ஜப்பான் – 3

சென்ற முறை ஜப்பான் சென்றிருந்தபோதே அங்கிருந்த நண்பர்களிடம் சொல்லியிருந்தேன், இனிமேல் நான் ஒவ்வொரு வருடமும் ஜப்பான் வருவேன் என.  உண்மையில் ஜப்பான் பூலோக சொர்க்கம்.  என் நீண்ட கால சிநேகிதரான சிவகாமி ஜப்பானில் இந்திய சுற்றுலாத் துறை அதிகாரியாக சில பல ஆண்டுகள் இருந்தபோது அந்த தேசத்தைப் பற்றி நூற்றுக்கணக்கான கதைகளைச் சொல்லியிருக்கிறார்.  அங்கே கனகாலம் இருந்ததால் அவர் ஜப்பானிய மொழியும் பேசுவார்.  அவர் சொல்லும் கதைகள் எல்லாமே ஜப்பான் ஒரு பூலோக சொர்க்கம் என்ற கருத்தை வலுவாக்குவதாக இருக்கும்.  ஜப்பானில் நிரந்தரமாக வசிக்கும் இந்தியர்களுக்கு அப்படி இல்லாமல் இருக்கலாம்.  அது நியாயமும் கூட.  ஜப்பானில் வேலை செய்தால் ஜப்பான் நரகம்.  இது பற்றியெல்லாம் விரிவாக ரொப்பங்கி இரவுகள் நாவலில் எழுதியிருக்கிறேன்.  இன்னும் சில மாதங்களில் அந்த நாவல் வரும்.  ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கும் எந்த வேலையும் இல்லாமல் நம்முடைய சொந்த வேலையை மட்டும் (உ-ம்: எழுத்து) பார்த்துக்கொண்டு இருந்தால் ஜப்பான் சொர்க்கம். 

ஃப்ரான்ஸ் போவதை விட ஜப்பான் செல்லும் விமானச் செலவு அதிகம்.  ஃப்ரான்ஸுக்கு ஐம்பத்திரண்டாயிரம்.  தோக்யோவுக்கு ஐம்பத்தொன்பது.  இது கொஞ்சம் முன்னே பின்னே மாறும்.  ஆனால் ஃப்ரான்ஸ் டிக்கட்டை விட தோக்யோ டிக்கட் அதிக விலை.  அப்படியென்றால் ஃப்ரான்ஸே போகலாமே என்றார் ஒரு நண்பர்.  எனக்கு ஃப்ரான்ஸில் யாரும் இல்லை.  இருப்பவர்களாலும் எனக்காக பதினைந்து தினங்களை ஒதுக்க முடியாது.  2000இல் நான் ஃப்ரான்ஸ் சென்ற போது இருந்த நிலை வேறு.  இப்போது என் எழுத்து ஃப்ரான்ஸில் வாழும் இலங்கைத் தமிழர் பெரும்பான்மையானவருக்குப் பிடிக்கவில்லை.  தமிழ்நாட்டுத் தமிழருக்கோ இலக்கியமே தெரியாது.  அந்த ஜென்மங்களை விட்டு விடலாம்.  எனவே ’வேலியில் போகும் ஓணானை எடுத்து ஏன் வேஷ்டியில் விட்டுக் கொள்ள வேண்டும், அதுவும் லட்சக்கணக்காக செலவு செய்து’ என்று ஃப்ரான்ஸ் எண்ணத்தை விட்டு விட்டேன்.  அநேகமாக என் வாழ்நாளில் நான் இனி ஃப்ரான்ஸ் செல்ல மாட்டேன் என்றே நினைக்கிறேன்.

காரணம், ஃப்ரான்ஸில் வாழும் இலங்கைத் தமிழர்கள் இல்லை.  அவர்களைப் பார்க்காமலே கூட என் நண்பர்கள் தர்மிணியையும் கலாமோகனையும் மட்டுமே சந்தித்து விட்டு ஃப்ரான்ஸை சுற்றிப் பார்க்கலாம்.  ஆனால் எனக்கு எப்போதுமே இடங்களை விட மனிதர்களே அதிக ஆர்வத்தைத் தூண்டுகிறார்கள்.  அப்படிப் பார்த்தால் ஃப்ரஞ்சுக்காரர்கள் என்னை ஈர்க்கவில்லை.  ஈர்க்கவில்லை என்பது மட்டுமல்லாமல் சற்று மனவிலக்கத்தையும் ஏற்படுத்தி விட்டார்கள்.

