கோணங்கியின் அத்துமீறலும் அதிகாரத்தின் கொடுக்குகளும், எழுத்தாளர் என்ற சலுகையும்: அராத்து

”இவனுவங்களையெல்லாம் நடுத்தெருவுல நிய்க்க வச்சு சுடணும் சார்” என்பதிலிருந்து “எழுத்தாளனும் சைக்கிளுக்கு பங்ச்சர் போடுபவனும் ஒன்றுதான்” என்பது வரை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இன்று அராத்து எழுதியிருப்பதோடு முற்றிலுமாக உடன்படுகிறேன். ஏனென்றால், அராத்து அதிகாரம் பற்றிப் பேசுகிறார். அதிகாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டியமைத்து, பின்னர், அதைத் துஷ்பிரயோகம் செய்யும் நிலை. அதைப் பற்றித்தான் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். – சாரு

இனி அராத்து:

கோணங்கியின் பாலியல் அத்துமீறலைப் பற்றி பல திசைகளில் இருந்தும் குற்றச்சாட்டு வந்ததும் , கோணங்கிக்கு மயிலிறகால் தடவுவது போல சிலர் கண்டனங்கள் தெரிவித்தனர். அதுவும் எப்படி ? கோணங்கி நாமாவளி பாடிவிட்டு , கோணங்கி போற்றி , கோணங்கி சரணம் எல்லாம் மொழ நீட்டுக்கு பாடி விட்டு ,” அண்ணன் கோணங்கிக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் “ எப்படி இருக்கிறது கதை ?அண்ணன் கோணங்கி இதற்கே ஃபேஸ்புக்கில் இல்லை. இவர்களின் மென்மையான கண்டனங்கள் அண்ணன் கவனத்துக்குப் போகாது. அதற்கே இந்த கூத்து. அடுத்து , அண்ணனின் இந்த செயல் இவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறதாம். எதிர்பார்க்க வில்லையாம். இதெல்லாம் என்ன லாஜிக்? இவன் ஷூ த்தடிப்பான் , இவன் கொங்கைகளைப் பற்றி அமுக்குவான் , என்றெல்லாம் எதிர்பார்க்க முடியுமா ? எந்த ஒரு பாலியல் அத்துமீறலையும் எவன் ஒருவனும் செய்யக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது. எவனாவது செய்தால் அவனுக்கு கண்டனம் தெரிவித்து விட்டு , அவன் மீதான மரியாதையைக் குறைத்துக்கொள்ள வேண்டியதுதான். முடிந்தால் தண்டனை வாங்கிக்கொடுக்கலாம். இப்படி எதுவும் செய்ய வக்கில்லாமல் இருந்தால் ஷூ த்தை மூடிக்கொண்டு சும்மா இருக்கலாம். ஆனால் இவர்கள் செய்வது என்ன? புற்றீசல் போலக் கிளம்பி வந்து கோணங்கியின் கலை மனது , அவரது அன்பு , ஆளுமை , கொடுக்கல் வாங்கல் என சம்மந்தமே இல்லாமல் கழிந்து விட்டு , ஒப்புக்கு கண்டனம் தெரிவித்தார்கள். “எங்கிட்ட அவர் அப்படி நடதுக்கலை” என்று மட்டும் தான் சொல்லவில்லை. ஒரே நாளில் நிலைமை மாறியது. விக்டிம் ப்ளேமிங்க் (victim blaming) ஆரம்பித்தது . ஏன் இவ்வளவு நாட்கள் கழித்து சொல்கிறார்கள் ? பிடிக்க வில்லை என்றால் போயிருக்கலாமே (!) என வழக்கமான பல்லவியை ஆரம்பித்தார்கள்.