உத்தம வில்லன்: உலகின் முதல் ஆட்டோஃபிக்‌ஷன் சினிமா

மீள் பிரசுரம்

தினமணி இணையதளம்

மே 6, 2015

உத்தம வில்லன் படத்தைப் பார்க்க  ஒரு எதிர்மறையான மனநிலையுடனேயே  சென்றேன்.  காரணம் – குணா, மகாநதி, ஆளவந்தான் போன்ற நான் விரும்பி  ரசித்த கமல் படங்கள் வந்து ரொம்ப காலம் ஆகி விட்டது.  ஜனரஞ்சகமாக இருந்தாலும் மைக்கேல் மதன காமராஜன், சதி லீலாவதி போன்ற படங்களும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.  அப்படி வந்தும் நாளாகி விட்டது.  அதனால் ஏற்பட்டதுதான்  அந்த எதிர்மறையான  மனநிலை.  ஆனால் கமல் படங்கள் என்றாலே புத்திஜீவிகளிடமும்  நல்ல சினிமாவை  ரசிப்பவர்களிடமும்  ஒரு எதிர்பார்ப்பு  உண்டு.  தமிழ் சினிமாவில்  சர்வதேச  இலக்கியமும்  சினிமாவும்  தெரிந்த ஒன்றிரண்டு பேரில்  கமல் ஒருவர்.  ஒன்றிரண்டு பேர் என்று சொல்வது கூட ஒரு பேச்சுக்காகத்தான்.  கமல் மட்டும்தான்.  ஒன் மேன் ஆர்மி என்பார்களே அப்படி.  அவர் மட்டும் போதுமா?  அதற்குத் தேவையான சூழல் இல்லையே?  அதனாலேயே அவருடைய நல்ல சினிமாவுக்கான முயற்சிகளுக்குத் தமிழ்நாட்டில் ஆதரவு இருந்தது இல்லை.  கமல் என்றால் புரியாத படம் எடுப்பவர் என்ற எண்ணம்தான் பலரிடமும்  இருந்து வருகிறது.  

அவர் அவ்வப்போது  சமூகவெளியில்  தெரிவிக்கும்  கருத்துக்கள் காரணமாக, the most misunderstood man என்ற பட்டத்தையும் வாங்கிக் கொண்டு விட்டார்.  பிறகு கேட்கவே வேண்டாம்.  சொந்த மண்ணிலேயே அந்நியன்.  இருந்தாலும்  கமலுக்கென்று ஒரு பெரும் பார்வையாளர் கூட்டம் இருந்து வருகிறது என்பதையும் மறுப்பதற்கு  இல்லை.   நல்ல சினிமாவின் ரசிகன் என்ற முறையில் நானும் கமல்ஹாசனை என் சஹ்ருதயராக நினைப்பவன் தான்.   ஆனாலும் சமீப காலமாக கமலின் நல்ல படங்களைப் பார்க்க முடியாத குறை இருந்தது.  இப்படிப்பட்ட கலவையான மனநிலையில்தான் உத்தம வில்லனுக்குச் சென்றேன்.  

மகாநதி தொடங்கி அவருடைய எல்லா படங்களுக்கும் மதிப்புரை எழுதியிருக்கிறேன்.  தமிழில் இவ்வளவு தொடர்ச்சியாக வேறு யாருடைய படங்களைப் பற்றியும் எழுதியதில்லை.  அப்படி எழுதிய எனக்கு உத்தம வில்லன் படத்துக்கு மதிப்புரை எழுதத் தயக்கமாக உள்ளது.  தயக்கத்துக்கான காரணத்தை எழுதக் கூட அச்சம் ஏற்படுகிறது.  ஏனென்றால் – நான் மதிப்புரை எழுதுவதற்கு முன்னரே நான் இந்தப் படத்துக்கு என்ன மதிப்புரை எழுதுவேன் என்பதை ஒருவர் முகநூலில் யூகித்து எழுதி என்னைத் தாக்கியிருக்கிறார்.  அதனால்தான் தயங்குகிறேன்.  விமர்சனத்துக்கு அஞ்சவில்லை.  வேறொரு காரணம்.  அதற்குள் செல்வதற்கு முன்னால் முகநூலில் வந்துள்ள கருத்து:

