ஞானத் தந்தையும் ஸாண்ட்விச் சீடனும்…

சுமார் ஒரு இருபது இளைஞர்களுக்காவது நான் ஞானத் தந்தையாக இருக்கிறேன்.   ஒரு அம்மாவுக்கு டஜன் குழந்தைகள் இருந்தாலும் விசேஷமாக  ஒரு குழந்தையின் மீது அதீத பாசம் இருக்கும் அல்லவா, அப்படி ஒரு இளைஞன் மேல் எனக்கு ஒரு தனி கவனம் உண்டு.  பெயர்  மாடசாமி என்று வைத்துக் கொள்வோம்.  மாடசாமியின் மீது நான் விசேஷ கவனம் கொண்டிருப்பது அவனுக்குத்தான் துன்பமாக இருந்ததே தவிர எனக்கு அல்ல.  கோவாவில் தருணை சிறையில் சந்தித்து விட்டு அறைக்கு வந்து தனியாக அமர்ந்து ஒயின் அருந்திக் கொண்டிருந்தேன்.   ஹாக்கி மைதானம் அளவுக்குப் பெரியதாக இருந்த மொட்டை மாடியில் தனியாக ஒரு குடிசை.   கொஞ்சம் கொஞ்சம் இடம் விட்டு ஷெட் போட்டு அதில் ஊஞ்சல் மாட்டியிருந்தார்கள்.  இரவு மணி பத்து இருக்கும்.  ஊரே உறங்கி விட்டது.  நான் மாடி ஓரத்தில் இருந்த  திண்ணையில் அமர்ந்திந்தேன்.   திண்ணைக்குப் பின்னால் ஒரு குட்டி நீச்சல் குளம்.  இடுப்பு அளவே ஆழம்.  அதாவது மொட்டை மாடியில் நீச்சல் குளம்.   மாடசாமிக்கு போன் போட்டேன்.    ஏன் மாடசாமியையே துன்பப்படுத்த வேண்டும் என்று எண்ணி போனை பாதியிலேயே நிறுத்தி விட்டு, இன்னொரு இளைஞனுக்கு போன் போட்டேன்.  என்ன சாரு, எப்படி இருக்கீங்க?  ம்… நல்லா இருக்கேன்.  வேற?  வேற என்ன… அப்படியே போய்ட்டு இருக்கு.

இப்படியே ஐந்து ஆறு நண்பர்களிடம் பேசி விட்டு யோசித்துக் கொண்டிருக்கும் போது மாடசாமியின் போன் வந்தது.  கூப்பிட்டீங்க, அப்புறம் எங்கேஜ்டாகவே இருந்தது?  காரணம் சொன்னேன்.  பிறகு வேறு ஏதோ கேட்டார். பதில் சொன்னேன்.  பிறகு நான் ஏதோ கேட்டேன்.  அவர் ஏதோ சொன்னார்.  இந்த ஏதோ ஏதோ எல்லாம் முடிய இரவு பனிரண்டு ஆனது.  ஒருநாள் மாடசாமி ஒரு இலக்கியக் கூட்டத்துக்கு முன்னால் ஒரு தோழி, பின்னால் ஒரு தோழி சகிதம் இவர் நடுவே அமர்ந்து ஸ்கூட்டரில் வந்தார்.  ஸ்கூட்டரை ஓட்டியவர் முன்னால் அமர்ந்திருந்த தோழி.  கலி முத்திடுச்சு என்று யாரோ சொன்ன குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தால் யாரும் இல்லை.  பிறகு அது என் குரல் தான் என்று சமாதானம் ஆனேன்.  மறுநாளே மாடசாமி வீட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்து சின்னதாக கையில் எலும்பு முறிவு என்று சொன்னான்.  இப்போது சரியாகி விட்டது.  இப்போது மாடசாமியின் ஞாபகம் வந்தது ஏன் என்றால், அவனுக்கு மிக நெருங்கிய தோழிகள் சுமார் 20 பேர் இருக்கிறார்கள்.  எப்படிப்பா இப்படி என்றேன்.  நீங்களே குரு என்றான்.  எனக்குத் தான் ஒன்று கூட இல்லையே என்றேன். அதேதான் என்றான்.  புரியும்படி சொல் என்றேன்.  ”தந்தை செய்வதை மகன் செய்ய மாட்டான் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா?  உங்கள் அப்பா இந்திக்கு எதிர்ப்பு.  நீங்களோ இந்தி படித்தீர்கள்.”  இப்படி நிறைய உதாரணம் சொன்னான்.  கடைசியில் சொன்னான்.  ”நீங்கள் என்னென்ன செய்தீர்களோ அதையெல்லாம் செய்யாமல் இருந்தேன்.  இப்படி இருக்கிறேன்” என்றான்.  எனவே முகநூலில் என்னென்னவோ டிப்ஸ் எல்லாம் எழுதி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் நிர்மல் போன்ற அன்பர்களே… ஞானத் தந்தையைப் பாருங்கள்…. அதுவே உங்களுக்கு நூறு டிப்ஸை அள்ளித் தரும்…

Comments are closed.