உங்களுக்குத் தெரிந்த சர்வாதிகாரிகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். வாழும் போது புகழின் உச்சியில் இருப்பார்கள். ஆனால் கடைசி காலத்தில் தெருநாய் போல் ஆகி விடுவார்கள். சிலர் ஹிட்லரைப் போல் தற்கொலை செய்து கொள்வதும் உண்டு. இல்லாவிட்டால், காக்காய் குருவி போல் சுட்டுக் கொல்லப்படுவார்கள்.
பினோசெத்தின் வீழ்ச்சி மிகவும் கேவலமாக இருந்தது. அவர் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் ஏற்படுத்தியிருந்த மாற்றங்களின் காரணமாக அவருக்குப் பின்னால் வந்த அரசினால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதோடு அவர் ராணுவத்தின் முப்படைத் தளபதியாகவும் நீடித்தார். அதையும் அரசாங்கத்தினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மனித உரிமை அமைப்புகள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களால் நீதிமன்றத்தில் பினோசெத் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால் பினோசெத் தன் முதுமையைக் காண்பித்துத் தப்பித்துக் கொண்டார். ”அப்படியானால் நீங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது. கலந்து கொண்டால் உங்களுக்குத் தெம்பு இருப்பதாக அர்த்தம். அப்படியென்றால் நீதிமன்ற விசாரணைக்கு வந்தாக வேண்டும்” என்று சொல்லி விட்டது நீதிமன்றம். இது நடந்தது 2000இல். 91 ஆண்டு காலம் உயிர் வாழ்ந்த (சீலேயர்களின் ஆயுள் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்) பினோசெத்துக்கு அப்போது 85.
ஸாந்த்தியாகோவில் இருந்தால் கிட்டத்தட்ட வீட்டுச் சிறை போல் இருந்தாக வேண்டும். அதனால் பினோசெத் தனக்குப் பிடித்த ஊரான இக்கீக்கேவுக்குச் (Iquique) சென்று விட்டார். என்ன ஆச்சரியம் என்றால், இக்கீக்கேவில் பினோசெத்தை வரவேற்றுக் கொண்டாடவும் ஒரு கூட்டம் இருந்தது. அவர்களெல்லாம் பினோசெத்தின் ராணுவ ஆட்சியின் போது நடந்த கூட்டுக் கொள்ளையின் பங்குதாரர்கள். ஆனால் மக்கள் அப்படி இல்லையே? அதனால் பினோசெத்தும் அவர் மனைவியும் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் அவர்கள் இருவரையும் அவமானப்படுத்தினார்கள்.
இரண்டு சம்பவங்கள். பினோசெத் தன் மெய்க்காப்பாளர்கள் சூழ கடற்கரையில் நடைப் பயிற்சிக்குச் சென்றிருக்கிறார். அப்போது அங்கே சில இளைஞர்கள் கையில் துப்பாக்கியோடு இருந்திருக்கிறார்கள். மெய்க்காவல் படை அந்த இளைஞர்களைப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்து விட்டது. அப்போது அந்த இளைஞர்கள் சொன்னது ஸாந்த்தியாகோவில் தலைப்புச் செய்தியாக வந்து விட்டது. இளைஞர்கள் சொன்னார்கள்: ”நாங்கள் வந்தது கடல் பறவைகளை வேட்டை ஆட; ஓய்வு பெற்ற சர்வாதிகாரிகளை அல்ல.” இதை விட அவமானம் ஒரு சர்வாதிகாரிக்குத் தேவையா?
இன்னொரு சம்பவம் இதை விட மோசமானது. ஒருநாள் பினோசெத்தின் மனைவி ஒரு மாலில் மின்படிக்கட்டில் போய்க் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு பெண்மணி எதிர்ப் படிக்கட்டில் வந்து கொண்டிருந்தவர் “வெட்கங்கெட்ட நாயே!” என்று பினோசெத்தின் மனைவியைப் பார்த்துக் கத்தியிருக்கிறார். உடனே பினோசெத்தின் மனைவியுடன் வந்த பாதுகாவலர்கள் அந்தப் பெண்ணைப் பிடித்து, ”ஜெனரலின் மனைவியை எப்படி நீங்கள் திட்டலாம்?” என்று கேட்க, அதற்கு அந்தப் பெண்மணி, “நான் அவரைத் திட்டினேன் என்று அவருக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டிருக்கிறார். இப்படி நாளுக்கு நாள் நடந்த அவமானங்களால் பினோசெத்தினால் எந்த இடத்திலும் நிம்மதியாக வாழ முடியவில்லை.
***
சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்ட Por la patria நாவல் “El fuego, el fuego, el fuego y la épica” என்று முடிகிறது. Fire, fire, fire and the Epic. பாப்லோ நெரூதாவின் கவிதையிலும் நாம் நெருப்பைப் பார்த்தோம். பிஸாகுவா நிலத்தில் எம் மக்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தமும் நெருப்பாய் தகிக்கிறது என்று எழுதினார் நெரூதா.
இப்போது இன்னொரு நெருப்பை நாம் சந்திப்போம். இங்கே எனக்கு மெரீனா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்து செத்துப் போன ஒரு முதியவரின் ஞாபகம் வருகிறது. அவர் குடிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். யாரும் மது அருந்தக் கூடாது என்பது அவர் வாதம். நாளையே நான் மெரீனா கடற்கரையில் அமர்ந்து கொண்டு ஆண், பெண் யாவரும் சுய மைதுனம் செய்யக் கூடாது என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தால் அது எப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனமோ அப்படி ஒரு பைத்தியக்காரத்தனம்தான் அந்த முதியவர் செய்ததும். அவர் மது அருந்த மாட்டார், அதனால் யாரும் மது அருந்தக் கூடாது. அதற்காக அவர் உண்ணாவிரதமும் இருந்து செத்துப் போவார். எப்பேர்ப்பட்ட பைத்தியக்காரத்தனமான நாடு இது! ஒருத்தர் செய்ததற்காக நாடு என்ன செய்யும் என்கிறீர்களா? மதுவுக்கு எதிரான ஒவ்வொருவர் நிலைப்பாடும் அதுதான். நான் குடிப்பதில்லை; நீயும் குடிக்கக் கூடாது. எப்பேர்ப்பட்ட ஃபாஸிஸம்!
இப்போது சீலேயில் நடந்த இன்னொரு விதமான தற்கொலையைப் பார்ப்போம்.
ஸாந்த்தியாகோவிலிருந்து கீழே – அதாவது, தெற்கே 500 கி.மீ. பயணம் செய்தால் கான்ஸெப்ஸியோன் வரலாம். அந்த ஊரின் மக்கள் தொகை இரண்டேகால் லட்சம். இதற்கு ரயில் பயணம்தான் நலம். இரவு பதினோரு மணிக்குக் கிளம்பினால் காலையில் கான்ஸெப்ஸியோன். (ஸாந்த்தியாகோவிலிருந்து வடக்கே மேல்நோக்கி 1500 கி.மீ. தூரத்தில் இருக்கிறது இக்கீக்கே. அதன் மக்கள் தொகையும் இரண்டு லட்சம்.) லித்தினும் அவரது ஒளிப்பதிவாளர் ஃப்ராங்கியும் கான்ஸெப்ஸியோனுக்கு ரயிலில் வருகிறார்கள், லித்தின் முகச் சவரம் செய்தே ஆக வேண்டும், தாடி வளர்ந்தால் அவரை லித்தின் என்று கண்டு பிடித்து விடுவார்கள், லித்தின் சீலேயின் பிரபலமான இயக்குனர், ஆனால் ஸீரோ டிகிரிக்குக் குறைவான குளிரில் முகச்சவரம் செய்து கொள்ள கான்ஸெப்ஸியோன் நகரில் ஒரு சலூனில் கூட வெந்நீர் கிடைக்கவில்லை என்பது வரை பார்த்தோம்.
இந்த முறை சீலே செல்லும் போது கட்டாயம் கான்ஸெப்ஸியோன் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்ற போது ஊர்களைப் பார்க்கும் ஆர்வத்தோடு மட்டுமே இருந்தேன். அதிலும் என்னோடு யாரும் இல்லாமல் தனியாக இருந்ததால் ரொம்ப தூரம் செல்ல முடியவில்லை. அதற்கு ரயிலில் செல்ல வேண்டும், அதற்கு ஒரு துணை வேண்டும்.
கான்ஸெப்ஸியோன் நகரில் ப்ளாஸா செபஸ்தியானைப் (செபஸ்தியான் சதுக்கம்) பார்க்க வேண்டும் என்பது திட்டம். பினோசெத்தின் சர்வாதிகார ஆட்சியின் போது பிரபலமான பெயர் செபஸ்தியான். செபஸ்தியான் ஒரு சுரங்கத் தொழிலாளி. அவருடைய இருபத்திரண்டு வயது மகனும், இருபது வயது மகளும் கைது செய்யப்பட்டு ராணுவத்தால் சித்ரவதை செய்யப்பட்டார்கள். செபஸ்தியான் அரசு அதிகாரிகளிடம், அரசியல் தலைவர்களிடம், பிரபலமான பத்திரிகையாளர்களிடம், பிஷப்பிடம் என்று எல்லோரிடமும் பேசினார். அவர் அவர்களிடம் சொன்னது ஒன்றுதான்: ”என் பிள்ளைகளை என்னிடம் தர வேண்டும் என்று கூட சொல்லவில்லை; அவர்களை சித்ரவதை செய்வதை நிறுத்துங்கள். இல்லையென்றால், கதீட்ரலின் முன்னே நின்று தீக்குளிப்பேன்.”
என் எழுத்துக்களைக் கூர்ந்து கவனமாகப் படித்து வரும் வாசகர்களுக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். இதே போன்ற ஒரு சம்பவம் லத்தீன் அமெரிக்காவின் சமகால வரலாற்றில் நடந்தது. அது பற்றி நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த என்னுடைய லத்தீன் அமெரிக்க சினிமா என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன். அந்த நூலைப் படிக்கவில்லை என்று சொல்லக்கூடாது. அந்த நூலைத் தவிரவும் என்னுடைய பல கட்டுரைகளில் அந்த சம்பவத்தை விவரித்திருக்கிறேன். இன்னொரு முறை விவரிக்கலாம். நூறு முறை சொன்னாலும் சொல்லித் தீராத ஒரு தீரனின் கதை அது.
நிகாராகுவா. அந்தக் கவிஞனின் பெயர் ரிகபர்த்தோ லோபஸ் பெரஸ் (Rigoberto Lopez Perez) (1929 – 1956). ரிகபர்த்தோ ஒரு இசைக்குழுவும் வைத்திருந்தார். பதினேழு வயதிலிருந்து கவிதைகள் எழுதத் தொடங்கினார்.
அனஸ்தாஸியா சொமோஸா கார்ஸியா நிகாராகுவாவின் நிரந்தர சர்வாதிகாரியாக இருந்தார். அதாவது, சொமோஸா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே திரும்பத் திரும்ப நிகாராகுவாவை ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள், 1979இல் புரட்சிகர ஸாந்தினிஸ்த்தாக்கள் ஆட்சியைப் பிடிக்கும் வரை. யாராலும் சொமோஸாவையோ அவர் குடும்பத்தினரையோ ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படிப்பட்ட சொமோஸாவை நான் இன்னும் ஒரு வருடத்தில் கொன்று போடுவேன், முடிந்தால் அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளட்டும் என்று பகிரங்கமாக சவால் விட்டார் இருபத்தாறு வயது ரிகபர்த்தோ. சொல்லி விட்டுத் தலைமறைவாகவும் ஆகவில்லை. அப்போது நிகாராகுவாவில் தேர்தல் நேரம். என்னது, சர்வாதிகார ஆட்சியில் தேர்தலா? ஆமாம். தென்னமெரிக்க சர்வாதிகாரிகள் அத்தனை பேருமே – பினோசெத் உட்பட – தேர்தலில் வென்றுதான் பதவியில் இருந்தார்கள். அதிபரை எதிர்த்து யாரோ ஒருவர் பேருக்காகத் தேர்தலில் நிற்பார். அவருக்குப் பத்து வாக்குகள் விழும். உதாரணமாக, சொமோஸா கொல்லப்படுவதற்கு முன்பு நடந்த தேர்தலில் சொமோஸா வாங்கிய வாக்குகள் ஒரு லட்சத்துக்கும் மேல். எதிர் வாக்குகள் நூறு! சர்வாதிகாரியின் ஆதரவாளர்கள் மட்டுமே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு அளிக்க முடியும். எதிராளிகள் வந்தால் நேஷனல் கார்டு ரவுடிகளால் கடத்திச் செல்லப்படுவர். திரும்ப அவர் உடம்பு கூடக் கிடைக்காது.