“’இந்தப் படம் என் வாழ்க்கை போலவே இருக்கிறது’ என சாரு வலையேற்றப் போவதை எண்ணி கடுக்கிறது. முன்னெச்சரிக்கையாக ஒரு பண்டல் டல்கோலக்ஸ் வாங்க மெடிக்கல்ஷாப்புக்கு போய்க் கொண்டிருக்கிறேன்.”  இதை எழுதிய நண்பருக்கு என் பாராட்டுதல்களைச் சொல்ல வேண்டும்.  ஆம்; உத்தம வில்லனில் கமலுக்கு வரும் மூளைக் கட்டியைத் தவிர மற்ற அனைத்தும் என் வாழ்வில் நான் கண்டவை; அனுபவித்தவை; பேசியவை.  உலகத்தில் எங்கேனும் ஒரு மூலையில் ஒருவரைப் போலவே இன்னொருவர் இருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம்; கேள்விப்பட்டிருக்கலாம்.  இங்கே ஆழ்வார்ப்பேட்டையிலும் மைலாப்பூரிலும் இரண்டு ஜீவன்களின் வாழ்க்கை ஒன்றே போல் இருந்துள்ளதை உத்தம வில்லனில் கண்டேன்.  கலைப் படைப்பையும் சொந்த வாழ்க்கையையும் போட்டுக் குழப்பிக் கொள்ளலாமா என்று கேட்பவர்கள் உத்தம வில்லனைப் பார்ப்பதோடு என்னுடைய ஸீரோ டிகிரி, புதிய எக்ஸைல் என்ற இரண்டு நாவல்களையும் படித்துப் பார்க்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.  என்னுடைய நாவல்கள் autofiction என்ற பாணியில் எழுதப்பட்டவை.  அதைப் போலவே தான் உத்தம வில்லனும் ஆட்டோஃபிக்‌ஷனாகவே எடுக்கப்பட்டிருக்கிறது.  ஒரே ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.  என் மகன் மரைன் எஞ்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தான்.  அவனுடைய தங்கையை அவன் பார்த்ததில்லை.  அவள் என்னுடைய முதல் திருமணத்தில் பிறந்தவள்.  நானுமே அவளைப் பத்தாண்டுகளாகப் பார்த்ததில்லை.  பார்க்க முடியவில்லை.  திடீரென்று அவளுமே என் மகனைப் போல் மரைன் எஞ்ஜினியரிங் படிப்பதாக அறிந்தேன்.  என் மகனிடம் சொன்னேன், ”ஜென்னி (பெயரை மாற்றியிருக்கிறேன்.  உண்மைப் பெயரைச் சொன்னால் எனக்குப் பிரச்சினை வரும்) என்ற பெயருள்ள பெண்ணை உன் துறையில் சந்திக்க நேர்ந்தால் காதலில் விழுந்து விடாதே; அவள் உன் தங்கை.”  ஸீரோ டிகிரி என்ற நாவல் முழுவதும் அதன் நாயகன் தன் மகள் ஜென்னிக்கு எழுதும் கடிதங்கள்தான்.   மனோரஞ்சனின் மகளை (ரஞ்சனின் முதல் காதலி யாமினிக்குப் பிறந்தவள்) அவளுடைய தம்பி (ரஞ்சனின் மணவாழ்வில் பிறந்தவன்) முதல் முதலாகச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களைக் காதலர்கள் என்று எண்ணிக் கோபிக்கிறாள் தம்பியின் காதலி! 

படத்தில் பல இடங்களில் அழுது விட்டேன்.  காவியங்களை வாசிக்கும் போதும் காணும் போதும் ஏற்படும் உணர்வெழுச்சி. மனோரஞ்சன் யாமினியைப் பிரிய நேர்வது, அவளுடைய மகள் மனோரஞ்சனை முதல்முதலாகப் பார்க்க வருவது, தன் தாயைப் புறக்கணித்த தந்தையை வெறுப்பது, (”எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய முடியுமா?” என்று ரஞ்சனைக் கேட்கிறாள் மகள்.  என்ன என்கிறான் ரஞ்சன்.  ”என் அப்பா வந்தால் நான் உங்களிடம் நல்லபடியாகப் பேசிக் கொண்டிருந்தேன் என்று பொய் சொல்ல முடியுமா?” என்கிறாள்), மகனின் உதாசீனம், அர்ப்பனாவுக்கும் மனோரஞ்சனுக்குமான காதல் என்று படம் நெடுகிலும் காவியத் துயரம் ததும்பும் தருணங்களிலெல்லாம் என் உணர்வெழுச்சியைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.  

இதுவரை என் சினிமா அனுபவத்தில் இப்படி ஒரு கதையைக் கண்டதில்லை.  வாழ்விலே முதல் முறை என்று சொல்லலாம்.  அந்த வகையில் உத்தம வில்லன் ஒரு அபூர்வமான அனுபவம்.   கமல் கதையை உருவாக்கவில்லை.  வாழ்ந்ததை சினிமாவாக எடுத்திருக்கிறார்.  அதில் அவர் ஒளிவு மறைவு வைக்கவில்லை.  தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒத்து வருமா என்பது போன்ற கேள்விகளில் இறங்கவில்லை.  ராட்சச நேர்மையுடன் எடுத்திருப்பதாலேயே அது ஒரு மகத்தான கலாசிருஷ்டியாக மாறியிருக்கிறது.  

