மதிப்பீடுகளின் வீழ்ச்சி

நான் பாட்டுக்கு நான் உண்டு என் ஜோலி உண்டு என்று கிடக்கிறேன்.  ஆனாலும் சில நண்பர்கள் ’ஏன்டா சும்மா கிடக்கிறாய், எழுந்து ஆடு’ என்கிறார்கள்.  ஏற்கனவே அந்த நண்பரிடம் ’எனக்கு எதுவும் எழுதாதீர்கள்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  ஆனாலும் அவர் கேட்பது இல்லை.  என் மேலும் தப்பு இருக்கிறது.  கடிதத்தைப் பார்த்து அதைக் குப்பையில் போட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே? அதுதான் நம்மிடம் இல்லை.  அப்படி இருந்திருந்தால் எப்போதோ உருப்பட்டிருப்பேனே? 

Kamakoti, The Director of IIT belongs to a family of Vedic Brahmins from Sri Sankara Math Kancheepuram as the name itself shows.   He could have chosen a Sanjay Subramanian, but he chose Ilayaraja.

A befitting reply to T.M. Krishna.

V.  Balasubramanian.

இந்தக் கடிதத்தில் இருக்கும் அரசியலும், இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் காரியத்தில் உள்ள அரசியலும்தான் நான் இந்தக் கட்டுரையை எழுதக் காரணம். 

பிராமண சாதியுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் பிராமணர்கள் என்னை பிராமண வெறுப்பாளன் என்கிறார்கள்.  முஸ்லிம்கள் என்னை ஹிந்துத்துவா என்றும், பிராமண அடிவருடி என்றும் சொல்கிறார்கள்.  ஹிந்துத்துவர்கள் என்னை இஸ்லாமியச் சார்பாளன் என்கிறார்கள்.  கம்யூனிஸ்டுகள் என்னை செக்ஸ் எழுத்தாளன் என்கிறார்கள்.  ஆக மொத்தத்தில் நான் எல்லோராலும் வெறுக்கப்படுகின்றவனாக இருக்கிறேன். 

(சமீபத்தில் கூட கர்னாடக சங்கீதத்தின் சே குவேராவாகிய டி.எம். கிருஷ்ணா விருது வாங்கியபோது அவரை விமர்சித்து எழுதினேன்.  அப்போது எல்லா பெரியாரியவாதிகளும் என்னை ஹிந்துத்துவா என்று திட்டினார்கள்.)

காரணம் என்னவென்றால், நான் எப்போதுமே ஒரே கட்சியைச் சார்ந்தவனாக இருப்பதில்லை.  எந்தெந்தப் பிரச்சினைக்கு எப்படி எப்படி எதிர்வினை ஆற்ற வேண்டுமோ, அப்படி அப்படி நிலைப்பாடு எடுப்பதால்தான் மேலே கண்ட குழப்படியான புரிதல்கள் உண்டாகின்றன.  உதாரணமாக, ஜம்மு கஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து இருக்கக் கூடாது, எல்லா மாநிலமும் சமம்தான் என்ற நிலைப்பாடு உள்ளவன் நான்.  இதை எழுதினால் நான் ஹிந்துத்துவா.  இந்தியாவில் கலாச்சாரத் தளத்தில் ஆதிக்கம் செலுத்துவது பிராமணர்கள் என்பது என் அபிப்பிராயம்.  இதை எழுதினால் நான் பிராமண எதிர்ப்பாளன். 

அந்த அர்த்தத்தில் பார்த்தால் இப்போது எழுதப் போகும் கட்டுரையை பிராமணர்கள் கடுமையான பிராமண வெறுப்பைக் கக்கும் கட்டுரை என்று கருதலாம். அப்படி நினைப்பவர்களுக்கு ஒரு விஷயம்.  நான் என் குருநாதர்களில் ஒருவராகக் கருதுபவர் மஹா பெரியவர் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். 

இப்போதைய மெட்ராஸ் ஐஐடி இயக்குனர் காமகோடி காஞ்சி காமகோடி மடத்துக்கு நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.   இந்த ஐஐடி ஒரு சஞ்சய் சுப்ரமணியத்தின் பேரால் இல்லாமல் இளையராஜாவின் பெயரால் ஒரு இசை மையத்தைத் தொடங்கியிருக்கிறது.  (IITM – Maestro Ilaiyaraaja Centre For Music Learning & Research)

ஐஐடி ஏன் இளையராஜாவின் பெயரால் இசை மையத்தைத் தொடங்கியது என்றால், இளையராஜா ஒரு தலித் என்பதால் அல்ல.  அவர் தலித் சமூகத்தில் பிறந்து பிறகு தன் வாழ்முறையால் பிராமணராக மாறியவர் என்பதால்.  ஆனால் சஞ்சய் சுப்ரமணியம் பிறவியிலேயே பிராமணர். அவரை விட தலித்தாகப் பிறந்து பிறகு பிராமணராக மாறியவர் முக்கியம் இல்லையா?  செம்மங்குடி சீனிவாச அய்யரின் மரியாதையைப் பெற்ற இசைக் கலைஞர் இளையராஜா என்பதன் காரணம் என்ன?  இளையராஜா பிராமணராக மாறி விட்டார் என்பதுதான்.

அது மட்டும் அல்ல.  தன்னை தலித் என்று குறிப்பிடுபவர்கள் மீது வழக்குத் தொடுக்கும் வழக்கம் உள்ளவர் இளையராஜா.  புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த கே.ஏ. குணசேகரன் இளையராஜா பற்றி ஒரு நாமாவளிப் புத்தகம் எழுதியிருக்கிறார்.  அதில் இளையராஜாவை தலித் என்று குறிப்பிட்டு விட்டதற்காக குணசேகரன் மீது வழக்குத் தொடுத்து அவரை புதுச்சேரியிலிருந்து சென்னை நீதிமன்றத்துக்குப் பல முறை இழுக்கடித்தவர் இளையராஜா.

இப்படி தனது எல்லா செயல்பாடுகளிலும் தன் தலித் அடையாளத்தை மறுதலித்து, பிராமண மதிப்பீடுகளை உயர்த்திப் பிடிப்பவர் இளையராஜா.    

நான் சந்தித்த நூற்றுக்கணக்கான பிராமணர்களும் இளையராஜா என்ற பெயரைக் கேட்டதுமே கைகால் நடுங்க, ரோமாஞ்சனம் துலங்க கண் கலங்குவதன் காரணம், இளையராஜாவின் இசை அல்ல.  அவரது பிராமண மதிப்பீடுகள்தான். அவர் எழுதி இசையமைத்த ரமண மாலை அவரது பிராமண வாழ்வுக்கு மற்றொரு உதாரணம்.   இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 

இளையராஜா மட்டும் தனக்குப் பிடித்த உணவு பீஃப் பிரியாணி என்று சொல்லிப் பார்க்கட்டும்.  எல்லா பிராமணர்களும் அவரிடமிருந்து விலகி விடுவார்கள்.  இதே காரணத்தினால்தான் பிராமண சமூகம் ரஜினியை ஆதரிக்கிறது; கமல்ஹாசனை வெறுக்கிறது.  ஏனென்றால், கமல் எல்லா இடங்களிலும் பிராமண மதிப்பீடுகளை விமர்சிக்கிறார்.  சமயங்களில் இகழ்கிறார்.  பார்ப்பான் என்கிறார்.  நான் பெரியாரிஸ்ட் என்கிறார்.  நான் நாத்திகன் என்கிறார்.  அதனால்தான் பிராமணர்களுக்கு கமலைப் பிடிப்பதில்லை, ரஜினியைப் பிடிக்கிறது. ரஜினியின் ஆன்மீகம், ராகவேந்திரா பக்தி எல்லாமும் பிராமண மதிப்பீடுகளோடு இணைத்துக் காணப்பட வேண்டியதுதான்.

கற்பனை செய்து பாருங்கள்.  இளையராஜாவும் பா. ரஞ்சித் போல சிகையலங்காரம் செய்து கொண்டு, தன்னுடைய எல்லா செயல்பாடுகளிலும் தலித் அடையாளத்தை முன்னிறுத்தியபடி இருந்தால் பிராமணர்கள் இளையராஜாவைக் கொண்டாடுவார்களா?  இளையராஜாவை பிராமணர்கள் கொண்டாடுவதன் காரணம், பிராமணர்கள் தாங்கள் இழந்து விட்ட மதிப்பீடுகளை இளையராஜா ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதுதான். 

பிராமணர்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் குடியேறி விட்டார்கள்.  ஒரே காரணம்.  டாலர்.  இப்போது அவர்களின் பேரப் பிள்ளைகள் அமெரிக்கப் பள்ளிகளில் மாட்டுக் கறி தின்கிறார்கள்.  அதை பிராமணர்களால் தடுக்க முடியாது.  அதன் காரணமாகவே, மாட்டுக் கறியை நிராகரித்து விட்டு, நெற்றியில் குங்குமப்பொட்டுடன் ரமண மாலை பாடிக் கொண்டிருக்கும் இளையராஜாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது பிராமண சமூகம்.  அதனால்தான் இளையராஜாவின் பெயரால் ஐஐடியில் இசை மையம் திறக்கிறார் காஞ்சி சங்கர மடத்துக்கு நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்த திரு. காமகோடி.    

இதே காரணத்தினால்தான் இதற்கு முன்பு அப்துல் கலாமையும் கொண்டாடித் தீர்த்தது பிராமண சமூகம்.  அப்துல் கலாமும் இளையராஜாவைப் போலவே பிராமண மதிப்பீடுகளை ஏற்று, ஒரு பிராமணனைப் போலவே வாழ்ந்தவர் – முக்கியமாக, சைவ உணவுக்காரர் – என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். 

என் கேள்வி என்னவென்றால், இளையராஜா கைலியைக் கட்டிக்கொண்டு, எனக்குப் பிடித்த உணவு பீஃப் பிரியாணி என்றும், பிடித்த பானம் சாராயம், கஞ்சா என்றும் சொன்னால் ஐஐடி இயக்குனர் திரு. காமகோடி இளையராஜாவின் பெயரால் ஐஐடியில் இசை மையம் அமைப்பாரா?

இதில் மற்றொரு பிரச்சினை என்னவென்றால், தமிழ்நாட்டில் மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கும் கல்வி நிறுவனமான ஐஐடி இம்மாநிலத்தையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் லும்பன் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாக ஆகி விட்டதுதான்.  தியாகராஜரின் பஞ்சரத்னா கீர்த்தனைகள் உலகப் புகழ் பெற்றவை.  ஆனால் அதை விட உலகப் புகழ் பெற்றவை இசைஞானியின் பஞ்ச ரத்னா கீர்த்தனைகள் என்று நினைத்துவிட்டது மெட்ராஸ் ஐஐடி என்பது இந்த நிலத்தின் துரதிர்ஷ்டங்களில் ஒன்று.  இசைஞானியின் பஞ்சரத்னா:      

மச்சானைப் பாத்தீங்களா மலவாழத் தோப்புக்குள்ளே…

நேத்து ராத்திரி யம்மா…

நெலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…

குருவி கொடஞ்ச கொய்யாப் பழம் கொண்டு வந்து தரவா? 

இந்த சாகாவரம் பெற்ற பஞ்ச ரத்னா கீர்த்தனைகளுக்காகத்தான் ஐஐடி இயக்குனர் திரு காமகோடி இளையராஜா பெயரில் இசை மையம் ஆரம்பித்திருக்கிறாரா?  அதே காரணத்தினால்தான், ”கடந்த இருநூறு ஆண்டுகளாக மொஸார்ட் போன்ற ஒரு இசைக் கலைஞர் தோன்றவில்லை.  இந்த இசை நிறுவனத்தின் மூலம் இருநூறு இளையராஜாக்கள் தோன்ற வேண்டும்” என்று இளையராஜாவே திருவாய் மலர்ந்திருக்கிறார் போலும்! 

மொஸார்ட்டையும் தன்னையும் ஒப்பிட்டுக் கொள்ளும் ஒரு மௌடீகத்தை உலகத்தில் வேறு எங்குமே காண முடியாது என்பது ஒரு பக்கம் இருக்க, இளையராஜா இதுவரை இசைக்குச் செய்தது என்ன?  பல நூறு குப்பைப் படங்களுக்கு இசை அமைத்ததுதானே?  மணி ரத்னம், கமல்ஹாசன் ஆகிய இருவரைத் தவிர இளையராஜா வேறு என்ன தரமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்?  தமிழ் சினிமா என்ன உலக சினிமா அரங்கில் பெயர் பெற்றிருக்கிறதா?  மலையாளம், வங்காளம், கன்னடம், மராத்தி, ஹிந்தி போன்ற மொழிகளாவது உலக சினிமா அரங்கில் தங்கள் இருப்பை நிறுவியிருக்கின்றன.  அதிலும் சத்யஜித் ரே, ரித்விக் கட்டக் ஆகிய இருவர் மூலம் உலகம் முழுவதிலும் மகத்தான இடத்தைப் பெற்றிருக்கிறது வங்காள சினிமா.  ஆனால் தமிழ் சினிமாவோ உலக அரங்கில் வெறும் கேலிப் பொருளாகத்தானே கருதப்படுகிறது? 

கடந்த இருநூறு ஆண்டுகளில் மொஸார்ட் போன்ற ஒரு இசை மேதை தோன்றாமல் இருக்கலாம்.  ஆனால் இளையராஜா இங்கே வேலை செய்து கொண்டிருக்கும் அதே சினிமாத் துறையில்தான் ஹாலிவுட்டில் Philip Glass, Hans Zimmer போன்ற மேதைகள் தோன்றியிருக்கிறார்கள்.  The Hours என்று ஒரு படம்.  ஃபிலிப் க்ளாஸ் இசையமைத்தது.  அப்படி ஒரு இசையை இளையராஜா தான் இசையமைத்த ஒரு படத்திலாவது கொடுத்திருக்கிறாரா?  அதற்கான ஒரு படம் அவருக்குக் கிடைத்திருக்கிறதா?  The Hours மாதிரி ஒரு படம் தமிழில் வந்திருக்கிறதா?  அதேபோல் இன்னொரு படம் Inception.  அதற்கு இசையமைத்தவர் ஹான்ஸ் ஸிம்மர்.  இளையராஜாவுக்கு இசை தெரியும்.  ஆனால் சினிமா தெரியுமா?  சினிமா தெரியாமல் சினிமாவுக்கு எப்படி இசையமைக்க முடியும்?  நல்ல சினிமா என்றால் என்ன என்று தெரிந்தால்தானே The Hours, Inception போன்ற படங்களைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும்? அது புரிந்தால்தானே அதற்கேற்ற இசையைத் தர முடியும்?

அறிவுக்கான ஸ்தாபனங்களும் தமிழ்நாட்டின் லும்பன் கலாச்சாரத்துக்கு ஏற்ப தங்களைத் தரம் தாழ்த்திக் கொள்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.  இனிமேல் மெட்ராஸ் ஐஐடி நடிகர் விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுப்பது பற்றி யோசிக்கலாம்.