இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எல்லா மனிதர்களுமே இப்படித்தான் இருந்திருப்பார்கள், ஈகோ, பணம், அதிகாரம் போன்றவற்றின் அறிமுகம் இருந்திராவிட்டால். வளன் அரசுவின் கட்டுரையிலிருந்து…
இப்படி எதிர்ப்பின் அடையாளமாக இருக்கும் சாரு ஓர் ஆன்மீகவாதி என்பதை முதலில் என்னாலும் நம்ப முடியாமல் இருந்தது. ஆனால் எங்களுடைய முதல் சந்திப்பில் அவர் கூறிய வாசகம் நெஞ்சைவிட்டு இன்னும் நீங்க மறுக்கிறது: “இந்தியா மாதிரியான ஒரு நரகத்தில் வாழும் போது கடவுளின் காலைக் கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும்; இல்லையென்றால் இங்கே வாழவே முடியாது.” சாருவின் ஆன்மீகம் மதம் சார்ந்ததல்ல. ஆன்மீகத்தின் அசல் – அதாவது வேறெவற்றாலும் கரை படாத தூய ஆன்மீகம். அதனால்தான் அவரால் யானியின் இசைக்கும் பிஸ்மில்லாகானின் ஷெனாய்க்கும் மனம் லயித்துப் பரவசமடைய முடிகிறது. இன்றைய ஆன்மீகவாதிகள் தங்களுக்கென ஒரு பீடம் அமைத்துக்கொண்டு அதிலிருந்து இறங்க மறுக்கின்றனர். அதிகாரம் அவர்களின் போதை வஸ்துவாக இருக்கிறது. இந்த அதிகாரத்தையும் ஒன்றுமில்லாமல் ஆக்குவதுதான் சாருவின் ஆன்மீகம். ஒரு உதாரணம் தருகிறேன். லா.ச.ரா.வின் நூற்றாண்டு விழா நடந்த அன்று காலை எங்கள் வீட்டின் சிறிய அறையில் சாரு தரையில் அமர்ந்திருக்கிறார். லா.ச.ரா.வின் புதல்வர் சப்தரிஷியும் கீழே அமர்ந்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் சப்தரிஷி அவர்களுக்கு கால் வலிக்க ஆரம்பித்துவிட்டது. காலை சற்று நீட்டி உட்காரலாம். ஆனால் எதிரில் சாரு உட்கார்ந்திருக்கிறார் என்று தயங்கி இறுதியாக சாருவிடமே தான் காலை கொஞ்சம் நீட்டிக்கொள்ளலாமா எனக் கேட்டுவிட்டார். அப்போது சாரு சொன்ன பதில்தான் ஆன்மீகத்தின் உச்சம் எனச் சொல்கிறேன்: “காலை என் மடியில் வச்சுகோங்க; நான் பிடித்துவிடுகிறேன்,” என்றார். இதைத்தான் லெவினாஸ் தன்னிலிருந்து பிறருக்குக் (From I to other) கடந்து போவது என்றார்.