இதை மட்டுமே அவர் செய்து முடித்திருந்தால் உத்தம வில்லன் ஒரு கீஸ்லோவ்ஸ்கி (Krzysztof Kieślowski), ஒரு பொலான்ஸ்கியைப் (Roman Polanski) போல் ஒரு சர்வதேசப் படமாக மாறியிருக்கும்.  உலகின் முக்கியப் படங்களின் வரிசையில் சேர்ந்திருக்கும்.  ஆனால், படத்துக்குள் படமாக இன்னொரு படத்தைச் செருகியிருக்கிறார்.  இந்த உத்தியில் தவறில்லை.  அருமையான உத்திதான்.  ஆனால் இந்த உபகதை/உபசினிமா உத்தம வில்லனை இன்னொரு படி மேலே கொண்டு செல்லாமல் அதல பாதாளத்துக்குள் தள்ளி விடுகிறது.  மனோரஞ்சன் ஒரு ஜனரஞ்சக சினிமா ஹீரோ.  60 வயதிலும் தொப்பையுடன் இளம் நடிகைகளுடன் டூயட் பாடுகிறான்.   அப்போது அவனுக்கு மூளையில் புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது.  இன்னும் சில மாதங்களில் இறந்து விடுவான்.  இறக்கும் தேதி தெரிய வருவது எத்தனை பெரிய சோகம்.  சாவதற்குள் ஏதாவது ஒரு நல்ல படத்தில் நடித்து விட்டுச் சாகலாம் என்று முடிவு செய்து தன் குருவான மார்கதரிசியிடம் (கே. பாலச்சந்தர்) வருகிறான்.  கேரளத்தின் தெய்யம் என்ற கூத்துக் கலையை அடிப்படையாக வைத்து ஒரு நகைச்சுவைக் கதை படமாக்கப்படுகிறது.  இங்கே தான் பிரச்சினை.  இது தமிழ் சினிமா ஆரம்பித்த நாளிலிருந்தே தொடர்ந்து வரும் பிரச்சினை.  ஒரே ஒரு உதாரணம் தருகிறேன்.  ஒரு பாடகன் ஹீரோவாகக் காண்பிக்கப் படுகிறான் என்று வைத்துக் கொள்வோம்.  அவனுடைய பாடலுக்கு நாடே அடிமையாகிக் கிடக்கிறது என்பது போல் ஒரு பில்டப் கொடுக்கப்பட்டிருக்கும்.  நாம் மைக்கேல் ஜாக்ஸன் தரத்துக்கு ஒரு பாடகனை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.  ஹீரோவின் எண்ட்ரியில் ஹீரோ மேடையில் பாடிக் கொண்டிருப்பார்.  படத்துக்குள் வரும் பார்வையாளர்கள் ஹிஸ்டீரியா வந்தது போல் கத்தி ரசித்துக் கொண்டிருப்பார்கள்.  ஆனால் நம்மோடு தியேட்டரில் அமர்ந்திருக்கும் உண்மைப் பார்வையாளர்கள் அந்தப் பாடலில் எழுந்து வெளியே போய்க் கொண்டிருப்பார்கள்.  கொடுக்கப்பட்ட பில்டப்புக்கும் பாட்டுக்கும் சம்பந்தமே இருக்காது.  வானொலியில் கேட்பதற்குக் கூட லாயக்கற்ற மொக்கைப் பாடலாக இருக்கும்.  இப்படித்தான் ஒரு மொக்கை கதையைப் படமாக எடுக்கிறார் மார்கதரிசி.  

தமிழ்நாடு பூராவும் ஒரு சர்வே எடுத்தீர்களானால் நூற்றுக்கு நூறு சதவிகிதம் பேர் படத்தின் அந்தப் பகுதி மரண மொக்கை என்றே கூறுவர்.  மேலும், அந்தப் பாத்திரங்கள் சுத்தத் தமிழில் பேசுவது வேறு செவிகளை ரம்பத்தால் அறுப்பது போல் அறுக்கிறது.  சரித்திரப் படம் என்றால் சுத்தத் தமிழில்தான் பேச வேண்டும் என்பது யார் வைத்த சட்டம்? அதெல்லாம் ஏ.பி. நாகராஜனோடு முடிந்து விடவில்லையா? மைக்கேல் மதன காமராஜன், பம்மல் கே. சம்பந்தம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., சதி லீலாவதி போன்ற படங்களில் நகைச்சுவையில் உலகத் தரம் காண்பித்திருக்கும் கமலுக்கா நகைச்சுவை வரவில்லை?  நம்ப முடியவில்லை.  உத்தம வில்லனில் வரும் சரித்திரப் படப் பகுதி மிகவும் சராசரி என்பதோடு கொடுமையான சலிப்பையும் தருகிறது.  இந்த genre-இல் இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு பிரமாதப்படுத்தியிருப்பார்.  மார்கதரிசி எடுக்கும் படம் அதில் பத்து சதவிகிதம் கூடத் தேறவில்லை.  பார்வையாளர் எல்லோருடைய கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது.  முகநூலில் நெல்சன் சேவியர் எழுதியிருப்பதை இங்கே மேற்கோள் தருகிறேன்.

உத்தம வில்லன் படம் எனக்கு பிடித்திருந்தது. ஆனால் ஒரு சின்ன சந்தேகம்.  நடிகர் கமல் இயக்கி (ரமேஷ் அரவிந்த் மன்னிக்க வேண்டுகிறேன்) நடித்திருந்த பகுதியில் இருக்கும் நேர்த்தியும் தெளிவும், அவருடைய குருநாதராகப் படத்திலும் நிஜத்திலும் அறியப்பட்ட மார்கதர்சி என்னும் பாலசந்தர் இயக்கும் படத்திற்குள்ளான படத்தில் துளியும் இல்லை என்பது தற்செயலானதா என்று தெரியவில்லை. அதுவும் காமெடி என்ற பெயரில் சூற மொக்கை வேறு. வசூல்ராஜா, பம்மல் கே. சம்பந்தம் நாயகனுக்கா காமெடி எடுக்க வரவில்லை? உண்மையிலேயே மார்கதரிசியின் உத்தம வில்லன் தான் அவருடைய திறமைக்கான அளவுகோலா? உண்மையிலேயே இது பாலசந்தருக்கு அஞ்சலியா? அல்லது, ஐந்து வருடம் கழித்து நமக்கு சிரிப்பு வருமா?”

