அற்புதம்

அஷோக் கோபால் தெ ப்ரிண்ட் பத்திரிகையில் என்னைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  அரூ பத்திரிகையில் அராத்து என்னைப் பற்றி எழுதியிருந்ததுதான் இதுவரை என்னைப் பற்றி வந்த கட்டுரைகளில் ஆகச் சிறந்தது என்று பல நண்பர்கள் அபிப்பிராயப்பட்டார்கள்.  என் கருத்தும் அதுவே.  ஆனால் என்னை கடந்த ஒரு மாதமாக மட்டுமே அறிந்த ஒரு ஆங்கில எழுத்தாளர் என்னைப் பற்றி இத்தனை விரிவாக எழுதியிருந்தது கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தேன்.  நம்பவே முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

இந்த இடத்தில் வினித் பற்றிச் சொல்ல வேண்டும்.  வினித்திடம் எந்த வேலை சொன்னாலும் அது ஆகாது என்று வாசகர் வட்டத்தில் ஒரு இமேஜ் உருவாகி விட்டது.  ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் – வேண்டாம், இரண்டு உதாரணம் சொல்கிறேன் – சமீபத்தில் பிரம்மயுகம் என்ற ஒரு கழிசடைப் பட்த்துக்கு நானும் வினித்தும் போனோம்.  வேளச்சேரி மாலுக்கு வரச் சொன்னார்.  நான் சென்னையில் எப்போதாவதுதான் வெளியே போவேன். மாதம் ஒருமுறை என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அதுவும் என் நண்பரும் சித்த மருத்துவருமான பாஸ்கரனைச் சந்திப்பதற்காக அசோக் நகர் போவேன்.  அவ்வளவுதான்.  இந்த உள்ளூர் வேலைக்கு எனக்கு ஒரு நெருங்கிய நண்பர் கார் அனுப்புவார்.  வேளச்சேரி போகவும் அவரே கார் அனுப்பினார்.

வேளச்சேரி போய் வினித் வீட்டிலேயே சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு (சமையல்கார அம்மாள் அவந்திகா மாதிரி சமைத்திருந்தார்கள்) வேளச்சேரி மாலுக்கு வந்தோம்.  மூன்று மணி காட்சிக்கு இரண்டே முக்காலுக்கே வந்து விட்டோம்.  உள்ளே போய் உட்கார்ந்திருந்தோம்.  மூன்று மணி ஆகியும் அரங்கத்தின் வாசல் திறக்கவில்லை.  தற்செயலாக அங்கே ஓடிக்கொண்டிருந்த எலக்ட்ரானிக் விளம்பரத்தைப் பார்த்தால் மூணே முக்காலுக்கு ஏதோ ஒரு படத்தின் பெயர் போட்டிருந்தது.  வினித்திடம் சொன்னேன்.

நாங்கள் போக வேண்டிய தியேட்டர் தி. நகர்.  வேளச்சேரி அல்ல. 

ஐந்தரை மணிக்கு வாருங்கள், போதும், இங்கே அனாவசியமாகக் காத்திருக்க வேண்டாம் என்று சொல்லி காரை வேறு திருப்பி அனுப்பி விட்டேன்.  இப்போது வேளச்சேரியிலிருந்து தி. நகர் வரை ஆட்டோ பயணம்.  தி. நகரில் 3.40க்குப் படம்.  படம் தொடங்குவதற்குள் போய் விட்டோம்.  ஆட்டோவுக்குப் பணம் வினித்திடம் இல்லை.  அவர் எப்போதும் ஜி.பே.யில்தான் பணம் கொடுப்பார்.  ஆட்டோக்காரரிடம் ஜீ.பே. இல்லை.  பணம் நான் கொடுத்தேன்.  350 ரூ.  இப்போதெல்லாம் பணத்துக்கு ரொம்பவும் கணக்குப் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.  எல்லாப் பணமும் மொழிபெயர்ப்புக்குப் போய் விடுகிறது.  லட்சம் லட்சமாகப் போகிறது. 

நான் வினித்தைக் குறை சொல்வதாக நினைத்து விடாதீர்கள்.  இது போன்ற விஷயங்களில் நான் வினித்தை விட படு பயங்கரம். பலமுறை நான் விமானத்தையே தவற விட்டிருக்கிறேன்.  பலமுறை விமான நிலையம் போய் திரும்பியிருக்கிறேன்.  பதினைந்தாம் தேதி பயணம் என்றால் நான் பதினாலாம் தேதி போய் நிற்பேன். 

நடுவில் இருப்பவர் அஷோக் கோபால்

இன்னொன்று கொஞ்சம் பயங்கரம்.  சென்ற முறை பெங்களூர் சென்ற போது செலவானதில் உங்கள் பங்காக பன்னிரண்டாயிரம் கொடுக்க வேண்டும் என்றார் வினித்.  ஒரு வாரத்துக்கு முன்னால்.  முன்பு என்றால் சொன்ன அடுத்த நிமிடமே பன்னிரண்டாயிரத்தையும் அனுப்பி வைத்திருப்பேன்.  இப்போது என் வங்கிக் கணக்கு பூஜ்யத்தில் நிற்கிறது.  நினைத்தாலும் அனுப்ப இயலாது.  கையில் சுத்தமாகப் பணம் இல்லை என்று நேற்றுதான் இரண்டு நண்பர்களிடம் பணம் வாங்கினேன்.  ஒருவரிடம் பன்னிரண்டாயிரம், இன்னொருவரிடம் ஐந்தாயிரம்.  நான் பணம் வேண்டும் என்று சொன்னேன்.  அவர்கள் இந்த இந்தத் தொகையை அனுப்பினார்கள்.  ஒருவர் இருபதாயிரம் தரவா என்று கேட்டார். பத்தாயிரம் போதும் என்றேன்.  அவர் பன்னிரண்டாயிரம் கொடுத்தார்.  (இருபதுக்கே சரி என்று சொல்லியிருக்கலாம்!)

வினித்துக்குப் பணம் கொடுக்கவில்லை.  காரணம், பெங்களூரிலேயே சொல்லியிருந்தால் அங்கே என் நண்பர் ஒருவரிடம் சொல்லி வாங்கிக் கொடுத்திருப்பேன்.  பெங்களூர் போனால் அந்த நண்பர்தான் என் செலவை கவனித்துக் கொள்வார்.  இப்போது கேட்க முடியாது.  வினித்துக்கு எப்போது கொடுப்பேன் என்றும் தெரியவில்லை.  ஏதாவது இலக்கியப் பரிசு கிடைத்தால்தான் கொடுக்க முடியும்.

வினித் பற்றி இன்னொரு விஷயம்.  பெரிய பெரிய ஆசாமிகளையெல்லாம் அழ விட்டிருக்கிறார்.  அதாவது, கண் கலங்கி, கேவிக் கேவி அழுதிருக்கிறார்கள்.  என்னையும் அழ விடப் பார்ப்பார்.  நான் அழாமல் கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பித்து விடுவேன்.  (நிறைய பெண்களிடம் பழகி கை வந்த தந்திரம் அது).  உதாரணமாக ஒன்று.  ஒரு நண்பர் என்னுடைய பெட்டியோ நாவலை என்.எஃப்.டி.யில் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கொடுத்து வாங்க நினைத்தார்.  வினித்தைக் கேளுங்கள், உதவி செய்வார் என்றேன்.  வினித், ”ஏங்க, இவ்வளவு பெரிய எடத்துல வேல செய்றீங்க, முப்பத்தஞ்சு நாட்டுக்குப் போய்ட்டு வந்திருக்கீங்க?  ஐஃபோன்ல இதைச் செய்ங்கன்னா தெரிய மாட்டேங்குது… நீங்கள்ளாம் எப்படி வாழ்ந்துக்கிட்டிருக்கீங்க இந்த ஒலத்துல?” என்று கேட்டு அதுவும் போதாமல் இன்னும் பத்து நிமிடத்துக்கு ஓத்தாம் பாட்டு விட்டிருக்கிறார்.  நண்பர் அழுது விட்டார். 

இதே மாதிரிதான் கார்த்திக்கும் (என் மகன்) என்னிடம் ஒருமுறை ‘ராங்’ பண்ணினான். (நீங்களே ஏன் இதையெல்லாம் கத்துக்கக் கூடாது?)  இந்த வார்த்தைகள் என் காதில் விழுந்ததும் என் மடிக்கணினியைத் தூக்கிப் போட்டு உடைத்து விட்டேன். என்னுடைய நான்கு வருட உழைப்பு காலி.

ஆனால் வினித் இல்லாவிட்டால் நான் ஹிண்டு இலக்கிய விழா, கோழிக்கோடு இலக்கிய விழா, திருவனந்தபுரம் இலக்கிய விழா போன்ற எந்த விழாவுக்கும் போயிருக்க முடியாது.  அவர்தான் இன்னன்ன விழா இன்னன்ன தேதிகளில் நடக்கிறது, இன்னன்ன ஆட்களுக்கு ஃபோன் பண்ண வேண்டும் என்று சொல்பவர்.  உலகத்தின் நம்பர் ஒன் இலக்கிய ஏஜெண்ட் போல் எனக்காகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 

நான் ஒரு இண்ட்ரோவர்ட்.  மனிதர்கள் யாரிடமும் பேச மாட்டேன். நாய் பூனை என்றால் மட்டுமே பேசுவேன்.  இலக்கிய விழாக்களில் என்ன சிறப்பு என்றால், மேடையில் எல்லா எழுத்தாளர்களுமே அப்படி இப்படித்தான் பேசுவார்கள்.  எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் இல்லையே?  ஆனால் இரவு நடக்கும் மது விருந்தின்போதுதான் அவர்களோடு பேச வேண்டும். 

மது விருந்தின்போதும் நான் யாரோடும் பேசாமல் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து வைன் அருந்திக்கொண்டிருப்பேன்.  வினித் ஒரு எக்ஸ்ரோவர்ட்.  எல்லோருடனும் பேசுவார்.  அப்படி அவர் பேசிக்கொண்டிருந்த ஒருவர்தான் அஷோக் கோபால் என்ற ஆங்கில எழுத்தாளர்.  அவரிடம் என்னை வினித் அறிமுகம் செய்தார்.  அவரோ என்னிடம் மூணு ஜென்மத்து சிநேகிதர் போல் பேசினார்.  பிறகு அஷோக்கை திருவனந்தபுரத்தில் சந்தித்தேன். 

ஸீரோ டிகிரி நாவலைக் கையில் வைத்திருந்தார்.  நானே கொடுத்திருப்பேனே, ஏன் வாங்கினீர்கள் என்றேன்.

திருடினேன் என்றார்.  பிறகு “வாழ்க்கையில் நான் செய்த முதல் திருட்டு இதுதான்” என்றும் சொன்னார்.    

ஸீரோ டிகிரி அங்கே ரைட்டர்ஸ் லவுஞ்ஜில் அனாதையாகக் கிடந்திருக்கிறது.  இந்தப் புத்தகத்தை நான் படிக்க வேண்டுமே என்று பக்கத்திலிருந்த தன் நண்பர் ஜெர்ரி பிண்ட்டோவிடம் சொல்லியிருக்கிறார் அஷோக். 

“ஏய், உண்மையிலேயே உனக்கு ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டுமானால் திருடி விடு” என்று போதித்திருக்கிறார் ஜெர்ரி. 

அடுத்த நிமிஷம், புத்தகம் அஷோக்கின் பைக்குள் போய் விட்டது. 

ஆனால் மார்ஜினல் மேன் புத்தகத்தை நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வினித்திடம் காசு கொடுத்துத்தான் வாங்கினார் அஷோக்.  அன்றைய இரவே அதில் ஏராளமாகப் படித்தும் விட்டதாக மறுநாள் சொன்னார். 

வினித் மட்டும் என் பக்கத்தில் இல்லாவிட்டால் இன்று எனக்குத் தெரிய வந்திருக்கும் இருபத்தைந்து எழுத்தாளர்களை, புத்தக மதிப்புரை எழுதும் நண்பர்களைத் தெரிந்திருக்காது.  அவர்களுக்கும் என்னைத் தெரிந்திருக்காது.  வினித் இல்லாவிட்டால் இன்று ப்ரிண்ட் பத்திரிகையில் என்னைப் பற்றி இத்தனை பெரிய கட்டுரை வந்திருக்காது.

இன்றைய ப்ரிண்ட் கட்டுரையைப் படித்து விட்டு, ஒரு சர்வதேசப் பரிசு கிடைத்தால் எத்தனை மகிழ்ச்சி அடைவேனோ அத்தனை மகிழ்ச்சி அடைந்தேன்.  நேற்று இரவு வினித் ஒரு மெஸேஜ் அனுப்பினார்.  ”இந்தியாவிலேயே எந்த ஒரு எழுத்தாளரைப் பற்றியும் எந்த ஒரு எழுத்தாளரும் இந்த அளவுக்கு எழுதியதில்லை.”  உண்மைதான்.  இனிமேல் என்னைப் பற்றி எத்தனை விரிவாக எழுதப்பட்டாலும் அஷோக் கோபாலின் கட்டுரையை வேறு யாரும் மிஞ்ச முடியாது.  என் வாழ்வில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு இது. 

வினித் என் வாழ்வில் நிகழ்ந்த ஒரு அற்புதம். 

இன்னொரு விஷயம்.  ராம்ஜி இருந்திராவிட்டால் ஔரங்ஸேப் மொழிபெயர்ப்பே வந்திருக்க வாய்ப்பு இல்லை.  ஏனென்றால், நந்தினி என்று பெயர் சொன்னதுமே எல்லோரும் சிங்கம் புலி கரடி மாதிரி பயமுறுத்தினார்கள்.  கடைசியில் பார்த்தால் அது ஒரு பூனை என்று தெரிய வந்ததும் ராம்ஜியால்தான். 

ப்ரிண்ட் பத்திரிகையில் வந்த கட்டுரையின் லிங்க்:

https://theprint.in/theprint-profile/pickpocket-catamite-govt-employee-the-many-lives-of-tamil-cult-writer-charu-nivedita/1969661/

பின்குறிப்பு: அஷோக் கோபால் ”A Part Apart: The Life and Thought of B.R. Ambedkar” என்ற நூலின் ஆசிரியர்.