உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 13

நேற்று குறிப்பிட்ட திரைப்படம் எழுபதுகளின் முற்பகுதியில் வெளிவந்தது. உலகின் மிக முக்கியமான சினிமா விமர்சகர்கள் அந்தப் படத்தை உலக சினிமாவின் இருபது சிறந்த படங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார்கள். அதை நாம் முழுமையாகத்தான் பார்க்க வேண்டும். ஆனால் நேரம் போதாது. அதனால் சிறிது சிறிதாக வெட்டினோம். இறுதிக் காட்சி மட்டும் பத்து நிமிடம். மொத்தமாக முப்பது நிமிடம். இந்தப் படம் சினிமா பற்றிய நம்முடைய கருத்துகள் அவ்வளவையும் மாற்றக் கூடியது. அதன் இலக்கணம் அந்தப் படத்தைப் பார்த்ததுமே உங்களுக்குப் புரிந்து விடும். உங்களால் அப்படி ஒரு படத்தை எடுக்க முடியும் என்பதை நான் தீர்மானமாகச் சொல்கிறேன். எப்படி என்று பயிலரங்கில் விளக்குகிறேன். இந்தப் படத்தை நான் 1978இல் பார்த்தேன். மீண்டும் இப்போதுதான் பார்க்கிறேன். ஆனால் இப்போது பார்ப்பதற்கு சுமார் பன்னிரண்டு மணி நேரம் ஆனது. உங்களுக்கு விளக்குவதற்காக வசனங்களை ஒரு தாளில் எழுதிக்கொண்டேன். ஆங்கில சப்டைட்டில் இருந்தாலும் அதை டவுன்லோடு செய்து எடிட் பண்ணும்போது ஆங்கில சப்டைட்டில் காணாமல் போய் விடுகிறது.

இதற்கிடையில் வளன் அரசுவும் அருணாசலமும் மற்றும் சில நண்பர்களும் பயிலரங்கில் கலந்து கொள்ள விரும்புபவர்களுக்குப் பணம் செலுத்தியிருக்கிறார்கள். இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது பற்றி வளன் அரசு ஃபேஸ்புக்கில் எழுதியிருப்பதை இங்கே பகிர்கிறேன்.

சாருவின் உலக சினிமா பயிலரங்கிற்கு என் சார்பாக நண்பர்கள் செல்லலாம். (முற்றிலும் இலவசம்) சாருவின் உலக சினிமா பயிலரங்கில் நான் zoom வழியாக பங்கேற்பேன். ஆனால் அது நேரில் சென்று கற்பது போல இருக்காது. ஆகவே என் சார்பாக நண்பர்கள் யாராவது சென்று பங்கேற்கலாம். உதவி இயக்குனர்கள் அல்லது மாணவர்கள் அல்லது சினிமா ஆர்வம் உள்ளவர்கள் யாராயினும் கீழ்கண்ட நடைமுறையில் உங்கள் பெயரை பதிவு செய்து இலவசமாக சென்று உலக சினிமா இலக்கணத்தை கற்றறிந்து வரலாம். தொடர்பு கொள்ளும் போது என் பெயரை சொல்லவும். தொடர்புக்கு : charu.nivedita.india@gmail.com 

phone: 95975 00949

சாருவின் சினிமா தேர்வு தனித்துவமானது. சாரு அறிமுகப்படுத்தி நான் பார்த்த சில படங்கள் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. உதாரணமாக: Aguirre, the wrath of God என்றொரு படம். தங்கப்புதையலை தேடிச் செல்லும் இராணுவப்படை. தங்க வேட்டையில் போகிற போக்கில் காடுகளில் வாழும் பழங்குடியினரை மதம் மாற்றுவதும் அவரகளது வேலை. அதற்காகவே அந்தப் படையில் ஒரு பாதிரியார் இருப்பார். பழங்குடி இளைஞன் ஒருவனுக்கு பைபிளை கொடுத்து ‘இது கடவுளின் வார்த்தைகள்’ என்பார். ஆனால் பழங்குடிவாசிக்கு வார்த்தை என்றால் சப்தம் மட்டுமே. எழுத்துருக்கள் குறித்த அறிமுகம் இருக்காது. எனவே பைபிளை காதில் வைத்துப் பார்த்துவிட்டு எந்த சப்தமும் வராததால் தூக்கி எறிந்துவிடுவான். உடனே மதத்தை நிந்தித்ததற்காக அந்தப் பழங்குடி இளைஞன் சுட்டுக் கொல்லப்படுவான். பல வருடங்களுக்கு முன் பார்த்த காட்சி இன்னமும் மறக்கவில்லை. நூறு புத்தகங்கள் கற்பிக்க வேண்டிய மத சகிப்புத்தன்மையை ஒரே காட்சியில் அந்தப் படம் கற்றுக் கொடுத்துவிட்டது. இதே போல பல படங்களை சொல்லலாம். La Strada, The last temptation of Christ, Pan’s Labyrinth, Life of Pi, Amadeus போன்ற படங்கள் நம் சிந்தனைப் போக்கை மாற்றி அமைக்கும் படங்கள். இவை எல்லாமுமே சாருவின் அறிமுகத்தோடு பார்த்த படங்கள். சாருவின் எழுத்துகள் மட்டுமல்ல; சினிமா ரசனையும் வாழ்க்கையை மாற்றி அமைக்கக் கூடியது. ஆகவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

***

ஜூன் 30 காலை ஒன்பதரை மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் என்ற தலைப்பில் பயிலரங்கு நடைபெறும். தேநீர், மதிய உணவு மற்றும் குறிப்புகள் எடுப்பதற்கான குறிப்பேடும் பேனாவும் வழங்கப்படும்.