காரணம், நான் கடந்த முப்பது ஆண்டுகளாக ஃப்ரெஞ்ச் தத்துவத்தைப் பற்றியும் ஃப்ரெஞ்ச் இலக்கியத்தைப் பற்றியும் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  எனக்கும் ஃப்ரான்ஸுக்குமான தொடர்புக்கு சான்றாகச் சொல்வதற்கு என்னுடைய மெதூஸாவின் மதுக்கோப்பை என்ற நூல் ஒன்று போதும்.  இந்த நூலில் ஹெலன் சிஸ்யூவின் The Laugh of the Medusa என்ற கட்டுரை பற்றியும், L’Indiade ou l’Inde de leurs rêves (The Indiad or India of Their Dreams) என்ற நாடகத்தைப் பற்றியும் மிக விரிவாகப் பேசியிருக்கிறேன்.  ஹெலன் சிஸ்யூ பற்றி அறிந்தவர்களே அவரது இந்த நாடகம் பற்றி அதிகம் பேசியதோ விவாதித்ததோ இல்லை.  இன்னும் அந்த நாடகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை என்று நினைக்கிறேன். 

இதேபோல் மிஷல் ஃபூக்கோ, ஜாக் தெரிதா, ரொலாந் பார்த் போன்றவர்களைப் பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறேன்.  விவாதித்திருக்கிறேன்.  முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கர்னாடக முரசு சிறுகதைத் தொகுப்பில் ஃபூக்கோவின் Archaelogy of Knowledge புத்தகத்திலிருந்து சில பகுதிகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஒவ்வொரு கதைக்கும் இடையில் சேர்க்கப்ப்ட்டது.  ஃபூக்கோவின் நூல்களிலேயே மிகவும் கடின்மான நூல் அது. 

உலகிலேயே lipogrammatic ஆக எழுதப்பட்ட இரண்டு மூன்று நாவல்களில் ஸீரோ டிகிரியும் ஒன்று.  மற்றொன்று, ஜார்ஜ் பெரக் எழுதிய La Disparition (ஆங்கிலத்தில் A Void என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டது). 

ஆட்டோஃபிக்‌ஷனை உலக இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்தியவர் Serge Doubrovsky.  இவரது நாவல்கள் எதுவும் ஆங்கிலம் உட்பட எந்த மொழியிலும் மொழிபெயர்க்கப்படவில்லை.  காரணம், அவருடைய ஃப்ரெஞ்சில்அதிகம் சிலேடை கலந்திருக்கும்.  அவரை அடுத்து ஆட்டோஃபிக்‌ஷன் எழுதும் ஒரே ஆள் நான்தான்.  ஸேர்ஜ் துப்ரோவ்ஸ்கி எனக்குக் கடிதமும் எழுதியிருக்கிறார். 

இது தவிர Pierre Klossowski, Pierre Guyotat பற்றியெல்லாம் தமிழில் விரிவாக எழுதியிருக்கும் ஒரே ஆள் நான்தான்.  தமிழில் மட்டுமல்ல, க்ளோஸோவ்ஸ்கி பற்றியும், பியர் க்யூத்தா பற்றியும் ஆங்கிலத்திலும் மற்ற ஐரோப்பிய மொழிகளிலும் – ஏன், ஃப்ரெஞ்சிலேயே கூட அதிக விவாதம் இல்லை.  ஃப்ரெஞ்ச் இலக்கியம் தெரிந்தவர்களுக்கே இந்த இரண்டு பெயர்களும் தெரிந்திருப்பது அரிதுதான்.  பியர் க்யூத்தா பற்றி ரொலாந் பார்த் “ஃப்ரெஞ்ச் மொழி பியர் க்யூத்தாவுக்கு முன்னால், பியர் க்யூத்தாவுக்குப் பின்னால்” என்று வரையறுக்கிறார்.  இப்படி ஒரு மொழியின் போக்கையே மாற்றியமைத்தவர் பியர் க்யூத்தா.  நானும் க்யூத்தாவின் இரண்டு நாவல்களை (Eden, Eden, Eden மற்றும் Eden Tomb for 500000 Soldiers) ஆங்கிலத்தில் படித்தேன்.  அதற்கு முன்னால் நான் படித்திருந்த 98.6 என்ற Ronald Sukenick எழுதிய ஒரே ஒரு அமெரிக்க நாவலைத்தான் க்யூத்தாவின் மொழியோடு ஒப்பிட முடிகிறது.  ஆனால் சுகேனிக்கை விட க்யூத்தாவின் மொழி பல மடங்கு காத்திரமானது.  க்யூத்தாவின் மொழி எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் என்னுடைய Joker was here, நேநோ, கர்னாடக முரசும் நவீன இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும், பிண்ந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் என்ற சிறுகதைகளையும் ஸீரோ டிகிரி நாவலின் சில பகுதிகளையும் படிக்கலாம். 

