எக்ஸைல் (திருத்தப்பட்டது)

ஒருவழியாக எக்ஸைல் பற்றிய விஷயங்கள் முடிவுக்கு வந்து விட்டன.  குழப்பங்களும், சந்தேகங்களும் தீர்ந்து விட்டன.  திருத்தங்கள் செய்து விரிவாக்கப்பட்ட எக்ஸைல் சுமாராக 1400 பக்கங்கள் வந்துள்ளன.  கடந்த வாரம் நூறு பக்கம் எழுதிச் சேர்த்தேன்.  இனிமேல் எதுவும் சேர்ப்பதாக இல்லை.  மொத்தம் 2,00,000 வார்த்தைகள் உள்ளன.  பழைய எக்ஸைல் 80,000 வார்த்தைகள்.  (தாஸ்தயேவ்ஸ்கியின் இடியட்டைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  அதில் சுமார் 3,50,000 வார்த்தைகள் உள்ளன; தருணின் ஆல்கெமி 2,70,000 வார்த்தைகள்).   இந்த நிலையில் ஏற்கனவே வெளிவந்த எக்ஸைல் கைவசம் இருக்கும் போது இப்போது எழுதியதை எப்படி வெளியிடுவது?  எக்ஸைல் பாகம் 2 என்றா?  அது சாத்தியம் இல்லை.  ஏனென்றால், பழைய எக்ஸைலில் முதல் பக்கத்திலிருந்தே மாற்றங்கள் செய்திருக்கிறேன்.  முதல் எக்ஸைலை கச்சாப் பொருளாக வைத்துக் கொண்டு மேலே பலவிதமான கதைகளைக் கட்டியிருக்கிறேன்.  எனவே, பழைய எக்ஸைலை முதல் பாகம் என்றும் இப்போது எழுதியிருப்பதை இரண்டாம் பாகம் என்று சொல்ல முடியாது.  உதாரணமாக, பழைய எக்ஸைலில் சுமார் 50-ஆவது பக்கத்திலிருந்து 200 பக்கங்களுக்கு புதியதொரு கதை சொல்லப்பட்டு, பிறகு 251-ஆம் பக்கத்திலிருந்து பழைய எக்ஸைல் தொடரும்.  ஆனாலும், இதை ஒரு வாசகர் புதிய நாவலாகத்தான் வாசிக்க முடியும்.  எனவே, எக்ஸைலின் தலைப்பை மாற்றாமல் ”எக்ஸைல்” என்ற தலைப்புக்குக் கீழே ”திருத்தப்பட்ட பிரதி” என்ற ஒரு குட்டி விளக்கத்தோடு வெளியிடுவது என்று முடிவு செய்திருக்கிறேன். 

அராத்து, கார்த்திக், கணேஷ் அன்பு ஆகிய மூவரிடமும் பிரதியைக் கொடுத்திருந்தேன்.  அவர்கள் படித்து விட்டதாகச் சொன்னார்கள்.  விரைவில் அவர்களோடு ஒரு அமர்வில் புதிய எக்ஸைல் பற்றி விவாதித்து விட்டு, தேவையெனில் மாற்றங்கள் செய்து விட்டு பதிப்பகத்தாரிடம் கொடுத்து விடுவேன்.  அநேகமாக ஜூன் முதல் வாரம் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் வெளியீட்டு விழா நடத்தப்படும். 

