தினமலரில் மார்ச் 24-ஆம் தேதி வெளிவந்த கட்டுரை. எடுத்து அனுப்பியவர் டாக்டர் ஸ்ரீராம்.
http://www.dinamalar.com/
2 011 தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., 30 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்று, ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தேன். ஆனால், அப்போது பெருவாரியான ஊடகங்களில் (“தினமலர்’ தவிர) தி.மு.க., கூட்டணியே வெல்லும் என்று, தேர்தல் கணிப்புகள் வந்துகொண்டு இருந்தன. கடைசியில் தி.மு.க., வென்றது, 23 தொகுதிகள். அதிலும் பல தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றது.
தி.மு.க.,வின் இந்த தோல்விக்கு காரணங்கள்: விலைவாசி உயர்வு, வரலாறு காணாத மின்வெட்டு, ஊழல். இதற்கு முன்னால், 1991 சட்டசபை தேர்தலில், தி.மு.க., இரண்டே தொகுதிகளில் வென்றது. கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சிக்கும் இன்று இதே நிலைமை வந்துஇருக்கிறது. வரவுள்ள லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் 50 தொகுதிகளில் தான் வெற்றி பெற முடியும் என்பது, என் கணிப்பு. அந்த அளவுக்கு, இந்தியா முழுவதும், மக்களுக்கு அக்கட்சியின் மேல் வெறுப்பு உண்டாகி இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணங்கள்:
விலைவாசி உயர்வு, ஊழல்.
ஊழல் என்றால், 100 – 200 அல்ல, 10 ஆயிரம் கோடி, ஒரு லட்சம் கோடி என்கிறார்கள். அதற்கெல்லாம் எத்தனை பூஜ்ஜியம் போட வேண்டும் என்றே தெரியாமல், விழிக்கிறான் சராசரி இந்தியன். உலகம் முழுக்கவும் ஊழல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மற்ற நாடுகளில், 100 ரூபாய் வருமானம் என்றால், 90ஐ மக்களுக்கு செய்து விட்டு, 10ஐ “பாக்கெட்’டில் போட்டுக் கொள் கிறார்கள். ஆனால், இங்கே, ஐந்து ரூபாயை செலவு செய்து விட்டு, மீதியை “பாக்கெட்’டில் போட்டுக் கொள்கிறார்கள். இதுதான் வித்தியாசம்.
முன்பெல்லாம், இலைமறைவு, காய் மறைவாக ஊழல் இருந்தது. ஆனால், இப்போது, மிக வெளிப்படையாக கொள்ளை அடிக்கிறார்கள். அதுபற்றி அரசியல்வாதிகள் பேசிக் கொள்ளும் பேச்சு எல்லாம், அப்படியே ஊடகங்களில் வெளியே வந்து விடுகிறது. ஆனாலும், ஆட்சியாளர்கள் இது பற்றி கவலைப்படவே இல்லை. 2014ல் ஒரு பாராளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது என்ற, ஞாபகமே இல்லாமல், தங்கள் “வேலையில்’ கவனமாக இருந்தார்கள்.
இந்த நிலையில், இரண்டு “காமெடி’ நாடகங்களும் அரங்கேறின. ஒன்று, சோனியாவின் புதல்வர் ராகுல் அடித்த “ஸ்டண்டு’கள். பீகாரிலும், உ.பி.,யிலும் கிராமங்களுக்குப் போய், தலித் மக்களின் குடிசைகளில் தங்கி, அவர் கொடுத்த, “போஸ்’களை மக்கள் நம்பவில்லை. மக்கள் அந்த அளவுக்கு முட்டாள் அல்ல என்று, ராகுலுக்கு தெரியவில்லை.