அடுத்து கோணங்கியே வந்தார். நான் வளர்த்த பையன் , ஏன் இப்படி செய்கிறான் எனத் தெரியவில்லை. மணல் மகுடி வெள்ளி விழா கொண்டாட இருக்கும் தருணத்தில் , இதன் வளர்ச்சியைத் தடுக்க சிஅல்ர் செய்யும் சதி என பாவம் மிகவும் வீக் ஆன ஆர்கியூமெண்டை வைத்தார் விகடனில். ஃபேஸ்புக்கில் யாருடா அவர் கோணங்கி என பலர் கேட்டுக்கொண்டிருக்கும் சூழலில் , மணல் மகுடி யாருக்குத் தெரியும் ? அதை அழிக்க 24 வருடங்கள் கழித்து யார் சதித் திட்டம் தீட்டப்போகிறார்கள் ?இதற்கு நடுவில் தமுஎச ஒரு காமடி அறிக்கை அளித்தது. மூன்று வரியில். அதே மயிலிறகு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்குமாம். இதுவரை என்ன செய்தது ? எங்கே நின்றது?கோணங்கியின் அண்ணன் வெளியிட்ட அறிக்கைதான் அபத்தத்தின் உச்சம். ரா.பார்த்திபன் படம் தோற்றது. I will correct him. அதாவது இவர் தம்பியைத் திருத்துவாராம். ஏனய்யா …ஒரு பெண் உங்களிடம் வந்து , உங்க தம்பி என்னை ரேப் பண்ணிட்டாரு எனச் சொன்னால் , சரி சரி போம்மா ….நான் அவனத் திருத்திடறேன். என் ஆதரவு உனக்குத்தான் எனச் சொன்னால் மண்ணை அள்ளி விட்டு செருப்பால் அடிக்க மாட்டாள் ?கிராமங்களில் , என் கையைப் பிடிச்சி இழுத்துட்டான் என நல்ல குடும்பத்திடம் சொல்லிப் பாருங்கள். அண்ணனோ , தந்தையோ சம்மந்தப்பட்டவரை முதலில் இழுத்துப்போட்டு அடிப்பார்கள். அந்த கிராமத்து மனிதர்களிடம் இயல்பாக இருக்கும் அறம் கூட படித்த பதவியில் இருக்கும் புத்திசாலிகளிடம் இல்லை என்றால் எப்படி ?இதெல்லாம் ஏன் இப்படி நடக்கிறது ? கோணங்கி என்னும் அதிகாரம். என்ன அதிகாரம் ? நாட்டார் மரபில் இருந்து எழுதுகிறேன் என்பது , ஒழுக்கவாதியாக தன் பிம்பத்தைக் கட்டமைத்துக்கொண்டது, தமுஎச , தியேட்டர் ஆர்ட்ஸில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது , அன்பு , பாசம் , அண்ணன் , அப்பா என உறவுமுறை பேண விடுவது , சில பெரிய மனிதர்களுடனானத் தொடர்புகள் என கோணங்கியின் அதிகாரம் நுட்பமாக ஆழமாக உருவாக்கபப்ட்டது. சட்டம் இருக்கிறது இல்லை என்பதை எல்லாம் விடுங்கள். போலீஸால் இன்று கோணங்கி மேல் கை வைக்க முடியாது. கோர்ட் சுவோ மோட்டோ வழக்கு எடுக்காது. அவருக்கு எதிராக ஒரு போராட்டம் நடக்காது. அவர் செல்லுமிடங்களில் அவருக்கு எதிராக ஒரு எதிர்ப்புக் குரல் எழாது.கோணங்கியை கடமைக்கு கண்டித்து விட்டு , அவருக்கு ஆதரவாக நேரடியாகவும் மறைமுகமாகவும் , மடை மாற்றும் விதமாகவும் யார் யாரெல்லாம் , எவ்வளவு பெரிய ஆட்களெல்லாம் வருகிறார்கள் பாருங்கள்.அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ?அவர்கள் எலிக்குஞ்சி குரலில் ஒரே ஒரு போஸ்ட் போட்டு விட்டு கமுக்கமாகக் கிடக்கிறார்கள். உடன் நிற்கிறோம் , ஆதரவளிக்கிறோம் என்று சொன்னவர்கள் எல்லாம் எங்கே ? இதுவரை என்ன செய்தார்கள் ?இதைத்தான் கோணங்கியின் செல்வாக்கு மற்றும் அதிகாரம் என்கிறேன். நாளையே ஒருவர் அதிகாரம் மிக்க ஒருவரால் பாதிக்கப்பட்டால் என்ன நினைப்பார்? இப்போது நடந்ததெல்லாம் நினைவுக்கு வரும். ஷூத்தை மூடிக்கொண்டு சும்மா இருந்து விடுவார். கோணங்கிக்கு ஆதரவாக எழுதப்படும் வண்டி வண்டியான கட்டுரைகள் பாதிக்கப்பட்டவர்களை குழப்பியடித்து , மன ரீதியாக மேலும் பாதிப்புள்ளாக்கி ரணப்படுத்துவதாகவே உள்ளன. இது சம்மந்தமாக ஜெயமோகன் கட்டுரையே எனக்கு அதிர்ச்சி அளித்தது.முதலில் கலைஞன் ,ஒளி இருள் என்றார். பிறகு … “இன்று போதிய உடல்நலமில்லாமல், பணமோ அதிகாரமோ இன்றி, தனித்திருக்கும் 65 வயதான ஒருவரை இலக்காக்குபவை.”என எழுதி அவருக்கு பரிதாபம் தேட முயல்கிறார். கோணங்கியா அதிகாரம் இன்றி இருக்கிறார் ? அவரா தனித்திருக்கிறார் ?இந்த விஷயத்தில் இலக்கியவாதிகளை விட ஒரு கமர்ஷியல் சினிமா எனக்கு மேலாகப் படுகிறது.சமீபத்தில் வந்த “கார்கி “ படம் தான் அது.முதலில் வயதான , ஏழ்மையான , செக்யூரிட்டியான தன் தந்தை அப்பாவி என நினைத்து போராடும் சாய் பல்லவி ஒரு கட்டத்தில் அவர் குற்றவாளி எனத் தெரிய வந்ததும் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு , போலீஸிடம் மாட்டி விட்டு வெளியேறுவார்.அவர் தந்தையும் 70 + தான் , முதியவர்தான் , ஏழைதான். இதற்கும் பாலியல் அத்து மீறலுக்கும் , பாலியல் குற்றத்திற்கும் என்னய்யா சம்மந்தம் ? ஒரு கமர்ஷியல் சினிமா இயக்குநருக்கு இருக்கும் தெளிவு இலக்கிய எழுத்தாளருக்கு இல்லையா ?//அவரை நான் அறிந்தவரை மனமுடைந்திருப்பார் என்றே எண்ணுகிறேன். குடும்பத்தைச் சாந்தே செயல்படுபவர் அவர். இப்போது குடும்பச்சூழலில் இருந்து அன்னியமாகிவிடுவார். அவர் இதிலிருந்து மீண்டுவரவேண்டும். மீண்டும் அவருக்கு நண்பர்களின் ஆதரவு இருக்கவேண்டும்.//பாதிக்கப்பட்டவர்கள் மனமுடைந்து இருக்கமாட்டார்கள். பாதிக்கபப்ட்டவர்கள் குடும்பத்தைச் சார்ந்து செயல்படுபவர்கள் இல்லை…அவர்கள் எல்லாம் பொறுக்கிகள் , கஞ்சா குடிக்கிகள் இல்லையா ? பாதிக்கப்பட்டவர்கள் இதிலிருந்து மீண்டுவர வேண்டாமா ? அவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு வேண்டாமா ?மற்ற பாமரர்களிடம் இருந்தும் , லௌகீக ஆசாமிகளிடம் இருந்தும் வேறுபட்டவர்கள் தானே எழுத்தாளர்கள் ? அவர்களுக்கு எதற்கு குழு மனப்பான்மை ? இது என்ன ஜாதி சங்கமா ? அல்லது வியாபாரிகள் சங்கமா ? குழு சார்ந்து இயங்கிக்கொண்டும் , தவறிழைத்தாலும் முட்டுக்கொடுத்துக் கொண்டு இருப்பதற்கு ?