ஆற்றங்கரைக் கதைகள் : நிர்மல்

நம் வாசகர் வட்டத்திலிருந்தே பத்துப் பனிரண்டு எழுத்தாளர்களின் தொகுப்புகளை அடுத்த புத்தக விழாவின் போது வெளியிடலாம் போல் தெரிகிறது.  புதிய எழுத்தாளர்கள் என்றால் பதிப்பகம் தான் பிரச்சினை.  வாசகர் வட்டத்தின் மூலமே ஒரு பதிப்பகம் ஆரம்பித்து விடலாமா என்று தோன்றுகிறது.  ஆனால் என்னுடைய புத்தகங்களைக் கொடுக்க மாட்டேன்.  மன்னிக்கவும்.  இனியாவது என் புத்தகங்களை குறைந்த பட்சம் 20,000 பிரதிகள் விற்றுத் தர முடியும் பதிப்பகத்திடம் தான் கொடுப்பது என்று இருக்கிறேன்.  எனவே வாசகர் வட்டத்துக்கு என் நாவல் கிடைக்காது.  ஆனால் வாசகர் வட்டத்தின் எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடலாம்.  வேண்டுமானால் என் கட்டுரைத் தொகுதிகளைத் தரலாம்.  என் யோசனை எப்படி என்று எழுதுங்கள்.   சற்று நேரம் முன்பு நிர்மலின் ஆற்றங்கரைக் கதைகள் என்ற தலைப்பில் உள்ள குட்டிக் கதை ஒன்றைப் படித்த போது இந்த யோசனை தோன்றியது.  நிர்மல் எழுதிய குட்டிக் கதை இது.  சரியாக 13 இடங்களில் ஒற்றெழுத்துப் பிழைகளைத் திருத்தினேன்.  கவலை வேண்டாம், நிர்மல்.  நான் எடிட் பண்ணித் தருகிறேன்.  நீங்கள் எழுதுங்கள்.

நாலு கிடாவை பத்திக்கிட்டு  வந்த அண்ணனைப் பார்த்து, எப்படிண்ண இருக்கிய நல்லா இருக்கியளா எனற பொதுவான விசாரிப்புகளுக்கு பிறகு, என்ன கிடா கோயிலுக்கா என்றேன்.

ஆமா அந்த செவல ஞானகரயான் கோவிலுக்குடே, மத்தது விக்க என்றார்.
செவல நல்ல வளர்ப்பா இருந்திச்சி, அதன் நடையில் கம்பிரம் இருந்திச்சி.

நீ இருக்கிற ஊர் எப்படி டே?
கேவலமா இருக்கும்
என்னடே இப்பிடி சொல்றே?
ஆமா உண்மையைத்தான் சொல்றேன். கேவலமாத்தான் இருக்கும். ஊர சுத்தி ஒரே மணல் காடு, அதுக்குப் பக்கத்தில பெரிய பெரிய பில்டிங். இவ்வளவுதான் அந்த ஊரு.

அப்ப என்ன மைத்துக்குடே நீ அங்க இருக்க?

காசுக்குதான். இப்ப நீங்க ஆடு வளக்கிய… இப்படி ஆடு வளக்க அங்க பெரிய பணக்காரனாலதான் முடியும். இதுக்கு தெனம் அவுத்தி ஒரு கெட்டு வாங்கிப் போடுவியே அவ்வளவுதான மற்றது அதுவா புல்லை மேஞ்சிக்கிட்டு போயிறும், ஆத்துல தண்ணி குடிச்சிக்கிடும். இப்படி அங்க முடியாதுண்ண, என்னா அங்க இப்பிடி புல்லு காடு மரமெலாம் கிடையாது.

அப்படியா…. அப்ப நம்ம ஊரு சொர்கம்ன்னு. அது சரி.

செவல இவரு சொன்ன பக்கம் போகாம இன்னோரு பக்கமா போனதைக் கண்டு. இது ஓன்னு எப்பப் பார்த்தாலும் அந்தத் தோட்டத்துக்குள்ள போக பாக்கு. அவன் தோட்டம் பச்சையா இருக்குலா, ஆனா எல்லாம் காட்டு செடிடே. அதுகளுக்குத் தெரியல பாரு.

க்கே க்கே என்றவாறே ஆடுகளை ஆற்றை நோக்கி ஓட்டிச் சென்றார். செவலையையும் சேர்த்து.

செர்க்கியுள்ள நம்ம கிட்ட கத அளக்கான்னுதான் நினைச்சிருப்பாரு நான் சொன்னத அவரு நம்பினது மாதிரியே தெரியல.

Comments are closed.