இப்படி நான் ஆயிரம் விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.  அடிக்கடி நான் சொல்வதுண்டு, நான் தமிழில் எழுதும் ஃப்ரெஞ்ச் எழுத்தாளன் என்று.

கடைசியாக நடந்தது, அந்தோனின் ஆர்த்தோ பற்றிய என் நாடகம்.  ஃப்ரெஞ்ச் உட்பட உலக மொழிகளிலேயே ஆர்த்தோ பற்றி அப்படி ஒரு படைப்பு வந்தது இல்லை. 

இதையெல்லாம் ஃப்ரான்ஸ் போன்ற ஒரு சுரணையுள்ள சமூகம் கொண்டாடி இருக்க வேண்டுமா, இல்லையா?  சென்னையில் ஃப்ரெஞ்ச் மொழியின் ஆனா ஆவன்னாவை சொல்லிக்கொடுக்கும் பேராசிரியர்களுக்கெல்லாம் ஃப்ரெஞ்ச் அரசாங்கம் ஷெவாலியே பட்டம் கொடுத்து கௌரவிக்கிறது. நான் ஃப்ரெஞ்ச் சமூகத்துக்கும் கலாச்சாரத்துக்கும் செய்திருக்கும் பணிகளுக்கு அவர்கள் எனக்கு ஃப்ரெஞ்ச் குடியுரிமை கொடுத்திருக்க வேண்டும். 

அப்படி எதுவுமே நடக்காததற்குக் காரணம், ஃப்ரெஞ்ச் இலக்கிய உலகம் மைலாப்பூர் மாமா மற்றும் மாமிக் கூட்டத்தினால் நிரம்பியிருக்கிறது.  தமிழர்களைச் சொல்லவில்லை.  ஃப்ரெஞ்ச் இலக்கிய சமூகமே அப்படி மாறியிருக்கிறது.  மிகப் பெரிய Status Quo கூட்டம் அது.  அங்கே சாரு ஒரு விரும்பத்தகாதவன்.  அங்கே சாரு ஒரு அந்நியன்.  அங்கே சாரு ஒரு வேண்டப்படாதவன். 

ஏன்?

சாருவின் எழுத்து கொண்டாட்டத்தைச் சொல்கிறது. 

ஃப்ரெஞ்ச் மாமா மாமி கூட்டத்துக்குக் கொண்டாட்டம் பிடிக்காது.  அவர்களின் வாழ்க்கை கொண்டாட்டமாக இருக்கலாம்.  ஆனால் அவர்களுக்கு இந்தியாவிலிருந்து செல்வது அழுவாச்சியாக இருக்க வேண்டும்.  அவர்களைப் பொருத்தவரை இந்தியா என்பது இலங்கையையும் உள்ளடக்கியது. போர், போரின் விளைவுகள், மரணம், வன்கலவி, துயரம், அழுகை…இதையெல்லாம் சொன்னால்தான் ஃப்ரெஞ்ச் சமூகம் கொண்டாடும், மொழி பெயர்க்கும், விருது வழங்கும்.  கொண்டாட்டத்தைச் சொன்னால் முகம் சுளிக்கும்.  ”என்ன இது, இந்தியாவிலிருந்து வந்து கொண்டாட்டத்தைச் சொல்கிறான்?”

இது ஒருவகையான ரேஸிஸம். 

”பறையன் என்றால் அழ வேண்டும்டா, நீ என்ன சிரிக்கிறாய்?  கிட்டே வராதே, ஓடிப் போ.” 