லோபஸ் பெரஸ் தான் சொன்னது போலவே சொமோஸாவை சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி ஒரு புராணிகக் கதை போல் நடந்தது. உலக சரித்திரத்திலேயே அப்படி ஒரு கதை நடந்ததில்லை. ஒரு சரிவாதிகாரியைப் பார்த்து ஒரு கவிஞன் உன்னை இன்னும் ஒரு வருடத்தில் கொலை செய்வேன் என்று சொல்கிறான். சொன்னது போலவே சுட்டுக் கொல்கிறான். நிகாராகுவாவின் தலைநகரான மனாகுவாவிலிருந்து 76 கி.மீ. தூரத்தில் உள்ளது லெயோன் நகரம். அங்கே உள்ள கதீட்ரலுக்கு வருகிறார் சொமோஸா.
தன் அன்னைக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதி வைத்து விட்டு, எல் செஸ்த்தெவோ (El Sesteo) உணவகத்துக்குச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு அங்கே வருகிறார் லோபஸ் பெரஸ். அந்த கஃபே கதீட்ரலின் எதிரே இருக்கிறது. அந்த உணவகத்திற்குத்தான் நிகாராகுவாவின் தேசியக் கவியான ருபேன் தாரியோ (Rubén Darío) (1867 – 1916) வருவது வழக்கம். அந்த உணவகம் நிகாராகுவாவின் பிரசித்தமான உணவான சாஞ்ச்சோ கோன் யுக்காவுக்குப் (Chancho con yucca) பேர் போனது. சாஞ்ச்சோ என்றால் பன்றிக் கறி. யுக்கா மரவள்ளிக்கிழங்கு. லோபஸ் பெரஸுக்குப் பிடித்த உணவு. அதைச் சாப்பிட்டு விட்டு கதீட்ரலின் உள்ளே சென்று சொமோஸாவைச் சுட்டாரா, அல்லது, சாப்பிடாமலேயே உள்ளே சென்று விட்டாரா என்று தெரியவில்லை. ஆனால் அந்தக் கதீட்ரலின் உள்ளே நடந்தது வரலாறு. விலாங்கு மீனைப் போல் நேஷனல் கார்ட் பாதுகாவலர்களை ஊடுருவிச் சென்று சொமோஸாவை வெகு அருகிலிருந்து சுட்டார் லோபஸ் பெரஸ். அந்தக் கணத்திலேயே லோபஸ் பெரஸைச் சுட்டார்கள் நேஷனல் கார்ட் காவலர்கள். லோபஸ் பெரஸ் தன் அன்னைக்கு எழுதி விட்டு வந்தார், ”அம்மா, துயரம் கொள்ளாதே, மனசாட்சியுள்ள எந்த நிகாராகுவா குடிமகனும் நான் செய்ததையே செய்வான்”
(ரிகபர்த்தோ தன் தாய்க்கு எழுதிய கடைசி கடிதம் ஒரு நீண்ட கவிதையாக உள்ளது. அதை நான் முழுமையாக லத்தீன் அமெரிக்க சினிமா நூலில் மொழிபெயர்த்திருக்கிறேன்.)
முதலாம் சொமோஸா (சொமோஸா கார்ஸியா) கொல்லப்பட்ட உடனேயே (1956) அவர் மகன் லூயிஸ் சொமோஸா அதிபர் பதவிக்கு வந்தான். அவன் தம்பி அனஸ்தாஸியோ சொமோஸா நேஷனல் கார்டின் தலைவரானான். ஆனாலும் தன் தமையனைக் கொன்று விட்டு தான் அதிபராவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தான் மூன்றாவது சொமோஸா. அவனை ஒரு ஸைக்கோ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இரண்டாவது சொமோஸா லூயிஸ் 1967இல் மாரடைப்பில் இறந்ததால் அனஸ்தாஸியோ சொமோஸா (மூன்றாவது சொமோஸா) பதவிக்கு வந்தான். இவன் பராகுவாயில் கொல்லப்பட்ட கதையை இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன்.
நேற்று வினித்திடம் பேசினேன். ஒரு குகையில் அமர்ந்து எழுதுவது போல் வெளியுலகத் தொடர்பே இல்லாமல் இப்போது நான் எழுதிக் கொண்டிருப்பதையெல்லாம் யார் படிக்கிறார்களோ என்ற மனச்சோர்வில் இருந்த போது பேசினேன். காரணம், நிகாராகுவாவின் கவிஞர், நாவலாசிரியர் ஸெர்ஹியோ ராமிரஸ் (Sergio Ramirez) எழுதிய To Bury Our Fathers என்ற நாவல் வேறு கண்ணில் பட்டது. ரீடர்ஸ் இண்டர்நேஷனல் பதிப்பகம் வெளியிட்டது. தடை செய்யப்பட்ட நூல்களை மட்டுமே வெளியிடும் பதிப்பகம் அது. அ-புனைவு படிப்பதோடு இம்மாதிரி நாவல்களையெல்லாம் படியுங்களேன் வினித் என்று சொன்னேன். ஆனால் மாலையில் அழைத்தபோது அந்த நாவலைப் படித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.
காலம் எப்படி மாறி விட்டது என்று நினைத்துக் கொண்டேன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான் அந்த நாவலைப் பட்டினி கிடந்து வாங்கினேன். அதை யாரோ எடுத்துக் கொண்டு போக சமீபத்தில் மீண்டும் அதை வாங்கிக் கொடுத்தார் ஒரு நண்பர். ஆனால் இப்போது எல்லா நூல்களுமே இணைய நூலகங்களில் இலவசமாகக் கிடைக்கின்றன.
எர்னஸ்தோ கார்தினால் சொமோஸா பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். கவிதையின் தலைப்பு:
சொமோஸா ஸ்டேடியத்தில் சொமோஸா சிலையை சொமோஸா திறக்கிறார்
இந்த சிலையை
மக்களே எனக்காக எழுப்பியிருக்கிறார்கள்
என்று நான் நம்புவதாக நினைத்து விடாதீர்கள்
எனக்கு மக்களைப் பற்றித் தெரியும்
அதனால் நானேதான் அமைத்துக் கொண்டேன்
வருங்காலத்தில் இதை மக்கள் அடித்து உடைத்து விடுவார்கள்
என்றும் எனக்குத் தெரியும்
அதேபோல்
நான் இறந்த பிறகு எனக்காக நீங்கள்
சிலை ஏதும் எழுப்ப மாட்டீர்கள் என்பதும் தெரியும்
அதேபோல்
இதை நீங்கள் வெறுப்பீர்கள் என்றும் தெரியும்
ஆதலால்
என்னுடைய இந்தச் சிலையை
நானே எழுப்பிக் கொண்டேன்.
வடக்கே ஓந்துராஸையும் தெற்கே கோஸ்த்தா ரிக்காவையும் மேற்கே பஸிஃபிக் பெருங்கடலையும் கிழக்கே கரீபியக் கடலையும் எல்லைகளாக்க் கொண்ட மத்திய அமெரிக்க நாடு நிகாராகுவா. இதை 1936இலிருந்து 1956 வரை ஆட்சி செய்தார் அனஸ்தாஸியோ சொமோஸா கார்ஸியா. அதற்குப் பிறகும் கூட 1979 வரை சொமோஸா குடும்பமே நிகாராகுவாவில் ஆட்சி செய்தது. பக்க பலமாக இருந்தது நேஷனல் கார்ட் என்ற கூலிப்படை. அதற்கு உதவியாக இருந்தது அமெரிக்க அரசு. முதலாம் சொமோஸா காலத்தில் முதலாம் சொமோஸா பற்றி அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் சொன்ன ஒரு வாசகம் பிரபலமாக இருந்தது. ”He may be a son of a bitch, but he’s our son of a bitch.”
சொமோஸா பற்றிய ஒரு சுவாரசியமான நாவல் Death of Somoza. எழுதியவர் நிகாராகுவாவைச் சேர்ந்த கவிஞர் Claribel Alegría மற்றும் அவரது கணவர் Darwin Flakoll. இந்த நாவல் சொமோஸா பரம்பரையின் கடைசி வாரிசான மூன்றாம் சொமோஸாவை (அனஸ்தாஸியோ சொமோஸா) சில அர்ஜெண்டீனியப் புரட்சியாளர்கள் 1980இல் பராகுவாயில் வைத்துக் கொன்ற கதையைச் சொல்கிறது.
