனே எத்தனை லட்சங்கள் ரகு சார் அவள் மீது கொட்டியிருப்பார் என்ற எண்ணம்தான் தலைக்குள் ஓடியது. நான் டாக்ஸி தேடி வெளியில் நடக்கும்போது அவள் கார் என் அருகில் வந்தது. “என் பெயர் திவ்யா. உங்களுடன் பேசவேண்டும்” என்றாள். அமைதியாக காருக்குள் அமர்ந்தேன். “ரகு சார் உங்களுடன் பேசினாரா” என்றாள். “இல்லை. என் கைபேசி எண் அவரிடம் கிடையாது அவர் எண்ணும் என்னிடம் இல்லை” என்றேன். “என்னிடம் இருக்கிறது ஆனால் அது இப்போது வேலை செய்யவில்லை” என்றவள், பெரிதாக அழத் துவங்கினாள். என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவள் பெயர் தெரிந்து ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை. அதற்குள் இப்படி அழுகிறாள். எதற்காக இப்படி அழ வேண்டும்? இவளை எப்படித் தேற்றுவது? ஒண்ணுமே புரியவில்லை. கார் கதவில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினேன். காரை விட்டு இறங்கி முகத்தைத் துடைத்துக்கொண்டு தண்ணீர் குடித்துவிட்டு “நாளை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்க்கே சென்று விசாரிக்கலாம் என்று இருக்கிறேன் நீங்களும் வரமுடியுமா” என்றாள். எனக்கும் ரகு சார் பற்றி தெரியவேண்டும். “வருகிறேன்” என்று சொல்லி என் கைபேசி எண்ணை கொடுத்து விட்டுக் கிளம்பினேன் .
மறுநாள் காலை பத்து மணிக்கெல்லாம் அழைப்பு வந்தது. நான் அலுவலகத்தில் இருந்தேன். “12 மணிக்கு வரமுடியுமா” என்றாள். சென்றேன். ஒரு ஐம்பது பேரிடமாவது விசாரித்திருப்போம் எல்லோரும் சொன்ன ஒரே பதில், சில நாட்களாக அவர் வருவதில்லை என்பது மட்டும்தான். அங்கு இருக்கும் வாட்ச்மேனை தாஜா செய்து அவர் விலாசத்தை வாங்கினோம். நேராக அங்கு சென்றால் வீடு பூட்டி இருந்தது. விசாரித்தால் அதே பதில்தான். சில நாட்களாக வருவதில்லை. திவ்யா மீண்டும் அழுகை. அவளிடம் “நான் ஒன்று கேட்கலாமா? நீங்கள் எதற்கு அவரை இப்படி தேடித் தேடி அழுகிறீர்கள்?”
“நீங்கள் பம்பாய்க்கு புதிது என்று ரகு சார் உங்களை பற்றிச் சொல்லியிருக்கார்” என்றாள். எங்கு சொல்லியிருப்பார். அங்கு இருக்கும் பெண்களிடம் தேவை இல்லாமல் பேசினால் கூட வாடிக்கையாளர்கள் கொட்டும் பணத்தை பெருக்கி எடுக்கும் விளக்கமாரிலேயே அடி விழுமே. அப்படி இருக்க எங்கு பேசுவது ஒன்றும் புரியாமல், “அங்கு ஆடும் யாருடனும் நாங்கள் பேசுவதற்கு அனுமதியே இல்லையே, எப்படி பேசினார்?” எடுத்த எடுப்பில் “நாங்கள் யாருடனும் பேசிவிடமாட்டோம். எங்களுக்கு தேவையான அளவு பணத்தை கொட்டியபின் ஐயோ பாவம் என்றுதான் பேசுவோம். பேசிய பிறகு பிடித்திருந்தால் பழகுவோம். உங்களுக்கேத் தெரியும். அவர் எவ்வளவு பணத்தை கொட்டி இருக்கிறார் என்று ஒரு நாள் நானாகத்தான் பேசினேன். விடிய விடிய உன்னுடன் பேசவேண்டும் அதற்கு நான் எவ்வளவு தரவேண்டும்” என்பதுதான் அவர் என்னிடம் இதுவரை கேட்ட ஒரே கேள்வி.
“நீங்கள் என்ன சொன்னீர்கள்?”.
