சுதந்திர காலம்

வரும் சனிக்கிழமை மதியத்திலிருந்து ஒரு பத்து தினங்கள் எனக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது.  அவந்திகா மும்பை செல்கிறாள்.  சுதந்திர காலத்தில் நான் அதிகம் எழுத மாட்டேன் என்பதுதான் ஒரே வருத்தம்.  என்னால் சிறையில்தான் அதிகம் எழுத முடிகிறது என்பதை அவதானம் செய்து வைத்திருக்கிறேன்.  சுதந்திர காலத்தில் இசை கேட்பேன்.  நான் வாழும் தாலிபான் சிறையில் இசைக்குத் தடை.  வைன் அருந்துவேன்.  சிறையில் வைனுக்கும் தடை.  நண்பர்களுடன் ஃபோனில் பேசுவேன்.  சிறையில் ஃபோனுக்குத் தடை இல்லை.  ஆனால் நான் யாருடனெல்லாம் பேச விரும்புகிறேனோ அவர்களுக்கெல்லாம் தடை.  ஆகக் கடைசியில் எழுத நேரம் இல்லாமல் போய் விடும்.   வெளியே போனால் கொஞ்சம் சாவகாசமாகத் திரும்பலாம்.  இல்லாவிட்டால் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஃபோன் வந்துகொண்டே இருக்கும்.  ஒருநாள் கண்ணனுடன் எழும்பூரில் உள்ள பிகானீர் உணவகத்துக்குக் காலை உணவுக்குச் சென்றேன்.  அங்கே யாரோ சாரூ என்று குரல் கொடுத்தார்கள்.  பார்த்தால் கவிஞர் நரன்.  அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்தவர் என்னைப் பார்த்ததும் அழைத்தார். 

பிகானீரில் அற்புதமான ஆலூ பரோட்டா சாப்பிட்டேன்.  தொட்டுக் கொள்ள கெட்டித் தயிரும் வட இந்திய கடுகெண்ணெய் ஊறுகாயும்.  இந்த மூன்று காம்பினேஷனும் எனக்கு உயிர். 

ஆனால் மசாலா டீ கொடுக்க முக்கால் மணி நேரம் பண்ணி விட்டார்கள்.  மணி ஒன்பது.  அதற்கு மேல் கிளம்பினால் போய்ச் சேர ஒன்பதரைக்கு மேல் ஆகி விடும்.  எட்டரைக்கு ஆஜர் ஆகவில்லையானால் பெரிய ரசாபாசம் ஆகும்.  திரும்பும்போது கண்ணன் ஸ்கூட்டரை பேய் வேகத்தில் ஓட்டிக்கொண்டு வந்தார். அப்படிப் பேய் வேகத்தில் வந்து கொண்டிருக்கும்போது அவந்திகாவிடமிருந்து ஃபோன்.  இத்தனைக்கும் முதல் நாளே கண்ணனோடு போகிறேன், வருவதற்கு முன்னே பின்னே ஆகும் என்று சொல்லிவிட்டுத்தான் வந்திருந்தேன்.  ஆனாலும் மணி ஒன்பதேகால்.  ஃபோன்.  என்னப்பா, வீட்டை வெளியே பூட்டிக் கொண்டு போய் விட்டாய், உடனே வா. 

குரலில் கடும் எரிச்சல் தெரிந்தது.  அவந்திகா திருப்பள்ளி எழுச்சி கொள்ளும் நேரமே எட்டே முக்கால்தான்.  அவளுக்கு வெளியே போகும் வேலையும் இல்லை.  ஆகா, வெளியே பூட்டியது தவறு என்று நினைத்துக்கொண்டேன். இப்படித்தான் ஏதாவது ஒரு தவறு நேர்ந்து விடுகிறது.   

இந்தக் கண்றாவிப் பிரச்சினையெல்லாம் பத்து நாட்களுக்கு இராது.  வெளியே போனால் கொஞ்சம் ஆசுவாசமாகவே திரும்பலாம். 

என்னைச் சந்திக்க வேண்டும் என்று பல நண்பர்கள் பிரியப்படுகிறார்கள்.  அவர்கள் இந்தப் பத்து நாட்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  ஆனால் வெளியே மது அருந்துவதில் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது.  மது அருந்தி விட்டு நடந்தால் என்னதான் இருந்தாலும் நடையில் கொஞ்சூண்டு தடுமாற்றம் தெரியும் இல்லையா?  அதைப் பார்த்து இங்கே உள்ள ஒரு துப்புறியும் புலி (வாட்ச்மேன்) அவந்திகாவிடம் போட்டுக்கொடுத்து விடுவார்.  நான் ஒரு ஐந்து ஆண்டுகள் குடிக்காமல் இருந்தேன்.  அதையே இன்னமும் தொடர்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறாள் அவந்திகா.  அந்த நினைப்புக்குப் பாதகம் வரக் கூடாது இல்லையா? பாருங்கள், கட்டின பெண்டாட்டியைத் தவிர எவன் எவனுக்கோ பயப்பட வேண்டியிருக்கிறது. 

இல்லாவிட்டால் ஒரு வழி இருக்கிறது.  காரில் வரும்போது காரை என் குடியிருப்பின் உள்ளே விட்டு, என்னை லிஃப்ட் அருகே விட்டு விட்டால் ஒரு பயல் பார்க்க மாட்டான்.  இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும். 

