இலங்கைப் பயணம்: ஒரு முக்கிய அறிவிப்பு

நவம்பர் ஒன்பதாம் தேதி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் மாலை நான்கு மணி விமானத்தில் கொழும்பு கிளம்புகிறேன். கொழும்பு ஐந்தரை மணிக்குப் போய்ச் சேரும். விமான நிலையத்துக்கு அனோஜன் வருவதாகச் சொல்லியிருக்கிறார். அவருடன் கொழும்பிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாதுக்கை என்ற ஊருக்குக் கிளம்புகிறேன். அங்கேதான் கே.கே. என்றும் சர்ப்பயா என்றும் அழைக்கப்படும் சமன் குமாரவின் வீடு உள்ளது. அங்கே அவர் வீட்டில்தான் தங்கலாம் என்று திட்டம். அவர் தனி ஆள். குடும்பம் இல்லை. அதனால் தங்குவதில் ஒன்றும் சிரமம் இருக்காது. குடும்பம் குழந்தை குட்டி என்றால்தான் எனக்குக் கொஞ்சம் அலர்ஜி.

அங்கே என்னுடைய இலக்கியச் சந்திப்புகளையும் உரையாடல்களையும் ஆவணப்படுத்தலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். இதில் எல்லோரும் கலந்து கொள்ள இயலாது.

ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு மிகத் தெளிவாக விளக்கியாக வேண்டும். நான் சந்திக்கப் போகும் சிங்கள எழுத்தாளர்கள் ஸ்தாபன ரீதியாக நிலைகொண்டவர்கள் அல்ல. இதை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. உதாரணம் வேண்டுமானால் சொல்லலாம். ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு முன்னே தமிழில் சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் எப்படி இருந்தார்களோ அப்படித்தான் சிங்கள எழுத்தாளர்கள் இயங்கி வருகிறார்கள். கேகே என்றால் எல்லா சிங்களவருக்கும் தெரியும். கேகே என்றும் சர்ப்பயா என்றும் அழைக்கப்படுகிறார். சர்ப்பயா என்பது அவர் எழுதிய சிறுகதை. 35 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கதை. ஒரு தந்தைக்கும் மகளுக்குமான இன்செஸ்ட் உறவு பற்றிய கதை. அந்தக் கதையை அவர் மிகவும் கலாபூர்வமாக எழுதியிருப்பார். இதேபோல் தஞ்சை ப்ரகாஷின் சிறுகதை ஒன்று உண்டு. மேபல்.

இப்படி தந்தை மகள் இன்செஸ்ட் உறவுப் பின்னணி கொண்ட ஒரு கதையின் தலைப்பையே அதை எழுதியவரின் செல்லப்பெயராக வைத்து அழைப்பது என்றால், அந்த சமூகம் எந்த அளவுக்குக் கலாச்சார ரீதியாக முன்னேறி இருக்கிறது, இலக்கியத்தை உள்வாங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இத்தனைக்கும் கேகே அங்கே ஒரு புகழ் பெற்ற இலக்கியவாதி. அங்கே யாரும் அவரை செக்ஸ் ரைட்டர் என்று அழைப்பதில்லை.

என்னுடனான சந்திப்புகளையும், உரையாடல்களையும் கேகேயின் நண்பர்கள் ஒரு ஆவணப்படமாக உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரே சமயத்தில் சிங்களத்திலும் தமிழிலும். ஆனால் யாரிடமும் ஒரு பைசா கிடையாது. கையில் இருக்கும் கேமராவைக் கொண்டுதான் எல்லாம்.

நமது சந்திப்புகள், உரையாடல்களுக்கெல்லாம் எல்லோருக்கும் அனுமதி உண்டா என்று கேகேயிடம் கேட்டேன். இல்லை என்று சொல்லி விட்டார். என்ன கேகே இது என்று கேட்டதால், யாரெல்லாம் இலக்கியத்தோடு தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார்களோ, யாரெல்லாம் நம்முடன் சிநேகபூர்வமாக இருக்கிறார்களோ அவர்கள் வேண்டுமானால் வரலாம் என்று சொன்னார்.

எனவே இந்த உரையாடலில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் எனக்கு முதலில் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். பிறகு நான் கேகேயுடன் கலந்து பேசி விட்டுத்தான் அனுமதி தர முடியும். என் நண்பர்கள் அனோஜனுக்கும் பிரசாந்துக்கு மட்டும் எப்போதும் எல்லா இடத்திலும் அனுமதி உண்டு.

நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள் பின்வரும் பிரிவுகளாக நடக்கும்.

1.முதல் அரங்கம்: ட்ரான்ஸ்கிரஸிவ் கலை மற்றும் ட்ரான்ஸ்க்ரஸிவ் இலக்கியம் என்றால் என்ன?

உரை: கே.கே. சமன் குமார

2. இரண்டாவது அரங்கில் சாரு நிவேதிதா பற்றிய அறிமுகம். உரை: காவ்யா தத்ஸரா (எனக்கு சிங்களம் தெரியாது, அதனால் தத்ஸாராவா தத்ஸராவா என்று தெரியவில்லை. மன்னிக்கவும்.) காவ்யா தத்ஸரா ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து பற்றி சிங்களத்தில் அறிமுகம் செய்யும் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

3. மூன்றாவது அமர்வில் சாரு நிவேதிதாவை கிஹான் சச்சிந்த்தா பேட்டி காண்கிறார். ஆங்கிலம். சிங்களத்தில் மொழிபெயர்ப்பு உண்டு.

4. நான்காம் அமர்வு: என் சிறுகதைகளை சிங்களத்தில் மொழிபெயர்த்த இனோகா பள்ளியகுரு தனது மொழிபெயர்ப்பு அனுபவங்கள் குறித்துப் பேசுவார். அடுத்து, அவரும் சாரு நிவேதிதாவும் உரையாடல். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து உரையாடலில் கலந்து கொள்பவர்: Rasu Sulangi Thumbelina.

5. ஐந்தாம் அமர்வு: சாரு நிவேதிதாவின் நேநோ கதையையும் நதீகா பண்டாரவின் மொனாரா பித்தர (Monara Biththara) நாவலையும் ஒப்பிட்டு பேசுபவர்: Rasu Sulangi Thumbelina.

இந்த நான்காவது அரங்கில் நேநோ கதையின் சிங்கள மொழிபெயர்ப்பும் நதீகா பண்டாரவின் நாவலிலிருந்து சில பகுதிகளும் வாசிக்கப்படும்.

இதே அரங்கில் நதீகா பண்டாரவின் ஹாஹாஹா உல்லாச விஷாத நாடகத்தைப் பற்றிய தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார் சாரு நிவேதிதா.

நதீகா பண்டார சிங்களத்தின் பிரதான ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளராகவும், நாடக இயக்குனராகவும், நாடகாசிரியராகவும், பெண்ணிய விமர்சகராகவும் விளங்குகிறார். இவருடைய நாவல் ஒன்று இலங்கை அரசினால் தடை செய்யப்பட்டுள்ளது.

6. ஆறாவது அமர்வில் சாரு நிவேதிதா மற்றும் Sujith Akkarawathatha இருவரும் ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து பற்றி உரையாடுவார்கள். அதே அரங்கில் மஹாபாரதம் மற்றும் மஹாவம்சம் இரண்டுக்குமான ஒப்பீடு குறித்த உரையாடல் நடைபெறும். இதை ஒருங்கிணைப்பவர் Sulangi Thumbelina and Anusura Werasingha.

உரையாடல்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருக்கும். சில வேளைகளில் சிங்களத்தில் இருக்கும் போது அதை எனக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பார்கள்.

7. ஏழாவது அரங்கில் ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து என்றால் என்ன என்று நேநோ சிறுகதையை முன்வைத்து உரையாற்றுகிறார் அனுசூர வீரசிங்க. அனுசூர வீரசிங்க ஒரு விமர்சகர் மற்றும் ட்ரான்ஸ்கிரஸிவ் கவிஞர்.

இந்த அமர்வுகள் இரண்டு தினங்கள் நடைபெறும் என்று நினைக்கிறேன். இடம் இன்னும் முடிவாகவில்லை. ஆனால் நவம்பர் பதினேழுக்கு மேல்தான் நடைபெறும். காரணம், நதீகா பண்டாரவின் நாடகம் நவம்பர் பதினேழில்தான் அரங்கேறுகிறது.

நதீகாவின் நாடகம் எல்லோருக்குமானது. இடம் நேரம் பற்றிய விவரம் கீழே:

BMICH (Bandaranake Memorial International Conference Hall),

Mihilaka Medura Outer Canopy, Colombo.

டிக்கட்: 1000 ரூ, 2000 ரூ., 3000 ரூ, 5000 ரூ.

மாலை ஏழு மணி. நவம்பர் 17.

இந்த நாடகத்தைக் காணத் தவற விடாதீர்கள். இந்தியாவிலிருந்து பறந்து வந்தாலும் நதீகாவின் நாடகம் காணத் தக்கதுதான். இந்தியத் துணைக்கண்டத்திலேயே நதீகாவின் நாடகச் செயல்பாடுகள் மிகவும் தீவிரமானவை.

கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் எனக்கு எழுதுங்கள். வெளிநாடுகளில் வசிக்கும் என் வாசகர்கள் கூட வர வேண்டும் என்று விரும்புகிறேன். கருத்தரங்கம் முடிந்த பிறகு என்னோடு கித்துள் கள் அருந்தலாம். கித்துள் என்பது சிங்களத்துக் கள். கித்துள் மரத்திலிருந்து இறக்குவது. கித்துள் மரம் ஈச்ச மரம் போல் இருக்கும்.

ஒப்பிட்டுப் பாருங்கள். சென்ற முறை மூன்று வாரம் இலங்கைத் தமிழர்களிடையே இருந்தேன். இலங்கை வாழ் மக்களை நாய்கள் என்று சொன்னேன் என்று பொய்ப் பிரச்சாரம் செய்து என்னை ஓட ஓட விரட்டினார்கள். இப்போது சிங்கள புத்திஜீவிகள் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியைக் கொண்டு எனக்காக இரண்டு நாள் கருத்தரங்கம் நடத்துகிறார்கள். அதை ஆவணப்படமாக எடுக்கிறார்கள். ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்து என்னுடைய முக்கியமான கதைகளை சிங்களத்தில் மொழிபெயர்க்கிறார்கள். கேகேயிடம் “கருத்தரங்கில் ஏன் எல்லோரையும் அனுமதிக்கக் கூடாது?” என்று கேட்டபோது அவர் சொன்ன ஒரே பதில்: ”காசு இல்லை. பொதுமக்களையும் அனுமதித்தால் நாம் அதற்குப் பெரிய ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு ஒரு டீ வாங்கிக் கொடுப்பதற்குக் கூட நம்மிடம் பணம் இல்லை.”

charu.nivedita.india@gmail.com