ஹிந்து இலக்கிய விழா – பதிவு செய்தல்

நேற்று ஹிந்து இலக்கிய விழாவுக்கு என் வாசகர்கள் வர வேண்டிய அவசியம் பற்றி எழுதியிருந்தேன். கோழிக்கோட்டில் கேரள இலக்கிய விழாவில் என்னுடைய அமர்வு முடிந்ததும் கையெழுத்துப் போடும் நிகழ்வு ஆரம்பமாகியது. ஒவ்வொரு எழுத்தாளர் பேசி முடித்ததும் அந்த சடங்கு நடக்கும். எனக்குப் பக்கத்தில் வில்லியம் டால்ரிம்பிள். அவருக்கு முன்னே நூறு பேர் கொண்ட ஒரு நீண்ட வரிசை. எனக்கு முன்னால் ஒரே ஒரு பெண். அதுவும் கோழிக்கோட்டில் வசிக்கும் என் தங்கை மகள் நிவேதிதா.

நான் கேரளத்தில் பிரபலமான எழுத்தாளர். ஆனால் அங்கே நடந்தது என் ஆங்கில நாவல் பற்றிய உரையாடல். தமிழ்நாட்டில் யார் ஔரங்ஸேபின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிப்பார்? அதே கதைதான் கேரளத்திலும்.

கையெழுத்து வாங்க ஆள் இல்லை என்றதும் நான் எழுந்து போய் விட்டேன். காஃபி குடித்து விட்டு பதினைந்து நிமிடம் கழித்து அந்தப் பக்கமாக வந்த போதும் வில்லியம் டால்ரிம்பிளின் முன்னே ஐம்பது பேர் நின்று கொண்டிருந்தார்கள்.

இத்தனைக்கும் இடையில் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் என்னவென்றால், எனது நீண்ட நாள் நண்பரான வில்லியம் டால்ரிம்பிள் ”எனக்கு உங்களுடைய ஔரங்ஸேப் நாவல் கிடைக்கவில்லை, ஒரு பிரதி வேண்டும்” என்றார். என் கையிலிருந்த பிரதியைக் கொடுத்தேன். ”கையெழுத்துப் போட்டுக் கொடுங்கள்” என்றார். கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.

மற்றபடி ஆங்கில இலக்கிய உலகில் தமிழ் எழுத்தாளர்களின் நிலை காலி இருக்கைகள்தான். அதனால்தான் ஹிந்து இலக்கிய விழாவுக்கு நீங்கள் வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறேன்.

இம்மாதிரி இந்திய அளவில் நடக்கும் இலக்கிய விழாக்களை ஒருங்கிணைக்கும் நண்பர் ஒருவர் சொன்னார், இந்திய ஆங்கில எழுத்தாளர்களுக்கு வரும் கூட்டத்தில் பத்தில் ஒரு பங்குகூட பிராந்திய மொழி எழுத்தாளர்களுக்கு வருவதில்லை. உதாரணமாக விக்ரம் சேட்டை எடுத்துக் கொள்ளுங்கள். கூட்டம் நிரம்பி வழியும். என் முன்னே காலி இருக்கைகள்.

நம்முடைய ஊரில் அப்படி இருக்கக் கூடாது என்பதால்தான் இப்படி வலிந்து வலிந்து எழுதுகிறேன்.

மற்றொரு முக்கிய விஷயம். நீங்கள் ஹிந்து இலக்கிய விழாவுக்கு வருவதாக இருந்தால் கீழே இருக்கும் படிவத்தின் மூலம் பதிவு செய்து விடுங்கள். சுலபம்தான். பெயர் ஊர் எழுத வேண்டும்.

https://www.thehindu.com/litfest/lfl-registration/