பூலோக சொர்க்கம் – 1

1.

என் வருமானத்தைத் தாண்டி எனக்குப் பணம் தேவைப்படுவது என்னுடைய பயணங்களுக்காகத்தான்.

ஏன் பயணம் செய்ய வேண்டும்?  பயண நூல்களைப் படித்தால் போதாதா?

போதாது.  ஒவ்வொரு மனிதனும் பயணம் செய்தே ஆக வேண்டும்.  ஆயிரம் பயண நூல்களைப் படித்தாலும் நமக்கே நமக்கென்று கிடைக்கும் அனுபவங்கள் தனியானவை.

ஒரு ஜப்பானிய உதாரணத்தைச் சொல்கிறேன்.

இந்த முறை நான் ஜப்பான் சென்றது இரண்டாவது தடவை.  சென்ற ஆண்டும் அக்டோபரில்தான் சென்று வந்தேன்.  இந்த முறையும் அப்படித்தான்.  இந்த முறை இரண்டு வாரம் பிந்தி.  அவ்வளவுதான்.  அடுத்த முறை ஃபெப்ருவரியில் செல்ல வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.  அப்போதுதான் ஸ்நோ கண்ட்ரி என்ற நாவலில் வரும் ஹொக்கெய்தோ தீவை பனிவிழும் நிலமாகக் காண முடியும்.  ஜப்பானின் இரண்டாவது பெரிய தீவு.  ஹொக்கெய்தோ மாநிலத்தின் தலைநகர் ஸொப்போரோவில் குளிர்காலத்தில் மைனஸ் பத்து டிகிரி செல்ஷியஸ் வரை போகும்.  பதினாறு அடி உயரத்துக்கு பனி விழும்.  இதையெல்லாம் காண வேண்டுமானால் ஃபெப்ருவரியில்தான் செல்ல வேண்டும். 

தோக்யோ சென்று சேர்ந்து அறையை வாடகைக்கு எடுத்த போது இனிமேல் ஜென்மத்துக்கும் ஜப்பான் வரக் கூடாது என்ற முடிவை எடுத்தேன்.  காரணம், ஒரு நாள் வாடகை பத்தாயிரம் ரூபாய்.  பத்தாயிரம் குறைந்த பட்சம்.  இதில் இன்னொரு பிரச்சினை, அறையை மதியத்துக்கு மேல் மூன்று மணிக்குத்தான் தருவார்கள்.  அறையிலிருந்து காலி பண்ண வேண்டுமானால் காலை பத்து மணிக்கே வெளியே வந்து விட வேண்டும்.  காலி பண்ண பதினோரு மணி ஆகும் என்றால் ஒரு மணி நேர வாடகை ஆயிரம் ரூபாயோ என்னவோ தர வேண்டும்.

அதாவது, ஜப்பான் எந்த அளவுக்கு அந்த தேசத்தின் குடிமகன்களுக்கு அனுசரணையாக இருக்கிறதோ அந்த அளவுக்கு வெளிநாட்டுப் பயணிகளுக்கு விரோதமாக இருக்கிறது.  உதாரணமாக, தோக்யோவிலிருந்து க்யோத்தோ செல்ல வேண்டுமானால் ரயில் டிக்கட் முப்பதாயிரம் ரூபாய்.  அடுக்குமா?

ஆனால் வைன், சாக்கே, பியர் எல்லாம் கிட்டத்தட்ட இலவசம் என்கிற அளவுக்கு மலிவு.  நம்முடைய அம்மா உணவகம் மாதிரி. சாப்பாடும் அப்படித்தான்.  அம்பது ரூபாயில் வயிறு நிறைய சாப்பிடலாம்.  ருசியாகவும் இருக்கும்.  இது தவிர, இன்னொரு வசதியும் இருக்கிறது.  எதை எடுத்தாலும் நூறு யென் என்று ஒரு கடை.  ஒரு மனிதனுக்குத் தேவையான அத்தனை பொருளும் அங்கே கிடைக்கிறது.  தலையணை, மெத்தை, பேனா, பென்சில், குடை, உணவுப் பொருள், புளிப்பு மிட்டாய், சமையல் பொருட்கள் என்று ஆயிரம் வகை சாமான்கள். எதை எடுத்தாலும் நூறு யென்.  நூறு யென் அம்பது ரூபாய்க்கு சமம்.  அதைப் போல் உடை.  இந்தியாவில் மூவாயிரம் ரூபாய் விலையுள்ள சட்டை பேண்ட் எல்லாம் அங்கே முந்நூறு ரூபாய்.  அதே தரம். 

