இந்தியாவில் உங்களுக்குப் பிடித்த ஒரே பாடகர் யார் என்று கேட்டால், ஒருசிறிதும் யோசிக்காமல் வெங்கடேஷ் குமார் என்பேன். நேரில் கேட்டதில்லை. ஹிந்துஸ்தானியில் அவர்தான் இன்று உச்ச நட்சத்திரம் என்று நினைக்கிறேன். முன்பு அந்த இட்த்தில் என் உலகில் இருந்தவர் பண்டிட் ஜஸ்ராஜ். பண்டிட் ஜஸ்ராஜை நேரில் ஒரு ஐம்பது முறை கேட்டிருக்கிறேன். தில்லியில் இருந்ததால் கிடைத்த அதிர்ஷ்டம்.
ஒரே ஒரு முறையாவது வெங்கடேஷ் குமாரை நேரில் கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அது நடக்காது என்றும் தெரிந்திருந்தது. ஆனால் இன்னும் சில தினங்களில் நடக்க இருக்கிறது. அதுவும் எப்படி?
ஒரு பத்து இருபது பேர்தான் பார்வையாளர்கள்.
அப்படி ஒரு தனிப்பட்ட கச்சேரி. ஊர் கூடி டிக்கட் கொடுத்து நடக்கும் சபா கச்சேரி அல்ல.
என்னுடைய விழா ஒன்றில் வெங்கடேஷ் குமாரைப் பாட வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எல்லோருக்கும் அனுமதி அல்ல. இசையில் அதீத ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி. அதாவது, காலையில் கச்சேரி. மாலையில் இலக்கிய விழா. ஆனால் அதெல்லாம் வெறும் கனவு. நம்மிடம் அதற்கான பைசா இல்லை. பைசா இருப்பவர்களுக்கு இரண்டாவது வீடு கட்ட வேண்டும். பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்க வேண்டும்.
ஆனால் விதிவிலக்காக சில நண்பர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் வெங்கடேஷ் குமாரை அழைத்திருக்கிறார்.
என் நண்பன் ஒருவன் இசையில் அதீத ஆர்வம் உள்ளவன். என்னை விட அதிக ஆர்வம். ஆனால் சில மாதங்களாக அவனும் நானும் வெறுமனே தொழில்ரீதியாக மட்டுமே பேசி வருகிறோம். நேரில் சந்திப்பதில்லை.
காரணம், அன்பு.
அவன் என் மீது வைத்துள்ள அன்பு.
அன்பு நல்லதுதானே என்பீர்கள். அன்பு எப்படித் தொந்தரவாக இருக்க முடியும்?
என்னுடைய அன்பு நாவலைப் படித்துப் பாருங்கள். புரியும்.
இன்னொரு நண்பர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை என் நிழல் போல் இருந்தார். நான் எங்கே இருக்கிறேனோ அவர் அங்கே இருப்பார். அவரும் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். ஆனால் அந்த அன்பே பிரச்சினையாகி விட்டது. இப்போது அவருடைய உலகில் நான் இல்லை என்று நினைக்கிறேன். “இல்லை, உங்களுடைய உலகில்தான் நான் இல்லாமல் போய் விட்டேன்” என்கிறார் அவர். இப்படியாக அவரும் நானும் மாறி மாறி நீ இல்லை, நான் இல்லை என்று சொல்லி, துன்பக் கேணியில் உழல்கிறோம். துன்பக் கேணியில் உழல்வதுதான் மானிட இனத்துக்குப் பிடித்தமான பண்பு என்பதால் அது செவ்வனே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அந்த நண்பரை வெங்கடேஷ் குமார் கச்சேரிக்கு அழைக்கலாமா என்று யோசித்தேன். அவரை நான் சந்திப்பதே வருடாந்தரம் நடக்கும் புத்தக விழாவில்தான். அதுவும் இருபது பேருக்கு மத்தியில். தனியாகச் சந்தித்து ஆறேழு ஆண்டுகள் இருக்கும்.
இந்த நிலையில் நான் வரவில்லை என்று அவர் மறுத்து விட்டால்? அது ஒரு அனாவசியமான துன்பம்.
அதனால் மேலே குறிப்பிட்ட அந்த இன்னொரு அன்புவை அழைத்தேன். உடனே சம்மதித்தான். மகிழ்ச்சி.
இங்கே அன்பு பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். கவனமாகக் கேளுங்கள்.
என் மீது அன்பு என்ற வன்முறையை செலுத்தாத இரண்டே இரண்டு ஜீவன்கள் ஸ்ரீனிவாசனும் ஸ்ரீயும்தான். அதற்காக என் மீது அக்கறை இல்லாதவர்கள் என்று நினைத்து விடாதீர்கள்.
அன்பு அல்லது அக்கறை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் தருகிறேன்.
க்யோத்தோவில் ஒரு பப். நான் ஒரு பெண்ணுடன் ஆடிக்கொண்டிருக்கிறேன். இசையின் காதைப் பிளக்கும் ஓசையில் பப்பில் உள்ள மேஜை நாற்காலிகளெல்லாம் அதிர்ந்து கொண்டிருக்கின்றன. சீனி என் காதில் வந்து உங்களுக்கு ஒரு மெஸேஜ் அனுப்பியிருக்கிறேன் பாருங்கள் என்றார்.
பார்த்தேன்.
டோண்ட் கிஸ்.
எனக்குப் புரிந்து விட்டது. அவளை முத்தமிட்டு விடாதீர்கள் என்பது செய்தி.