ஏழு பேர் கொண்ட புரட்சியாளர் குழு அது. நான்கு ஆண்கள். மூன்று பெண்கள். குழுவின் தலைவன் ரமோன். இந்த ஏழு பேரின் ஞாபகப் பதிவுகளே சொமோஸாவின் மரணம் என்ற இந்த நாவல். 1979இல் ரமோன், ஆர்மாந்தோ, சாந்த்தியாகோ மூவரும் வேறு சில அர்ஜெண்டீனிய கெரில்லா போராளிகளோடு பனாமாவிலிருந்து நிகாராகுவாவுக்கு வருகிறார்கள். ஸாந்தினிஸ்த்தாக்கள் சொமோஸாவை எதிர்த்து கெரில்லா போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரம். புரட்சி வெற்றி பெற்றது என்றாலும் சொமோஸா தப்பி விட்டார்.
ஸாந்தினிஸ்த்தாக்கள் ஆட்சியைப் பிடித்து விட்டார்கள். சொமோஸா பராகுவாய்க்குத் தப்பி விட்டார். மிகக் கடுமையான பாதுகாப்பில் இருக்கிறார் சொமோஸா. அவரைக் கொல்வது சாத்தியமே இல்லை. மிக மிக ரகசியமாக, கொஞ்சமும் எதிர்பாராத இடத்திலிருந்து தாக்கினால்தான் திட்டம் வெற்றியடையும். அதனால் சொமோஸாவைக் கொல்லும் திட்டத்தை சொமோஸாவின் மிகப் பெரிய எதிரிகளான ஸாந்தினிஸ்த்தாக்களிடம் கூட சொல்லவில்லை ரமோனின் குழு.
1990இல் பராகுவாயில் கொல்லப்படுகிறார் அனஸ்தாஸியோ சொமோஸா. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ரமோன் குழுவினர் 1993ஆம் ஆண்டு க்ளாரிபெல் அலெக்ரீயா, டார்வின் தம்பதியிடம் நடந்த சம்பவங்களை மிக விவரமாகச் சொல்கிறார்கள். அந்தப் பேட்டிகளின் தொகுப்புதான் சொமோஸாவின் மரணம் என்ற நாவலாக உருவானது. உடனடியாக அல்ல. சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு பேரின் பாதுகாப்பைக் கருதி க்ளாரிபெல் தன் நாவலை 1996-ஆம் ஆண்டுதான் வெளியிட்டார்.
நாவலை எழுதிக் கொண்டிருக்கும் போது க்ளாரிபெல்லுக்கு அறம் சார்ந்த ஒரு கேள்வி எழுகிறது. ஒரு மனிதனை விசாரணையின்றி, அவனுடைய நியாயத்தைக் கேளாமல் கொல்வது பயங்கரவாதம் அல்லவா? இந்தக் கேள்வியை க்ளாரிபெல் தன் நாவலிலேயே எதிர்கொள்கிறார். சொமோஸாவின் மரணம் கொலை அல்ல. மரண தண்டனை. ஏனென்றால்,
சொமோஸா எந்தக் குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடாத அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்தார். அதிலும் குறிப்பாக பதினான்கு வயதிலிருந்து இருபத்திரண்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களைத் தேடித் தேடிக் கொன்றார். விவசாயிகளைக் கொன்றார். மாணவர்களைச் சிறை செய்து சித்ரவதை செய்தார். நீதிமன்றங்கள் அவரது கைப்பாவை ஆயின. எல்லா செய்திகளும் தணிக்கைக்கு உட்பட்ட பிறகே வெளிவந்தன. பொது இடங்களில் கூடுவது சாத்தியமே இல்லாமல் ஆயிற்று. கூடினால் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்கள். செஞ்சிலுவை சங்க நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. பாதிரியார்கள் கூட சுதந்திரமாக இயங்க முடியவில்லை. இது எல்லாவற்றுக்குமாகத்தான் அனஸ்தாஸியோ சொமோஸாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த சொமோஸாவின் தாத்தாவான அனஸ்தாஸியோ சொமோஸா கார்ஸியாவின் (முதலாம் சொமோஸா) கதை ஒரு சுவாரசியமான நாவலுக்கானது. அல்லது, பாப்லோ எஸ்கொபாருடன் அவரை ஒப்பிடலாம். Sociopath என்ற வார்த்தைக்குத் தோதான ஆட்களே மூன்று சொமோஸாக்களும் ஆவர். தன்னுடைய நலனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்பவன், யாரை வேண்டுமானாலும் கொல்பவன் sociopath. நேஷனல் கார்ட் என்ற கூலிப்படையை வைத்துக் கொண்டு 43 ஆண்டுகள் நிகாராகுவாவைக் கொள்ளையடித்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது சொமோஸா மாஃபியா கும்பல்.
முதலாம் சொமோஸா புத்திசாலி. ஃபிலடெல்ஃபியாவுக்குப் படிக்கச் சென்ற சொமோஸா நன்கு ஆங்கிலம் பேசக் கற்றுக் கொண்டான். அது ஒன்றுதான் நிகாராகுவாவின் எதிர்காலத்தையே தீர்மானிப்பதாக இருந்தது. அந்த ஆங்கிலத்தினாலேயே அவனுக்கு அமெரிக்கக் கடற்படையுடன் நட்பு ஏற்பட்டது. அதன் காரணமாகவே அவன் ஸால்வதோரா சக்காஸாவை மண்ந்து கொண்டான். சக்காஸா நிகாராகுவாவின் பெரும் பணக்காரரான யுவான் சக்காஸாவின் நெருங்கிய உறவுக்காரப் பெண். யுவான் சக்காஸா பிற்காலத்தில் நிகாராகுவாவின் அதிபராகவும் (1933 -1936) இருந்தவர். யுவான் சக்காஸா அதிபராக இருந்த போது சொமோஸாவுக்கு நேஷனல் கார்டின் தலைமைப் பதவி வழங்கப்பட்ட்து. உடனே நேஷனல் கார்டைத் தன் கைக்குள் போட்டுக் கொண்ட சொமோஸா 1936இல் யுவான் சக்காஸாவை நாடு கடத்தி விட்டு தானே அதிபரானான். சக்காஸா லாஸ் ஏஞ்ஜலஸில் புகலிடம் பெற்று அங்கேயே சாகும் வரை வாழ்ந்தார். இதற்கிடையில் நடந்த ஒரு சம்பவம் குறிப்பிடத்தக்கது. நிகாராகுவாவின் புரட்சிகர அமைப்பான ஸாந்தினிஸ்த்தா தேசிய விடுதலை முன்னணியின் பெயரே (ஃப்ரெந்த்தே ஸாந்தினிஸ்த்தா தெ லிபராஸியோன் நாசியொனால் – சுருக்கமாக FSLN) நிகாராகுவாவின் புரட்சியாளர் அகஸ்த்தோ ஸாந்தினோவின் (1895 – 1934) பெயரைக் கொண்டுதான் வைக்கப்பட்ட்து. ஸாந்தினோவின் கெரில்லா போராளிகளுடன் தான் பதவிக்கு வந்த உடனேயே பேச்சு வார்த்தை மேற்கொண்டார் யுவான் சக்காஸா. பேச்சு வார்த்தையும் வெற்றியில் முடிந்தது. கைது செய்யப்பட்ட போராளிகளையெல்லாம் விடுதலை செய்து, அவர்கள் உழைத்து வாழ நிலம் வழங்கப்பட வேண்டும் என்பது ஸாந்தினோவின் வேண்டுகோள். இனிமேல் ஸாந்தினோவின் கெரில்லாப் போராளிகள் வன்முறையைக் கைவிட்டு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்; யுவான் சக்காஸாவின் அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இது சக்காஸாவின் நிபந்தனை. இரண்டுமே இரு தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பேச்சு வார்த்தை முடிந்து அதிபரின் அரண்மனையை விட்டு வெளியே வந்ததுமே ஸாந்தினோவும் அவரோடு கூட வந்த தோழர்களும் சொமோஸாவின் உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பிறகு அவர்களின் உடல்கள் காட்டுப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு அடையாளமே தெரியாத இடங்களில் புதைக்கப்பட்டன.
சொமோஸா அதோடு நிறுத்தவில்லை. ஸாந்தினோவின் ஆதரவாளர்கள் அத்தனை பேரையும் – அதாவது கிராமவாசிகள் முழுவதும் – சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்டான். அது தவிர நேஷனல் கார்டைச் சேர்ந்தவர்கள் எந்தச் செயலில் ஈடுபட்டாலும், யாரைக் கொன்றாலும் யாரும் அதைக் கேள்வி கேட்க முடியாது என்றும் ஒரு சட்டத்தைப் போட்டான் சொமோஸா. அதாவது, பணக்காரர்களைத் தவிர வேறு யாருமே நிகாராகுவாவில் வாழ முடியாத சூழ்நிலை உருவாகியது.
புகைப்படம்: முதலாம் சொமோஸாவும் ஸாந்தினோவும். இருவரும் தோள் மீது கை போட்டபடி நிற்கிறார்கள். இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட ஒருசில தினங்களில் ஸாந்தினோ சுட்டுக் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட தினம் 21 ஃபெப்ருவரி 1934. (இதற்கு 33 ஆண்டுகளுக்குப் பிறகு பொலிவியாவில் கொல்லப்பட்ட சே குவேராவுக்குக் கிடைத்த பிராபல்யமும் புகழும் ஏன் ஸாந்தினோவுக்குக் கிடைக்கவில்லை என்பது என்னுடைய தீராத சந்தேகங்களில் ஒன்று.)
மேலே விவரித்த எல்லாவற்றையும் விட ஒரு அவலம் 1972இல் நடந்த்து. அந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு இரண்டு தின்ங்களுக்கு முன்பு நிகாராகுவாவைத் தாக்கியது ஒரு கடுமையான பூகம்பம். ஆயிரக்கணக்கான மக்கள் அதில் இறந்து போனார்கள். மனாகுவா நகரின் பெரும்பாலான பகுதிகள் அடையாளம் தெரியாமல் அழிந்து போயின. அப்போது சொமோஸா செய்த காரியத்தைப் பார்த்து உலகமே அவனை வெறுத்த்து. பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட நிகாராகுவா மக்களுக்காக எல்லா நாடுகளிலிருந்தும் உதவிகள் குவிந்தன. அந்த உதவிகளையெல்லாம் தன்னுடைய ஜேபியில் போட்டுக் கொண்டான் சொமோஸா. ஏழைகளிடமிருந்து நிலங்களை வாங்கி அவற்றை அரசு நிறுவனங்களுக்குப் பத்து மடங்கு விலை வைத்து விற்றான். வெளிநாடுகளிலிருந்து வந்த பண உதவியை அபகரித்தது மட்டும் அல்ல; நிவாரணப் பொருட்களையும் கூட கள்ளச் சந்தையில் விற்றுக் காசாக்கினான். பூகம்பத்தினால் தரை மட்டமாகிய கட்டிடங்களைத் திரும்பக் கட்டுவதற்காக யு.எஸ். அரசு நிதி அளித்தது. அந்தப் பணத்தைக் கொண்டு தன்னுடைய நிறுவனத்திலிருந்தே பத்துப் பதினைந்து மடங்கு அதிக விலை வைத்து சிமண்ட் வாங்கினான்.
எல்லாம் 1979இல் முடிவுக்கு வந்தது. அதற்கு ஒரு சம்பவம் காரணமாக அமைந்தது.
பேத்ரோ ஹோயாக்கின் ச்சமோர்ரோ (Pedro Joaquin Chamorro) ஒரு பதிப்பாளர், லா ப்ரென்ஸா என்ற எதிர்க்கட்சி தினசரியின் ஆசிரியர். 1978 ஜனவரியில் ஒருநாள் அவர் நிலநடுக்கச் சீரழிவுகளைப் பார்ப்பதற்காகத் தன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சுட்டுக் கொன்றது சொமோஸா மாஃபியாவின் கூலிப்படை நேஷனல் கார்ட். அந்த ஒரு சம்பவம் நிகாராகுவாவையே தீப்பற்றி எரியச் செய்த்து. பதினெட்டு மாதங்கள் கழித்து ஜூலை 1979இல் ஸாந்தினிஸ்த்தாக்கள் பதவிக்கு வந்தனர். சொமோஸா பராகுவாய்க்குத் தப்பி ஓடினான்.