உல்லாசம், உல்லாசம்…

நான்கு நாட்களுக்கு முன் அராத்து ஃபேஸ்புக் மூலமாக என்னிடம் சில கேள்விகளைக் கேட்டிருந்தார்.  நான் அப்போது பாதுக்கவிலும் பிறகு கொழும்பிலும் மிக முக்கியமான நேர்காணல்களைக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.  என்னைப் பற்றி கே.கே. சமன் குமர எடுத்த ஆவணப்படமும் மும்முரமாகப் போய்க் கொண்டிருந்தது.   காலையில் பத்துக்கு ஆரம்பித்தால் இரவு ஒன்பது மணிக்குத்தான் படப்பிடிப்பு முடியும்.  அதற்கு மேல் நள்ளிரவு இரண்டு மணி வரை வைன்.  கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு எபிசோடுகளை எடுத்திருக்கிறார் சமன் குமர.    

இப்போது அராத்துவின் பதிவும் அது சார்ந்த அவரது கேள்விகளும்:

நேற்று நள்ளிரவு சாரு இலங்கையில் இருந்து ஒரு வாய்ஸ் மெசேஜும் புகைப்படமும் அனுப்பி இருந்தார்.

அந்தப் புகைப்படத்தை இங்கே பகிர்ந்தால் களேபரம் ஆகும். அவரது வாய்ஸ் மெசேஜை ஒட்டி எனக்கு ஆச்சர்யமும் கேள்வியும் எழுந்தது. அவரிடமே கேட்டால் உடனே சொல்லி விடுவார். இருந்தாலும் அனைவருக்கும் தேவைப்படும் பதில் என்பதால் பொதுவில் பகிர்ந்து கொள்கிறேன். சாருவே விரைவில் பதில் அளிக்கட்டும்.

முதலில் அவரது வாய்ஸ் மெசேஜ்:-

சீனி… என் எழுபது ஆண்டு வாழ்வில் இப்போதுதான் மிகக் கொண்டாட்டமாகவும் மிகுந்த மகிழ்ச்சியோடும் இருக்கிறேன்.   பத்துப் பன்னிரண்டு தினங்கள் முழுக்க முழுக்க எழுத்தாளர்களோடும் ஓவியர்களோடும் இருந்து கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டிலும் எழுத்தாளர்களோடு இருந்திருக்கிறேன்.  ஆனால் அது ஒரு சேவல் பண்ணை.  அந்த சேவல் பண்ணை முழுக்கவும் என் மீதான வெறுப்போடும் பொறாமையோடும் காழ்ப்புணர்ச்சியோடும் வன்மத்தோடும்தான் இருந்தது. 

இங்கே சரி பாதியாக பெண்களும் இருக்கிறார்கள்.  முக்கியமாக எல்லா எழுத்தாளர்களும் என்னை நேசிக்கிறார்கள்.  கொண்டாடுகிறார்கள். 

சாரு எப்போதும் இப்படித்தான்.

நான் பார்க்கும் இருபது வயது இளைஞர்கள் கூட ஏதோ பிரச்சனையால் துவண்டு போய் (வேற என்ன மெண்டல் கேர்ள் ஃபிரண்டுதான்) வாழ்வே நரகமாக இருப்பது போல உலக துக்கத்தை முகத்தில் தேக்கிப் பேசுவார்கள்.

30 – 40 எல்லாம் லௌகீக வாழ்வில் மாட்டிக்கொண்டு தொண்டு கிழம் போல நடந்து கொள்வார்கள்.

அதற்கு மேல் எல்லாம் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை.

சாரு, எழுபது வயதில் ஜாலியாக, கொண்டாட்டமாக வாழ்வை வாழ்ந்து வருகிறார். ஒரு எழுபது வயது ஆளிடம் இருந்து வாழ்வைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இப்படி ஒரு ஜாலியான  மெசேஜ் வருவது இன்றைய சூழலில் சாத்தியமா?

சாருவிடம் என் கேள்விகள்:-

சாரு, வாழ்வில் அனைத்து மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டங்களுக்கும் பணம்தான் பிரதானம் என்ற கருத்து மக்களிடையே இருக்கிறது. அது முழுக்க உண்மை அல்ல என்றாலும் அடிப்படையான பணத் தேவை இருக்கிறது.

நிலையான வருமானம் இருப்பவர்களும் பணப்பிரச்சினை என மருகுகிறார்கள். செலவழிக்கத் தயங்குகிறார்கள். நிறைய பணம் இருப்பவர்களும் ஏனோ கற்பனையில் எதிர்காலத்தைப் பற்றி பயந்து கஞ்சத்தனமாகவே இருக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், இங்கே அனைவர் வாழ்விலும் பணம்தான் பிரச்சனை.

எவ்வளவு பணம் இருந்தாலும் இல்லையென்றாலும் துன்பமயம் தான், இன்பமே இல்லை.

உங்களுக்கு நிலையான வருமானம் கிடையாது. வயதோ எழுபது. வாசகர்கள் கொடுக்கும் பணத்தில்தான் வாழ்வை ஓட்டுகிறீர்கள். வாசகர்கள் எப்போது கொடுப்பார்கள், எவ்வளவு கொடுப்பார்கள் என எதுவும் நிச்சயமல்ல. பணத்தைப் பொருத்தவரை உங்களுக்கு எப்போதும் நிச்சயமற்ற தன்மைதான். ஆனாலும் நீங்கள் சிக்கனமாகவோ, கஞ்சத்தனமாகவோ இருந்து பார்த்ததில்லை.

இன்னும் கேட்டால் அநியாய ஆடம்பரமாக இருக்கிறீர்கள். உதாரணமாக ஒரு லட்ச ரூபாய்க்கு கண் கண்ணாடி அணிகிறீர்கள்.

1) பணத்தைப் பற்றி எப்படி கவலையே படாமல் இருக்கிரீர்கள்?

2) எதிர்காலத்தைப் பற்றி பயமே இல்லையா?

3) வாசகர்கள் பணம் அளிப்பதை நிறுத்தி விட்டால் என்ன செய்வீர்கள்? (இப்போதே தொடர்ந்து எல்லாம் வருவதில்லை.)

4) வீடு, உணவு கூட விடுங்கள். வயதான காலத்தில் மருத்துவத் தேவைகள் ஏதேனும் ஏற்பட்டால்… அதற்குக் கூட உங்களுக்கு சிறு பயமோ திட்டமிடலோ இல்லையா?

5) எதிர்காலத்தில் பண வரவு வருவதற்கு எந்த உறுதியும் இல்லாதபோது எப்படி உங்களால் எந்த பயமும் அற்று ஜாலியாக இருக்க முடிகிறது?

6) ரகசியமாக எங்கேனும் சில பல கோடிகள் பதுக்கி வைத்துள்ளீர்களா?

இதைப்பற்றி எல்லாம் விரிவாக எழுதினால் நான் உட்பட பலருக்கும் உதவியாக இருக்கும்.

ஏனென்றால் எதைப் பற்றியும் கவலைப்படாத என்னையே இந்தப் பணம் அலைக்கழித்துக்கொண்டு இருக்கிறது. இந்த பணத்தொல்லை இல்லை என்றால் இன்னும் ஜாலியாக அதிகம் எழுதுவேன், ஊர் உலகம் சுற்றுவேன்.

விரிவாக பதில் எழுதுங்கள் சாரு.

***

மேலே அராத்து எழுதிய கேள்விகள் அனைத்துக்கும் அவருக்கே பதில் தெரியும்.  இருந்தாலும் சமூக நலன் கருதியே இதைக் கேட்டிருக்கிறார் என்று எடுத்துக் கொள்கிறேன். 

முதலில் கொண்டாட்டம்.  தமிழர்களை விட சிங்களவர்கள் வாழ்வை அதிகமாகக் கொண்டாடுகிறார்கள்.  இந்த முறை நான் சிங்களவர்களோடு மட்டுமே இருந்தேன்.  அதிலும் அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் அனைவருமே கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், மாற்றுத் திரைப்பட நடிகர்கள், இயக்குனர்கள், நடனக் கலைஞர்கள், நாடக நடிகர்கள், நாடக இயக்குனர்கள், இசைக் கலைஞர்கள்.  சராசரி சிங்களவர்களே வாழ்வைக் கொண்டாடுவதில் மும்முரமாக இருக்கிறார்கள் என்றால், கலைஞர்கள் எப்படி இருப்பார்கள்? 

விரிவாக எழுதலாம்.  எழுதினால் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் ”உல்லாசம், உல்லாசம்” என்ற நாவலைப் படிக்கும்போது “இதையெல்லாம் சாரு அவர் ப்ளாகிலேயே எழுதி விட்டார்” என்று என்னைத் திட்டுவீர்கள்.  அதனால்தான் இங்கே விரிவாக எழுதத் தயக்கமாக இருக்கிறது.  இருந்தாலும் ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் சொல்கிறேன்.

கொழும்பிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சிற்றூர். அங்கே ஒரு ஓவியக் கூடம்.  தினமுமே எனக்கு நாள் முழுவதும் படப்பிடிப்பு.  அன்றைய தினத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இரவு ஒன்பதரை மணி அளவில் அந்த ஓவியக் கூடத்துக்கு நானும் கேகேயும் சென்றோம்.  பெரிய இடம். ஓவியக் கூடத்துக்கு வெளியே ஒரு திறந்த வெளி.  முப்பது பேர் குழுமி இருந்தார்கள்.  அதில் பாதிக்கு மேல் பெண்கள்.  பெரும்பாலும் முப்பதைத் தாண்டாதவர்கள். 

வந்திருந்த அனைவரும் இருவராகவும் மூவராகவும் நால்வராகவும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.  எனக்கு சலிப்பாக இருந்தது.  சிங்களத்திலும் ஒரே ஒரு வார்த்தைதான் தெரியும்.  அதைப் பொதுவில் பேச முடியாது.  கிளம்புகிறேன் என்று ஓவியக் கூடத்தின் முக்கியஸ்தரிடம் சொன்னேன்.  அவரும் ஒரு ஓவியர்.  ”என்ன இது, பத்தரை மணிக்குத்தானே சூடு பிடிக்கும்?  சரி இருங்கள்.  இப்போதே ஆரம்பிக்கலாம்” என்று சொல்லி மது போத்தல்களைத் திறந்தார். 

அரை மணி நேரம் ஆகியிருக்கும்.  வந்திருந்த அத்தனை பெண்களும் சகஜமாக மது அருந்தினார்கள்.  ஓரிருவரைத் தவிர மற்ற அனைவரும் புகைத்தார்கள்.  பிறகு பெரும் கொண்டாட்டமாக நடனம் ஆரம்பித்தது.  என்னுடைய நான் லீனியர் சிறுகதைகளையும் ஆர்த்தோ நாடகத்தையும் அவர்கள் சிங்களத்தில் படித்திருந்ததாலும், (இன்னும் புத்தகம் வரவில்லை; தனிச்சுற்றாகவே படித்திருந்தார்கள்) ஸீரோ டிகிரியை ஆங்கிலத்தில் படித்திருந்ததாலும் என்னை இண்டியன் ஜாய்ஸ் என்று சொன்னார்கள். 

இனோகா பள்ளியகுருவின் சிங்கள மொழிபெயர்ப்பு சிங்களத்துக்கு ஒரு கொடை என்றும், இனோகா சாருவுக்குக் கடவுள் அளித்த பரிசு என்றும் சொன்னார் கேகே.  இனோகா அளவுக்கு மொழிபெயர்த்த இன்னொருவர் பெயர் சொன்னார்.  எனக்கு மறந்து விட்டது.  Grand old man என்றார். 

அன்றைய தினம் நீண்ட நேரம் மூன்று பெண்களோடு நடனமாடினேன். 

பப்பில் போய் நமக்குத் தெரியாத பெண்களோடு நடனமாடுவது வேறு.  நமக்குத் தெரிந்த, நம்மைத் தெரிந்த பெண்களோடு ஆடுவது வேறு.

மேலும், நான் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஆண்களோடு மட்டுமே குடித்து, ஆண்களோடு மட்டுமே நடனமாடும் துர்ப்பாக்கியசாலியாக இருந்து வருகிறேன்.  இந்த நிலையில் இப்படி எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும், மாற்று சினிமா மற்றும் நாடக நடிகர்களாகவும், இசைக் கலைஞர்களாகவும் விளங்கும் பெண்களோடு ஆடுவது எத்தனை உல்லாசமான விஷயம்?

ஆனால் இந்த உல்லாசத்தில் கொஞ்சம் இருண்ட பகுதியும் உண்டு.  எல்லா உல்லாசமும் முடிந்து கேகே வீட்டுக்குப் போனால் அது ஒரு தகரக் கொட்டகை.  வீட்டில் ஏழெட்டு பூனைகள், தவளைகள், கரப்பான் பூச்சிகள், விதவிதமான மரவட்டைகள் என்று நானாவித ஜந்துக்களும் நம் கூடவே வசிக்கும்.  பாம்பை மட்டும் பார்த்திருந்தால் ஓட்டலுக்கு ஓடியிருப்பேன்.  கேகேயே ஒரு சர்ப்பயா என்பதால் சர்ப்பங்கள் வர அஞ்சுகின்றன போலும். 

சரி, பண விஷயத்துக்கு வருவோம்.  அதற்கு நான் ஒரு கதை சொல்ல வேண்டும்.  அந்தக் கதை நான் எழுதி வரும் அசோகா நாவலில் வருகிறது.  ஏற்கனவே எழுதி விட்டார் என்று பிறகு புலம்பாதீர்கள். 

அசோகருக்கு நூறு தம்பிகள்.  அதில் ஒருத்தனை விட்டு விட்டு எல்லோரையும் கொன்று விட்டுத்தான் அரசனானார் அசோகர்.  ஒருத்தனை விட்டதற்குக் காரணம், அவனும் அசோகரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். 

தம்பியும் அண்ணனும் ஒருநாள் காட்டுக்குப் போனார்கள்.  காட்டில் பிராமணத் துறவிகள் கடுந்தவம் புரிந்து கொண்டிருந்தார்கள்.  (அப்போது ஹிந்து மதத்தை சனாதன மதம் என்றும் பிராமண மதம் என்றும் மட்டுமே அழைத்தார்கள்.  ஹிந்து மதம் என்ற பெயர் சனாதன மதத்துக்கு முஸ்லிம்கள் இட்ட பெயர்.  சிந்து நதிக்கு இக்கரையில் வசித்தவர்கள் சிந்துக்கள்.  அதுவே அரபியில் ஹிந்துவாக மாறியது.) ஒரு துறவி எலும்புக் கூடாகக் காட்சியளித்தார்.  ஒரு துறவியைச் சுற்றி புற்று வளர்ந்திருந்தது.  ஒரு துறவி ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தார்.  தம்பி கேட்டான், ”அண்ணா, இந்த பிராமணத் துறவிகளெல்லாம் எத்தனை பாடுபட்டுத் தம் மதத்தை வளர்க்கிறார்கள்?  நம்முடைய பௌத்தத் துறவிகளோ அரண்மனையில் உட்கார்ந்து கொண்டு பாலும் நெய்யுமாகத் தின்று உடலை அல்லவா வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்?  இப்படி இருந்தால்  நம் தர்மம் எப்படி வளரும்?”

அசோகர் ஒன்றும் பதில் சொல்லவில்லை.  அரண்மனைக்குத் திரும்பியபின் “உன் நிறைவேறாத ஆசை என்ன தம்பி?” என்றார். 

”அரசனாவதுதான், அதுதான் நிறைவேறவே முடியாத ஆசை” என்றான் தம்பி.

“அப்படியானால் நான் உன் ஆசையை நிறைவேற்றி வைக்கிறேன்” என்று கூறிய அசோகர், தன் மந்திரிகளை வரவழைத்து “இன்று முதல் இன்னும் ஒரு மாத காலத்துக்கு என் இளைய சகோதரன் திஸ்ஸாதான் மௌரிய சாம்ராஜ்ஜியத்தின் அரசன்” என்று அறிவித்தார்.  கூடவே, ”தம்பி திஸ்ஸா என்னுடைய பீடத்துக்கு ஆசைப்பட்டு விட்டதால் ஒரு மாதம் முடிந்ததும் அவன் சிரச்சேதம் செய்யப்படுவான்” என்றும் ஆணையிட்டார். 

ஒரு மாதம் முடிந்தது.  ”என்ன திஸ்ஸா, ஒரு பேரரசனாக இந்த அரண்மனையின் சுகபோகங்களையெல்லாம் அனுபவித்தாயா?” என்று கேட்டார் அசோகர். 

”ஐயோ, நான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் மரணத்தை நினைத்து அல்லவா வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன்” என்றான் திஸ்ஸா.

அதேதான் நம்முடைய பிக்குகளின் கதையும்.  அவர்கள் வெளிப்பார்வைக்குத்தான் அரண்மனையில் இருக்கிறார்களே தவிர, அவர்கள் உள்ளார்ந்த முறையில் ததாகதரோடுதான் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு திஸ்ஸா அரண்மனை வாழ்வைத் துறந்து விட்டு பிக்குவாக மாறினான். 

நானும் அந்த பிக்குகளைப் போலவே வாழ்கிறேன்.  எனக்கு பணம் ஒரு காகிதம்.  அவ்வளவுதான்.  பயணம் செல்வதற்கு அந்தக் காகிதம் தேவைப்படுகிறது. அதனால் அதை எண்ணிக் கொண்டிருக்கிறேன்.  அவ்வளவுதான். 

பணத்தைப் பற்றி எப்படி கவலையே படாமல் இருக்கிறீர்கள்?

கவலைப்படக் கூடாது.  கவலைப்பட்டால் பணம் கிடைக்காது.  திட்டமிட வேண்டும். 

எதிர்காலத்தைப் பற்றி பயமே இல்லையா?

நான் ஒரு ஞானியின் மனநிலையில் வாழ்வதால் எதிர்காலம் பற்றிய பயம் இல்லை.  உதாரணமாக, கேகே மாதிரியும் என்னால் வாழ முடியும்.  நான்கு ஆண்டுகள் அப்படி வாழ்ந்து இருக்கிறேன்.  இப்போது கூட என்னைத் தவிர வேறு யாராலும் கேகேயின் தகரக் கொட்டகையில் பன்னிரண்டு தினங்கள் தங்கியிருக்க முடியாது. 

இன்னொரு உதாரணம் தருகிறேன்.  எனக்கு மிகவும் பிடித்தது மது.  ஆனால் கொரோனா காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்ட போது இரண்டு ஆண்டுகள் மது பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தேன். 

கிடைத்தால் கொண்டாட்டம்.  கிடைக்காவிட்டால் இன்னொரு கொண்டாட்டம். 

எதிர்காலத்தைப் பற்றி அச்சம் கொள்வதால்தான் இந்தியர்களுக்கு நாற்பது வயதிலேயே முதுமை தட்டி விடுகிறது.  நான் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் யோசிப்பேன்.  அதிகம் திட்டமிடுவேன்.  ஆனால் அச்சமோ பயமோ கொள்ள மாட்டேன். 

மேலும், ஞானிகளையும் ஆசிரியர்களையும் போற்றி வந்த மரபு இந்தியர்களுடையது.  அவர்களை சமூகம் ஒருபோதும் கை விட்டதில்லை. 

நான் என் ஈகோவை என் காலடியில் போட்டு மிதித்தவன்.  இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று எல்லோராலும் தூற்றப்பட்டவன்.  ஆனால், தியாகராஜர் செய்ததையே நான் செய்தேன்.  என்னுடைய கலையை சமூகத்துக்குக் கொடுத்து சமூகம் அளிக்கும் சன்மானத்தை, தட்சணையை இருகரம் நீட்டிப் பெற்றுக் கொண்டேன். 

நான் ஆசிரியன்.  இந்த மொழிக்கும் இந்தப் பண்பாட்டுக்கும் இந்தக் கலாச்சாரத்துக்கும் சமூகத்துக்கும் நான் அளித்தது அதிகம்.  இரண்டாயிரம் ஆண்டு இந்தியப் பாரம்பரியத்தில் ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து முறையையும் நான் லீனியர் எழுத்து முறையையும் அறிமுகப்படுத்தியவன் நான்.  மகாபாரதத்தில் பலப் பல ட்ரான்ஸ்கிரஸிவ் கதைகள் உண்டு.  ஆனால் எல்லாமே காவிய நடையில் எழுதப்பட்டவை.  நான் மட்டுமே ட்ரான்ஸ்கிரஸிவ் கதைகளை ட்ரான்ஸ்கிரஸிவ் மொழியில் எழுதிய முதல் ஆள். 

இத்தகைய ஒரு ஆசிரியனைத்தான் இந்த சமூகம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.  தியாகராஜர் உஞ்சவிருத்தி செய்து வாழ்ந்த போது ’நாளை மழை பெய்து உஞ்சவிருத்திக்குப் போக முடியாமல் போனால் பட்டினி கிடக்க வேண்டி வருமோ?’ என்று கவலைப்பட்டாரா? அத்தகைய ஆசான்கள் மறுநாளைக்கான அரிசியையோ பணத்தையோ வைத்திருக்கக் கூடாது என்பது அப்போதைய தர்மம்.  அந்த மரபில் வந்த நான் மட்டும் ஏன் நாளை வரப் போகும் உடல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பணத்தை சேமிப்பது குறித்துக் கவலைப்பட வேண்டும்?

ஞானிகளையும் ஆசான்களையும் சமூகம் கவனித்துக் கொள்வது இந்திய மரபு என்றேன்.  மிகத் தற்செயலாக நிகழ்ந்தது சித்த மருத்துவர் பாஸ்கரனின் நட்பு.  என்னைச் சந்திக்கும்போதெல்லாம் என் பாதம் தொட்டு வணங்கி, என்னை தந்தையாக மதித்துப் போற்றுகிறார். அவர் எனக்குக் கிடைத்தது இறைவரம் அல்லவா?  இருபத்தைந்து ஆண்டுகளாக இருந்து வந்த உடல் உபாதைகள் அனைத்தும் அவருடைய மூலிகை மருந்துகளால் எனக்குத் தீர்ந்து விட்டன.  லௌகீகம் துறந்தவர்களை இறையருள் இப்படித்தான் காக்கும். 

வாசகர்கள் பணம் அளிப்பதை நிறுத்தி விட்டால் என்ன செய்வீர்கள்?

பாரதியைப் போல் அல்லாமல், புதுமைப்பித்தனைப் போல் அல்லாமல், அதிர்ஷ்டவசமாக நான் உயிர் வாழும் காலத்திலேயே ஒரு cult ஆக மாறி விட்டேன்.  என் மொழிக்கு வெளியே நடந்ததுதான் ஆச்சரியம்.  சமீபத்தில் இலங்கையில் ஒரு சிங்களப் பெண் எழுத்தாளரைச் சந்தித்தேன்.  என்னுடனும் கேகேயுடனும் இருந்து ஒரு பத்து நாட்கள் எங்களுடைய ஆவணப்பட வேலைகளில் கலந்து கொள்ள வேண்டி, தான் பணி புரியும் அரசுத் துறையில் விடுப்பு கேட்டிருக்கிறார்.  விடுப்பு தரவில்லை.  வேலையை ராஜினாமா செய்து விட்டார்.  அவர் மேட்டுக்குடியைச் சார்ந்தவரும் அல்ல. 

பூவாவுக்கு என்ன செய்வாய் என்று கவலையுடன் கேட்டேன்.  

அது பற்றி யோசிக்கவில்லை; ஜாய்ஸுடன் பத்து நாட்கள் இருப்பதை விட எதிர்காலம் பெரிதாகத் தோன்றவில்லை என்றார். 

என்னுடைய சிறுகதைகளையும், ஆர்த்தோ நாடகத்தையும், ஸீரோ டிகிரி நாவலையும் படித்தவர்.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்னை ஜாய்ஸோடு ஒப்பிட்டு எழுதிய இன்னொரு பெண் கவிஞர் கரீபியத் தீவுகளைச் சேர்ந்த Vahni Capildeo.

இப்படி வேற்று மொழிகளிலும் கொண்டாடப்படுகின்ற என்னை சமூகம் ஒருபோதும் கை விடாது என்றே நினைக்கிறேன்.  அப்படியே வாசகர்கள் பணம் அளிப்பதை நிறுத்தி விட்டால், கேகேயைப் போல் வாழ ஆரம்பிப்பேன்.  அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.  இரண்டு வேளை உணவும் என்னுடைய கணினியும் மட்டுமே போதும்.  வேறேதும் தேவையில்லை. 

கோடிகளைப் பதுக்க பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அரசியல்வாதிகளின் முன்னே பணிய விரும்பாததால் தவிர்த்தேன்.  இன்னொரு முறை, பெண்களின் கண்ணீரும் குருதியும் படிந்த பணம் என்பதால் தவிர்த்தேன். 

அநேகமாக உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளித்து விட்ட்தாக நினைக்கிறேன்.  நாளை ஏதாவது ஞாபகம் வந்தால் மீண்டும் எழுதுகிறேன். 

பின்குறிப்பு: சீனி, உங்கள் கேள்விகளில் ஒரு விவரப் பிழை.  என் கண்ணாடியின் விலை ஒரு லட்சம் அல்ல.  ஒன்றரை லட்சம்.  Cartier பிராண்டு.