ஜெயமோகன் என்றில்லை , பலரும் தங்களுக்கிருக்கும் எழுத்து வன்மையை உபயோகித்து புத்திசாலித்தனமாக பிரச்சனையின் கூர்மையை மழுங்கடித்து , பிரச்சனையை திசை திருப்பி கோணங்கிக்கு ஆதரவாகவே இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். கோணங்கியைச் சாக்கு வைத்து மொத்த எழுத்தாளர்களையும் வசை பாடுகிறார்கள் என வரிந்து கட்டிக்கொண்டு , எழுத்தாளன் என்றால் யார் என பல ரைட்டப்புகள். எப்போதும் இந்த ஃபிலிஸ்டைன் கூட்டம் எழுத்தாளர்களை வசை பாடிக்கொண்டும் , இழிவாகப் பேசிக்கொண்டும் தான் இருக்கும். இப்போது என்ன புதுசா ? எழுத்தாளன் என்றால் யார் எனப் பேசுவதற்கு இதுவா உகந்த நேரம் ?மடை மாற்றும் செயல்தான் இது.அதோடு இவர்களுக்கு எல்லாம் இப்போதுதான் ஜெனே எல்லாம் நியாபகத்துக்கு வருகிறார். பன்னெடுங்காலமாக சாரு நிவேதிதாதான் ஜெனே வைப்பற்றி , வில்லியம் பெரோஸ் பற்றி , முகம்மது சுக்ரி பற்றி , ரோமன் போலன்ஸ்கி பற்றி எல்லாம் எழுதி வந்திருக்கிறார். அவர்கள் எக்ஸெண்ட்ரிசிட்டி பற்றி , அவர்கள் பிறழ்வு மனநிலை பற்றி எல்லாம் விரிவாக எழுதி இருக்கிறார்.இவர்களைப் பற்றியெல்லாம் இதற்கு முன் தமிழ் இலக்கிய உலகில் யாரும் எந்த வார்த்தையையும் உதிர்த்துப் பார்த்ததில்லை. தங்களுக்கு அணுக்கமான கோணங்கி ஒரு பாலியல் பிரச்சனையில் மாட்டியவுடன் இவர்களெல்லாம் இப்போது துணைக்குத் தேவைப்படுகிறார்கள். ஜெனே சிறு வயது சிறுவர்களுடன் பாலியல் உறவில் நாட்டமிருந்தவர். அதை அவர் வெளிப்படையாக அறிவித்தவர். அது சரியா தவறா என்பதல்ல வாதம். அவர் அதை வெளிப்படையாக அறிவித்தார். இந்த செயல்களுக்கு சட்ட ரீதியான தண்டனை இல்லாத மொராக்கோவிற்கு சென்று விட்டவர். தன்னை பேட்டி எடுக்க வந்த பெண் நிருபரிடம் தன் மனைவியை வைத்துக்கொண்டே , பேட்டில்லாம் அப்புறம் எடுக்கலாம், மொதல்ல ஒரு 3 சம் போடலாமா என வெளிப்படையாகக் கேட்டவர் மிஷல் வெல்பக். இதையும் சாரு எழுதித்தான் எனக்குத் தெரியும். இவர்கள் எல்லாம் ஒழுக்க வாதிகள் அல்ல. எல்லாவற்றையும் வெளிப்படையாக அறிவித்துக்கொண்டவர்கள். இதுவரை மொத்த தமிழலிக்கிய உலகமும் ஒழுக்கவாத உலகமாகவும் , அன்பு , அறம் , தார்மீகம் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்த இலக்கிய உலகமாகவும் பாவனை செய்துகொண்டு இருந்து விட்டு , தங்கள் கோஷ்டியில் ஒருவன் பாலியல் ஒழுக்கமீறலில் மாட்டியவுடன் டிரான்ஸ்க்ரெஸிவ் இலக்கிய உலகமாக மாறுகிறது. என்ன ஒரு பச்சோந்தித்தனம் ?