சாருவின் படைப்புகளுக்கு நோக்கம் எதுவும் இல்லை என்றும், அதிர்ச்சி அளிப்பது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கக் கூடும் என்றும் பலர் கருதுகிறார்கள். இது குறித்து என்னுடைய சில புரிதல்களைக் கோர்த்துள்ளேன்.
தனி மனித விடுதலை என்பது ஒருவரின் ஈகோவைக் கடப்பது மட்டுமல்ல, மற்றவர்களை ஆதிக்கம் செலுத்தத் தூண்டும் உணர்விலிருந்தும் விடுபடுவதுதான்.
நம் அடையாளம், அறிவு, அழகு, செல்வம், சமூக அமைப்பு, அரசு, அதிகாரங்கள், பதவி, உறவுகள் என இவைகள் மூலம் நாம் மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துகிறவர்களாக இருக்கிறோம். அந்த அதிகாரம் நிலைபெற்று இருக்கவே சமூகக் கட்டமைப்புகளை உருவாக்குகிறோம். அற விதிகளையும், ஒழுங்கு முறைகளையும் உருவாக்குகிறோம். இப்படியான புரிதலுக்கு மகனாக, மகளாக, தாயாக, தந்தையாக, இன்னும் மருத்துவராக இஞ்சினியராக அவராக இவராக தமிழனாக இந்தியனாக அதுவாக இதுவாக என சந்தர்ப்பவசத்தால் நாம் தரிக்க நேரும் சமூகக் கதாபாத்திரங்களைத் தாண்டி உலகைப் பார்க்கக் கூடிய அறிவும் அதற்கான பயிற்சியும் இங்கே அவசியமாக உள்ளது. சாருவின் எழுத்து இந்தப் பயிற்சியை நமக்குத் தரவல்லது. எனக்குத் தந்தும் இருக்கிறது.
இலக்கியவாதிகள் அனைவரும் ஒழுங்குக் கட்டமைப்பை உருவாக்குகிறவர்கள்தான். அந்த ஒழுங்குக் கட்டமைப்பு அரசியல் கோட்பாடுகளையோ அல்லது ஆன்மீக அனுவங்களையோ மையப்புள்ளியாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டதாக இருக்கும்.
சமூக விடுதலைக்கான எழுத்துக்கள், ஆன்மீக அனுபவத்திற்கான எழுத்துக்கள் என்கிற இரண்டு வகைக்குள்தான் பெரும்பாலும் இயங்கிக் கொண்டிருக்கும்.
இந்தக் கட்டமைப்பு தவறு என்றோ அவை அவசியமற்றவை என்றோ சொல்லிவிட முடியாது. ஏனென்றால் இப்படியான ஒழுங்குக் கட்டமைப்பு குறிப்பிட்ட இலக்குகளை நோக்கி நமது ஆற்றல்களை இயக்கவும், சிந்தனையைத் தூண்டவும் உதவி செய்கின்றன. ஆனாலும் இவற்றில் குறைபாடுகள் உண்டு. ஒரு கட்டத்தில் கட்டமைப்புகளே அதிகாரம் கொண்டதாக மாறிவிடுகின்றன. ஒழுங்கு விதிகளே மற்றவரைத் துன்புறுத்தும் ஆயுதங்களாகி விடுகின்றன. அறநெறிகளே ஆதிக்கம் செலுத்த வகை செய்வதாக மாறுகின்றன. கலை படைப்புகளை வைத்துக் கூட மற்றவர்கள் மீது வன்முறையாடல் செய்ய முடியும். காதல் கூட கழுத்தறுக்கும், காமம் இங்கு பல வன்முறைகளுக்குக் காரணமாக உள்ளது, ஆன்மீகம் செலுத்தும் வன்முறை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. இப்படி இன்னும் பல உண்டு.
சாருவின் எழுத்துக்களும், படைப்புகளும் இப்படி மற்றவரை அதிகாரம் செய்யத் தூண்டும் உணர்வுகளை மையப்படுத்தியே செயல்படுகின்றன. சாருவின் எழுத்திற்கு நோக்கமில்லாமல் இல்லை. அதிகாரம் செய்யத் தூண்டும் உணர்வுகளோடு அவரின் எழுத்தின் மூலம் விளையாடி அதை உணர்த்தப் பார்ப்பதே நோக்கம்.