அங்கே பார், உன் நாட்டிலிருந்து வந்த அவனும், உன் பக்கத்து நாட்டிலிருந்து வந்த இவனும் எத்தனை துயரக் கதைகளைச் சொல்லி எங்களைக் கண்ணீர் விட வைக்கிறார்கள்?  எங்களுக்கு சுயமாக்க் கண்ணீர் விடக் கதைகள் இல்லை.  எல்லாம் 1946ஓடு முடிவுக்கு வந்து விட்ட்து.  எத்தனைக் காலத்துக்கு அதே கதைகளை எழுதி ஜல்லியடித்துக்கொண்டிருப்பது? எங்கள் விந்துவை வெளிக்கொணர்வதற்கு நாங்கள் நிறைய செக்ஸ் கடைகள், செக்ஸ் சினிமா தியேட்டர்கள், பிராத்தல்கள் எல்லாம் வைத்திருக்கிறோம்.  செந்தெனி (Saint – Denis) வேறு எதற்கு இருக்கிறது?  ஆனால் எங்கள் கண்ணீரை எழுப்புவதற்குத்தான் எங்களிடம் ஆட்கள் இல்லை.  அதற்குத்தான் நாங்கள் மூன்றாம் உலக நாடுகளில் ஆட்களைத் தேடுகிறோம்.  எங்கள் கண்ணீரை எழுப்பிக்கொடுப்பதற்கான கதைசொல்லிகள் எங்களுக்குத் தேவை. போரில் உன் ஃபேமிலியில் ஒருத்தராவது செத்திருக்க வேண்டும்.  உன் அம்மாவை ராணுவத்தான் கதறக் கதற ரேப் பண்ணியிருக்க வேண்டும்.  உன் தங்கையின் பிறப்புறுப்பில் துப்பாக்கியின் பேனட்டால் சொருகிக் கிழித்திருக்க வேண்டும்.  பள்ளிக்கூட்த்தில் குண்டு விழுந்து நூற்றுக்கணக்கான குழந்தைகள் சின்னாபின்னமாகியிருக்க வேண்டும். இப்படியெல்லாம் கதை சொல்லி எங்கள் கண்ணீரை எழுப்பாமல், நீ யார்றா போக்கிரி, கொண்டாட்டக் கதைகளைச் சொல்லித் திரிகிறாய்?  வேறு எங்காவது ஓடு.

இதுதான் சாரு நிவேதிதா பற்றிய ஃப்ரெஞ்ச் இலக்கியக் கும்பலின் அபிப்பிராயம். 

அதனால் நான் ஜான் ஜெனே சொன்னது போன்ற ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருக்கிறது.

”என்னை என் தேசம் கிரிமினல் என்று கருதியது.  அப்படிப்பட்ட தேசத்தில் என் பிரேதம் கூட புதைக்கப்படக் கூடாது.”

சொன்னதோடு நில்லாமல் ஜெனே ஃப்ரான்ஸிலிருந்து வெளியேறி மொராக்கோ போய் வாழ்ந்தார்.  கடைசியில் தன் ஃப்ரெஞ்ச் பதிப்பாளரைச் சந்திக்க பாரிஸ் சென்றிருந்த போது அங்கே இறந்து போனார்.  அவர் விருப்பத்துக்கு இணங்க அவர் நண்பர்கள் பிரேதத்தை பாரிஸிலிருந்து மொராக்கோ கொண்டு வந்து அடக்கம் செய்தார்கள்.  கஸ்டம்ஸ் அதிகாரிகள் “என்ன இது, ஃப்ரெஞ்சுக்காரனின் பிரேதத்தை மொராக்கோ கொண்டு செல்கிறீர்கள்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டதாகச் செய்தி. 