இரண்டாவது “காமெடி’, ஆம் ஆத்மி கட்சி. ஆட்சி செய்வதற்கு வேண்டிய எந்த திட்டமும், கோட்பாடும் இல்லாமல், வெறும் ஊழல் எதிர்ப்பே கொள்கை என்று, வந்த அவர்களால், டில்லியை ஒரு மாதம் கூட ஆள முடியவில்லை. அதன் தலைவர் கெஜ்ரிவால் தன்னை ஒரு, “அனார்கிஸ்ட்’ என்று, சொல்லிக் கொண்டார். அந்த வார்த்தையின் அர்த்தம் தெரிந்து தான் சொன்னாரா என்று, தெரியவில்லை. “அனார்க்கிஸ்ட்’ என்றால், கலகக்காரன், அதிகாரத்தை எதிர்ப்பவன் என்று, பொருள். அதிகாரத்தை எதிர்த்துக் கொண்டே எப்படி ஆட்சி செய்வது? அதனால் தான், சில தினங்களிலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தியா முழுவதும், மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அது வெறும் ஆட்சி மாற்றமாக இல்லாமல், சராசரி மனிதனின் வாழ்க்கையை கொஞ்சமாவது மேம்படுத்தக் கூடியதாக
இருக்குமா என்று, அவர்கள் ஏங்குகிறார்கள். அதற்கென்று, அவர்களுக்கு, கிடைத்துள்ள தீர்வு நரேந்திர மோடி.
நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். ஆனாலும், மோடி தான் அடுத்த பிரதமர் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. காரணம், கடந்த, 10 ஆண்டுகளில், குஜராத் கண்டுள்ள வியக்கத்தக்க மாற்றங்கள். நான் குஜராத்தில் நீண்ட சுற்றுப் பயணம் செய்தேன். தொழில் வளர்ச்சி என்ற, வார்த்தைக்கான அர்த்தத்தை, நான் அங்கே தான் பார்த்தேன். கண்ணில் பட்ட இடமெல்லாம் தொழிற்சாலைகளே தெரிந்தன.
ஒரு காலத்தில், கிராமங்களில், குடிநீர் இல்லாமல், பெரிய பெரிய பானைகளை தலையில் வைத்துக் கொண்டு, போக, 5 கி.மீ., வர, 5 கி.மீ. என்று, பெண்கள் போய் வருவார்கள். 5 லிட்டர் தண்ணீருக்கு, கடும் கோடையில், பானையை தலையில் சுமந்து கொண்டு, 10 கி.மீ. நடந்தே ஆக வேண்டும். அது அன்றைய குஜராத். காங்கிரஸ் குஜராத்.
ஆனால், இன்று, குஜராத் முழுவதும் நகரம் – கிராமம் வேறுபாடு இல்லாமல், குழாயில் தண்ணீர் வருகிறது. எப்போதும் மின்சாரம் கிடைக்கிறது. மின்வெட்டு என்ற, பேச்சுக்கே இடமில்லை. இப்படி ஒரு சவுகரியமான, இதமான வாழ்க்கையை சாதித்தவர் என்ற முறையில், குஜராத் மக்கள், மத வேறுபாடு இல்லாமல், மோடியை நேசிக்கிறார்கள். இல்லாவிட்டால், இஸ்லாமிய மக்களும் மோடிக்கு ஓட்டுப் போட்டு இருப்பார்களா? முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல், அவரால் இவ்வளவு வலுவான அரசை கொடுக்க முடியுமா?
மோடியை மதவாதி என்று, இந்திய புத்தி ஜீவிகள் சொல்கிறார்கள். அதில், எனக்கு
உடன்பாடு இல்லை. மத கலவரத்தை அவருடைய அரசு எந்திரம் அடக்கத் தவறிவிட்டது. அது மட்டுமே அவருடைய தவறு.
இந்திரா கொல்லப்பட்ட போது டில்லியில், 3,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே, அதைப் பற்றி இந்த புத்தி ஜீவிகள் என்ன சொல்கிறார்கள்? அப்போது, ராஜிவிடம், இந்த படுகொலைகளை பற்றி கேட்ட போது, அவர் “கூல்’ஆக சொன்ன பதில், “ஒரு பெரிய மரம் வீழ்ந்தால் பூமி அதிரத்தான் செய்யும்’.
எனவே, இப்போதைய கேள்வி, மதச்சார்பின்மை என்ற பெயரில், ஊழலும், விலைவாசி உயர்வுமா? அல்லது, உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை கொண்ட ஒருவரின் ஆட்சியா?
– சாரு நிவேதிதா
Comments are closed.