மாறுவேடத்தில் இலங்கைப் பயணம்

Mihadஇன் ஃபேஸ்புக் பக்கத்தில் இதைப் பார்த்தேன்.

”இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு எழுத்தாளர் சாரு நிவேதிதா வருவது தொடர்பில் அபிப்பிராய பேதங்கள் நிலவுவதை அவதானிக்க முடிகிறது. சாருவை விரும்பாத ஒரு கூட்டம் புலம்பெயர் சூழலில் உள்ளது என்பதனால் ஒரு பரபரப்பு ஏற்படுத்த படுவதாக கருத முடியும். சாருவை விரும்பாமல் போவதற்கு அவர்களுக்கு ஏதோ காரணங்கள் இருக்கக் கூடும். அது சாருவின் எழுத்துகள் மீதானதாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனக்கு தமிழக எழுத்தாளர்கள் மீது அளவு கடந்த லயிப்பு ஏற்பட்டதில்லை. கடந்த இருபது வருடங்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய இரண்டு மூன்று தமிழக எழுத்தாளர்களை மட்டுமே வாசித்திருக்கிறேன். அவர்களில் சாருவும் ஒருவர். அவரது எழுத்துக்களில் எப்போதும் ஒழுங்குகளை மீறி செயல்படும் தன்மை இருக்கும். அது சராசரியான வாசக மனநிலைக்கு குந்தகம் விளைவிக்க கூடியது. அந்த ஒழுங்கு மறுப்பு எழுத்துக்காகவே சாருவை வாசிக்க விரும்பியிருக்கிறேன். சிந்திப்பதிலும் எழுதுவதிலும் தறுதலை போன்று செயல்பட விரும்புகிறவன் என்பதனால் அதற்கு இணக்கமான இலக்கிய நட்பு வட்டத்தை உருவாக்கியும் வந்திருக்கிறேன். இந்த விதமான எண்ணத்தை திருப்திப்படுத்தும் இலக்கிய சாகசங்கள் நிகழ்த்துபவர்களை சந்திப்பதும் நட்பு பாராட்டுவதும் ஆனந்தம்தான். இந்த ஆனந்தத்தை சாருவின் சீட மனநிலையாக கொள்ள முடியாது என்ற போதும் இங்குள்ள பதட்ட மனநிலையாளர்களுக்கு அவ்வாறு நோக்க ஒரு வாய்ப்பை வழங்குவதில் தயக்கம் இல்லை. Welcome Charu.”

Mihad.

நான் இலங்கை செல்வதை விரும்பாத கூட்டம் சில ஐரோப்பிய நாடுகளில் உள்ளது என்பதை நண்பர்கள் மூலம் அறிகிறேன். இலங்கை அவர்களின் தாய்நாடு. அவர்கள் புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்கிறார்கள். இப்போது நான் இலங்கை செல்வதை அவர்கள் விரும்பவில்லை. இதற்கும் சிங்களப் பேரினவாதிகளின் ஃபாஸிஸத்துக்கும் என்ன வித்தியாசம்? நான் இலங்கை செல்வதைத் தடை செய்ய இந்தப் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இலங்கை என்ன அவர்கள் வீட்டுச் சொத்தா? அவர்கள் என்ன இலங்கையின் சர்வாதிகாரிகளா? சல்மான் ருஷ்டியைத் தாக்கிய ஃபாஸிஸ்டுகளுக்கும் நான் இலங்கை செல்லக் கூடாது என்று சொல்லும் இந்தப் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் என்ன வித்தியாசம்? உங்களுடைய இலக்கியக் கூட்டத்திலா நான் போய் பேசப் போகிறேன்? நீங்கள் யார் என்னைத் தடை செய்ய? உங்களைப் போன்ற ஃபாஸிஸ்டுகள்தானே தென்னமெரிக்க நாடுகள் முழுக்கவும் எழுத்தாளர்களை வேட்டையாடினார்கள்?

தமிழ்நாட்டில் ஃபிலிஸ்டைன் கும்பல் எப்போதும் சினிமா நடிகர்களை வழிபாட்டு பிம்பங்களாக வைத்துத் தொழுது கொண்டிருக்கும். அதுதான் அவர்களின் வாழ்வுக்கு அர்த்தம் அளிப்பது. அதேபோல் பலருக்கும் எவரையாவது வெறுக்க வேண்டும். வெறுப்பதுதான் அவர்களின் வாழ்வை அர்த்தமாக்குகிறது. அவர்களின் வாழ்வுக்கு அர்த்தம் தருவதற்கு வெறுப்பைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

எதிர்ப்பு பலமாக இருந்தால் மாறு வேடத்திலாவது இலங்கை சென்று வருவேன். அதை யாராலும் தடுக்க முடியாது. பினோசெத்தின் சர்வாதிகார ஆட்சியின்போது சீலேயில் தடை செய்யப்பட்டிருந்த இயக்குனர் Miguel Littin மாறுவேடத்தில்தான் சீலே போய் வந்தார்.