பெங்களூரு பயணம்

நான் வருகின்ற 26ஆம் தேதி பெங்களூர் செல்ல இருக்கிறேன். 29 தேதி வரை பெங்களூரில் இருப்பேன். தங்குமிடம் கோரமங்களா. பெங்களூர் பயணத்தின் காரணங்கள் பல. அதில் ஒன்று இரண்டை வெளியே சொல்லலாம். ஒன்று, டிசம்பர் பதினெட்டு என் பிறந்த நாள். அதை பெங்களூரில் சற்று தாமதமாகக் கொண்டாடுவது. பதினெட்டாம் தேதி அன்று வெளியே செல்ல அனுமதி கிடைக்காது. அதனால்தான் இருபத்தாறுக்குத் தள்ளிப் போனது. அதோடு என் தோழரின் பிறந்த நாளும் இருபத்தைந்தாம் தேதி வருகிறது. இரண்டையும் சேர்ந்து கொண்டாடலாமே என்று. இரண்டு, நித்யானந்தாவை எதிர்த்து ஒரு பத்திரிகையில் எழுதியதற்காக என் மீது இரண்டு மூன்று கிரிமினல் வழக்குப் போட்டு கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக பெங்களூருக்கும் சென்னைக்குமாக அலைந்து கொண்டிருக்கிறேன். கிரிமினல் கேஸ் என்பதால் ஒவ்வொரு முறையும் பெயில் வாஙக வேண்டும். அதற்கு காலையிலிருந்து மாலை வரை நீதிபதி முன் குற்றவாளி போல் நிற்க வேண்டும். அந்தாண்டை இந்தாண்டை போனால் அந்த நேரத்தில் அழைத்து விடுவார்கள் என்று எங்கேயும் போகாமல் நின்று கொண்டிருக்க வேண்டும். சில சமயங்களில் பெயில் கொடுக்க மாலை நாலரை ஐந்து கூட ஆகும். பெயில் கொடுத்தால் அதற்கு ஓடிப் போய் பணம் கட்ட வேண்டும். அப்போதுதான் பெயில் நடைமுறைப்படுத்தப்படும். அதற்காக பாக்கெட்டில் ஐந்தாயிரம் ரூபாய் வைத்திருப்பேன். பணமாகத்தான் கட்ட வேண்டும். பெயில் கிடைக்காமல் ஜெயிலில் போட்டால் ஜாமீன் கிடைக்கும் வரை மாத்திரை சாப்பிட வேண்டுமே என்று கையில் மாத்திரைப் பையை வைத்திருப்பேன். (ஹார்ட் அட்டாக் வந்ததிலிருந்து இந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.) கொரானா காலத்தில் மட்டும்தான் பெங்களூர் நீதிமன்றம் போகவில்லை. டிசம்பர் பதினெட்டாம் தேதி நீதிமன்ற அழைப்பு. அன்று எனக்குப் பிறந்த நாள். அதனால் ஜனவரியில் தேதி கேட்டிருக்கிறேன். அந்த வழக்கு விஷயமாக வக்கீலோடு கலந்து பேச வேண்டும். நித்தியே காணாமல் போய் விட்டாலும் வழக்கு மட்டும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் எனக்கு யாருடைய ஆதரவும் இல்லை. ஒரு ஹிந்துத்துவ அமைப்பு ஆதரவு தருவதாகச் சொன்னது. மறுத்து விட்டேன். இடதுசாரிகளுக்கு என்னை ஆகாது. எந்த ஒரு எழுத்தாளருக்கும் ஏதாவது பிரச்சினை என்றால் ஓடி வரும் தமிழ்ச் சமூகம் என்னைக் கைவிட்டு விட்டது.

வக்கீல் வேலை அரை நாளில் முடிந்து விடும். Conversations with Aurangzeb புத்தகத்தை விளம்பரப்படுத்த வேண்டும். அந்த வேலையும் முக்கியம். இதற்கிடையில்தான் பிறந்த நாள் கொண்டாட்டம். என்னைச் சந்திக்க நினைப்பவர்கள் எனக்கு எழுதுங்கள்.

டிசம்பர் பதினெட்டு அன்று எனக்குப் பூங்கொத்து அனுப்புபவர்கள் அதற்குப் பதிலாக என்னுடைய ஒரு புத்தகத்தை ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து வாங்கிப் படித்தால் மகிழ்ச்சி அடைவேன். இல்லாவிட்டால் ஹார்ப்பர் காலின்ஸிலருந்து ஔரங்ஸேப் ஆங்கில நாவலை வாங்கினால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன். அல்லது, மார்ச்சில் என்னுடைய சீலே பயணத்தின் செலவுக்குக் கொஞ்சம் உதவலாம். தொகை பற்றிக் கவலை இல்லை. உண்டியல்தான். அல்லது பெட்டியோவை என்.எஃப்.டி.யில் வாங்கலாம். இப்போதைய விலை 15000. பத்திலிருந்து பதினைந்துக்குப் போய் விட்டது. அப்படித்தான் விலை உயர்ந்து கொண்டே போகும்.

உல்லாசம், உல்லாசம்… நாவல் வருகின்ற ஜனவரி புத்தக விழாவில் வெளியாகும். 150 பக்கம் இருக்கும். சிறிய நாவல்தான். அதுதான் இந்த என்னுடைய பிறந்த நாளில் உங்களுக்கு என் பரிசு. சென்ற ஆண்டு அன்பு நாவலைப் பரிசாக அளித்தேன். பெட்டியோவையும் புத்தகமாகக் கொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இருபது பேர் என்.எஃப்.டி.யில் வாங்கியிருக்கிறார்கள். அதில் பத்தொன்பது பேர் என் நெருங்கிய நண்பர்கள். அதனால் ஆட்சேபிக்க மாட்டார்கள். ஒருவர் மட்டும் ஆட்சேபித்தால் அவருடைய பிரதியை நானே வாங்கிக் கொள்வது தவிர வேறு வழியில்லை. ஆனால் புத்தகம் வேறு. என்.எஃப்.டி. பிரதி வேறு. என்.எஃப்.டி.யில் பக்கத்துக்குப் பக்கம் ஓவிய வேலைப்பாடுகளும் கடைசிப் பக்கத்தில் நான் எடுத்த புகைப்படம் ஒன்றும் இருக்கும். நான் எடுத்த புகைப்படம் விலை மதிக்க முடியாதது. நான் ஒரு நல்ல புகைப்படக்காரன் என்று மிஷ்கினிடம் பேர் வாங்கியிருக்கிறேன். நான் லெபனானில் எடுத்த படங்களை நான் எடுத்தது என்று அவரால் நம்ப முடியவில்லை.

உல்லாசம், உல்லாசம்… நாவல் என்னுடைய நாவல்களில் புதுமையானது. erotic விவரிப்புகள் கொண்டது. அனார்க்கிஸ நாவல். இப்படிப்பட்ட எழுத்தை மேற்கத்திய இலக்கியத்தில் ஒன்றிரண்டு பேர் எழுதியிருக்கிறார்கள். இந்தியாவில் வங்காளத்தில் சுபிமல் மிஷ்ராவைத் தவிர வேறு யாரும் எந்த மொழியிலும் எழுதியதில்லை. சிலர் தமிழில் எழுதுகிறார்கள்தான். ஆனால் அது கலையாக மாறவில்லை என்ற புகார் இருக்கிறது. உல்லாசம் ஒரு தரமான இலக்கியப் படைப்பு என்பதை வாசிக்கும்போது நீங்கள் அறிவீர்கள். என்னுடைய சிறந்த நாவல் என்றால் பெட்டியோ என்றே சொல்வேன். ஆனால் உல்லாசம் நாவலை என்னைத் தவிர இன்னும் கால் நூற்றாண்டுக்கு யாரும் எழுத முடியாது. அந்த வகையில் உல்லாசம் இந்திய மொழிகளுக்கே புதிதாக இருக்கும். இது சிங்களத்தில் வந்தால் பெரும் கலவரமாகும். அதில் வரும் பாத்திரங்கள் அங்கே பிரபலமானவர்கள். நான் புனைப்பெயர் போட்டிருந்தாலும் கண்டு பிடிப்பது கடினம் அல்ல. போதாக்குறைக்கு நதீகா பண்டார வேறு மகே மெட்ராஸ் ஹதய (My Madras Guy) என்று ஒரு 350 பக்க நாவலை எழுதி முடித்திருக்கிறாள். அவளுடைய முந்தைய நாவலான டயோனிஸிஸ் பாமுல சீத்தா என்ற நாவலும் 350 பக்கம்தான்.

charu.nivedita.india@gmail.com