மேலும், ஏற்கனவே சொன்னது போல ஃப்ரான்ஸில் பார்ப்பதற்கு எனக்கு ஒன்றுமேயில்லை.  ஃப்ரான்ஸ் மட்டும் அல்ல.  உலகின் பல நாடுகளில் எனக்கு மக்களிடம்தான் பேச வேண்டும்.  தென்னமெரிக்க நாடுகள் மட்டுமே விதிவிலக்கு.  அங்கே எனக்கு ஒவ்வொரு மூலையிலும் ஒரு கதை இருக்கிறது.  நிகாராகுவாவின் ஒரு சதுக்கத்தில் வைத்துத்தான் அந்த நாட்டின் சர்வாதிகாரியை இளம் கவிஞன் லோபஸ் பெரோஸ் இன்னும் ஒரே ஆண்டில் சுட்டுக் கொல்வேன் என்று சபதமிட்டான்.  அதேபோல் சுட்டுக் கொன்றான்.  அந்தச் சதுக்கம் எனக்கு முக்கியம்.  இப்படி தென்னமெரிக்கா பூராவும் எனக்குக் கதைகள் உண்டு.  அங்கே நான் மனிதர்களையே சந்திக்க வேண்டியது இல்லை.  ஆனால் ஃப்ரான்ஸில் எனக்கு மனிதர்கள் முக்கியம்.  சமூகம் முக்கியம்.  ஆனால் அது சாத்தியமே இல்லை.  ஏனென்றால், ஃப்ரான்ஸ் மட்டுமல்ல, மேற்கு ஐரோப்பாவே ஒரு மூடுண்ட சமூகம்.  அவர்கள் பழுப்பு நிறத்தவரோடு சகஜமாகப் பேச மாட்டார்கள்.  தெரியாதவர்களையும் பார்த்து புன்னகை புரிவார்களே தவிர அவர்களோடு பேசி நட்பு பாராட்ட முடியாது.  ஜப்பானில் ஒரு பப்பில் போய் நீங்கள் வெகு சகஜமாக ஒரு பெண்ணோடு பேசி நட்பு பாராட்டி அவளோடு நடனம் கூட ஆட முடியும்.  மேற்கு ஐரோப்பாவில் அது பற்றி யோசிக்கக் கூட முடியாது.  மிரண்டு விடுவார்கள் என்றே தோன்றுகிறது.  ஒரு அமெரிக்க நகரில் ஒரு மதுபான விடுதியில் சத்தம் போட்டுப் பேசிக்கொண்டிருந்த ஒரு தெலுங்குக்கார இளைஞனை ஒரு அமெரிக்கன் சுட்டுக் கொன்ற சம்பவம் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். 

ஃப்ரான்ஸில் பல ஊர்களுக்கு ஆறு ஏழு மணி நேரம் பஸ்ஸிலும் ரயிலிலும் பிரயாணம் செய்திருக்கிறேன்.  பக்கத்தில் உள்ளவர் நம்மோடு ஒரு வார்த்தை பேச மாட்டார்.  நாமே பேசினாலும் ஒரு தலையசைப்போடு சரி.  அதற்கு மேல் நாம் ஏன் பேசப் போகிறோம்?  பேசினாலே ஏதோ அவர் பாக்கெட்டுக்குள் கை நுழைத்தது போல் மிரள்கிறார்கள்.  ஸ்வீடனெல்லாம் இன்னும் பயங்கரம்.  பார்ப்பதற்குத்தான் சொர்க்கம் போல் தெரியுமே தவிர மனிதர்கள் நரகவாசிகள். 

ஆக, என் வாழ்நாளில் என் எழுத்து ஃப்ரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டு அங்கே அதற்கு நல்ல வரவேற்பு ஏற்பட சாத்தியமே இல்லை.  மொழிபெயர்க்கப்படலாம்.  ஆனால் அதை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.  ஒருவேளை நான் ஃப்ரெஞ்சுக்காரனாக இருந்து ஃப்ரெஞ்சில் எழுதியிருந்தால் கூட பியர் க்யூத்தா மாதிரி யாருக்கும் தெரியாதவனாகவே இருந்திருப்பேன்.  ரொலாந் பார்த்தும் சூஸன் சொண்டாகும் மட்டுமே என்னைப் பாராட்டியிருப்பார்கள்.  ஒருவேளை மெக்ரீப் நாடுகளைச் சேர்ந்த ஒரு கருப்பனாக இருந்திருந்தால் கூட “பாவம், நாம் அடிமைப்படுத்திய நாட்டைச் சேர்ந்த முஸ்லிம், அவனுக்கு நாம் வாழ்வு கொடுத்தால்தான் நாம் பண்ணின பாவம் தீரும்’ என்ற எண்ணத்தில் என்னைக் கொண்டாடியிருக்கலாம்.

நானோ இந்தியன்.  அவர்களால் அடிமைப்படுத்த முடியாமல் போய்விட்ட (Au diable les sales Britannique!) ஒரு தேசத்தைச் சேர்ந்தவன்.  பழுப்பு நிறத்தவன். அதிலும் அழுவாச்சி கதைகளை விட்டுவிட்டு கொண்டாட்டத்தை எழுதுபவன்.  எனக்கு அங்கே என்ன இடம் இருக்க முடியும்?

ஏன் ஜப்பானுக்கே மீண்டும் மீண்டும் செல்லத் தோன்றுகிறது என்றால், இந்த உலகிலேயே எனக்கு அதி விருப்பமான உணவு ஜப்பானிய உணவுதான்.  பல தேசங்களின் உணவை சுவைத்தபின் நான் கண்டு பிடித்த உண்மை இது.  சென்னையிலேயே நான் கடந்த இருபது ஆண்டுகளாக ஜப்பானிய உணவகத்துக்குத்தான் விரும்பிச் சென்று கொண்டிருந்தேன்.  அங்கேயும் நான் சாப்பிடுவது சுஷியும் சுஷிமியும்தான்.  குடிப்பது சாக்கே.  இப்போது அங்கே சாக்கேயை இரண்டு மடங்கு விலை உயர்த்தி விட்டதால் செல்வதில்லை.  சென்ற முறை ஜப்பான் சென்ற போதும் இரண்டு வேளையும் சுஷி அல்லது சுஷிமிதான் சாப்பிட்டேன்.  சாக்கேதான் குடித்தேன். 

சுஷி, சுஷிமி இரண்டில் எனக்குப் பிடித்தது சுஷிமிதான்.  சுஷியில் (சமைக்காத) பச்சை மீனைத் தவிர முட்டை போன்ற வேறு ஐட்டங்களும் இருக்கும்.  சுஷிமியில் வெறும் பச்சை மீன் மட்டுமே.

இப்போது எனக்கு ஸ்லொவேனியாவைச் சேர்ந்த Tomaž Šalamunஇன் ஞாபகம் வருகிறது.  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரை நான் தில்லியில் சந்தித்த போது அவர் சொன்னதை நான் என்றுமே மறக்க மாட்டேன். 

“உங்கள் எழுத்தை ஆங்கிலத்திலோ ஃப்ரெஞ்சிலோ சரியான முறையில் உள்வாங்கிக் கொள்ள மாட்டார்கள்.  ஜெர்மனிதான் உங்கள் இடம்.  அவர்கள்தான் உங்கள் எழுத்தைப் பெரிதும் கொண்டாடுவார்கள்.”

அதற்கான காரணங்களை அவர் விரிவாகவே விளக்கிச் சொன்னார்.

ஃப்ரெஞ்ச் சமூகம் அந்த சமூகத்துக்கு அந்நியமாக இருந்தவர்களை (உதாரணம்: ஆர்த்தோ, ஜார்ஜ் பத்தாய்) புறக்கணித்தது.  ஆர்த்தோவைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடைத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட மின்சார ஷாக்குகளைக் கொடுத்து அவரை உருக்குலைத்தது.  இதற்குக் காரணமாக இருந்தவர் உலகப் புகழ் பெற்ற உளவியல் அறிஞர் லக்கான்.  இப்போதும் கூட மிஷல் வெல்பெக் போன்றவர்களை ஃப்ரெஞ்ச் சமூகம் ஒரு அந்நியனாகவே பார்க்கிறது.  ஆனால் ஜெர்மன் சமூகம் அறிவார்ந்த சமூகமாக மாற்றம் கண்டிருக்கிறது.  பொதுவாக நாஜிகள் காரணமாக, ஜெர்மனியைத்தான் அக்ரஹாரம் என்று உலகம் நினைக்கிறது.  ஆனால் எதார்த்தம் அது அல்ல.

எப்படி தமிழ்நாட்டில் சினிமா எல்லாம் வல்ல சக்தியாக வியாபித்து இருந்தாலும் மற்றொரு பக்கத்தில் மிகப் பெரிய இலக்கிய ஆளுமைகள் இங்கே தோன்றி வந்திருக்கிறார்களோ, எப்படி சர்வதேச இலக்கியத்துக்கு சவால் விடக் கூடிய அளவில் மிகக் காத்திரமான இலக்கியம் இங்கே உருவாகிக் கொண்டிருக்கிறதோ, அப்படித்தான் ஃப்ரெஞ்ச் சமூகமும் ஒரு கடைந்தெடுத்த பிற்போக்கு சமூகமாக இருந்தாலும் அங்கே ஜார்ஜ் பத்தாய், செலின், ஜான் ஜெனே, ரொலாந் பார்த், மிஷல் ஃபூக்கோ போன்ற ஆளுமைகள் தொடர்ந்து உருவாகி இயங்கி வந்திருக்கிறார்கள். தமிழின் வெகுஜனக் கும்பல் கலாச்சாரத்துக்கும் தமிழின் சமகால இலக்கியத்துக்குமான இடைவெளியைப் போல ஃப்ரெஞ்ச் பொதுச் சமூகத்துக்கும் ஃப்ரெஞ்ச் அறிவுச் சூழலுக்கும் அங்கே பெருத்த இடைவெளி இருக்கிறது.  ஜெர்மனியில் அந்த அளவுக்கு அந்த இடைவெளி இல்லை என்பதே எதார்த்தம்.  

