நேற்று (வெள்ளிக்கிழமை) சமஸ் அருஞ்சொல் நேர்காணலுக்கான கேள்விகளை அனுப்பினார். இரண்டு மணி நேரத்தில் 2000 வார்த்தைகளில் பதில்களைத் தட்டச்சு செய்து அனுப்பினேன். இன்று காலையில் ஜெயமோகனின் தளத்தைப் பார்த்தால் நேற்று நான் சமஸுக்கு அனுப்பிய பதில்கள் வேறு வார்த்தைகளில் வந்திருந்தன. ஏற்கனவே நான் பல முறை எழுதியவைதான். அவற்றையெல்லாம் நேற்று அருஞ்சொல்லுக்காகத் தொகுத்து எழுதியிருந்தேன்.
நேற்று ஜெயமோகனின் தளத்தில் வந்த ”பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்றல்” என்ற கட்டுரைதான் ஜெ. இதுவரை எழுதியவற்றுள் ஆக மோசமான கட்டுரை. அதை நீக்கி விடுங்கள் என்று ஜெ.வை அழைத்துச் சொல்லலாமா என்று கூட நினைத்தேன். ஆனால் அவர் யார் பேச்சையும் கேட்பவர் அல்ல என்பதால் விட்டு விட்டேன். அந்தக் கட்டுரை அவருடைய சாதனைகளுக்கு உகந்தது அல்ல. அந்தக் கட்டுரை முழுமையானதும் அல்ல. அது போகிற போக்கில் உதிர்க்கும் ஒரு அபிப்பிராயம். பாமரக் கும்பல் அவர் மீது சகதி வாரி இறைக்கவே அந்தக் கட்டுரை உதவும். என் தோழி ஸ்ரீ “இந்தக் கட்டுரைக்காக ஜெயமோகன் சாருக்கு நோபல் அமைதிப் பரிசு கொடுக்கலாம்” என்று எனக்கு மெஸேஜ் அனுப்பியிருந்தாள். ஒரு இருபத்தைந்து வயதுப் பெண் கூட கிண்டல் செய்யும் அளவுக்கா எழுதுவது என்று கவலையுற்றேன். அதை இன்று ஜெ. சரி செய்து விட்டார். எழுத்தாளன் என்றால் யார் என்பதற்கு இதை விட (இன்றைய கட்டுரை) வேறு யாரும் சரியான விளக்கம் கொடுக்க முடியாது. அந்தக் கட்டுரையின் லிங்க்கை இங்கே பகிர்ந்திருக்கிறேன்.
இளைஞர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நீங்கள் குடிப்பழக்கம் உள்ளவன் என்று வெளியே சொல்லலாமா என்று நூற்றுக்கணக்கான பேர் என்னிடம் கேட்கிறார்கள். ”குடியுங்கள், அது உங்கள் விருப்பம். அதை ஏன் வெளியே சொல்கிறீர்கள்?” என்று கூட அறிவுரை சொல்கிறார்கள். அதற்கு ஜெயமோகனின் இன்றைய கட்டுரையில் விளக்கம் இருக்கிறது.
நாளை அருஞ்சொல் பாருங்கள். இதே விஷயத்தைத்தான், ஜெ. சொல்லியிருப்பதைத்தான் வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறேன். அதையேதான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகவும் சொல்லி வருகிறேன்.
ஜெ. கட்டுரை:
எழுத்தாளன், புனிதன், மனிதன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
இப்படி லிங்க் தருவதால் கோணங்கிக்கு என் ஆதரவு என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படும். கோணங்கி விஷயம் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. அவர் எந்தவிதமான அறமும் அற்றவர் என்பது எனக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து அவரிடமிருந்து விலகி விட்டேன். கோணங்கி ஒரு அதிகார மையம். மிகப் பலமான – அகில இந்தியக் கட்டமைப்பு கொண்ட அரசியல் கட்சியின் ஆதரவு அவருக்கு உண்டு. அந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் அதை வைத்துக் கொண்டு ஒரு பெரும் பாமரக் கும்பல் இலக்கியத்தின் மீதே தடியடி நடத்துகிறது. சைக்கிள் ரிப்பேர் பண்ணுபவரும் இலக்கியவாதியும் ஒன்று என்ற கூச்சல் மீண்டும் எழுந்துள்ளது. எண்பதுகளின் தொடக்கத்தில் வில்லிவாக்கத்தில் நடந்த இலக்கு கருத்தரங்கின் போது ஒரு நக்ஸல்பாரி இயக்கத்தின் கலாச்சார அமைப்பு “சென்னையில் கட்டிடத் தொழிலாளர்களெல்லாம் கூலி உயர்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது உங்களுக்கு என்னடா இலக்கியம் வேண்டிக் கிடக்கிறது?” என்று சி.சு. செல்லப்பாவை மறித்தார். அதே கூச்சல்தான் இப்போது மீண்டும் எழுந்துள்ளது. அதற்கான ஜெயமோகனின் பதிலை நான் வரவேற்கிறேன்.