நான் கொலைவெறியாகி விட்டேன். ஏய்யா, போதை என்றால் அதற்காக ஒரு பெண்ணிடம் அத்துமீறி விடுவேனா? பொதுவாக ஜப்பானிய பப்களில் தெரியாத பெண்கள் தெரியாத ஆண்களோடு வந்து ஆடுவது சகஜம்தான். ”அதற்காக முத்தம் கொடுத்து விடுவேனா? நான் என்ன கேணப் ——யா?” என்றெல்லாம் மனதுக்குள் நினைத்துக்கொண்டு அவளோடு தொடர்ந்து ஆடினேன்.
ஆனால் சீனி அப்படி மெஸேஜ் கொடுத்ததன் வரலாறும் எனக்குப் புரிந்தது. அதற்கு முந்தின நாளோ என்னவோதான் தோக்யோ நகரில் ஒரு பெண்ணோடு ஒரு பப்பில் ஆடிக்கொண்டிருந்தேன். ஆட்டம் மிகவும் அந்தரங்கமாக இருந்ததால் ஆட்ட இறுதியில் அவள் கன்னத்தில் ஒரு முத்தம் இட்டேன். அதற்குப் பிறகும் அவள் என்னோடு அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தாள் என்பது முக்கியம். அதன் காரணமாகத்தான் சீனி அன்று இப்படி ஒரு மெஸேஜ் அனுப்பியிருக்கிறார் என்று புரிந்து கொண்டேன்.
கோபம் வந்தால் சீனியிடம் மட்டும் நான் பொங்குவதில்லை. சீனி இல்லையேல் எனக்கு ஒரு உடல் உறுப்பு போய் விட்டது போல. நம் கண்ணின் மீது நமக்குக் கோபம் வந்தால் கண்ணைக் குத்துகிறோமா என்ன என்று சும்மா இருந்து விட்டேன்.
அது பற்றி சீனியிடம் எதுவும் பேசவும் இல்லை.
இன்னொரு நாள் இன்னொரு நண்பரிடம் நட்பு பற்றி விளக்கிக்கொண்டிருந்தேன். நட்பு நீடிக்க வேண்டுமானால் மனதில் தோன்றுவதையெல்லாம் பேசி விடக் கூடாது என்று சொல்லி, உதாரணமாக, சீனி அனுப்பிய மெஸேஜ் பற்றியும் அது எனக்குள் விளைவித்த கோபம் பற்றியும், ஆனால் அது பற்றி சீனியிடம் நான் ஒரு வார்த்தை கூட பேசாதது பற்றியும் சொன்னேன். அந்த உரையாடலின்போது சீனியும் அருகில் இருந்ததால் அவருக்கு அந்தச் சம்பவத்தைத் தெரிவித்து விட்டது போல் ஆகியது.
அப்புறமாக சீனி சொன்னார். தேசம் புதிது. ஊர் புதிது. இங்கே ஏதாவது இசகு பிசகு ஆகி பிரச்சினை ஆனால் யாருக்கு நஷ்டம்? நீங்கள் கோபப்படுவீர்கள் என்று நன்றாகத் தெரியும். அப்படிக் கோபப்பட்டால் எனக்கு மயிரே போச்சு. அசம்பாவிதம் நடந்து விடக் கூடாது அல்லவா?
இதற்குப் பெயர்தான் அக்கறை. ஒருத்தன் நம் மீது கோப்பட்டாலும் பரவாயில்லை, சம்பவம் நடந்து விடக் கூடாது என்று தடுக்க முன்வருதல்.
அதை விட்டு விட்டு, நீங்கள் செய்வது சரியில்லை, முறையில்லை, அப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும் என்று நொட்டிக்கொண்டிருந்தால் அதுதான் அன்பு. அந்த அன்பு ரத்தக்களரியில்தான் கொண்டு போய் விடும்.
என்னோடு நடனமாடிய பெண் நடனம் முடிந்து பேசிக்கொண்டிருந்த போது என் வயது எத்தனை இருக்கும், சொல்லுங்கள் என்றாள்.
மேலும் கீழும் பார்த்தேன்.
இருபது இருக்கலாம்.
ஐம்பது என்றாள்.
நம்பவே முடியவில்லை.
”தோல்தான் காரணம். உணவு இன்னொரு காரணம். சாக்கே மூன்றாவது காரணம். ஜப்பானியருக்கு தோல் ஒரு வரம்” என்றாள்.
பிறகு என் கன்ன்ங்களைத் தடவி “உனக்கு என்ன ஒரு ஐம்பது இருக்குமா?” என்றாள்.
எழுபது.
ஒரு இந்தியனுக்கு இந்தத் தோல் அபூர்வம், உனக்கு இது ஒரு கொடுப்பினைதான் என்றாள்.
சின்ன வயதிலிருந்து நான் எடுத்துக்கொண்டு வரும் மூலிகைகளே காரணம் என்றேன்.
நள்ளிரவு பன்னிரண்டு மணி அளவில் கிளம்பி விட்டாள். ”ஏன், இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கலாமே?” என்றேன்.
”கொஞ்ச நேரம் என்ன? நாளை முழுவதும் கூடப் பேசலாம். ஆனால் நான் நாளை காலை நீதிமன்றத்துக்குப் போக வேண்டும்” என்றாள்.
நான் கண்களைச் சுருக்கினேன்.
ஜப்பானியரிடம் அந்தரங்க விஷயங்களைக் கேட்கக் கூடாது.
”என் கணவனை விவாகரத்து செய்ய வேண்டும்; காலையில் தீர்ப்பு” என்று அவளாகவே சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.