சம்பந்தப்பட்டவர்கள் யாரும் மனம் வருந்தக் கூடாது.  கமல்ஹாசனுக்கு கே. பாலசந்தர் குருநாதராக இருக்கலாம்.  அதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது.  ஆனால் உலகத் தரமான சினிமாவைத் தமிழில் கொடுப்பதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்து கொண்டிருக்கும் கமல்ஹாசனின் சினிமாவுக்கும் பாலசந்தரின் சினிமாவுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  பாலசந்தர் சர்வதேச சினிமா உலகில் நல்ல சினிமா என்று அறியப்படும் திக்கின் அருகில் கூடப் போனதாகத் தெரியவில்லை.  ஆனால் பாலு மகேந்திரா சென்றிருக்கிறார். அவருடைய அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், தலைமுறைகள் நான்கும் சர்வதேசத் தரத்தில் அமைந்தவை.  உலக சினிமாவின் ரசிகன் என்ற முறையில் பாலு மகேந்திரா, கமல்ஹாசன் இருவரும்தான் தமிழ் சினிமாவை சர்வதேச சினிமாவின் அருகில் கொண்டு சென்றவர்களாக என்னால் சொல்ல முடிகிறது.  மணி ரத்னம் தமிழில் ஒரு புதிய சினிமா மொழியை உருவாக்கியவர் என்ற முறையில் முக்கியமானவர்.  மற்றபடி  பாலசந்தரை ஸ்ரீதர் போன்ற ஒரு trend setter-ஆக மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது.  

ஒரு உலகத் தரமான படத்தில் வரக் கூடிய ஒரு உபசினிமா (sub-text) எப்படி இவ்வளவு மொக்கையாக வர முடியும் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது.  அதேசமயம், மார்கதரிசியை பாலசந்தராக நாம் அடையாளம் கண்டு கொள்ள முடிவதால் அந்த உபசினிமா இப்படி மூன்றாம்தரமாக இருப்பதில் ஆச்சரியமும் அடைய முடியவில்லை.  இப்படி ஒரு முரண்பட்ட மனநிலையை அளிக்கிறது உத்தம வில்லன்.  ஆனால் இப்படியெல்லாம் மனதைத் தேற்றிக் கொள்ள முடியாது.  அந்த உபசினிமாவை நிஜ பாலச்சந்தர் இயக்கவில்லை.  இயக்கியிருப்பது ரமேஷ் அரவிந்த்.  மனோரஞ்சனின் கடைசிப் படம் என்று ஒரு மகத்தான சினிமாவை எடுக்கப் போவதாகத்தான் நினைத்திருப்பார் ரமேஷ் அரவிந்த்.  அதுதான் துரதிர்ஷ்டவசமாக அசம்பாவிதமாகி விட்டது.   மார்கதரிசி இயக்கும் அந்தப் பகுதியில் வரும் இன்னொரு அசம்பாவிதம், தெய்யம்.  தெய்யம் என்ற கேரள நாட்டுப்புறக் கலை 15000 ஆண்டுகள் முந்தியது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.  இந்திய நிலப்பரப்பின் ஆதிகலை என்று சொன்னால் அது தெய்யமாகத்தான் இருக்கும்.  எண்பதுகளில் நான் பல தெய்யம் நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறேன்.  இந்தியக் கலைகளிலேயே ஆக ஆக்ரோஷமான கூத்துக்கலை தெய்யம்தான்.  தெய்யம் என்றால் தெய்வம்.  தெய்யம் ஆடும் கலைஞனை தெய்வமாகவே காண்பார்கள் பார்வையாளர்கள்.  இப்பேர்ப்பட்ட ஆக்ரோஷமான கூத்தை நடிப்பில் உச்சத்தைக் காண்பிக்கக் கூடிய கமல் ஆடினால் எப்படி இருக்கும்?  உத்தம வில்லனில் அது ஒரு உச்சபட்ச கலை அனுபவத்தைத் தருகிறது என்பதில் சந்தேகம் இல்லை.  தெய்யம் ஒப்பனையே பல மணி நேரங்கள் ஆகக் கூடியது.  தேகம் முழுவதும் பல வண்ணங்கள் பூசப்படும்; தலைக்கு ஒரு கிரீடம்.  அப்படி ஒரு கிரீடத்தை உலக அளவிலேயே காண்பது கடினம்தான்.  பயிற்சி இல்லாமல் அவ்வளவு பெரிய தலைக் கவசத்தை யாராலும் சூட்டிக் கொண்டு விட முடியாது.  மகா உக்கிரமான இசைக்கு ஏற்ப ஆட வேண்டும்.  இந்தக் காரணங்களாலேயே தெய்யத்தைப் பெண்கள் ஆடுவதில்லை.  பெண் பாத்திரங்களையும் ஆண்களே ஏற்று ஆடுகின்றனர்.  எந்த ஒரு நிகழ்த்துக் கலையும் அருகில் கூட நெருங்க முடியாத அற்புதமான கூத்து தெய்யம்.  அதன் உக்கிரம் கடுகளவும் குறையாமல் தந்திருக்கிறார் கமல்.  ஆனால் இவ்வளவு உழைப்பும் விழலுக்கு இரைத்த நீராகி விட்டது.  காரணம், மார்கதரிசி இயக்கும் கதையில் மூலக் கதைக்கு நிகரான வலு இல்லை.  பாமரரும் கிண்டல் செய்து சிரிக்கும் அளவுக்கு உள்ளது அந்தப் பகுதி.  ’இதைத்தான் வடிவேலு இம்சை அரசனில் இதை விட நன்றாகச் செய்திருக்கிறாரே’ என்ற பேச்சை படம் நடந்து கொண்டிருக்கும் போதே என்னால் கேட்க முடிகிறது.   

இப்படி இல்லாமல் மார்கதரிசி இயக்குகின்ற படமும் மனோரஞ்சனின் வாழ்க்கை என்ற பிரதான படமும் சரியானபடி இணைந்திருந்தால் (synchronise) உத்தம வில்லன் உலக கிளாஸிக் வரிசையில் சேர்ந்திருக்கும்.   இப்படி ஒரே படத்தில் இரண்டு படங்களின் கதையும் ஒன்றோடு ஒன்று பிரமாதமாக இணைந்த படமாக என் நினைவுக்கு வருவதுJules Dassin 1978-இல் இயக்கிய A Dream of Passion என்ற கிரேக்கத் திரைப்படம்.  இதுவும் படத்துக்குள் படம் என்ற முறையில் எடுக்கப்பட்டதே.  உத்தம வில்லனின் படத்துக்குள் படம்;  ட்ரீம் ஆஃப் பேஷனில் படத்துக்குள் நாடகம்.  கி.மு. 431-இல் யூரிப்பிடஸ் எழுதிய கிரேக்க நாடகம் மெடியா.  மெடியாவும் ஜேஸனும் கிரேக்கத் தொன்மங்களில் வரும் பாத்திரங்கள்.  மெடியா ஒரு ஆதிவாசிப் பெண்.  ஜேஸன் நகரவாசி.  மெடியாவைக் காதலித்து மணக்கிறான்.  சில ஆண்டுகளில் அவனுக்கு மெடியாவின் ஆதிவாசித்தன்மை பிடிக்காமல் போகிறது.  அந்த நாட்டு இளவரசியிடம் காதல் கொள்கிறான்.  மெடியா அவனையும் இளவரசியையும் ஜேஸனுக்கும் தனக்கும் பிறந்த குழந்தைகளையும் கொல்கிறாள்.  இந்தத் துன்பவியல் நாடகத்தில் மெடியா பாத்திரத்தை ஏற்று நடிக்கிறாள் மாயா என்ற பெண்.  (சினிமாவில் இந்தப் பாத்திரத்தை நடித்தவர் மெலினா மெர்க்குரி என்ற கிரேக்க நடிகை.  இவர் பின்னாளில் கிரீஸின் கலாச்சார மந்திரியாகவும் இருந்தார்.) அவளுக்கும் அந்த நாடக இயக்குனருக்கும் காதல் பிறக்கிறது.  ஆனால் இடையிலேயே இயக்குனர் அவளுக்குத் துரோகம் செய்வதை அறிகிறாள்.  தானும் 2500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட மெடியா என்ற பெண்ணும் ஒன்றுதானா என்று குழம்புகிறாள். 

இதற்கிடையில் பத்திரிகைகளில் வரும் பரபரப்பான செய்தி ஒன்று அவள் கவனத்தை ஈர்க்கிறது.  கணவன் தனக்குச் செய்த துரோகத்துக்காக அவனுக்கும் தனக்கும் பிறந்த குழந்தைகளையே கொன்று விட்டு சிறையில் இருக்கும் ப்ரெண்டா என்ற பெண்ணைப் பற்றிய செய்தி அது. சிறைக்குச் சென்று அவளைச் சந்திக்கிறாள் மாயா.  (இங்கே ஒரு இடைச்செருகல்.  சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் என்னால் இப்போது விவரித்து எழுத முடியும்.  மற்ற படங்களைப் போல் அந்தப் படத்தை என்னால் அதற்குப் பிறகு பார்க்கவும் கிடைக்கவில்லை.  என்னால் மறக்கவே முடியாத ஒருசில படங்களில் எ ட்ரீம் ஆஃப் பேஷனும் ஒன்று.  அதே போன்றதொரு மகத்தான கலை அனுபவத்தைக் கொடுத்தது உத்தம வில்லனின் மனோரஞ்சனின் வாழ்க்கை பற்றிய பகுதி.)  சிறையில் இருக்கும் ப்ரெண்டா ஒரு ஸ்கீஸோஃப்ரீனிக் மனநோயாளியாக இருக்கிறாள்.  முதல் இரண்டு சந்திப்புகளில் இருவரும் பேச முடியவில்லை.  அந்தக் காட்சிகளை இப்போது இந்தத் தருணத்தில் என் மனக்கண் முன்னே காண்கிறேன்.  படத்தின் இறுதிக் காட்சியில் மெடியா தன் குழந்தைகளைக் கொன்று அந்தப் பிரேதங்களை ஜேஸனுக்குப் பரிசளித்து விட்டுக் கதறுகிறாள்.  அந்தக் கதறலில் கிரேக்க நாடங்களின் புகழ் பெற்ற கோரஸ் இடம் பெறுகிறது.  எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாத காட்சி அது.   உத்தம வில்லனில் மெடியா என்ற கிரேக்கத் துன்பவியல் நாடகத்தின், எ ட்ரீம் ஆஃப் பேஷன் என்ற சினிமாவின் காவியத் தருணங்கள் பல இருந்தாலும் சினிமாவுக்குள் வரும் உபசினிமா – மார்கதரிசியின் சினிமா – சரியாகப் பொருந்தவில்லை.  காரணம், பாலச்சந்தரின் படங்களைப் போலவே அந்தப் பகுதி ஒரு கலா சிருஷ்டியாக வெற்றி அடையவில்லை.   

மார்கதரிசியை மறந்து விட்டுப் பார்த்தால் மனோரஞ்சனின் வாழ்க்கை சோஃபாக்ளிஸ், யூரிப்பிடஸ், ஷேக்ஸ்பியர் போன்ற நாடகாசிரியர்கள் எழுதியிருக்கக் கூடிய ஒரு துன்பவியல் நாடகம்.  அதில் கமல்ஹாசனின் வாழ்க்கை தெரிகிறது.  ஆனால் இது என்  வாழ்க்கை அல்ல என்று சொல்லிக் கொண்டே அவர் வாழ்க்கையைச் சொல்கிறார்.  அது ஒரு மாஜிக் போல, கண்கட்டு வித்தையைப் போல நடக்கிறது.  மனோரஞ்சன் தான் கமல்.  ஆனால் மனோரஞ்சனைப் போல் கமல் குடிகாரர் அல்ல. மனைவி மாமனார் ஆகியோரிடம் பயந்து வாழ்பவரும் அல்ல.  ஆனாலும் மனோரஞ்சன் தான் கமல்.  கமல் தான் மனோரஞ்சன்.  இந்த மாயாஜாலத்தை நிகழ்த்துவது எது? இங்கேதான் நாம் கொஞ்சம் தமிழை விட்டு வெளியே சென்று autofiction என்ற விஷயத்துக்குள் செல்ல வேண்டியிருக்கிறது.  ஆட்டோஃபிக்‌ஷன் என்ற genre-இல் எழுதுபவர்கள் இன்று வெகு சொற்பம்.  உலக அளவிலேயே இரண்டு மூன்று பேர்தான்.  அதில் அடியேனும் ஒருவன்.  என்னுடைய புதிய எக்ஸைல் என்ற நாவலின் ஆரம்பத்தில் ஆட்டோஃபிக்‌ஷன் என்றால் என்ன என்பதற்கான ஒரு மேற்கோள் கொடுக்கப்பட்டிருக்கும்.  அது Fils என்ற நாவலுக்கு எழுதிய சிறிய முன்னுரையில் Serge Doubrovsky கொடுத்த விளக்கம்.  சேர்ஜ் துப்ரோவ்ஸ்கி ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் எழுத்தாளர்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது நாவல்கள் இன்னும் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படவில்லை.  ஆட்டோஃபிக்‌ஷன் என்ற வார்த்தையையும் அவர்தான் முதல் முதல் பயன்படுத்தினார்.  அவர் கொடுத்துள்ள விளக்கம்:

Autobiography?  No, that is a privilege reserved for the important people of this world, at the end of their lives, in a refined style. Fiction, of events and facts strictly real; autofiction, if you will, to have entrusted the language of an adventure to the adventure of language, outside of the wisdom and the syntax of the novel, traditional or new. Interactions, threads of words, alliterations, assonances, dissonances, writing before or after literature, concrete, as we say, music.  Or, autofriction, patiently onaniste, which now hopes to share his pleasure.

இதை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்காமல் இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயல்வோம்.  சுயசரிதையை எழுத ஒருவர் பிரபலமான ஆளாக இருக்க வேண்டும்.  மட்டுமல்லாமல், அதில் ஒரு ஸ்டைல் இருக்க வேண்டும்.  அதில் உள்ள சம்பவங்களெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும்.  ஆனால் ஆட்டோஃபிக்‌ஷன் சாகசத்தின் மொழியை மொழியின் சாகசத்திடம் ஒப்படைக்கிறது.  அதாவது, ஆட்டோஃபிக்‌ஷன் மொழியின் இலக்கணங்களுக்கோ வரையறைகளுக்கோ, பாரம்பரிய மற்றும் நவீன கால மதிப்பீடுகளுக்கோ அடங்காதது.  அவற்றுக்கு அப்பாற்பட்டது.  சுயசரிதையின் ஆடம்பரங்கள் இல்லாமல் எதார்த்தமாக இருப்பது ஆட்டோஃபிக்‌ஷன்.  சுருக்கமாகச் சொன்னால், சுயசரிதை என்பது சுயமைதுனத்தைப் போல; ஆனால் ஆட்டோஃப்ரிக்‌ஷன் தன்னுடைய இன்பத்தை உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல் வெளியே பகிர்ந்து கொள்வது.  

மேலே உள்ள கடைசி வாக்கியத்தில் உள்ள ஆட்டோஃப்ரிக்‌ஷன் என்பது அச்சுப்பிழை அல்ல; துப்ரோவ்ஸ்கியின் கிண்டல்.  இந்தக் கிண்டலாலும் சொல் விளையாட்டுக்களாலும்தான் துப்ரோவ்ஸ்கியின் நாவல்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க முடியவில்லை.  உதாரணமாக, அவருடைய ஃபீஸ் (Fils) என்ற நாவலின் தலைப்புக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. புதல்வன், நூல் (Thread).  

உத்தம வில்லனை நீங்கள் சுயவரலாற்று சினிமாவாக அர்த்தப்படுத்திக் கொண்டால் படத்தின் ஊடே ஊடே பாவியிருக்கும் நுண்மையான தருணங்களை அனுபவிக்காமல் இழந்து விட நேரிடும்.  சுயசரிதை சினிமா என்றால் நம் நினைவுக்கு வருவது ஃபெலினியின் 8 ½  மற்றும் I Vitelloni ஆகிய படங்களும், ஆலன் ராப்-க்ரியேவின் (Alain Robbe-Grillet) நாவல்களும்தான்.  ராப்-க்ரியே சினிமா இயக்குனரும் கூட.  ராப்-க்ரியே சுயசரிதை நாவல்களை எழுதினாலும் கூட சுயசரிதைத்தனமான எழுத்தின் எல்லை குறுகியது என்றும், கடந்த காலத்தைத் திரும்ப எழுதும் போது அதில் கடந்த காலம் ஓரளவுதான் இருக்கும் என்றும் சொல்கிறார்.  ஃபெலினியின் மேற்கூறிய படங்களையும் உத்தம வில்லனையும் பார்த்தால் சுயசரிதைத்தனமான சினிமாவுக்கும் ஆட்டோஃபிக்‌ஷன் சினிமாவுக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளலாம்.  இதை விளக்கி எழுதுவது கடினம்.  கயிறின் மேல் நடப்பது போன்ற ஒரு மரண விளையாட்டு.  இதை மிகுந்த சாகசத்தன்மையோடு விளையாடியிருக்கிறார் கமல்.  இந்தப் படம் பற்றி சாதாரண சினிமா ரசிகர்கள் பலரிடம் பேசினேன்.  உத்தம வில்லன் முழுக்க முழுக்க கமல் படம்; கமல்ஹாசனின் ஆகச் சிறந்த படம்; கமலுக்கு உரிய தனித்தன்மைகளால் ஆன படம் என்றெல்லாம் விளக்க முற்பட்டார்கள் அவர்கள்.  பார்த்தால் கமலின் வாழ்க்கை போல் தெரிகிறது.  ஆனால் கமல் இல்லை.  இந்த மாயாஜாலம்தான் ஆட்டோஃபிக்‌ஷன்.   ஆட்டோஃபிக்‌ஷன் எழுதும் எழுத்தாளர்களே உலக அளவில் ஒன்றிரண்டு பேர் தான் இருக்கிறார்கள்.  அதிலும் இரண்டு பேரின் படைப்புகள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படவில்லை என்கிற போது ஆட்டோஃபிக்‌ஷன் சினிமா எப்படி சாத்தியம்?  கமலுக்கு ஃப்ரெஞ்ச் தெரியுமா, அவர் துப்ரோவ்ஸ்கியைப் படித்திருக்கிறாரா,  அவருக்கு ஆட்டோஃபிக்‌ஷன் தெரியுமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது.  அதையெல்லாம் பத்திரிகையாளர்கள்தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். ஆனால் ஒன்று, உலகின் மகத்தான சிறுகதை எழுத்தாளனான போர்ஹேஸுக்குப் பின்நவீனத்துவம் பற்றித் தெரியாது.  என்றாலும், போர்ஹேஸ் ஆகச் சிறந்த பின்நவீனத்துவ எழுத்தாளராகக் கருதப்படுகிறார்.  எப்படியிருந்தாலும், கமல்ஹாசனின் உத்தம வில்லன் உலகின் முதல் ஆட்டோஃபிக்‌ஷன் சினிமா என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.   

பின்குறிப்பு 1:  கடல் படத்தைப் பாராட்டி எழுதிய போது ஒரு வாசகர் எனக்கு, “மெட்ராஸ் டாக்கீஸிலிருந்து கார் வந்ததா?  ஓ, வந்திருக்காது. நாகர்கோவில் போய் விட்டு வரும்; பொறுத்திருங்கள்” என்று கடிதம் எழுதியிருந்தார்.  ஆனால் எனக்கு மணி ரத்னத்தைத் தனிப்பட்ட முறையில் தெரியாது.  சினிமா கலைஞர்களை ஏதாவது ஒரு விழாவில் பார்க்க நேர்ந்தால் என்னைக் கண்டதுமே அவர்கள் ஒதுங்கிப் போய் விடுகிறார்கள்.  கமலின் தசாவதாரம் போன்ற படங்களைக் கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறேன்.  எனவே எனக்கு இரண்டு பக்கமும் இடி.  ஒன்று, கார் வந்ததா என்று கேட்கும் வாசகர்களிடமிருந்து; இன்னொன்று, சினிமா கலைஞர்களிடமிருந்து.   இந்த மதிப்புரைக்கும் என்னென்ன வசைகளைப் பெற வேண்டுமோ என்று பயமாக உள்ளது. 