ஆமாம், உலகில் வேறு எந்த எழுத்தாளனாவது எழுபது வயதில் இம்மாதிரி பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறானா?  தெரிந்தால் சொல்லுங்கள்.  ஆவலாக இருக்கிறது. 

நான் இந்த 15, 16, 17 தேதிகளில் பெங்களூரில் இருக்க வேண்டும்.  வந்தே பாரத்தில் டிக்கட் போட்டாகி விட்டது.  அறைக்கும் ஏற்பாடு செய்தாகி விட்டது. ஆனால் அவந்திகா ஊருக்குச் செல்வதால் நான் பூனைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் டிக்கட்டை ரத்து செய்து இப்போது 22, 23, 24 தேதிகளில் பெங்களூர் செல்வதற்கு ஏற்பாடு.  22 கிளம்பி, 25 திரும்புவதற்கு வந்தே பாரத்தில் டிக்கட் போட்டிருக்கிறார் நண்பர்.  ஆனால் 21 அன்று அவந்திகா சென்னை திரும்புவாளா என்று சொல்வதற்கில்லை.  22 அன்று திரும்பினால் பயணத்தை அடுத்து இரண்டு வாரங்களுக்கு ஒத்திப் போட வேண்டும். காரணம், மார்ச் 31 அன்று சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டில் பேச தேதி கொடுத்திருக்கிறேன்.  அது முடிந்த பிறகுதான் பெங்களூர் போக வேண்டும்.  இத்தனை சிக்கல் இருக்கிறது.  அப்படி என்ன பெங்களூர் என்றால், அதற்கு ஒரு பத்து பக்கக் கட்டுரை எழுதி வைத்திருக்கிறேன்.  இன்னும் முடியவில்லை.  முடிந்ததும் வெளியிடுவேன்.  சுருக்கமாகச் சொன்னால், லேடி காகா பாடிய ஆல்வேஸ் ரிமம்பர் அஸ் திஸ் வே என்ற பாடலின் ரீமிக்ஸ் இப்போது வைரல் ஆகியிருக்கிறது அல்லவா, அந்தப் பாடலை நானே பாடி ஆட வேண்டும்.  அது பெங்களூர் பப்புகளில்தான் சாத்தியம்.  சென்னையில் உள்ள பப் எல்லாம் பப்பே இல்லை.  இன்னொரு காரணம், நண்பரைச் சந்தித்து அளவளாவ வேண்டும். 

நண்பர்களே, மாற்றுக் கருத்து மாற்றுக் கருத்து என்று சொல்லி என்னை ரணகளமாக்காதீர்கள்.  வாசகர் வட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னே ஒரு முப்பது ஆண்டுகள் சிறுபத்திரிகை எழுத்தாளர்களுடன் மாற்றுக் கருத்திலேயே வாழ்ந்து என் குதமெல்லாம் கிழிந்து கிடக்கிறது.  எனக்கு வாக்குவாதம் பண்ணவும் தெரியாது.  எழுத்தாளர்களுடனான என் இரவுகள் எல்லாமே வெட்டுக்குத்தில்தான் முடிந்திருக்கிறது.  அதேபோல் வாசகர் வட்டமும் இருக்க வேண்டாம்.  என் கருத்தை உங்களால் ஒப்புக்கொள்ள முடியாவிட்டால் போகட்டும்.  ஆனால் எக்காரணம் கொண்டும் உங்கள் கருத்தை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.  எனவே நாம் ஒத்த கருத்துக்கு வருவது என்பது சாத்தியமே இல்லை. 

சீனியுடன் மட்டுமே என்னால் மாற்றுக் கருத்தையும் தாண்டி உரையாட முடிகிறது என்பதை கவனித்து வருகிறேன். அவருக்கு அந்த ‘நேக்கு’ தெரிந்திருக்கிறது.  இரண்டு மணி நேரம் அவருடைய மாற்றுக் கருத்தை முன்வைத்து விவாதிப்பார்.  நான் என்ன ஜெயமோகனா?  எனக்கு வாதம் செய்ய வராது.  சரி சீனி, வேறு ஏதாவது பேசுவோம் என்று சொல்லி விடுவேன்.  ஆனால் மற்றவர்கள் என்னை உசுப்பேற்றி விட்டு விடுகிறார்கள்.  கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பித்து விடுகிறேன்.  யாருக்கு என்ன பயன்? 

எல்லாம் ஒத்து வந்தால் 22, 23, 24 தேதிகளில் பெங்களூரில் சந்திப்போம்.  அல்லது, இங்கே சென்னையில் பத்து நாட்கள் சுதந்திர காலத்தில் இருப்பேன்.  இங்கே சந்திக்கலாம்.  என் வீட்டில் இல்லை.  சவேரா மூங்கிலில்.  (நான் இல்லாதபோது வீட்டுக்கு ஒரு பயல் வரக் கூடாது என்று சொல்லி என்னிடம் சத்தியம் வாங்கியிருக்கிறாள் அவந்திகா.)

இத்தனை இக்கட்டிலும் என்ன கொடுப்பினை என்றால், நான் எழுதுவது எதையும் அவந்திகா படிக்க மாட்டாள். ஆனால் எவனாவது என் நலம் விரும்பி இதை அவந்திகாவின் பார்வைக்குக் கொண்டு போனால் விதி என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழி?