சிறந்த பாராட்டுகளில் ஒன்று…

என்னுடய கல்லூரி முதல் ஆண்டு மிகவும் வறட்சியாக இருந்தது. தஞ்சாவூரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி என்பதாலும் நான் ஒரு கத்தோலிக்கக் குரு மாணவன் என்பதாலும் நண்பர் வட்டம் மிகவும் சிறியது. இந்த நிலையில்தான் தமிழ்தாசன் எனக்கு ஆசிரியராக அறிமுகமானார். ஆரோக்கியதாஸ் என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்தாசன், தஞ்சை மறைமாவட்டத்தைச் சார்ந்த கத்தோலிக்கப் பாதிரியார். பாதிரியார் என்பதனால் பெரிதாக வெள்ளை அங்கி அணிந்து, அன்பே உருவாகி, எப்போதும் பிரசங்கம் செய்துகொண்டிருப்பவராகக் கற்பனை செய்துகொள்ளக்கூடாது. அவர் தன் சொந்த முயற்சியில் ‘கனவு’ என்ற பதிப்பகத்தை நடத்தி பல புரட்சிகரமான சிந்தனைகளை விதைத்து வந்தவர். (அவருடைய ‘கலகத்தின் வார்த்தைகள்’ என்ற மால்கம் எக்ஸ்-இன் இரண்டு நேர்காணல்களின் மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்கது). அவருடைய அறையில் எங்கு நோக்கினும் புத்தகங்கள். அப்போது ஏதேனும் எனக்கு வாசிக்கக் கிடைக்குமா எனக் கேட்டபோது, சாரு நிவேதிதாவின் சில புத்தகங்களை காட்டி, “இந்த ஆளுடைய புத்தகங்களைத் தவிர வேற எது வேண்டுமானாலும் எடுத்துப் படிச்சுக்கோ,” என்றார். ஆச்சரியமாக ஏன் என்று கேட்டபோது, ”உன் வாழ்க்கைல அப்றம் நீயும் தனியா நின்னுகிட்டு பைத்தியம் மாதிரி சண்ட போட்டுக்கிட்டு இருக்கனும்,” என்றார். இப்படித்தான் சாரு நிவேதிதா என்ற பெயர் எனக்கு அறிமுகமானது…

வளன் அரசு 2017இல் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து…