ஹைதராபாதிலிருந்து திரும்பவும் கூடு அடைந்து விட்டேன்.
திரும்பவும் சாப்பாட்டுப் பிரச்சினை தொடங்கி விட்டது. வீடு இப்போது கூட்டுக் குடும்பமாகி இருக்கிறது. எட்டு மாசப் பொடிப்பயல் வேதா, என் மகன் கார்த்திக், மருமகள் அனு, அவந்திகா, செவிலி நிர்மலா. கார்த்திக்கும் அனுவும் எங்கள் குடியிருப்பின் நேர் மேலே உள்ள அபார்ட்மெண்ட்டில் வசிக்கிறார்கள். பொடியன் எங்களுடன் இருப்பதால் நிர்மலாவும் எங்களுடனேதான். இது தவிர மேல் வீட்டை சுத்தம் செய்ய ஒரு பணிப்பெண். எங்கள் வீட்டை சுத்தம் செய்யவும் பாத்திரம் தேய்க்கவும் ஒரு பணிப்பெண். இந்தப் பணிப்பெண்கள் இருவருக்கும் இரண்டு மணி நேரம் வேலை இருக்கும். முடிந்ததும் கிளம்பி விடுவார்கள்.
அனு ஒரு க்ராந்த்திகாரி. அதனால் சமையலறைக்குள் செல்லவே மாட்டேன் என்று க்ராந்த்தியின் போது சபதம் எடுத்து விட்டாள் போல. குடித்த காஃபி டம்ளரை ஸிங்கில் போடுவதற்குக் கூட சமையலறைக்குள் செல்லாமல் ஸ்டவ் அருகிலேயே வைத்து விட்டு ஓடி விடுவாள். ஆனால் ரொம்ப நல்ல மாதிரி. என்னிடம் தினமுமே வந்து ஸ்விக்கியில் சாப்பாட்டுக்கு ஆர்டர் போடவா பாப்பா (அப்பா) என்று ஆங்கிலத்தில் கேட்பாள். மராத்திப் பெண். அவளும் சாப்பாட்டுக்கு யாரையும் எதிர்பார்க்க மாட்டாள். எல்லாமே ஸ்விக்கிதான்.
அவந்திகா பன்னிரண்டுக்குப் படுத்து எட்டு எட்டரைக்கு வேதா எழுந்து கொள்ளும் போது எழுவாள். செவிலி நிர்மலா பத்துக்குப் படுத்து ஏழு ஏழரைக்கு அல்லது எட்டு மணிக்கு எஜமானியம்மாளோடு எழுவார். எழுந்ததும் குழந்தை வேலை இருக்கும். அதனால் தினமும் காலையில் எல்லோருக்கும் (கார்த்திக், அனு, அவந்திகா, நிர்மலா மற்றும் நான்) இட்லி வைப்பது நான்தான். அவந்திகாவும் நிர்மலாவும் பத்தரைக்குக் காலை உணவு உண்பார்கள். நான் எட்டரைக்கு.
பிறகு அவந்திகாவுக்குக் கீழே போய் பூனைகளுக்கு உணவு கொடுக்கும் வேலை தொடங்கும். அது ஆகும் ஒரு மணி நேரம். பிறகு நிர்மலாவுக்கும் அவந்திகாவுக்கும் குழந்தை வேலை இருக்கும். இருவரும் பம்பரமாய் சுழன்று சுழன்று வேலை செய்வார்கள். கிண்டல் இல்லை. நிஜமாகவே அத்தனை வேலை இருக்கும். குழந்தை குளிக்கும் சடங்கு. பிறகு குழந்தையின் சாப்பாட்டுப் படலம். எல்லாம் முடிந்து நிர்மலாவும் அவந்திகாவும் சமைக்க வர மதியம் இரண்டரை அல்லது மூன்று ஆகும். நான் காலையில் எட்டரைக்குச் சாப்பிட்டதால் ஒரு மணிக்கே கொலைப்பசி தொடங்கி விடும். மதிய உணவு நாலு மணிக்குக் கிடைக்கும். சமயங்களில் நாலரை ஆகும்.
செத்து சுண்ணாம்பாகி விடுவேன். அதனால் நானே சமைக்க ஆரம்பித்தேன். வீட்டில் ஐந்து பெண்மணிகள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியும் நான்தான் சமைக்க வேண்டுமா என நினைப்பேன். பெண்கள் சமைத்து நான் சாப்பிடும் பழக்கம் இருபத்தைந்து வயதிலேயே நின்று விட்டது. அம்மாவின் கையால் சாப்பிட்டதுதான் கடைசி. அதற்குப் பிறகு இன்று வரை சமையலில் என் பங்கு 80 சதம். ஏற்றி இறக்கி தாளிப்பதுதான் அவந்திகாவின் பங்கு.
என் நேரம் பூராவும் சமையலறையிலேயே போய் விடுகிறது என்று ஏற்கனவே எனக்கு ஒரு குறை இருந்தது. இப்போது குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் செவிலிப் பெண்ணுக்கெல்லாம் சமைத்துப் போட வேண்டுமா என்று கோபம் அதிகரித்து விட்டது. நிர்மலா கிறித்தவப் பெண். ஒரு எழுபது வயது ஆள் சமைப்பதை நீங்கள் சாப்பிடுவது உங்களுடைய பாவக் கணக்கில் சேர்ந்து விடும் என்று ஒருநாள் தன்மையாகச் சொன்னேன். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அவந்திகா சமையலுக்கு ஆள் போடலாம் என்றாள்.
இதை வாசிக்கும் மைலாப்பூர்வாசிகள் இதை சற்று சீரியஸாகவே எடுத்துக் கொண்டு சமைக்கும் ஆட்களை நிர்வகிக்கும் ஏஜன்ஸி ஏதாவது இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள். திருவல்லிக்கேணி நண்பர் கண்ணனிடமும் சொல்லியிருக்கிறேன். இது மிகவும் அவசியம். ஐந்து பேருக்கு, அதில் மூவர் பெண்கள் – அதில் ஒருவர் பணிப்பெண் – என்னுடைய எழுபதாவது வயதில் சமைத்துப் போடுவது எனக்கே எரிச்சலாக இருக்கிறது. இதைப் படிப்பவர்கள் மற்றவர்களைக் குறை சொல்லி எழுதி விட்டதாக என்னைத் திட்டுவார்கள். பொழுதெல்லாம் எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் இருக்கும் ஒரு எழுபது வயது ஆசாமி தினமும் மதியம் ஐந்து பேருக்கு சமைக்க நேர்வது அவலம் இல்லையா? அந்தத் துன்பத்தை அனுபவிப்பது நான்தானே? என் அனுபவத்தை நான் எழுதித்தானே வேண்டும்? இதில் நான் மற்றவர்களைப் பற்றி எழுதி விட்டதாக மற்றவர்கள் எப்படிப் புண்பட முடியும்? எதற்குச் சொல்கிறேன் என்றால் யாராவது நலம் விரும்பிகள் போய் என் குடும்பத்தினரிடம் வத்தி வைப்பார்கள். யார் மீதும் குற்றமில்லை. குடும்பத்தில் எல்லோரும் பிஸி. என்ன பிரச்சினை என்றால், அவர்களின் உணவு நேரமும் என் நேரமும் ஒத்து வரவில்லை, அவ்வளவுதான்.
ஏதாவது ஏஜென்ஸி அல்லது நல்ல ஆள் இருந்தால் எழுதுங்கள். எனக்கு அருணாசலம், சீனி, வினித், செல்வா, பாக்கியராஜ், குமரேசன், ஸ்ரீராம், பிரபு, சிங்கப்பூர் சிவா, புவனேஸ்வரி போன்ற அற்புதமான நண்பர்கள் வாய்த்திருப்பது ஒரு பாக்கியம். ஆனால் பணிப்பெண் வந்தால் அவரும் எட்டு மணிக்கு, வீட்டு எஜமானியம்மாளோடு சேர்ந்து கண் விழித்து வருவதெல்லாம் நான் வாங்கி வந்த வரம்! க்ராந்திகாரி மருமகள் நான் செய்த பெருந்தவம்!
சமையல் பெண்மணிக்கு சைவம் அசைவம் இரண்டும் தெரிந்திருக்க வேண்டும்.
charu.nivedita.india@gmail.com