ஆனாலும் ஜெர்மன் மொழியில் என் எழுத்து மொழிபெயர்க்கப்படுவது என் ஆயுளில் சாத்தியம் இல்லை.  என் வாழ்நாளுக்குப் பிறகும் கூட அதற்குச் சிறிதும் வாய்ப்பு இல்லை. 

ஏனென்றால் –

ஜப்பான் செல்கிறோமே என்று ரியூ முராகாமியின் 69 என்ற நாவலைப் படிக்கத் தொடங்கினேன்.  பார்த்தால் இப்போது நான் ஏஷியன் ரெவ்யூவில் எழுதிக்கொண்டிருக்கும் என்னுடைய சுயசரிதை மாதிரியேயான ஒரு நாவல் அது.  அதில் ஒரு இடம்:  ரியூவின் கல்லூரிக் காலத்தில் அவருக்கு தினமும் அவர் வீட்டில் சாப்பாட்டுக்கும் மற்ற செலவுகளுக்கும் 150 யென் கொடுக்கிறார்கள். அதில் அவர் 30 யென்களுக்கு மட்டும் பன்னை வாங்கிச் சாப்பிட்டு விட்டு மீதியைச் சேர்த்து புத்தகங்கள் வாங்குகிறார்.  என்ன புத்தகங்கள்?

Arthur Rimbaud, சார்த்தர், கம்யு, பத்தாய், செலின், ஜெனே… இப்படி.

இந்தப் பட்டியலை கவனியுங்கள்.  நான் கல்லூரி காலத்தில் படித்த அதே எழுத்தாளர்கள்.  இதில் பத்தாய், செலின் என்ற பெயர்கள்தான் எனக்குப் படு ஆச்சரியத்தை அளித்தன. 

சரி.

ஆனால் இந்த 69 என்ற நாவலை யார் ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது?  யார் பிரசுரித்தது? 

இதை ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் ரால்ஃப் மக்கார்த்தி என்ற அமெரிக்கர்.  1987இல் ஜப்பானிய மொழியில் வெளிவந்த இந்த நாவல் 1993இலேயே தோக்யோவிலும் நியூயார்க்கிலும் லண்டனிலுமாக ஆங்கிலத்தில் ஒரு சர்வதேசப் பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது. 

தமிழில் என்ன நடக்கிறது?   

இந்தியாவின் ஒரே லிப்போக்ரமாட்டிக் நாவலான ஸீரோ டிகிரி ஆங்கிலத்தில் வந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன.  இந்தியாவில் எழுதப்பட்ட ஐம்பது சிறந்த புத்தகங்களில் ஒன்றாக ஹார்ப்பர் காலின்ஸ் வெளியிட்ட தொகுப்பில் ஸீரோ டிகிரிக்கு ஒரு கட்டுரை உள்ளது.  (50 Writers, 50 Books: The Best of Indian Fiction).  ஸீரோ டிகிரி ஒரு ஏஷியன் க்ளாஸிக் என்று வகைப்படுத்தப்பட்டு அமெரிக்காவில் இரண்டு மூன்று பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ளது. 

ஆனால் அது ஆங்கிலத்தைத் தவிர வேறு எந்த ஐரோப்பிய மொழியிலும், மலையாளத்தைத் தவிர வேறு எந்த இந்திய மொழியிலும் மொழிபெயர்க்கப்படவில்லை.  மார்ஜினல் மேனுக்கும் எதுவும் நடக்கவில்லை.  அதைவிடக் கொடுமை, ஔரங்ஸேப்.  இந்தியாவின் முதன்மையான பதிப்பகம் அந்த நாவலை ஆங்கிலத்தில் வெளியிட்டது.  சுமார் முப்பது மதிப்புரைகள் வந்தன.  ஆனால் இந்தியாவை விட்டு அந்த நாவல் வெளியில் செல்லவே முடியவில்லை.  இந்தியாவுக்கு வெளியே உள்ள ஆங்கில வாசகர்களுக்கு அப்படி ஒரு நாவல் வந்ததே தெரியாது.  ரியூ முராகாமியை இங்கே ஒப்பிடுங்கள்.  ரியூவின் நாவல் ஆங்கிலத்தில் வரும்போதே நியூயார்க், லண்டன் ஆகிய இரண்டு இடங்களிலும் வருகிறது. 

