அந்த நண்பர் ஹைதராபாதில் வசிக்கிறார். பால குமாரனின் தீவிர பக்தர். ஆம், பக்தர். ஒரு கட்டத்தில் அவருக்கு குருவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் வந்தது. (அவரே சொன்னது.) மாற்றிக் கொண்டார். நான்தான் அவர் தேர்ந்தெடுத்த புதிய குரு. ஹைதராபாதுக்கு விமான டிக்கட் போட்டு வரவழைத்தார். டிக்கட் வந்த போது அவரிடம் கேட்டேன், ரிட்டன் டிக்கட் அனுப்பவில்லையே நீங்கள்?
நீங்கள் இங்கே வந்த பிறகு சாவகாசமாகப் போட்டுக் கொள்ளலாம் சாரு.
2010 டிசம்பர் 31. ஹைதராபாத் போய் இறங்கினேன். சீனி அப்போது ஹைதராபாதில் இருந்ததால் அவரையும் அழைத்துக் கொண்டு புதிய நண்பரைப் பார்க்கப் போனேன். வீட்டில் இருந்த நண்பரும் அவர் மனைவியும் குழந்தைகளும் என்னை நமஸ்காரம் செய்து (சாஷ்டாங்கமாக காலில் விழுவதை அப்படிச் சொல்வார்கள்) ஆசி பெற்றார்கள். நான் முறையாக குரு பீடத்தில் பயின்றவன் இல்லை அல்லவா? அதனால் நன்றாக இருங்கள் என்று மட்டும் என்று சொல்லி வைத்தேன். என்ன சொன்னால் என்ன? மனசாரச் சொல்ல வேண்டும், அதுதானே முக்கியம்? மனசார வாழ்த்தினேன்.
சாப்பிட்டோம். சைவ சாப்பாடு. சும்மா சொல்லக் கூடாது. நன்றாகவே செய்திருந்தார்கள். ஹைதராபாதில் இறங்கியதும் பேரடைஸ் பிரியாணி சாப்பிடுவதே என் வழக்கம். ஆனாலும் புதிய நண்பருக்காக அதைத் தியாகம் செய்தேன். மாலை ஆனதும் நண்பரிடம் இங்கே ஹைதராபாதில் நல்ல பப் எங்கே உள்ளது என்று கேட்டேன்.
அதிலிருந்து அவர் போக்கே மாறி விட்டது. மறுநாளிலிருந்து என் அழைப்பையே ஏற்கவில்லை. அதுவா முக்கியம்? ரிட்டன் டிக்கட்டுக்கு என்ன செய்யட்டும்? பிறகு நானே செலவு செய்து டிக்கட் போட்டுக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தேன்.
அந்த நண்பரிடம் கேட்டதற்குப் பேசாமல் சீனியிடம் கேட்டிருக்கலாம். சீனிக்குத் தெரியாத பப்பா?
ஒரே ஒரு கேள்வியால் ஒரு நட்பும் போச்சு, பணமும் போச்சு.