நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை இப்படித் தட்டையாக, தடாலடியாகப் போட்டுத் தாக்குவது சரியல்ல என்று ஒரு நண்பர் சொன்னார். இதுவே ஒரு ஐரோப்பியப் படம் என்றால் பாராட்டியிருப்பீர்கள் அல்லவா என்றும் கேட்டார். அப்படிப்பட்ட அந்நிய மோகம் கொண்டவன் அல்ல நான். இலக்கியத்தில்தான் அந்நிய மோகம் தலைவிரித்து ஆடுகிறது. சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியையும் முராகாமியையும் இங்கே கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்களை விடப் பன்மடங்கு நன்றாக எழுதும் தமிழ் எழுத்தாளனின் பெயர் சொல்லத் தயங்குகிறார்கள்.
ட்யூரின் ஹார்ஸின் பெயரைக் குறிப்பிட்டதற்கான காரணத்தைச் சொல்லி விடுகிறேன். நண்பகல் நேரத்து மயக்கம், ட்யூரின் ஹார்ஸ் இரண்டிலும் ஒரே விதமான விவரிப்பு முறை கையாளப்பட்டிருக்கிறது. ட்யூரின் ஹார்ஸில் முதல் இருபது நிமிடங்களுக்கு குதிரைவண்டிக்காரனின் குதிரை வண்டியை இழுத்தபடி ஓடிக் கொண்டேயிருக்கிறது. பிறகு வீடு வந்து சேர்கிறார்கள். இடையில் வசனமே கிடையாது. ஒரே ஷாட். வீடு வந்த பிறகும் அரை மணி நேரத்துக்கு வசனம் இல்லை.
ஆனால் அந்தப் படத்தில் என்ன சொல்லப்படுகிறது? குதிரையின் பசி. குதிரையின் கடும் உழைப்பு. வண்டிக்காரனின் பசி. அவனுடைய மகளின் பசி. அவர்களின் தனிமை. வீட்டில் உண்பதற்கு தந்தைக்கும் மகளுக்கும் ஒரே ஒரு உருளைக்கிழங்குதான் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அந்த நிலத்தின் பனி. பனிக்காற்று. பனிப்புயல். ஐரோப்பிய கிராமங்களில் பனி என்பது மரணம். மரணத்தின் குறியீடு. இது எல்லாம் சேர்ந்ததுதான் ட்யூரின் ஹார்ஸ். ஒரே வார்த்தையில் சொன்னால், apocalypse. கடவுளற்ற, நம்பிக்கையின் சுவடே தெரியாத பேரழிவு. ட்யூரின் ஹார்ஸ் பற்றி எழுத வேண்டுமானால் நூறு பக்கம் வேண்டும். ரத்தினச் சுருக்கமாக இங்கே சொன்னேன்.
பலவிதமான திரைமொழிகள் உள்ளன. பொதுவாக, ஐரோப்பிய சினிமா நம்பிக்கையின்மையையும் கடவுள் அற்ற வெறுமையையும் சித்தரிப்பவை. ஆனால் இந்திய வாழ்க்கை எப்பேர்ப்பட்ட துன்பத்திலும் துயரத்திலும் கொண்டாட்டத்தை அடிச்சரடாகக் கொண்டது. நண்பகல் நேரத்து மயக்கத்தில் வரும் கிராமவாசிகள், எம்.ஆர். ராதாவின் ரத்தக் கண்ணீர் படம் முழுவதும் ஒரு sub-text ஆகவே ஓடிக் கொண்டிருப்பது எல்லாம் உதாரணம். ஆக, நம்பிக்கையின்மையையும் கடவுளின் இல்லாமையையும் சொல்வதற்குத் தேர்ந்தெடுக்கும் திரைமொழியை (டூரின் ஹார்ஸ்) கொண்டாட்டமான ஒரு பேய்ப் படத்துக்குத் தேர்ந்தெடுக்க முடியுமா? (ஜேம்ஸின் வண்டியைத் துரத்திக் கொண்டு கிராமமே ஓடும் காட்சி.)
கதைக்குப் பொருந்தாத திரைமொழியைத் தேர்ந்தெடுத்திருப்பதால்தான் நண்பகல் நேரத்து மயக்கத்தைப் போலியான படம் என்று குறிப்பிட்டேன். ஒரு திரை மொழி என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல. போன படம் ஆக்ஷன் படம், இந்தப் படம் கலைப்படம் என்றெல்லாம் படம் எடுக்க முடியாது. எந்தக் கதைக்கு எந்த மொழி என்பது முக்கியம். திரைமொழியும் கதையும் ஒத்திசைந்ததில் மிகப் பெரிய வெற்றியை அடைந்த படம் என்று ஒழிவு திவசத்துக் களியைச் சொல்லலாம்.
வார இறுதியை ஒரு வனத்தில் குடித்துக் கொண்டாடலாம் என்று வருகிறார்கள் சில நண்பர்கள். அவர்கள் குடிப்பதும் குடிவெறியில் பேசிக் கொள்வதும்தான் படமே. இடைவேளை வரை ஒரே ஷாட் என்று நினைக்கிறேன். படத்தின் இறுதியில்தான் ஒரு சம்பவம் நடக்கிறது. படத்தில் சொல்ல வந்த கதைக்கும் படத்தின் மொழிக்கும் பிரமாதமான ஒத்திசைவு இருந்ததால் படத்தோடு நம்மால் ஒன்ற முடிந்தது. ஆனால் நண்பகல் நேரத்து மயக்கத்தில் அந்த ஒத்திசைவு இல்லை.
ஒரு கொண்டாட்டமான கதைக் களனில் எதற்காக static காட்சிகள்? படம் பூராவும் கேமரா இருந்த இடத்திலேயேதான் இருப்பது போன்ற உணர்வு உண்டாகிறது. இது ஒளிப்பதிவாளரின் பிழை அல்ல. இயக்குனர் பட்த்தையே அப்படித்தான் வடிவமைத்திருக்கிறார். திரைக்கதையே அப்படித்தான் இருக்கிறது. இத்தனை ’நகராத’ காட்சிகளின் அர்த்த முக்கியத்துவம் என்ன? ’அங்கமாலி டயரீஸ் என்ற அதகளமான கதையைச் சொன்னேன், என்னால் இப்படியும் கதை சொல்ல முடியும்’ என்ற அதிகப்பிரசங்கித்தனத்தை விட வேறு என்ன செய்தி இருக்கிறது இதில்?
ஜேம்ஸ் (மம்முட்டி) திடீரென்று பஸ்ஸிலிருந்து இறங்கி ஒரு கிராமத்தின் தெருக்களின் இடையே நடந்து போய்க் கொண்டே இருக்கிறான். கேமராவும் அவனைத் தொடர்ந்து கொண்டே போகிறது. நான் சாந்தோமிலிருந்து காஃபி குடிப்பதற்காக கபாலி கோவில் முனை வரை நடக்க பத்து நிமிடம் ஆகும். இதை ஒரு சில நொடிகளில்தான் காண்பிக்க முடியும். இதை பத்து நிமிடம் காண்பித்தால் அது திரைப்படம் அல்ல. அதையும் மீறி அதைக் காண்பிக்க வேண்டிய அவசியம் இருந்தால், அதற்கென்று ஒரு அர்த்த முக்கியத்துவம் படத்தில் இருந்தே ஆக வேண்டும்.
திரைமொழி பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் அந்த விஷயத்தில் வித்தை காட்ட நினைத்தால் அது குரங்கு சேஷ்டையாகத்தான் போய் முடியும். இப்படிப்பட்ட அரைவேக்காட்டுப் படங்களைப் பாராட்டுவதை intellectual snobbery என்றே புரிந்து கொள்கிறேன்.