இங்கே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விட விரும்புகிறேன்.  ஒரு நாவல் 50,000 பிரதிகள் விற்றால் இந்த வெளியீட்டு விழா ஆடம்பரங்கள் எல்லாம் தேவையில்லை.  ஆனால் இங்கே முன்னணி எழுத்தாளர்களின் நூலே இரண்டாயிரமோ மூவாயிரமோதான் விற்கிறது.  அதற்கு மேல் இல்லை.  அதனால்தான் தமிழ்ச் சமூகம் எழுத்தாளனைக் கொண்டாடாத சமூகம் என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன்.  சமீபத்தில் இனம் என்று ஒரு படம் வந்தது.  அது தமிழர்களுக்கு எதிரான படம் என்று சொல்லி எதிர்ப்பு கிளம்பியதால் திரையரங்குகளிலிருந்து தூக்கப்பட்டது.  (இல்லாவிட்டாலும் அந்தப் படம் ரெண்டு நாட்கள் கூட ஓடுவதற்குரிய தகுதியில்லாத மொண்ணையான படம்.  ஸ்ரீலங்கா ராணுவத்தினர் தமிழ்ப் பெண்ணை வன்கலவி செய்யும் ஒரு காட்சி போதும், அது எவ்வளவு சராசரியான படம் என்று சொல்ல.  மேலும், ஆவணப்படத்தைப் பார்ப்பது போன்ற அலுப்பூட்டும் காட்சிகள் வேறு நம்மை திரைப்படத்திலிருந்து துரத்தி அடிக்கிறது).  சரி, விஷயத்துக்கு வருகிறேன்.   தமிழ்ச் சமூகத்தில் ஒரு நாவலுக்கு இப்படிப்பட்ட எதிர்வினையெல்லாம் வராது.  எதிர்த்தாலும் பாராட்டினாலும் அது சினிமாவுக்குத்தான்.  இலக்கியத்துக்கு அல்ல.  ஏனென்றால், யாருமே இலக்கியம் படிப்பதில்லை.  எனவே, ஒரு எழுத்தாளன் தமிழ்ச் சமூகத்தை விமர்சித்து எழுதியிருந்தாலும் கூட அவனுக்கு இங்கே எதிர்ப்பு வராது. 

இந்த நிலையில் one man army-யைப் போல் நான் மட்டுமே காமராஜர் அரங்கம், பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் என்று பிரம்மாண்டமான முறையில் நூல் வெளியீட்டு விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறேன்.  இந்தப் பிரச்சினையே வேண்டாம், ஆங்கிலத்தில் கொடுத்து விடுவோம், அங்கே வெளியீட்டு விழா எல்லாம் தேவை இருக்காது, ஏதாவது விருது கொடுத்து விடுவார்கள் என்று நினைத்தேன்.  ஆனால் மொழிபெயர்ப்பாளரின் வேகம் இதற்கு ஒத்துப் போகவில்லை.  நானும் சேர்ந்து 400 பக்கத்தை 1400 பக்கமாக்கி விட்டேன்.  இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் எக்ஸைல் வெளியீட்டு விழா.  செலவு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் ஆகும்.   சென்னை முழுவதும் தட்டி வைப்பதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.  தட்டி வைக்க ஆயிரம் ரூபாய் ஆகுமா என்று கேட்டேன் நண்பரிடம்.  ஐம்பதாயிரம் என்றார்.  நான் நம்பவில்லை.  எப்படி ஆகும் என்றும் விளக்கிய போது ஆச்சரியம் அடைந்தேன்.

பழைய எக்ஸைலின் முதல் பிரதி ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.  ஆனால் ஏலம் எடுத்தவர் தன் பெயரைச் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டதால் அது பெரிதாக எடுபடவில்லை.  ஆனால் அதற்கு அடுத்து இரண்டாவது, மூன்றாவது பிரதிகளை 20,000 ரூபாய், 10,000 ரூபாய் என்று சில நண்பர்கள் ஏலம் எடுத்தனர்.  அந்தப் பணத்தில்தான் காமராஜர் அரங்கில் எக்ஸைல் வெளியீட்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டது. 

ஆனால் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தவரின் பிரதியில் அவர் பெயரும் என் கையெழுத்தும் மட்டுமே இருக்குமே ஒழிய, அதுதான் எக்ஸைல் நாவலின் முதல் பிரதி என்பதற்கு என்ன சான்று இருக்கிறது?  இது பற்றி நான் யோசித்துக் கொண்டிருந்த போது  சென்ற ஆண்டு என்னுடைய Diabolically yours என்ற கதை அடங்கிய Exotic Gothic – 5 தொகுப்பை நான் விலை கொடுத்து வாங்கினேன்.   (எனக்காக அனுப்பப்பட்ட பிரதியை ஒரு நண்பருக்குக் கொடுத்து விட்டேன்).  விலை ஆயிரம் ரூபாயோ என்னவோ.  அதில் ஒரு ஆச்சரியமான விஷயத்தைக் கண்டேன்.  பிரதி எண் 716 என்று அதில் கையால் எழுதப்பட்டிருந்தது.  இந்தத் தொகுப்பு மிகவும் விசேஷம் என்பதால் ஒவ்வொரு பிரதியிலும் அதன் எண்ணைப் போட்டு விடுகிறார்கள் என்று அதன் தொகுப்பாளர் டேனல் ஆல்ஸன் சொன்னார்.  அது எனக்கு நல்ல யோசனையாகத் தோன்றியது. 

பதிப்பகத்திடம் நான் நூறு பிரதிகள் கேட்டிருக்கிறேன்.  அதில் முதல் பிரதி, இரண்டாம் பிரதி, மூன்றாம் பிரதி என்று எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுப்பேன்.   இதற்கெல்லாம் இன்று மதிப்பில்லாமல் இருக்கலாம்.  ஆனால் யோசித்துப் பாருங்கள்.  நான் எழுதிய முதல் புத்தகமான லத்தீன் அமெரிக்க சினிமா – ஓர் அறிமுகம் இப்போது என்னிடமே இல்லை.  அதன் ஒரு பிரதியே இப்போது விலை மதிக்க முடியாதது என்கிற போது அதன் முதல் பிரதி எவ்வளவு விசேஷமானதாக இருக்கும்?  அதேபோல் இன்று எல்லோராலும் பேசப்படும் ஸீரோ டிகிரியின் முதல் பிரதி?  ஆக, திருத்தப்பட்ட புதிய எக்ஸைலின் முதல் நூறு பிரதிகளை ஏலம் எடுக்கும் நண்பர்களுக்குக் கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்.  ஒரு நண்பர் 70,000 ரூபாய்க்கும், இன்னொரு நண்பர் 75,000 ரூபாய்க்கும் கேட்டார்கள்.  எனவே இப்போதைய நிலையில் 75,000 ரூ. கேட்ட நண்பருக்கு முதல் பிரதி.  70,000 கேட்டவருக்கு இரண்டாவது பிரதி.  வரும் நாட்களில் ஒருவர் ஒரு லட்சம் சொன்னால் அவருக்கு முதல் பிரதி.  முதல் பிரதி, இரண்டாம் பிரதி, மூன்றாம் பிரதி என்று பிரதியின் எண் ஏறுமுகத்தில் போனால் அதற்கான ஏலத்  தொகை இறங்கு முகத்தில் வரும்.  ஒவ்வொரு பிரதியிலும் அந்தப் பிரதியின் எண்ணை எழுதி என் கையெழுத்திட்டு தருவேன். 

இது பற்றியெல்லாம் முகம் சுளிப்பவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை.  அவர்கள் பாவம்.  தமிழ்நாட்டுக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.  சல்மான் ருஷ்டி ஒரு நாவல் எழுதினால் 20 கோடி ரூபாய் தருவார் பதிப்பாளர்.  (அதில் பத்தொன்பதரை கோடியை அவர் விவாகரத்து செய்த கடைசி மனைவிக்குக் கொடுத்து விட்டு மீண்டும் ஏழையாகி விடுவார்; அது வேறு விஷயம்!) பிறகு, நாவல் வெளிவந்ததும் அதைப் பிரபலப்படுத்துவதற்காக உலகம் பூராவும் சுற்றுவார் ருஷ்டி.  ஆனால் ஒரு எழுத்தாளர் தன் நாவலை விளம்பரப்படுத்தினாலே அபச்சாரம் என்று கருதும் தமிழ்நாட்டில் என் நாவலை ஏலம் போட்டு விற்கிறேன் என்று கேட்டால் கொந்தளித்துப் போவார்கள்.  பாவம், அவர்களை விட்டு விடுவோம்.  நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்த வாசக நண்பர்கள் மட்டும் இந்த ஏலத்தில் கலந்து கொண்டு நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்க இருக்கும் எக்ஸைல் வெளியீட்டு விழாவை சிறப்பித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஒரு விஷயம், இந்த ஏலத்தில் கலந்து கொள்ளும் முதல் பதினைந்து நண்பர்களை நூற்றாண்டு விழா மண்டப மேடைக்கு அழைத்துபுத்தகத்தைத் தருவேன்.  முதல் மூன்று பிரதிகளை வாங்கும் நண்பர்கள் மேடையில் அமர்ந்து விழாவில் பங்கேற்கலாம்.

ஜூன் முதல் வாரம் வரை நமக்கு நேரம் இருக்கிறது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் எனக்கு எழுதலாம்.

charu.nivedita.india@gmail.com

 

 

Comments are closed.