பின்குறிப்பு 2: ஆலன் ராப்-க்ரியே, ஃபெலினி, துப்ரோவ்ஸ்கி போன்ற பெயர்களைப் பார்த்து பயந்து விட வேண்டாம்.  உங்களுக்குக் கமலைத் தெரியுமா? அவருடைய சதி லீலாவதி படம் பிடிக்குமா? அப்படியானால் உத்தம வில்லனும் பிடிக்கும். ஏனென்றால், அடிப்படையில் உத்தம வில்லன் ஆண் பெண் உறவில் உள்ள சிக்கல்களைப் பற்றியது.  படத்தில் ஆண்ட்ரியாவின் சோகமான கண்கள் எனக்கு ஷேக்ஸ்பியரின் பல துன்பவியல் நாடகங்களை நினைவூட்டியது.  

நன்றி: அராத்து, வெரோனிகா

***

உத்தம வில்லன் (மீண்டும்)

மே 8, 2015

சாரு,

உத்தம வில்லன் மதிப்புரை அட்டகாசம். அஞ்சு முறையாவது ரசித்து படித்தேன். ரசித்தது உத்தம வில்லனைப் பற்றிய மதிப்புரையை அல்ல, உங்கள் எழுத்தின் அழகியலை.

இதைச் சொல்லியே ஆகணும்.

உங்களுக்குக் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும், அலெஹாந்த்ரோ கொன்சாலஸ் (அமெரோஸ் பெரோஸ்) போன வருஷம் எடுத்த படம் Birdman.  உலகின் முதல் ஆட்டோஃபிக்ஸன் படம் மட்டுமல்லாமல் க்ளாசிக். போன வருஷம் ஆஸ்கர் வாங்குச்சு. பத்து முறை பார்த்துட்டேன், இன்னும் அதோட கலைநுணுக்கத்தை முழுசாக உள்வாங்கி அனுபவிக்கல. படம் பார்க்கும் போது எக்ஸைலைத்தான் அடிக்கடி நெனைச்சேன். தயவுசெய்து எப்படியாவது ஒருமுறை அந்த படத்தைப் பார்க்கவும்.

நன்றி,

ஜெகா.

அன்புள்ள ஜெகா,

உத்தம வில்லன் பற்றி இன்னும் நிறைய சொல்ல இருந்தது.  ஆனால் பயமாகவும் இருக்கிறது.  என் வாழ்வில் கண்ணுக்குத் தெரியாத கேமரா வைத்து எடுத்த மாதிரி இருப்பதால் எனக்கு பயம்தான் ஏற்பட்டது.  தெய்யம் பகுதி நன்றாக அமைந்திருந்தால் இது ஒரு குரஸவா படம் போல் உலக மகா க்ளாஸிக்காக அமைந்திருக்கும்.  ஒரு நல்ல musical ஆகவே ஆக்கியிருக்கலாம்.  இசையும் நடிப்பும் அரங்க அமைப்பும் ஒப்பனையும், ஏன், கதையும் கூட எல்லாமே உலகத் தரம்.  ஆனால் சுத்தத் தமிழ் என்றும் இன்னும் ஏதோ பண்ணியும் அந்தப் பகுதியில் ரமேஷ் அரவிந்த் சொதப்பி விட்டார்.  அதில் என்ன குறை என்பதை என்னால் விளக்க முடியவில்லை.  இதை விட இம்சை அரசன் அட்டகாசமாக இருந்ததே என்றுதான் திரும்பத் திரும்பத் தோன்றிக் கொண்டே இருந்தது.  மிக முக்கியமாக உருவாக்கத்தில் ஒரு முக்கிய தவறு இருந்தது.  அதனால்தான் ஆட்டோ ஓட்டுநரிலிருந்து சாரு நிவேதிதா வரைக்கும் அந்தப் பகுதி அலுப்பாக இருந்தது.  என்ன தவறு என்றால், அந்தப் பகுதி அலுப்பாக இருந்ததுதான்.  கதை சுவாரசியமாகச் சொல்லப்படவில்லை.  ஒரு எம்ஜியார் படக் கதை.  ஏழை ஹீரோ பணக்கார ஹீரோயினைக் காதலித்து மணப்பது.  இந்தக் கதையை ஒரு க்ளாஸிக்காக எடுத்திருப்பார்கள் மொலோ(ங்) ரூஜ்ஷ் என்ற படத்தில். இந்தப் படத்தைப் பற்றி ஜன்னல் பத்திரிகையில் எழுதியிருந்தேன்.  படம் பூராவும் இசைதான்.  அது ஒரு இசை நாடகம்.  அந்தத் தரத்தில் வந்திருக்க வேண்டும், உத்தம வில்லனின் தெய்யம் பகுதி.   இருந்தாலும் படத்தின் மற்ற பகுதி காவியம்.  அதனாலேயே என் வாழ்வின் கடைசித் தருணம் வரை மறக்க முடியாத படமாகி விட்டது.

அலெஹாந்த்ரோ கொன்ஸாலஸ் இனாரித்துவின் வெளிவந்த முதல் வாரத்திலேயே பார்த்து விட்டேன்.  இனாரித்துவின் பரம ரசிகன் நான்.  ஆனாலும் Birdman-ஐ என்னால் ரசிக்க முடியவில்லை.  ஏன் என்று எனக்கே தெரியவில்லை.  அதனால்தான் அது பற்றி எழுதவில்லை.  அவருடைய Babel எல்லாம் ஒரு மனிதனால் எடுக்கக் கூடியதா?  என்ன ஒரு படம்!

சாரு