உலக அளவில் எழுத்தாளர்கள் குற்றம் செய்தபோது சமூகமும் , அரசும் அவர்கள் எழுத்தாளர்கள் என அங்கீகரித்து , தண்டனை கொடுக்காமல் விட்ட கதைகள் இருக்கின்றன. ஆனால் அது சமூகமும் , அரசும் எடுத்த முடிவு. அதை சம்மந்தபப்ட்ட எழுத்தாளர் ஒரு தனிச் சலுகையாகக் கோரவில்லை. ஜெனே வை வாழ்நாள் முழுவதும் வெளிவர முடியாத அளவில் ஃபிரன்ஞ்ச் அரசு சிறையில் அடைத்திருந்தது. சார்த்தர் தலைமையில் இண்டெலிஜென்ஷியா சென்று ஃபிரான்ஸ் அதிபரைப் பார்த்து பேசி அவரை விடுவித்தனர்.அதற்கு அந்த சமூகத்தின் ஏற்பும் இருந்தது.முக்கியமாக அந்த எழுத்தாளர்களின் வாழ்க்கைக்கும் அவர்களின் எழுத்திற்கும் வேறுபாடே இல்லை.இதெல்லாம் மேம்பட்ட சமூகத்தில் நடந்தது. எல்லாமே வெளிப்படையாக நடந்தவைகள். இதை எல்லாம் இந்த ஃபிலிஸ்டைன் சமூகத்தில் ஃபிலிஸ்டைன் எழுத்தாளராகவே இருந்து கொண்டு , பிற்போக்காகவே, தன் நடத்தைக்கு எதிராக போலியாக எழுதிக்கொண்டு இருந்து விட்டு கேவலமான குற்றத்தை செய்து விட்டு , அந்த மேம்பட்ட சமூகத்தின் எழுத்தாளார் என்ற அந்தஸ்தை இங்கே க்ளெயிம் செய்யக் கூடாது. இதே கோணங்கி தான் ஒரு “கே” என அறிவித்து இருக்கலாம். அதிலும் ” கே- ஓப்பன் ரிலேஷன்ஷிப் ” என்றே சொல்லியிருக்கலாம். இங்கே கே பார்ட்னர்ஷிப் கிடைப்பது அரிதுதானே ? அதிலும் கோணங்கி என்ற பிரபலத்துக்கு தினமும் ஒருவர் கூட மனமுவந்து கிடைத்திருப்பார். இப்படி அவர் செய்திருந்தால் அவர் பக்கம் நிற்கும் முதல் ஆளாக நான் இருந்திருப்பேன். அண்ணன் என்றும் ஆசான் என்றும் நம்பி மரியாதையுடன் வந்து கோணங்கி வீட்டில் படுத்துறங்கும் ஒருவன் வாய்க்குள்ளும் ஜட்டிக்குள்ளும் அவன் அனுமதி இல்லாமல் நுழைவது எத்தகைய அத்துமீறல் மற்றும் நம்பிக்கை துரோகம் ?இதற்கு எதற்கு ஐயா இண்டெலக்சுவல் முட்டு ?மேட்டர் ரொம்ப சிம்பிள். ஒருவரல்ல , பலர் தெளிவாகக் குற்றம் சாட்டுகிறார்கள். சிலர் எங்களுக்கு இது முன்னமே தெரியும் என்கிறார்கள். நடந்திருப்பது ஒரு க்ரைம். அதற்கு சட்டத்தில் தண்டனை இல்லை எனினும் நடந்திருப்பது ஒரு க்ரைம். இதை அணுகுவதில் எங்கே கலைஞன் வருகிறான். இருள் ஒளி எல்லாம் எங்கே வருகிறது ? கலைஞனின் நுட்பம் , அவனது கவித்துவ முகம் எல்லாம் எங்கே வருகிறது?இந்த விஷயத்தில் கோணங்கிக்கு ஆதரவாக எழுதப்பட்ட அனைத்து கட்டுரைகளும் பாமரத்தனமாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.அதனால் நானும் அவைகளை எழுதியவர்களைப் பார்த்து பாமரத்தனமாகவே ஒன்றைக் கேட்கிறேன்.இதே கோணங்கி உங்கள் மகனையோ , மகளையோ இப்படி செய்து , அவர்கள் இதை பொதுவெளியில் பகிர்ந்திருந்தாலும் , இதே போலத்தான் கலைஞன் , அவன் மனம் , நுட்பம் என்றெல்லாம் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பீர்களா ?