காரணம் என்ன?  தமிழ் intelligentia ஒரு ஃபிலிஸ்டைன் கும்பலாக உள்ளதுதான்.  சுந்தர் பிச்சை ஒரு உதாரணம்.  சுந்தர் பிச்சை இருப்பதைப் போன்ற இடத்தில் இருக்கும் ஒரு ஃப்ரெஞ்சுக்காரருக்கு ஃப்ரெஞ்சில் உள்ள எல்லா எழுத்தாளர்களையும் தெரியும்.  மிஷல் வெல்பெக்கை அவர் படித்திருப்பார்.  சுந்தருக்கு பாரதி தவிர வேறு யாரையும் தெரியாது.  அப்துல் கலாம் இன்னொரு உதாரணம்.  அவருக்குத் தெரிந்த ஒரே எழுத்தாளர், ஒரே கவிஞர் வைரமுத்து.  சிந்தனையாளர் சிரிப்பு நடிகர் விவேக்.  ஆர். வெங்கட்ராமனுக்கு வைரமுத்துவைக் கூட தெரியுமா என்பது சந்தேகம்.  தேசத்தின் ஜனாதிபதியாக இருந்தவர்களின் நிலையே இப்படி. 

சாக்ரமண்ட்டோ என்ற அமெரிக்க நகரத்திலிருந்து என் நண்பர் ஒருவர் என்னை சமீபத்தில் சந்தித்தார்.  அந்த நகரில் உள்ள நூலகத்தில் என் நூலைச் சேர்ப்பதே பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது என்றார்.  நான் எங்கே?  ரியூ முராகாமி எங்கே?

தமிழர்கள் வசிக்கும் அமெரிக்க நகரங்களில் செட்டியார் சங்கம், வன்னியர் சங்கம், கொங்கு வெள்ளாளர் சங்கம் என்று பல ஜாதிச் சங்கங்கள் கொடிகட்டிப் பறப்பதாகத் தெரிந்தது. எந்த ஒரு அமெரிக்கப் பெருநகரிலும் இருபது தமிழ்ச் சங்கங்கள் உள்ளன.  ஆனால் அந்த அமெரிக்கத் தமிழர்கள் எல்லோருக்கும் தெரிந்த முகங்கள் தமிழ் சினிமா முகங்கள் மட்டுமே.  சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தில் என்னை ஸூம் மூலம் பேச அழைத்தார்கள்.  ஐம்பதாயிரம் ரூபாய் கட்டணம் கேட்டேன்.  கொடுத்தார்கள்.  கடைசியில் பார்த்தால் நான் அழைக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த என் வாசக நண்பர்தான் ஐம்பதாயிரத்தில் பெரும் பகுதியைக் கொடுத்திருக்கிறார்.  தமிழ்ச் சங்கத்தில் பத்தாயிரம் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  ஒருவேளை அஞ்சாயிரமோ என்னவோ.  சாமியார்கள் யோகா சொல்லிக் கொடுக்கிறேன், தியானம் சொல்லிக்கொடுக்கிறேன் என்றால் அதற்கு ஐநூறு டாலர் கொடுப்பார்கள்.  இத்தனைக்கும் ஒருவர் நிம்மதியாக லஞ்ச் அல்லது டின்னர் சாப்பிட வேண்டும் என்றால், ஐம்பது டாலர் செலவாகும் நாடு அது. 

சமகாலத் தமிழ் இலக்கியத்தில் இப்படி ஒரு இருண்ட பகுதி என்றால்,

சமீபத்தில் ஒரு வாசகர் பத்தாயிரம் ரூபாயை அனுப்பி, உலகில் ஒருத்தர் கூட நீங்கள் இருக்கும் நிலையில் இப்படி எழுதிக்கொண்டிருக்க முடியாது என்று எழுதியிருந்தார்.

அப்படிப்பட்டவர்களுக்காகவே இன்னும் நூறு ஆண்டுகள் எழுதிக்கொண்டிருக்கலாம்.  எந்த விருது மயிரும் தேவையில்லை, எந்த மொழிபெயர்ப்பு மயிரும் தேவையில்லை. 

***

சந்தா மற்றும் நன்கொடை வரத்து சுத்தமாக நின்று விட்டது. முடிந்தவர்கள் அனுப்பி வையுங்கள்.

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா. ராஜாதான் என் அட்மின். பெயர் குறித்து எதுவும் தயங்க வேண்டாம்.

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai