சற்று நேரத்துக்கு முன் ஒரு நண்பருக்கு ஃபோன் பண்ணினேன். அவர் குடிப்பழக்கம் இல்லாதவர். கோவாவில் இருப்பதாகச் சொன்னார். பக்கத்திலேயே மற்றும் ஒரு நண்பர் ஏதோ உயர் ரக விஸ்கி அருந்திக் கொண்டிருப்பதாக மேலதிகத் தகவலையும் கொடுத்தார். இன்னொரு நண்பருக்கு ஃபோன் பண்ணினேன். ஏற்காட்டில் இருப்பதாகச் சொன்னார். அவரும் தான் அருந்தும் பானம் பற்றிய விவரத்தை நான் கேட்காமலேயே சொன்னார். பின்னர் கோவா போன நண்பர் சற்று விவரமாகப் பேசினார். கடல் அலை அடிக்கும் ஓரத்தில் அறையாம். அங்கே வெறும் டிராயர் மட்டும் போட்டுக் கொண்டு சட்டையில்லாமல் அமர்ந்திருக்கிறார்களாம். (ஓ மை காட், இப்படியெல்லாம் எழுத இப்போது பயமாக இருக்கிறது!) நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றேன். நாவலில் நாயகியின் முகத்தில் நாயகியின் தகப்பன் சூடான காஃபியை ஊற்றுகிறான். நாயகியின் முகம் வலியில் வேதனையில் துடிக்கிறது.
கோவா போன நண்பரோடு பேசியபோதுதான் இன்று சனிக்கிழமை மாலை என்றே எனக்குத் தெரிந்தது.
கோவா நண்பர் நான் வெளியூர் செல்லும்போது என்னோடு வருவார். என் அறையிலேயேதான் தங்குவார். நான் வெளியூர் போனால் ஒரு நாலு நாள் அல்லது மூணு நாள் தங்குவேன். அந்த நாலு நாள்களும் இரவுகளில் வைன் அருந்துவேன். ஒருநாள் சும்மா இருப்பார். மறுநாளும் அருந்தினால், “நேற்றுதானே குடித்தீர்கள், இன்றும் குடிக்க வேண்டுமா, உடம்பு கெட்டுப் போகாதா?” என்பார். இவரையும் அன்பு நாவலில் இழுத்து விட மறந்து போனேன். நான் சொல்வேன், ”உடம்பு கெடுமா கெடாதா என்று தெரியாது, ஆனால் குடிக்காவிட்டால் பைத்தியம் பிடித்து விடும், அது நன்றாகத் தெரியும்” என்பேன்.
ஏன் தெரியுமா? தேதி கிழமை கூடத் தெரியாமல் தினமும் 2000 இலிருந்து 3000 வார்த்தைகள் வரை தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். எந்தப் பொழுதுபோக்கும் கிடையாது. யாரோடும் பேச்சு வார்த்தை கிடையாது. தனிமைச் சிறை. விரும்பி எடுத்துக் கொண்ட தனிமைச் சிறைதான். எழுதுவதற்காக.
சில நாடோடிகள் ஒரு பெரிய சவுக்கை முதுகில் அடித்தபடி வந்து காசு கேட்பார்கள். முதுகெல்லாம் ரத்த விளாறாக இருக்கும். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். ஒரு நாலு நாள் வைன் குடித்தால் – அதுவும் சீலே வைன் – என்ன ஆகிவிடப் போகிறது?