என்ன செய்யலாம்?

ஆறு மாதமாகி விட்டது, பர்ஸைத் தொலைத்து. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆக்ஸிஸ் வங்கிக்கு நேராகச் சென்று புதிய டெபிட் கார்டுக்கு விண்ணப்பித்து விட்டு வந்தேன். இருபது நாட்கள் ஆகியும் கார்ட் வரவில்லை. பிறகு மீண்டும் நேரில் சென்று விசாரித்தேன். உங்கள் விண்ணப்பம் நிலுவையில் இருப்பதால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்ற தகவல் வந்தது. சரி என்று ஒரு மாதம் கழித்துச் சென்றேன். புதிய கார்ட் தருவதற்கு என் முகவரி போன்றவற்றைக் குறித்துக்கொண்டார்கள். ஒரு வாரத்துக்குள் கார்ட் வரும் என்று தகவல். பத்து நாட்கள் ஆயிற்று. வரவில்லை. இதற்கிடையில் ஐசிஐசிஐ வங்கியிலும் புதிய கார்டுக்கு விண்ணப்பம் கொடுத்தேன். மூன்றே நாட்களில் கார்டை வந்து வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ளும்படி ஃபோனில் தெரிவித்தார்கள். போய் வாங்கிக்கொண்டேன். எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஆக்ஸிஸ் வங்கிக்குப் போனேன். விவரம் கேட்டேன். உங்கள் விண்ணப்பம் நிலுவையில் உள்ளது. முப்பது நாட்கள் கழிந்த பிறகுதான் புதிய விண்ணப்பம் கொடுக்க முடியும் என்றார்கள்.

பிறகு நான் அவர்களிடம் இதுவரை நான் காத்திருந்தது பற்றிக் குறிப்பிட்டேன். கார்ட் வரும் என்றார்கள். எப்போது வரும் என்று யாருக்கும் தெரியவில்லை.

ஐசிஐசிஐயிலிருந்து மூன்றே நாட்களில் கிடைத்தது பற்றியும், ஆக்ஸிஸில் நான் மூன்று மாதங்களாக மாரடித்துக்கொண்டிருப்பதையும் சொன்னேன். எனக்கு எதிரே இருந்த குமாஸ்தா இளைஞன் “உங்களுக்கு யாரையாவது தெரிந்தால் எனக்கும் ஐசிஐசிஐயிலேயே ஒரு வேலை பாருங்கள்” என்று சீரியஸான தொனியில் சொன்னார்.

சரி, உங்களில் யாருக்காவது நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல முடியுமா?

இந்தியாவில் தனியார் துறை வருவதற்கு முன்னால் அரசு அலுவலகங்கள் பற்றி ஏகப்பட்ட ஜோக்குகள் விகடனில் வரும். எனக்குத் தெரிந்த வரை – நான் இருபது ஆண்டுகள் இரண்டு அரசுத் துறைகளில் – முதலில் சிவில் சப்ளைஸிலும் பிறகு தபால் துறையிலும் – வேலை செய்திருக்கிறேன் – பத்து ஆள் வேலையை ஒரு ஆள் செய்வார். பிறகுதான் தனியார் துறை அசுரத்தனமாக வளர்ந்தது. கடைசியில் பார்த்தால் அரசுத் துறையே தேவலாம் என்று இருக்கிறது. ஆக்ஸிஸ் வங்கி அனுபவம் ஒரு உதாரணம். ஒரு டெபிட் கார்டுக்காக மூன்று மாதமாக அலைந்து கொண்டிருக்கிறேன். இப்போது ஜப்பான் போகிறேன். டெபிட் கார்ட் இல்லாமல் அங்கே என்ன செய்வது? ஐசிஐசிஐயில் குறைவான தொகைதான் உள்ளது.

ஒன்றும் புரியவில்லை. ஏதாவது வழி தெரிந்தால் சொல்லுங்கள்.

charu.nivedita.india@gmail.com