உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் (திருவண்ணாமலைப் பயிலரங்கு)

திருவண்ணாமலையில் அடுத்த மாதம் (ஜூன்) முப்பதாம் தேதி நடக்க இருக்கும் உலக சினிமா பயிலரங்கு அங்கே உள்ள SKP பொறியியல் கல்லூரியில் நடைபெறும். அரங்கத்தின் கொள்ளளவு 300 என்பதால் எண்ணிக்கை பிரச்சினை இல்லை. ஆனால் எத்தனை பேர் வருகிறீர்கள் என்ற விஷயம் சரியாகத் தெரிந்தால்தான் அத்தனை பேருக்கான உணவுக்கு ஏற்பாடு செய்ய முடியும். உணவு வீண் ஆவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, பெயர் கொடுத்து விட்டு வராமல் இருந்து விடாதீர்கள். உங்களால் வர முடியாவிட்டால் உங்களுக்கு பதிலாக வேறு யாரையாவது வேண்டுமானாலும் அனுப்புங்கள். நன்கொடை (குறைந்த பட்சம்) 2000 ரூ. நன்கொடையை இப்போதே அனுப்ப வேண்டும் என்பது கூட அவசியம் இல்லை. நேரில் வரும்போது கூட தரலாம். இப்போதே அனுப்புவதாக இருந்தால் கடைசியில் என் வங்கி விவரத்தைத் தருகிறேன்.

இந்த முறை தலைப்பை மாற்ற மாட்டேன். உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும். The Grammar and Aesthetics of World Cinema.

இப்போது கான் திரைப்பட விழாவில் ஒரு ஹிந்தி சினிமா சிறந்த படத்துக்கான விருதை வென்றிருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் கான் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் இந்தியத் திரைப்படம் ஒன்று திரையிடப்பட்டது இதுதான் முதல் முறை. இது எத்தனை பெரிய அவலம். இந்தியாவில் ஹிந்தியிலும், தெலுங்கிலும், தமிழிலும், மலையாளத்திலும், மராட்டியிலும், வங்காளத்திலும் இவ்வளவு நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டும் இதுவரை கான் போட்டிப் பிரிவில் ஒரு இந்தியத் திரைப்படம் கூட திரையிடப்பட்டதில்லை.

அதை எப்படி வெற்றி கொள்வது என்பதற்கான விடைதான் என் பயிலரங்கம். இங்கே இந்தியாவில் எத்தனைதான் நல்ல சினிமா உருவாக்கப்பட்டாலும் அது ஐரோப்பிய சினிமா இலக்கணத்துக்குள் வருவதில்லை என்பது ஒரு முக்கியமான காரணம். அப்படியானால் ஐரோப்பிய சினிமா இலக்கணம் என்பது என்ன?

இது போன்ற பிரச்சினைகளுக்கான விடை என் பயிலரங்கில் அளிக்கப்படும். அந்த வகையில் இந்தப் பயிலரங்கில் பயிற்சி பெற்ற ஒருவராவது அடுத்த பத்தாண்டுகளில் கான் திரைப்பட விழாவில் தன் பெயரைப் பதிவு செய்வார் என்று உறுதியாக நம்புகிறேன். மேலும், பயிலரங்கின்போது பவர் பாயிண்ட் மூலமும் விளக்கங்களை அளிப்பேன். அது தவிர, சில குறிப்பிட்ட காட்சிகளைத் திரையிட்டும் காண்பித்து விளக்குவேன்.

கான் திரைப்பட விழா மட்டும் நம் இலக்கு அல்ல. உலக சினிமா வரைபடத்தில் தமிழ் சினிமா வர வேண்டும் என்பதே இலக்கு. தமிழ் சினிமாவில் பொழுதுபோக்கு அம்சங்களுடனும் நல்ல சினிமா உருவாக வேண்டும் என்பது மற்றொரு இலக்கு.

மனுஷ்யபுத்திரனின் அண்ணா நூலகப் பயிலரங்கில் நான் பேசிய ஒன்றரை மணி நேர உரையைத் திரும்பவும் பேச மாட்டேன். அதை நீங்கள் கேட்ட பிறகே இந்தப் பயிலரங்கிற்கு வரலாம்.

ஹாலிவுட் + இந்தியா, ஐரோப்பா, தென்னமெரிக்கா ஆகிய மூன்று வகை சினிமா பற்றி என் பேச்சில் விளக்கினேன். இந்தத் திருவண்ணாமலைப் பயிலரங்கில் புதிய சினிமா என்ற நான்காவது வகை பற்றியும் பேசுவேன். இந்த முறை ஏழு மணி நேரம் கிடைக்கும் என்பதால் விரிவாக விளக்கிப் பேசலாம்.

எனக்கும் கமலுக்கும் மட்டும்தான் தெரியும் என்று நான் சொன்னது பற்றிப் பலரும் காயப்பட்டு விட்டார்கள் என அறிந்தேன். அத்தனை பூதாகரமான ஈகோவா என்ன? அந்த ஒன்றரை மணி நேர உரை ஒரு பொக்கிஷம் என்பதை அதைக் கேட்ட அனைவரும் அறிவர். அதற்கு மேலும் அதில் ஒரு வாக்கியத்தை எடுத்து வைத்துக் கொண்டு ஈறும் பேனும் பார்த்துக்கொண்டிருப்பது நல்லவர்களுக்கு அழகு அல்ல. கலைஞர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாததா? உலகின் தர்க்க வரையறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள். உணர்ச்சிவசப்பட்ட நிலையில், பித்தநிலையிலேயே வாழ்பவர்கள். எனவே எனக்கும் கமலுக்கும் மட்டும்தான் தெரியும் என்று சொன்னால் அது தர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு ecstatic statement என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு இருப்பவர்கள் மட்டுமே என் பேச்சைக் கேளுங்கள், என் எழுத்தை வாசியுங்கள். மற்றவர்கள் நெருங்கினால் அவர்கள் புண்படத்தான் செய்வார்கள். அவர்கள் புண்படாமல் இருப்பதற்காக என்னால் எழுத இயலாது. உங்கள் ஈகோவை விடாமல் என்னை அணுகினால் நீங்கள் எத்தனைதான் உருண்டு புரண்டாலும் என்னைப் போன்ற கலைஞனிடமிருந்து எதுவும் கற்றுக் கொள்ளவும் முடியாது. உங்கள் ஈகோவை வாசலிலேயே விட்டுவிட்டு வந்தால்தான் என்னிடமிருந்து ஏதேனும் பயில முடியும். இல்லை, என் தையல்காரருக்கே ரோச்சாவைத் தெரியும் என்றால், அதுதான் உங்களின் இடம். என் இடம் உங்களுக்கானது அல்ல.

எனக்கும் கமலுக்கும் மட்டும்தான் தெரியும் என்றால், நான் அலெஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கியை வெறுமனே ‘பார்க்கவில்லை’ என்று அர்த்தம். ஹொடரோவ்ஸ்கியின் தத்துவத்தை நான் பயின்றிருக்கிறேன். ஹொடரோவ்ஸ்கி வெறும் சினிமா கலைஞன் அல்ல. அவன் ஒரு தத்துவவாதி. அந்தத் தத்துவம் பற்றி இங்கே தமிழ்நாட்டில் பேசக் கூடிய ஆட்கள் இரண்டு மூன்று பேர்தான் இருப்பார்கள். அது சினிமா துறை அல்ல. தத்துவத் துறை. (ஜெயமோகன் ஹொடரோவ்ஸ்கி பார்த்திருக்கிறாரா என்று கேட்க வேண்டும். இல்லை என்றால் இரண்டு மூன்று பேர் அல்ல. ஒரே ஒருத்தர்தான். கமலுக்கு ஹொடரோவ்ஸ்கி படம் தெரியும். அதன் தத்துவம் தெரிய வாய்ப்பு இல்லை. வாய்ப்பு உள்ள மற்றொருவர் ஜெயமோகன் மட்டுமே.)

நாற்பத்தைந்து ஆண்டுகளாக நான் பார்த்துக்கொண்டிருக்கும் உலக சினிமாவின் சாரம்தான் அண்ணா நூலகத்தில் நான் ஆற்றிய அந்த உரை. அது எல்லாமே கூகிளில் இருக்கும்தான். ஆனால் நான் இதையெல்லாம் 1980இலேயே என்னுடைய லத்தீன் அமெரிக்க சினிமா நூலில் எழுதிவிட்டேன். க்ளாபர் ரோச்சா பற்றி உங்கள் தெரு மளிகைக்கடைக்காரருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் ரோச்சா பற்றி 1980இல் நூல் எழுதியிருக்கிறேன் என்பதுதான் முக்கியம். மேலும், மளிகைக்கடைக்காரர் க்ளாபர் ரோச்சாவின் பெயரைச் சொல்லுவார். நான் ரோச்சாவின் அரசியலைச் சொல்லுவேன். காரணம், 1980இலிருந்து ரோச்சாவைப் பயின்று கொண்டிருக்கிறேன். நீங்கள் அப்போது பிறந்துகூட இருக்க மாட்டீர்கள். என் டாக்டர் நண்பர் ஸ்ரீராம் சொல்கிறார்: In medicine, they say, “the eyes see what the mind knows.”

இன்னொரு முக்கியமான விஷயம், அலெஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கி, க்ளாபர் ரோச்சா பற்றி என் கட்டுரைகளைத் தவிர தமிழில் வேறு கட்டுரைகளே இல்லை. உங்கள் தெரு மளிகைக்கடைக்காரர் அது பற்றி ஒன்றும் எழுதவில்லை என்று நினைக்கிறேன். அவர் எழுதும் வரை நான் எனக்கும் கமலுக்கும் மட்டும்தான் ஹொடரோவ்ஸ்கியைத் தெரியும் என்றே சொல்லிக்கொண்டிருப்பேன்.

Name dropping பற்றி ஒரு சம்பவம் சொல்கிறேன். 1975இல் என் இருபத்து இரண்டாவது வயதில் நடந்தது. சுஜாதாவின் ஒரு கதையில் வசந்த் கணேஷிடம் நான் இப்போது ஜெர்மன் தத்துவவாதி நியாட்ஷேவின் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லுவான். அதாவது, புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ள ஒருவன் நியாட்ஷேவின் பெயரைச் சொல்வது அப்போது அந்தக் காலகட்டத்தில் ஒரு மோஸ்தர் என்ற அளவுக்கு சுஜாதாவுக்குத் தெரிந்திருக்கிறது. அப்போது அவர் நியாட்ஷேவின் சரியான ஜெர்மன் உச்சரிப்பு என்ன என்பது பற்றிக் கவலைப்படவில்லை. நேம்ட்ராப்பிங் மட்டும் போதும் என்று நினைத்து விட்டார் போலும். நான் அப்போது தஞ்சாவூரில் இருந்தேன்.

ஏயிலிருந்து ஸீ வரை இருபத்து நாலு வால்யூம்கள் இருக்கும். என்ஸைக்ளோப்பீடியா. அதில் ”என்” வால்யூமை எடுத்து மூன்று நாட்கள் தேடி Nietzscheவின் பெயரைக் கண்டுபிடித்து, அதன் பிறகு நியாட்ஷேவின் புத்தகங்களைக் கண்டு பிடித்துப் படித்து, நியாட்ஷேவை என் ஆசானாக வரித்துக் கொண்டேன். இன்று வரை நியாட்ஷேதான் என் முக்கியமான ஆசான். தில்லி சென்ற பிறகுதான் அது நியாட்ஷே இல்லை, நீட்ஷே என்றும் தெரிந்தது. ஆக, சுஜாதாவின் ஒரே ஒரு நேம் ட்ராப்பிங் எனது இலக்கிய வாழ்வையே தீர்மானித்தது.

நீ பாவம் தம்பி. உனக்கு கூகிளே போதும். நான் தேவையில்லை. ஆனால் மற்றவர்களுக்குத் தேவை. க்ளாபர் ரோச்சா பெயர் கூகிளில் இருக்கும். ஆனால் அதை உனக்குச் சொல்வதற்கு ஒரு ஆசான் தேவை. ஆசானை அவமதிப்பவருக்கு ஆகாரம் கிடைக்காது. அது விதி.

இப்படியெல்லாம் எழுத எனக்கு ஆயாசமாக இருக்கிறது. என் நாற்பதாண்டுக் கால சினிமா அனுபவத்தை ஒன்றரை மணி நேரத்தில் சாரமாகப் பிழிந்து இலவசமாகத் தருகிறேன். இதற்கு என் கட்டணமாக ஒரு லட்சம் ரூபாய் வாங்க வேண்டும். மனுஷ் எங்கிருந்து தருவார்? அவரே தன் உழைப்பையும் தன் குழுவினரின் உழைப்பையும் மட்டுமே மூலதனமாகப் போட்டு அந்தப் பயிலரங்கை நடத்தினார். அதில் போய் நான் எங்கே ஒரு லட்சம் கேட்பது?

இந்த லெட்சணத்தில் என் ஒன்றரை மணி நேர உரையில் ஒரே ஒரு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு கிடந்தால் என்ன செய்ய? ஆத்மாநாம் போன்றவர்கள் இந்தச் சூழலில்தான் தற்கொலை செய்து கொண்டார்களோ எனத் தோன்றுகிறது. காலையில் மனுஷ்யபுத்திரன் சொன்னார். தன் சக தொழிலாளியை அவமதிப்பதில் தமிழ் எழுத்தாளனை யாருமே மிஞ்ச முடியாது என்று. எனக்கு ஆயுள் கெட்டி என்கிறார்கள் ஜோதிடர்கள். ஆனாலும் இந்தக் கச்சடாவையெல்லாம் நினைத்துகொண்டு கிடந்ததில் நேற்று இரவு உறக்கம் இல்லை. காலையில் கடும் நெஞ்சு வலி. நெஞ்சு வலியோடு நின்றால் பிரச்சினை இல்லை. உடம்பெல்லாம் வேர்த்து விட்டது. மோனிட் 20 என்ற மாத்திரையைச் சப்பியபடி உள்ளாடை அணியாமல் பேண்ட் சட்டையை மாட்டினேன். பணத்தையும் ஃபோனையும் காவேரி மருத்துவமனையில் கொடுத்த என் மருத்துவ சரித்திரத்தையும் எடுத்துக்கொண்டேன். பிறகு எதற்கும் இருக்கட்டும் என்று அமைதியாக அமர்ந்து ஒரு மணி நேரம் தியானம் செய்தேன். சரியாகி விட்டது. மருத்துவமனைக்குப் போகவில்லை. சோதிடர் பேச்சையும் மீறி நான் காலத்தில் சங்கமித்தால் இந்த வக்கிரமும் வன்மமும் பிடித்த தமிழ் இலக்கியச் சூழல்தான் காரணமாக இருக்கும்.

தன்னடக்கம் என்பது ஒரு பொய். பாசாங்கு. அந்தப் பாசாங்கும் சாமர்த்தியமும் நமக்கு வராது. “உங்களுக்கும் உங்கள் மளிகைக்கடைக்காரருக்கும் ஏற்கனவே ஹொடரோவ்ஸ்கியைத் தெரிந்திருக்கும். இருந்தாலும் நானும் சொல்கிறேன்” என்று தளுக்கினால் எல்லோருடைய ஈகோவையும் titilate செய்தது போல் இருக்கும். என்னால் அம்மாதிரி முறைவாசலெல்லாம் செய்ய முடியாது. கலைஞனைக் கலைஞனாகப் புரிந்து கொள்ள முடிந்தவர்கள் மட்டுமே என்னை அணுகுங்கள்.

என் பேச்சில் தெளிவாகக் குறிப்பிட்டேன். கிட்டத்தட்ட நூறு மணி நேரம் – ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் என்று ஒரு மாதம் கொடுக்க வேண்டிய லெக்சரை நான் ஒரு மணி நேரத்தில் தருகிறேன் என்று. வெறும் பெயர்களைத்தான் தருகிறேன் என்றும் சொன்னேன். ஆனாலும் ஒவ்வொரு இயக்குனர் பற்றியும் அவரது சாரத்தைக் கொடுத்திருக்கிறேன். அதனால்தான் என் உரையை ஐந்து நாளில் பத்தாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

இவையெல்லாம் குறைபாடுகள் என்றால், இவற்றை நம்முடைய திருவண்ணாமலை பயிலரங்கில் தவிர்ப்போம்.

திருவண்ணாமலை பயிலரங்கில் கலந்து கொள்வதற்காக ஒரு நண்பர் நன்கொடையாக 10000 ரூ. அனுப்பியிருக்கிறார். இன்னொரு நண்பர் 30000 ரூ. அனுப்பியிருக்கிறார். தொகையைப் பார்த்து பயந்து விடாதீர்கள். குறைந்த பட்ச நன்கொடை 2000 ரூ. சில நண்பர்கள் இரண்டு மூன்று நண்பர்களுக்கு ஸ்பான்ஸர் செய்யலாம். மிக நிச்சயமாக கான் போன்ற திரைப்பட விழாக்களுக்குத் தமிழ்ப் படங்கள் செல்வதற்கும் போட்டியிடுவதற்கும் இப்பயிலரங்கு உதவிகரமாக இருக்கும். தமிழ்நாட்டில் நல்ல சினிமா என்றால் என்ன என்ற தெளிவு பிறக்கும்.

நன்கொடையை இப்போது அனுப்ப இயலாவிட்டால் பெயர் மட்டும் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளுங்கள். நன்கொடையை நேரில் தரலாம். ஆனால் பெயர் கொடுத்துவிட்டு வராமல் இருக்காதீர்கள். உணவு வீணாகும்.

விவரங்களுக்கு எழுதுங்கள்: charu.nivedita.india@gmail.com

என் வங்கிக் கணக்கு:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai