“பெரிய ரைட்டர்டா!”

சராசரிகளோடு பழகினால் பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்று அடிக்கடி எழுதுகிறேன் அல்லவா?  ஆனால் எழுத்தாளர்களோடு பழகினால் அதை விடப் பிரச்சினையாக இருக்கிறது.  நேற்று இரவு நீயா நானா ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன்.  என்னோடு கலந்து கொண்ட பிற எழுத்தாளர்கள் ஜி. குப்புசாமி, ஷாஜி.  குப்புசாமி மொழிபெயர்ப்பாளர்.  அவரது மொழிபெயர்ப்பின் சிறப்பைப் பற்றி நான் பலமுறை எழுதியிருக்கிறேன்.  எழுத்தாளர்களிடம் அவ்வளவாகக் காண முடியாத அன்பு உள்ளமும் மென்மை உணர்வும் கொண்டவர்.  இவரிடம் பேசும் போதெல்லாம் எனக்கு கோபி கிருஷ்ணனின் ஞாபகம் வரும்.  கோபி கிருஷ்ணனைப் போன்ற ஒரு அற்புதமான மனிதனை நீங்கள் காண்பது அரிது.  இயேசு கிறிஸ்து இப்போது நம்மிடையே வாழ்ந்தால் எப்படி இருந்திருப்பார்?  அதுதான் கோபி கிருஷ்ணன்.  இந்தக் கணம் இந்தக் கட்டுரையைப் படிப்பதை நிறுத்தி விட்டு, உடனே, கோபி கிருஷ்ணன் பற்றி அவர் மரணம் அடைந்ததும் நான் எழுதியிருந்த கட்டுரையைப் படித்து விட்டு இதைத் தொடருங்கள்.  அப்போதுதான் நான் சொல்ல வருவது புரியும்.  ஆனால் என் அருமை கோபி மாதம் ஐநூறு ரூபாய் இல்லாமல் இறந்தார் என்றால் இந்த நேரம் என்னாலேயே நம்ப முடியவில்லை.   குடும்பத்தை அவர் மனைவி கவனித்துக் கொண்டார், ஒரு பத்திரிகை ஆஃபீஸில் ப்ரூஃப் ரீடர் வேலை பார்த்து.  எவ்வளவு சம்பளம் என்று கேட்பேன்.   ரெண்டாயிரமோ என்னவோ சொல்லுவார்.  அம்பது வருஷத்துக் கதை இல்லை, வெறும் பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தின கதை இது.   கோபி கிருஷ்ணனுக்குத் தேவைப்பட்ட ஐநூறு ரூபாய் அவர் புகைக்கும் சுண்டு விரல் சைஸ் சிகரெட்டுக்கும் ஒரு நாளில் அவர் குடிக்கும் இருபது முப்பது தேநீருக்கும் தான்.   

ஜி. குப்புசாமியுடன் நான் அதிகம் பழகியதில்லை என்றாலும் அவரைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்கு கோபியின் ஞாபகம் வரும்.  சரி, இப்படி வைத்துக் கொள்ளுங்கள்.  நான் ரொம்ப ரொம்ப வெகுளி என்று என்னைப் பற்றி எனக்கு ஒரு கணிப்பு.  மற்றவர்களை கணிக்கும் போது நம்மைப் பற்றியும் கணிக்க முடியும் அல்லவா?  அதே போன்ற ஒரு வெகுளியான, வெள்ளந்தியான மனிதர் குப்புசாமி. 

நேற்றைய நீயா நானா படப்பிடிப்பு முடிந்ததும் அதிகாலை இரண்டு மணி அளவில் இரவு உணவை முடித்துக் கொள்ளலாம் என்று நின்று கொண்டிருந்தோம்.  ஏற்கனவே அவருடைய மகன் பிரஸன்னாவை எனக்கு அறிமுகப்படுத்தி இருந்தார்.  இலக்கியம் பக்கமே வர மாட்டான் என்றார்.  நிம்மதி என்றேன். 

ஏன் அப்படிச் சொன்னேன் என்றால், தமிழ்நாட்டில் இலக்கியவாதிகள் எல்லோருமே – என்னையும் சேர்த்தே சொல்கிறேன் – ஒரு மாதிரி மனநோயாளிகள் கணக்காகவே திரிகிறார்கள்.  எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே வாங்கிய அடிகள் (நாகரிகமாக ”அடிகள்” என்று எழுதியிருக்கிறேன்) காரணமாக இருக்கலாம்.  அப்பா, அம்மா, தம்பி தங்கைகள், அவர்களின் கணவர் மனைவிகள், கடைசியாக மனைவி எல்லோரிடமும் வாங்கிய அடிகள், மற்றும் சமூகத்திலிருந்து தினமும் வாங்கும் அடி.  இப்படிப்பட்ட சூழலில் எழுத்தாளன் எப்படி இருப்பான்?  அதனால்தான் குப்புசாமியின் புதல்வருக்கு இலக்கியமெல்லாம் தெரியாது என்றதும் நிம்மதி என்றேன்.    

இந்த இடத்தில் என் மகன் கார்த்திக் பற்றியும் சொல்ல வேண்டும்.  அதுதான் நியாயம்.  எனக்கு ஆரம்ப காலத்திலிருந்தே சுந்தர ராமசாமியின் எழுத்து பிடிக்காது.  அது ஏதோ ரொம்ப சராசரியாக இருக்கிறது என்பது என் கருத்து.  ஆனால் சு.ரா.விடம் எனக்குப் பிடித்த விஷயம் அவரது அமெரிக்கை.  அமெரிக்கை என்றால் புரிகிறதா?  என்னோடு ஓரிரு நாட்கள் பழகினீர்கள் என்றால் புரிந்து விடும்.  சமீபத்தில் என் நண்பரின் வீட்டில் மூன்று தினங்கள் தங்கியிருந்தேன்.  நண்பர் தனியாக வசிப்பவர்.  அங்கே நான் சென்றதும் என்னைச் சந்திக்க நாலைந்து நண்பர்கள் வந்து விட்டனர். 

ஒரு நண்பர் சிகரெட் புகைத்து விட்டு எஞ்சியதை அப்படியே தரையில் நசுக்கி ஒரு பக்கம் எறிந்தார்.  அதை நான் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.  பிறகு அந்த இடத்தை விட்டு எல்லோரும் அகன்ற பிறகு அந்த சிகரெட்டை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு தரையையும் சுத்தம் செய்தேன்.  இதை அமெரிக்கை என்று கொள்ளலாம்.  வெறும் தூய்மை மட்டும் அல்ல அமெரிக்கை.  வேறு என்ன என்ன என்று நீங்களே தேடித் தெரிந்து கொள்ளுங்கள். 

 

சரி, சு.ரா.வின் மீது ஒரு விஷயத்தில் எனக்குப் பொறாமை ஏற்பட்டது.  காரணம், கண்ணன்.  சு.ரா.வின் தவப் புதல்வன்.  தவப் புதல்வன் என்ற வார்த்தைக்கு நடமாடும் உதாரணம் வேண்டுமானால் கண்ணன் தான்.  எத்தனையோ புதல்வர்கள் தங்கள் தந்தையரை தங்கள் அடி வயிற்றிலிருந்து வெறுப்பதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன்.  சந்தானம் என்று ஒரு கேரக்டர்.  ஸ்ரீவில்லிபுத்தூர் நாவலின் நாயகன். அவன் தன் தந்தையின் சடலத்தைக் கண்ணுற்ற போது அதை எட்டி உதைக்க வேண்டும் என்று மனசார விரும்பினான்.  ”இந்தத் தேவ்டியாப் பயலை எட்டி உதைக்க வேண்டும்.”  தன் தந்தையின் சடலத்தைப் பார்த்த போது சந்தானத்துக்குத் தோன்றிய வாக்கியம் இது.  ஏன் இப்படி அவனுக்குத் தோன்றியது என்பதுதான் என்னுடைய அடுத்த நாவல் ஸ்ரீவில்லிபுத்தூரின் கதை.  சமீபத்தில் கொக்கரக்கோ தன் தந்தையின் கதையைச் சொன்னான்.  அமெரிக்காவும் ஆஃப்கானிஸ்தானும் மாதிரிதான்.  எக்ஸைலில் வருகிறது.  இப்படிப்பட்ட சமூகச் சூழலில் தன் தந்தையைக் கொண்டாடும் கண்ணன் மீது எனக்குப் பொறாமை மிகுந்து, என் புதல்வன் கார்த்திக்கையும் கண்ணனைப் போல் கொண்டு வர வேண்டும் என்ற விருப்பத்தில் நவீன தமிழ் இலக்கிய நூல்களை அவனிடம் கொடுத்து படிக்கச் சொன்னேன்.  நடந்து பத்து வருடம் இருக்கும்.  அவன் அவந்திகாவிடம் வந்து சொன்னானாம்.  அம்மா, அப்பாவுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்.  ஆனால் புத்தகப் படிப்பு மட்டும் வேண்டாம். 

நானும் விட்டு விட்டேன்.  தனி மனித சுதந்திரத்தையே தாரக மந்திரமாகக் கருதும் நான் என் வீட்டிலேயே அராஜகம் பண்ணலாமா?  பிறகு பல ஆண்டுகள் கழித்து, சரி, மகனே இப்போதாவது படிக்க முடியுமா என்று கேட்டேன்.  கண்ணன்தான் காரணம்.  ஆனால் கார்த்திக்கோ இப்போதும் நம்முடைய அன்பு இயக்குனர் அமீர் எல்லா புத்தக வெளியீட்டு விழாக்களிலும் சொல்வது போலவே பதில் சொன்னான்.  புத்தகத்தை எடுத்தாலே கண்ணில் பூச்சி பறக்கிறது; மயக்கம் வருகிறது போன்ற உபாதைகள்.  பள்ளிக்கூடத்தில் எப்படிப் படித்தாய் என்று கேட்டேன்.  அங்கே எங்கே படித்தேன்?  ஆசிரியர்கள் சொல்வதை கவனித்துக் கொண்டேன்; அவ்வளவுதான் என்றான்.  எனவே அவனுக்கும் பிரஸன்னா போலவே எந்த எழுத்தாளரையும் தெரியாது.  ஆனால், கிரிக்கெட், கூடைப்பந்து, கார், மோட்டார் சைக்கிள்,  ஹாலிவுட் சினிமா, நவீன மேற்கத்திய இசை போன்ற விஷயங்களில் ஆள் கில்லாடி.  நவீன இளைஞன்.  எல்லா teetotalers-ஐயும் போலவே தந்தைக்குக் குடிக்கும் பழக்கம் இருப்பதால் அவன் குடிக்க மாட்டான்.  எனவே பிரஸன்னாவுக்கு இலக்கியத்தில் ஈடுபாடு இல்லை என்றதும் நிம்மதி என்றேன்.

அதிகாலை இரண்டு மணி அளவில் இரவு உணவுக்குக் காத்திருந்த போது பிரஸன்னா ஒரு துண்டுக் காகிதத்துடன் கோபிநாத்தை நோக்கிச் சென்றார்.  “என்ன, ஆட்டோகிராஃபா?” என்று கேட்டார் குப்புசாமி.  பிரஸன்னாவும் சற்று கூச்சத்துடன் ஆமாம் என்றார்.  அதோடு குப்புசாமி விட்டிருந்தால் அது அவருக்கும் அவருடைய புதல்வருக்கும் இடையேயான அந்தரங்க விஷயம் என்று விட்டிருப்பேன்.  இந்தப் பதிவையே எழுதியிருக்க மாட்டேன்.  ஆனால் என் ஜாதகம் அப்படிப்பட்டது இல்லையே?  யாராக இருந்தாலும் என் மண்டையில் ரெண்டு தட்டு தட்டுவதுதானே வழக்கம்?  குப்புசாமி தன் புதல்வர் பிரஸன்னாவிடம் என்னை சுட்டிக் காட்டி, “இவர் பெரிய எழுத்தாளர்டா… இவர்ட்ட ஆட்டோகிராஃப் வாங்கிக்க” என்றார்.  செருப்பால் அடி வாங்கியது போல் உணர்ந்தேன். 

என்னை ஒரு இளைஞனுக்கு எழுத்தாளனாக அடையாளம் தெரியாதது ஒரு சமூக அவலம்.  அந்த அவலத்தின் அசிங்கத்தை இன்னொரு எழுத்தாளனே எடுத்து என் மூஞ்சியில் பூசலாமா? எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார்.  சாமானியர்.  இலக்கியம்  வீசை என்ன விலை என்று கேட்கும் ரகம்.  அதில் தப்பில்லை.  ஆனால் என்ன செய்வார் தெரியுமா?  ஒரு சனிக்கிழமை காலையில் நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு டி.டி.கே. சாலையில் நாரத கான சபாவுக்கு எதிரே உள்ள சாயி மெஸ்ஸுக்கு அழைத்துப் போனார்.  அங்கே போவது அதுதான் முதல் முறை.  சிற்றுண்டி எல்லாம் ராயர் கஃபேவை விட அட்டகாசமாக இருக்கும்.  ஓனர் பெண்மணிதான் கல்லாவில் அமர்ந்திருப்பார்.  உள்ளே நுழைந்ததும் அந்தப் பெண்மணியிடம் என்னைக் காண்பித்து, “சாரைத் தெரிகிறதா?” என்று பெருமையுடன் கேட்டார் நண்பர்.  அந்த அம்மாளுக்கு வயது நாற்பது இருக்கும்.  அவர் என்னை ஒரு நொடியில் நூறில் ஒரு மடங்கு நேரம் பார்த்து விட்டு, ம்ஹும் என்று தலையாட்டினார்.  ”சார், பெரிய ரைட்டர்…  பேரு சாரு நிவேதிதா” என்றார் நண்பர்.  அந்த அம்மாள் ஓ என்று என்னைப் பார்க்காமலே தலையாட்டி விட்டு (கொஞ்சமாகப் புன்னகை புரிந்தார் என்று இப்போது தோன்றுகிறது) அங்கே வந்த கஸ்டமரிடம் காசை வாங்க ஆரம்பித்தார்.   என் பக்கத்தில் வந்த நண்பரின் 15 வயது புதல்வன் என்னிடம், “அப்பாவுக்கு உங்க மேல ஏன் இந்தக் கொலைவெறி?” என்று கிசுகிசுத்தான்.  அதை கவனித்து விட்ட நண்பர், “என்ன சொன்னான்?” என்றார்.  எனக்குத்தான் எதையும் மறைக்கத் தெரியாதே?  அவன் சொன்னதை அப்படியே சொன்னேன்.  ”டேய், இவ்ளோ பெரிய ரைட்டரை ஒருத்தருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறதுல என்னடா தப்பு?  சார், இந்தக் காலத்துப் பசங்களுக்கு பெரியவங்க மேல மரியாதையே இல்ல சார்” என்றார்.

என் நண்பர் அப்படிச் செய்யலாம்.  அவருக்கு இலக்கியம் தெரியாது.  ஆனால் உலக இலக்கியத்தை மிக நல்ல தமிழில் கொண்டு வரும் ஜி. குப்புசாமி அப்படிச் செய்யலாமா? 

    

     

    

Comments are closed.