கூல் சுரேஷும் மைக்கேல் ஜாக்ஸனும்…

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் உள்ள இண்டியா இண்டர்நேஷனல் செண்டர்.  அல்மோஸ்ட் ஐலண்ட் இலக்கிய நிறுவனம் நடத்தும் கருத்தரங்கு.  வங்கக் கவிஞர் ஜாய் கோஸ்வாமி வங்காள மொழியில் பேசுகிறார்.  அவர் பேசப் பேச அவர் பக்கத்தில் இருக்கும் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்.  மொழிபெயர்த்தவர் மேற்கு வங்கத்தில் கலெக்டராகப் பணி புரிகிறார் என்று பிறகு தெரிந்தது.  அந்த மொழிபெயர்ப்பாளர் எதையேனும் விட்டுவிட்டால் அதை எடுத்துக் கொடுக்க ஜாய் கோஸ்வாமி அருகிலேயே இன்னொருவர் அமர்ந்திருக்கிறார்.  ஜாயுடன் இன்னும் இருவர் வந்திருக்கிறார்கள்.  அவர்களும் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள்.  ஜாய் கோஸ்வாமியின் கவிதைகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

1980களின் முற்பகுதி.  பம்பாய் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவரான விலாஸ் சாரங்கின் அறையில் ஒரு கவிதா நிகழ்வு. விலாஸ் சாரங்க் உலகப் புகழ் பெற்ற மராத்தி மற்றும் ஆங்கில எழுத்தாளர், கவிஞர்.  அந்த நிகழ்வுக்கு நிகாராகுவாவிலிருந்து எர்னெஸ்த்தோ கார்தினால், மற்றும் சில கிழக்கு ஐரோப்பியக் கவிகள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.  கிழக்கு ஐரோப்பியக் கவிகள் கவிதை பற்றி ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார்கள்.  ஆனால் எர்னெஸ்த்தோவுக்கு ஆங்கிலம் பேச வரவில்லை.  உடனே அங்கே வந்திருந்த நிகாராகுவாவின் இந்தியத் தூதர் எர்னெஸ்த்தோவின் ஸ்பானிஷ் பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார். 

இப்படித்தான் உலகம் பூராவும் நடந்து கொண்டிருக்கிறது.  ஆனால் தமிழ் எழுத்தாளன் மட்டும்தான் தமிழ்நாட்டுக்கு வெளியே போனால் இலக்கிய அரங்குகளில் ஆங்கிலத்தில் பேசித் திணற வேண்டியிருக்கிறது.  பெருமாள் முருகன் உலக அளவில் போய் விட்ட ஒரு சூப்பர் ஸ்டார்.  அவர் சைகையால் பேசினால்கூட மொழிபெயர்ப்பதற்கு ஆள்கள் இருக்கிறார்கள்.

இங்கே பெருமாள் முருகன் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது.  அவரை நான் கோழிக்கோடு இலக்கிய விழாவிலும் பிறகு ஜெய்ப்பூர் இலக்கிய விழாவிலும் பார்த்தேன்.  தமிழ் எழுத்தாளர்கள் என்றாலே எனக்குப் பல கசப்பான அனுபவங்கள்தான் என்பதால் அவர்களைக் கண்டால் காணாதது போல் ஒதுங்கிப் போய் விடுவேன்.  எஸ்.ரா., மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன் மூவர் மட்டுமே விதிவிலக்கு.  மூவருமே என் மீது தனிப்பட்ட அன்பும் பிரியமும் கொண்டவர்கள். 

பெருமாள் முருகன் தமிழ் எழுத்தாளர்களில் வித்தியாசமானவர்.  வித்தியாசம் என்னவென்றால், நல்ல மனிதர்.  நல்ல ஆசிரியர்.  நல்ல தொகுப்பாளர்.  நல்ல விமர்சகர்.  அவருடைய புனைவு எழுத்து மட்டும்தான் எனக்கு ஆரம்பத்திலிருந்தே (ஏறுவெயில் காலத்திலிருந்து) பிடிக்காது.  பிடிக்காது என்பதை விட அவர் புனைவில் கலைக்கான எந்த அம்சமும் இல்லை என்பது என் கருத்து.  மிகவும் தட்டையானது அவர் புனைவு.  சராசரித்தனமானது.  விஜய்காந்த் படம் மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.  அப்படிச் சொன்னால் சரியாக இருக்கும். 

மற்றபடி பெருமாள் முருகன் மிகவும் நல்ல மனிதர் என்பதால் எங்கே சந்தித்தாலும் அவரோடு அன்புடன் அளவளாவிக் கொண்டிருப்பது என் வழக்கம்.  ஆனால் ஜெய்ப்பூர் விழாவில் அதற்கும் பங்கம் வந்து விட்டது.  வினித்திடம் அவர் என்னைப் பற்றிய சொல்லிய வார்த்தைகள்.  “என் அமர்வுக்கு சாரு வரவில்லை.  வந்திருந்தால் பொறாமையால் ஏதாவது திட்டியிருப்பார்” என்று சொல்லியிருக்கிறார். 

அடக்கடவுளே, நல்லவர் என்று நினைத்திருந்தவர் கூடவா இப்படி?  நான் ஏன் பெருமாள் முருகனைப் பார்த்துப் பொறாமை கொள்ள வேண்டும்? 

எனக்கு யார் மீதெல்லாம் பொறாமை என்று ஏற்கனவே பட்டியல் போட்டிருக்கிறேன்.  என்னை விடவும் பல மடங்கு கீழே என்று சொல்லத் தகுந்த ஹாருகி முராகாமி ஏதோ ஒரு விபரீத ராஜயோகத்தினால் நோபல் பரிசு பெற்ற பல எழுத்தாளர்களை விடப் பெரும் உயரத்தில் இருக்கிறார்.  அவர் எழுதியதிலேயே ஓரளவு தேறக் கூடியது நார்வேஜியன் வுட்.  அதைவிட ராஸ லீலா கலை நேர்த்தியிலும் உள்ளடக்கத்திலும் பல மடங்கு உயர்வானது.  கிட்டத்தட்ட மைக்கேல் ஜாக்ஸன் அளவுக்குப் பிரபலமாக இருக்கிறார் ஹாருகி.  அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர் மீது எப்படி பெண்களெல்லாம் பித்துப் பிடித்துப் போயிருந்தார்களோ அந்த அளவுக்கு ஹாருகி மீது பித்துக் கொண்டு அலைகிறார்கள் இளம் பெண்கள்.  அவர் மீது எனக்குப் பொறாமை.

இன்னொருத்தர் ரியூ முராகாமி.  என் தோழி ஒருத்தி சமீபத்தில் “உங்களை விட ரியூவிடம் பகடி அதிகம்” என்று சொன்னபோது ரியூ மீது எனக்குப் பொறமை வந்தது.  மட்டுமல்ல, ஜப்பானில் ரியூ முராகாமி ஒரு ராக் ஸ்டார் அளவுக்குப் பிரபலம்.  எப்படியென்றால், அவர் இதுவரை எழுதிய பல கதைகளை அந்தந்த நூல் வெளிவந்ததும் கிடைக்கும் ராயல்டியைக் கொண்டே சினிமாவாக எடுத்து விடுகிறார்.  ரியூதான் இயக்குனர்.  பல படங்கள் நீலப்படங்களையும் மிஞ்சும் என்பதால் அவருடைய பெரும்பாலான படங்கள் ஜப்பானிலும் சர்வதேச அக்ரஹாரமான ஆஸ்திரேலியாவிலும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. என்றாலும் இணையத்தில் அவர் படங்கள் காணக் கிடைக்கின்றன. 

ஏன் பெருமாள் முருகன், கூல் சுரேஷைப் பார்த்து ரஜினிகாந்த் பொறாமைப் படுவாரா, சொல்லுங்கள்?  ஆச்சரியம்தான் அடைவார்; என்னடா இது, நமக்கு வரும் கூட்டத்தை விட கூல் சுரேஷுக்கு அதிகம் கூடுகிறதே என்று. 

நான் பெருமாள் முருகன் இடத்தில் இருந்திருந்தால் கடவுளுக்கும், அவருக்குக் கொலை மிரட்டல் விட்ட சாதி சங்கத்துக்கும் மட்டுமே நன்றி சொல்லுவேன்.  ஊரில் ஒரு சூறைக்காற்று வீசுகிறது.  அப்போது தெருவில் கிடந்த ஒரு சருகு பெருமாள் கோவிலின் கோபுரத்துக்குப் போய் அமர்ந்து விடுகிறது.  உடனே அந்த சருகு “பெருமாளுக்கு என் மீது பொறாமை, அவரை விட உயரத்துக்கு வந்து விட்டேன் என்று” என்று சொன்னால் அது எத்தனை கேலிக்கூத்தோ அத்தனை கேலிக்கூத்துதான் பெருமாள் முருகன் மீது எனக்குப் பொறாமை என்பதும்.  நாங்களெல்லாம் புத்தகம் எழுதி, இலக்கியத்தின் மூலமாக வெளியே போகிறோம்.  ஆனால் பெருமாள் முருகன் சாதி சங்கத்தின் கொலை மிரட்டலால் கோபுர உச்சிக்குப் போனவர்.  கோபுர உச்சிக்குப் போய் விட்டதாலேயே அவர் மூலவரின் தலையில் உட்கார்ந்திருப்பதாக அர்த்தம் இல்லை. 

எனவே இனிமேல் என் கரங்களிலிருந்து பெருமாள் முருகன் என்ற பெயரே வராது.  இப்போது அவர் பெயரை ஏன் குறிப்பிட்டேன் என்றால், ஆங்கிலத்தில் பேச வேண்டிய தேவை பெருமாள் முருகனுக்கு இல்லை.  அவர் எழுதுவது testimony literatureஇல் கூட வராது.  அத்தனை தட்டையானதும், செயற்கையானதுமானது அவர் எழுத்து. 

இப்போது ஆரம்பித்த இடத்துக்கு வருகிறேன்.  ஏன் நான் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருக்கிறது? 

பேசாவிட்டால் இந்தியாவின் மிக முக்கியமான ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளரான சுபிமல் மிஷ்ரா போல் யாருக்கும் தெரியாமலேயே சாக வேண்டியதுதான்.  எண்பது வயது வரை வாழ்ந்து, சென்ற ஆண்டு ஃபெப்ருவரியில் மரணமடைந்தார் சுபிமல்.  2022 கடைசியில்தான் அவர் எழுத்து எனக்குப் பரிச்சயமானது.  உடனடியாக அவரைச் சந்திக்க வேண்டும் என்று அவர் நண்பரிடம் சொன்னேன்.  அவர் மரணப்படுக்கையில் கிடக்கிறார் என்றார் நண்பர்.  அவர் சொன்னது போலவே கிளம்பி விட்டார் சுபிமல். 

மீண்டும் நூறாவது தடவையாகச் சொல்கிறேன்.  நான் தமிழில் எழுதுகிறேனே ஒழிய மேற்கத்திய சிந்தனையின் வழியே உருவானவன்.  என்னிடம் ஆண்டாளின் மொழியையும் மார்க்கி தெ சாத்-இன் சிந்தனையையும் காணலாம்.  நான் தமிழில் எழுதினாலும் ஒட்டு மொத்த மானுடத்துக்காகவும் சிந்திப்பவன்.  நகுலனைப் போல, அசோகமித்திரனைப் போல ஐநூறு பேருக்கு எழுதுவதெல்லாம் எனக்கு ஆகாது.  அதனால்தான் ஆங்கிலத்தில் பேசி என்னை உலகுக்குத் தெரியச் செய்கிறேன். 

தாகூரையும் பாரதியையும் நான் உதாரணம் சொல்லியிருக்கிறேன்.  தாகூரை விட சிறந்த கவியான பாரதி தன்னை வெளியே தெரியப்படுத்திக் கொள்ளவில்லை.  தாகூர் தன் புத்தகத்தை எடுத்துக்கொண்டு உலகம் பூராவும் போனார்.  தன்னைப் பிரபலப்படுத்திக் கொண்டார்.  என் புத்தகத்தை இங்கே தமிழ்நாட்டில் லட்சம் பேர் வாங்குகிறார்கள் என்றால் நான் ஆங்கிலத்தில் பேச மாட்டேன்.  நியூயார்க்கரிலிருந்து என்னைத் தேடி வருவான்.  ஹாருகியையும் ரியூவையும் தேடித்தான் அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் போகிறார்கள்.  இவர்கள் தேடிப் போகவில்லை.

இன்னும் பாருங்கள்.  எனக்கு வயது எழுபது.  என் நாவலை இந்தியாவின் ஆகப் பிரபலமான ஹார்ப்பர்காலின்ஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  ஆனால் யூ.கே.விலும் அமெரிக்காவிலும் என் புத்தகம் கிடைக்காது.  அங்கே எனக்குப் பதிப்பகங்களோ இலக்கிய முகவர்களோ இல்லை.  எழுபது வயதில்தான் தமிழ்நாட்டு எல்லையையே தாண்டியிருக்கிறேன்.  இந்திய எல்லையைத் தாண்டுவதற்காகத்தான் ஆங்கிலத்திலெல்லாம் பேசித் தொலைய வேண்டியிருக்கிறது.

இன்னொரு பெரிய பிரச்சினை, தமிழிலும் என் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள என்னென்ன குட்டிக்கரணமெல்லாமோ போட வேண்டியிருக்கிறது.  காரணம், அசுரன்.  இலக்கியப் போட்டி என்றாலாவது நமக்குத் தெரிந்த கலையின் மூலம் வேலை செய்யலாம்.  அசுரனோ திடீரென்று இந்தியத் தத்துவ இயல் என்கிறான், ஆலயக்கலை என்கிறான், பின்நவீனத்துவம் செத்துப் போச்சு என்கிறான்.  சமீபத்தில் அசுரனின் நண்பர் ஒருவர் சொன்னார், அசுரன் விமானம் கற்றுக்கொண்டிருக்கிறானாம்.  விரைவில் சொந்தமாக விமானம் வாங்குவதாகத் திட்டமாம்.  விமானம் வாங்குவது நம்மால் ஆகாது.  ஆனால் அசுரன் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டு விட்டால் நானும் விமானம் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும்.  அசுரனுக்கு விமான ஓட்டும் திறமையின் காரணமாக கொஞ்ச மதிப்பெண் கூடி விடும்.  என்னடா பெருமாள், இப்படியெல்லாம் சோதிக்கிறாய்?

ஒரு தமிழ் எழுத்தாளனின் நிலைமையைப் பாருங்கள்.  அவனுக்கு அஸ்ட்ரோ ஃபிஸிக்ஸ் தெரிந்திருக்க வேண்டும், சமூகவியல்/மானுடவியல் தெரிந்திருக்க வேண்டும், பூகோளம் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். 

கொடுமை என்னவென்றால், என் நெருங்கிய நண்பர் ஒருவர் அசுரனைச் சந்திக்கப் போனார்.  அப்போது பார்த்து அசுரன் சென்னை சிந்தாதிரிப்பேட்டையின் முந்நூறு ஆண்டு வரலாற்றை ஒரு கதை போல் சொல்லிக்கொண்டிருந்தானாம்.  என் நண்பர் உடனே அசுரனின் வாசகர் வட்டத்தில் சேர்ந்து விட்டார்.  “நீங்கள் என்ன சார், எப்போது பார்த்தாலும் நிலப்பனைக் கிழங்கு, எந்த ப்ப் நன்றாக இருக்கும், எங்கே சீலே வைன் கிடைக்கும் என்றுதானே பேசுகிறீர்கள்?  அசுரரைப் பாருங்கள், முந்நூறு ஆண்டு சிந்தாதிரிப்பேட்டை வரலாற்றைச் சொல்லுகிறார்?” என்று என்னிடமே சொல்லி வியந்து வியந்து போனார். 

இப்போது நான் சிந்தாதிரிப்பேட்டை, உளுந்தூர்ப்பேட்டை, உடுமலைப்பேட்டை போன்ற ஊர்களின் நானூறு ஆண்டு வரலாற்றைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  ஏம்ப்பா அசுரா, எங்கேயோ ஒரு ஊரில் உட்கார்ந்து கொண்டு மைலாப்பூரில் நான் உண்டு, என் எழுத்து உண்டு என்று வசிக்கும் எனக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறாய்?” என்று மானசீகமாகக் கேட்டேன்.  வேறு என்ன செய்வது?

தமிழ் எழுத்தாளன்களின் நிலை இப்படி இருக்கிறது ஐயா.  எழுபது வயதில் இங்லீஷெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. 

கற்றுக்கொண்டு பேசினால் இதில் இருக்கும் அவலத்தைப் பார்க்காமல் ஒரு நண்பர் எழுதுகிறார்.  “உங்கள் தமிழுக்கு ஈடு இணை இல்லை.  ஆனால் ஆங்கிலத்தில் நீங்கள் என்னதான் முயற்சி செய்தாலும் (செய்திருக்கிறீர்கள்) உங்கள் தமிழ்ப் பேச்சு மாதிரி இல்லை.”

நண்பர் மீது எனக்குக் கோபமோ வருத்தமோ இல்லை.  தமிழ் எழுத்தாளனின் அவலம் புரியவில்லையே என்று நினைத்துக்கொண்டேன். 

கன்னடத்தில் எழுதும் அத்தனை எழுத்தாளர்களையும் இங்கே தமிழில் கொண்டு வந்தாயிற்று.  மலையாளத்தில் எழுதும் அத்தனை எழுத்தாளர்களையும் இங்கே கொண்டு வந்தாயிற்று.  இப்படியே உலகத்தில் எழுதும் அத்தனை எழுத்தாளர்களையும் இங்கே கொண்டு வந்து விடும் வெறியோடு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் தமிழிலிருந்து ஒரு ஆள் கன்னடத்துக்குப் போகவில்லை.  நான் மலையாளத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் அளவுக்குக் கருதப்படுகிறேன்.  (சூறைக்காற்றில் பறந்தவர் விதிவிலக்கு).  ஆனால் ஔரங்ஸேபை மலையாளத்தில் கொண்டு போக முயற்சித்தால் எனக்கு பதிப்பகமே கிடைக்கவில்லை.  கிடைத்த பதிப்பகமும் மூன்றில் ஒன்றாகச் சுருக்கிக் கொடுங்கள் என்கிறார்கள்.  எத்தனை கேவலம் பாருங்கள்.  ஆனால் தமிழை விட பல மடங்கு கீழே கிடக்கும் மலையாள இலக்கியத்தை இங்கே தங்கத் தாம்பாளத்தில் இறக்கிக்கொண்டிருக்கிறார்கள்.  நேற்று ஒரு நாவல் படித்தேன்.  மலையாளத்தின் லேடி சூப்பர் ஸ்டார் எழுதினது.  70 பக்கம்.  குப்பை என்ற வார்த்தைகூட பெரிய வார்த்தை.  அப்படி ஒரு குப்பை.  கேரளத்தின் அந்த லேடி சூப்பர் ஸ்டார் இப்போது இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்து இருக்கிறார்.  பிரச்சினை என்னவென்றால், இனிமேல் அவரும் என்னை எதிரிபோல் பாவிப்பார்.  நான் என்னம்மா செய்வது?  நீங்கள் எழுதியிருக்கும் கதையை எங்கள் ஜனரஞ்சகக் குப்பை எழுத்தாளர் லக்ஷ்மி அம்பது ஆண்டுகளுக்கு முன்பே எழுதி முடித்து விட்டாரே? 

வீகேஎன் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.  அதாவது, சாருவும் வீகேஎன்னும் ஒன்றாம்.  அவருடைய பையன் கதைகள் போல் இந்தியாவிலேயே யாரும் எழுதியதில்லையாம்.  பகடியின் உச்சமாம்.  படித்தேன்.  ஆனந்த விகடனில் அந்தக் காலத்தில் நகைச்சுவைக் கதைகள் எழுதுவார்களே, அந்த ரேஞ்ஜில் இருந்தது.  மேதில் ராதாகிருஷ்ணனை எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்கிறார்கள்.  நகுலன் மாதிரி.  படித்தால் சுந்தர ராமசாமி ஜேஜே சில குறிப்புகளில் முயற்சி செய்து தோற்றார் இல்லையா, அந்த மாதிரி இருக்கிறது. 

சர்வதேசத் தரத்தில் மலையாளத்தில் எழுதுபவர்கள் என எம். முகுந்தன், ஸக்கரியா போன்ற ஒருசிலரைத் தவிர வேறு யாரையும் சொல்ல முடியவில்லை.  காரணம், மலையாளத்தில் பெரிதாகப் பேசப்படும் பலரையும் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் தாண்டி  விட்டார்கள். 

ஆனால் இப்படி சராசரியாக எழுதும் மலையாள எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் இங்கே தமிழில் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்.  நாம் அங்கே போனால் மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கலாமா என்கிறார்கள்.  இதுதான் நிலைமை.   

நேற்று Swell என்ற பாட்காஸ்ட் மூலம் ஆங்கிலத்தில் ஒரு நேர்காணல் நடந்தது.  இதுவரை நான் அளித்த நேர்காணல்களிலேயே எனக்கு மிகவும் திருப்தியான நேர்காணல் இதுதான்.  காரணம்:  எழுத்து என்பது மிகவும் அந்தரங்கமான செயல்பாடு.   பாட்காஸ்டிலும் யார் குறுக்கீடும் இல்லாமல் சிந்தித்து பதில் அளித்து அதைப் பதிவு செய்து அனுப்ப முடிகிறது.  முதலில் கேள்வி வருகிறது.  அது பற்றி நாம் தனியே யோசித்து பதிலைப் பதிவு செய்து அனுப்பினால் அடுத்த கேள்வி வருகிறது.  இப்படி ஆறு கேள்வி, ஆறு பதில்களை நேற்று பதிவு செய்தோம்.  இணையத்தில் என் குரலில் கேட்கலாம்.  ஆங்கிலம்.  அந்த ஆங்கிலம் பற்றி நண்பர் எழுதியிருந்ததால் இவ்வளவையும் எழுத வேண்டியதாயிற்று. 

சச்சின் டெண்டூல்கர் கால்பந்து ஆடி தன் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கு உண்டாகவில்லை.  ஆனால் என்னைப் போன்ற ஒரு தமிழ் எழுத்தாளன் ஆங்கிலத்தில் பேசித்தான் தன்னைத் தானே கொண்டு போய் சேர்க்க வேண்டியிருக்கிறது.  எனக்கு மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் அவர்களோடு சேர்ந்து என்னால் இது போல் பேச முடியாது.  நானும் உரையாடுபவரும் மட்டுமே இருந்தால்தான் என்னால் சகஜமாகவும் சரளமாகவும் பேச முடியும். 

மேலும், பேச்சு என்று வரும்போது ஜெயமோகன், எஸ்.ரா. ஆகிய இருவரையும் சேர்க்கும் நண்பர்கள் என் பெயரைச் சேர்ப்பதில்லை என்பதையும் கவனிக்கிறேன்.  புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு. செல்லப்பா, ந. சிதம்பர சுப்ரமணியன், கோபி கிருஷ்ணன், நகுலன் போன்ற ஆளுமைகளைப் பற்றி காலையில் ஆறு மணியிலிருந்து பத்து மணி வரை இடைவெளி இல்லாமல் பேசியிருக்கிறேன்.  இதில் கோபிக்கும் புதுமைப்பித்தனுக்கும் எட்டு மணி நேர உரை. முதல் உரை நான்கு மணி நேரம்.  அடுத்த பகுதி, மற்றொரு நான்கு மணி நேரம்.  இதெல்லாம் பேச்சு இல்லையா ஐயா? 

மேலும், கவிதை வாசிப்பைப் பொருத்தவரை என் அளவுக்கு வாசிக்கக் கூடியவர்கள் யாருமே இல்லை.  சினிமாவில் வைரமுத்து மட்டுமே இருக்கிறார். 

இந்தக் கட்டுரையின் முடிவில் ரியூ முராகாமியின் ஒரு நேர்காணலை இணைத்திருக்கிறேன்.  பாருங்கள்.  முழு போதையில் பேசுகிறார்.  கையில் சிகரெட் புகைந்து கொண்டே இருக்கிறது.  சிகரெட் முடிந்து போனால் அடுத்த சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொள்கிறார்.  எழுத்தாளன் என்றால் இப்படித்தான் பேட்டி கொடுக்க வேண்டும்.  என்னையும் தமிழில் ஒரு லட்சம் பேர் படித்தால் இப்படித்தான் தமிழில் பேட்டி கொடுப்பேன்.  சப் டைட்டிலில்தான் மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

நான் கடவுள் படத்தில் வரும் பிச்சைக்காரன் போல் இருக்கிறான் தமிழ் எழுத்தாளன்.  ஆங்கிலத்திலெல்லாம் பேசி, அசுரனை சமாளிக்க விமானமெல்லாம் ஓட்டக் கற்றுக்கொண்டுதான் வெளியே போக வேண்டும்.  போவேன்.  அப்போது பாருங்கள், என்ன நடக்கிறதென்று. 

என்னுடைய நேர்காணல்:

https://www.swellcast.com/t/SU5dwMhGZPwSUef

ரியூ முராகாமியின் நேர்காணல்: