மார்ச் கடைசி வாரம் கோவாவில் சந்திக்கலாம் என்று எழுதியிருந்தேன். நண்பர் கணபதியைத் தவிர வேறு யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு அராத்து, அடியேன், கணபதி ஆகிய மூவர்தான். இதற்கிடையே கணபதி சொன்ன ஒரு திட்டம் சுவாரசியமாக இருந்தது. ஏற்கனவே நான், அராத்து, கணபதி, செல்வா நால்வரும் மேற்கு வங்கம் வரை ஒரு சாலைப் பயணம் செல்லலாம் என்ற திட்டத்தில் இருக்கிறோம். அதற்கு முன்னோடிக் குறும்பயணமாக இது இருக்கலாம் என்றார் கணபதி. அதாவது, ஹைதராபாத் வரை விமானத்தில் செல்வது. அங்கே கணபதியை அழைத்துக் கொண்டு அவர் காரிலேயே கோவா வரை செல்வது.
ஹைதராபாதிலிருந்து கோவாவுக்கு மூன்று வழிகள் உள்ளன. 650 கி.மீ. முதல் வழி மஹ்பூப் நகர், ராய்ச்சூர், சிந்தானூர், தார்வாட், அன்மோத், கோவா. இரண்டாவது வழி, ஸஹீராபாத், குல்பர்கா, பாகல்கோட், பெல்காவ்ங், மொல்லம், கோவா. மூன்றாவது வழி, மஹ்பூப் நகர், கர்னூல், பல்லாரி, ஹோஸ்பட், ஹூப்ளி, தார்வாட், கோவா. இதுதான் மூன்று வழிகளில் நீளமானது. 730 கி.மீ. ஆனால் இந்த வழியில்தான் ஹம்ப்பி உள்ளது. ஹம்ப்பியைப் பார்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அதனால் மூன்றாவது வழியில் போகலாம் என்பது என் யோசனை. மற்றவர்களின் விருப்பத்தையும் கேட்க வேண்டும்.
இந்தப் பயணத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் எனக்கோ அராத்துவுக்கோ எழுதலாம். கார் ஒரு சின்ன லாரி மாதிரி இருக்கும். இன்னும் மூன்று பேர் அமரலாம். கார் ஓட்டத் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். பெண்களும் வரலாம். இப்படி எழுதுகிறேனே ஒழிய யாரும் வருவதாகத் தெரியவில்லை. அதற்கெல்லாம் இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆகும். என்னுடைய தோழிகளுக்கு வீட்டில் அனுமதி கிடைக்காது என்று நினைக்கிறேன். அப்படித்தான் இருக்கிறது நிலைமை.
charu.nivedita.india@gmail.com