இந்த வாரம் வியாழக்கிழமை இரவிலிருந்து ஞாயிறு இரவு வரை (16இலிருந்து 19 வரை) ஹைதராபாதில் இருப்பேன், நண்பர்கள் யாரேனும் சந்திக்க விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் என்று மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தேன். (charu.nivedita.india@gmail.com) ஒரு நண்பர் ஃபேஸ்புக் காமெண்ட்டில் விருப்பம் தெரிவித்திருந்தார். மின்னஞ்சல் அனுப்பியிருந்தால் சிலாக்கியமாக இருந்திருக்கும். நான் ஃபேஸ்புக் காமெண்ட்ஸ் எல்லாம் பார்ப்பதில்லை. எதேச்சையாகப் பார்த்தேன். இன்னொரு நண்பர் இன்பராஜ் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவர் இதற்கு முன் ஏதேனும் கடிதம் எழுதியிருக்கிறாரா என்று தேடினேன். ஃபெப்ருவரி 3, 2011இல் அவர் எழுதிய கடிதம் கிடைத்தது. அந்தக் கடிதத்தை இப்போதுதான் முதல் முதலாகப் படிக்கிறேன். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதிய கடிதம் என் பார்வைக்கு வராமல் எப்படியோ விடுபட்டிருக்கிறது. அந்தக் கடிதம் கீழே:
அன்புள்ள சாரு,
உங்களை என்றாவது சந்தித்துப் பேசி விட வேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள் மிகுதியாக இருந்த போது ஒருநாள் மந்தைவெளி தெரு வழியாக ஒரு மதியவேளையில் நீங்கள் ஆட்டோவில் சென்றீர்கள். அது நீங்கள் சென்ற ஆண்டு அல்மோஸ்ட் ஐலண்ட் கான்பரன்சுக்கு சென்று வந்த மறுநாள் என நினைக்கிறேன். அன்று காலையில்தான் உங்கள் வலைப்பதிவில் அந்த கான்ஃபரன்சில் நடந்த சம்பவங்களை நீங்கள் எழுதியிருந்தீர்கள் என்பதால் நினைவில் வைத்திருக்கிறேன். நடு வீதியில் என்னையும் அறியாமல் உங்களைப் பார்த்த நொடியில் சார்ர்ர் என்று கத்திவிட்டேன். ஆனால் உங்களுக்கு கேட்கவில்லை. நல்லவேளை, நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டேன். அரைமணி நேரத்துக்கு முன்பு உங்கள் கட்டுரையைப் படித்து சிலிர்த்துவிட்டு வெளியே வந்த நான் உங்களை நேரில் பார்த்ததும் கொண்ட உவகைதான் அது. நான் கத்தியது மட்டும் உங்களுக்கு கேட்டிருந்தால் அதைவிட வாழ்க்கையில் உங்களுக்கு நான் செய்த கொடுமை வேறு எதுவும் இல்லை என்று எனக்குள்ளேயே வெதும்பி இருப்பேன். நல்லவேளை அது உங்களுக்குக் கேட்கவில்லை.
நான் வசிப்பது அண்ணா நகர். உங்களை சாலையில் பார்த்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் என்று நினைக்கிறேன், ஒருநாள் நான் அதிகாலையிலேயே திருவல்லிகேணி வரை செல்ல வேண்டியதிருந்ததால் அப்படியே பீச்சுக்கும் வந்தேன். அப்பொழுது நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்ததையும் பார்த்தேன். பார்த்தவுடன் உங்கள் பின்னாலேயே நடக்கத் தொடங்கினேன். உங்கள் வேகத்துக்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை, அந்த நேரத்தில் உங்களிடம் பேசும் தைரியமும் எனக்கில்லை, ஆனால் என்னையும் அறியாத ஒரு மகிழ்ச்சி எனக்குள். உடனே என் கேர்ள் பிரண்டுக்கு ஃபோன் போட்டு எனக்கு முன்னாள் நடந்து கொண்டிருப்பது யார் தெரியுமா, “சாரு நிவேதிதா” என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டேன். அப்படியே நீங்கள் அந்த சூப் கடைக்கு வந்தீர்கள் , நானும் அப்படியே ஒரு பப்பாளிப்பழம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே எட்ட நின்று உங்களை தரிசித்துக் கொண்டிருந்தேன்.
அங்கு ஒரு பதினைந்து பேர் நின்று கொண்டிருந்திருப்பார்கள். நான் அப்படியே அந்த ஸ்கேட்டிங் மேடை மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, இனி உங்களைப் பார்க்க வேண்டாம், ஒருவேளை நீங்கள் என்னை கவனித்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்துவிட்டு நான் கவனிக்காதது போல் இருந்து கொண்டேன். இது உங்களுக்கு ஞாபகம் இருக்காது என்றே நினைக்கிறேன். ஆனால் என் வாழ்வில் எனக்கு அது ஒரு அற்புதமான விடிகாலை. நான் அந்த மேடை மீது அமர்ந்திருந்த பக்கமாக நீங்கள் தற்செயலாக ஒரு பார்வை வீச, உங்களுக்குத் தெரியாமல் உங்களைப் பார்த்துக் கொண்டிருந்த நான் திடீரென்று நீங்கள் என்னைப் பார்த்ததும் பரிட்சையில் பிட் அடித்துக் கொண்டிருந்த போது மாட்டிக் கொண்ட மாணவனைப் போல் திருதிருவென்று முழித்தபடி ஸ்தம்பித்துப் போனேன். யாரோ ஒருவர் நம்மைப் பார்க்கிறார் என்று தெரிந்து நீங்களும் என்னைக் கவனித்தீர்கள், செய்வது அறியாமல் நானும் கீழே இறங்கிவிட்டேன்.
நீங்கள் என்னை உற்று நோக்கி ஒரு நண்பனைப்போல் விசாரித்தீர்கள். கைகொடுத்து கடந்து சென்றீர்கள்.
அந்த சம்பவத்தை நான் வெகுநாட்கள் என் மனதுக்குள் எண்ணிப் பார்த்து மகிழ்ந்ததுண்டு, அது எனக்கு பைபிளில் வரும் ஒரு கதையைத்தான் ஞாபகப்படுத்தும். சகேயு என்னும் மோசடியாக பணம் வசூலிப்பவன் ஒருவன், மரத்தின் மீது ஒளிந்திருந்து ஏசுவைப் பார்க்க அவரது வழியில் ஆவலாக இருப்பான். அவன் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தாலும், ஏசு அந்த மரத்தடியில் வந்தவுடன், அவன் மோசடி செய்பவனாக இருந்தாலும், சகேயுவே இறங்கிவா, நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்று அழைப்பார். ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தவனுக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி ஏற்படும்.
யாரோ ஒருவர் உங்களைப் பற்றி தெரியாமல் சொல்லிவிட்டார். தங்களது பெரிய மனதால் அல்லாஹ்வின் பெயரில் அவரை மன்னித்து விடுங்கள். எழுத்தாளர் என்பவரை சினிமா அரசியல் போன்ற மற்ற பிரபலங்களுடன் சமமாகப் பார்த்திருக்கிறார். இதே ஒரு சினிமா நட்சத்திரமோ ஒரு அரசியல்வாதியோ அலட்சியமாக கையசைத்து அவமானப்படுத்திச் சென்றிருந்தால் கூட, இதுபோன்ற ஆட்கள் மற்றவர்களிடம் போய் ஏதோ கட்டித்தழுவிவந்தது போல் பீத்திக் கொள்வார்கள். நீங்கள் எல்லாம் எங்களுக்காகவும் இனிவரும் சந்ததிகளுக்காகவும் சேர்த்து சிந்திப்பவர்கள். உங்கள் ஞானத்தால் நாங்கள் எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் நிமிடங்கள் இந்த சமுதாயத்தின் எதிர்காலத்துக்கான வித்துக்கள். அதை ஒருபோதும் களவாட முன்வரமாட்டோம். வாக்கிங் செல்லும் போது கூட ஒரு மாபெரும் கரு உங்களுக்குள் உதிக்கக்கூடுமே.
எனது இந்த பெரிய டைம் கில்லர் கடிதத்துக்காக மன்னித்துவிடுங்கள். இங்கிதம் இல்லாமல் ஒருவர் உங்களை கடினமான சொற்களால் பேசியது அதுவும் நான் பெற்ற ஒரு அனுபவத்துக்கு எதிர்மறையாக இருந்ததால் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதத் துணிந்தேன்.
மிக்க நன்றி,
இன்பராஜ்.-