விளையாட்டாக பத்தாயிரம் கொடுத்தால் பேசலாம் என்றேன். உடனே பத்தாயிரம் கொடுத்து என்னுடன் என் வீட்டிற்கு வந்தார், இரவு ஒரு இரண்டு மணி நேரம் பேசியிருப்பார் பிறகு நன்றாக தூங்கிவிட்டார். கிளம்பும்போது இன்று இரவும் வருகிறேன் என்று அன்று இரவும் வந்து இரண்டு மணி நேரம் பேசி விட்டு பத்தாயிரம் கொடுத்தார் . இப்படியே நான்கு மாதங்கள் டான்ஸ் பார் வருவார் அங்கிருந்து என் வீடு இரண்டு மணி நேரம் பேச்சு பிறகு தூக்கம் காலை கிளம்பும் போது பத்தாயிரம் என்று இப்படியே சென்றது. அவர் இதுவரை என்னைத் தொட்டது கூட இல்லை. நானே அவரிடம் எதற்குத் தயக்கம் என்றதற்கு அதெல்லாம் வேண்டாம் எனக்கு உன்னுடன் பேசவேண்டும் அவ்வளவுதான் என்பார். என்னமோ எனக்குப் புரியவில்லை அனால் அவருடன் பேசுவது பிடித்திருந்தது. இதுவரை எனக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்களை எனக்குச் சொல்வார். பணம் கொடுத்து எனக்குப் பல விஷயங்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவருடன் பேசாமல் இருப்பது எனக்கு சங்கடமாக இருக்கிறது. கடைசியாக எப்போதும் போல இரண்டுமணி நேரம் பேசினார். பின் நன்றாக உறங்கினார். அன்று அவர் பர்சில் பத்தாயிரம் இல்லை. பாவம் மனிதர் அதிர்ந்தே விட்டார். ஒரு வினாடியில் நெத்தி வேர்த்துவிட்டது மனிதருக்கு. நான் சிரித்துக்கொண்டே, இதில் என்ன இருக்கு நீங்கள் நாளைக்கு கொடுங்கள் என்று சொல்லியும் அவர் பதட்டம் குறையவேயில்லை.
அன்று மதியம் ஒருவர் வந்து, ரகு சார் கொடுக்கச் சொன்னதாக பத்தாயிரம் கொடுத்துவிட்டு சென்றார் அதற்கப்புறம் அவர் வரவேயில்லை” என்றாள் . ஒவ்வொரு வாரமும் ஒருநாள் திவ்யா என்னை அழைத்து ஏதாவது தெரிந்ததா என்று கேட்பாள். எதுவுமே தெரியவில்லை என்பது மட்டுமே என் பதிலாக இருந்தது.
ஆறு மாத காலத்திற்குப் பிறகு ஒருநாள் பணி நிமித்தமாக நான் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்க்கு செல்லும்போது ரகு சாரை பார்த்தேன் . “சார்” என்று கத்திகொண்டே அவரிடம் சென்றேன். அவரும் என்னைப் பார்த்தவுடன் “வாங்க வாங்க எவ்வளோ நாள் ஆச்சு. எப்படி இருக்கீங்க?” என்றார். “என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? ஏன் சார் நீங்க திடீர்னு வராம போய்ட்டீங்க?” என்றதற்கு, “அது ஒரு பெரிய கதை” என்றார். நான் “திவ்யாவா சார்” என்றவுடன், திவ்யா அன்று சொன்னது போல் அதே பதட்டம். க்ஷண நேரத்தில் அவர் நெற்றி வேர்த்து விட்டது. எதுவுமே பேசாமல் பேய் அறைந்தது போல் இருந்தார். நான் அவரிடம் நடந்த எல்லாவற்றையும் சொன்னேன். சற்று சமாதானம் ஆனார்.
“என் வாழ்க்கையிலேயே அதுதான் முதல் முறையா கொடுக்க வேண்டிய பணம் கையில் இல்லாமல் போனது . இத்தனை வருஷத்துல அப்படி ஒண்ணு நடந்ததே இல்லை. ரொம்ப அவமானமா போச்சுங்க” என்றவரிடம் “அவுங்க உங்கள ரொம்ப மிஸ் பண்றங்க சார். நீங்க அவுங்களோட பேசுங்க” என்றதற்கு. “நான் பணத்தை மறந்த அன்றைக்கு பணம் வேண்டாம் சார். நீங்க வந்தா போதும்னு அவங்க சொல்லலியே. பரவாயில்ல நாளைக்குக் கொடுங்கன்னுதானே சொன்னாங்க” என்றார் ?