ஆனால் அறை வாடகையும், ரயில் டிக்கட்டும் பயங்கரம். 

இனிமேல் ஜப்பான் வரக் கூடாது, இதோடு சரி நினைத்தேன். 

அந்த நினைப்பு தோக்யோ நகரின் மெத்ரோ ரயில் பயணத்தில் நான் கண்ட ஒரு காட்சியினால் என்னை விட்டு நீங்கி விட்டது. 

இந்த ஜப்பான் பயணத்தில் செலவு சுமார் ஏழு லட்சம் ரூபாய் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்.  எனக்கு கணக்கு வராது.  ஒண்ணும் ரெண்டும் மூணு என்ற அளவுக்குத்தான் தெரியும்.  ஊருக்குச் செல்வதற்கு முன் இருந்த வங்கி இருப்பு, திரும்பிய பிறகு உள்ள வங்கி இருப்பு இரண்டையும் பார்த்தால் எத்தனை செலவு என்பதை லகுவாகத் தெரிந்து கொண்டு விடலாம் என்று இருந்தேன்.  பார்த்தால் அது கூட எனக்குத் தெரியவில்லை.  அரை மணி நேரம் செலவிட்டும் அந்தக் கணக்கு வழக்கைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஏழு லட்சத்துக்கு மேலே அல்லது கொஞ்சம் கீழே ஆகியிருக்க வேண்டும்.  இந்தப் பணத்தில் ஐந்து தென்னமெரிக்க நாடுகளைப் பார்த்திருக்கலாம்.

ஆனால் நான் தோக்யோ நகர் மெத்ரோ ரயிலில் கண்ட காட்சிக்காக ஒரு கோடி ரூபாய் வரை கொடுக்கலாம்.  அதில் நான் தெரிந்து கொண்ட விஷயத்தை நூறு புத்தகங்கள் படித்தாலும் தெரிந்து கொண்டிருக்க முடியாது.  ஜப்பானிலேயே ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தவரிடமும் அதை நான் கேட்டிருக்க முடியாது.  கண்ணால் காணும்போதுதான் அதன் அருமை புரியும்.

நானும் சீனியும் மெத்ரோவில் வந்து கொண்டிருந்தோம்.  மாலை ஐந்து மணி இருக்கும்.  குளிர்காலம் என்பதால் நான்கு மணிக்கே இருட்டி விடுகிறது.  ரயிலில் பெரிய கூட்டம் என்று சொல்ல முடியாது.  எங்களுக்கு இடம் கிடைத்து நாங்கள் உட்கார்ந்திருந்தோம்.  அப்போது ஆறிலிருந்து ஏழு வயதுள்ள மூன்று பெண் குட்டிகள் ரயில் தரையில் அமர்ந்து சாப்பூத்திரி மாதிரி ஏதோ விளையாடிக்கொண்டிருந்தன.  ஒரே சிரிப்பும் கும்மாளமுமாகப் போய்க்கொண்டிருந்தது விளையாட்டு. முதுகில் ஒரு சிறிய பாடப் புத்தகப் பை. ஒரு நிறுத்தம் வந்தது.  மக்கள் ஏறி இறங்கினார்கள்.  இரண்டாம் நிறுத்தம் வந்தது.   மக்கள் ஏறி இறங்கினார்கள்.  மூன்றாம் நிறுத்தம் வந்தது.  மக்கள் ஏறி இறங்கினார்கள்.  நான்காம் நிறுத்தம் வந்தது.  மக்கள் ஏறி இறங்கினார்கள்.  எங்களுக்கு ஏழாவது நிறுத்தம்.  ஐந்தாம் நிறுத்தம் வந்ததும் இரண்டு குட்டிகள் ரயிலிலிருந்து இறங்கிச் சென்றன.  மூன்றாவது குட்டி மட்டும் எழுந்து நின்று கொண்டது.  ஆறாம் நிறுத்தத்தில் அந்தக் குட்டி இறங்கிச் சென்றது.

நாங்கள் பயணம் செய்த ரயில்பாதை பூமிக்குக் கீழே ஐந்தாம் அடுக்கு.  எனவே அந்தக் குட்டிகள் ஐந்து அடுக்குகளை எஸ்கலேட்டர் மூலம் தாண்டி மேலே செல்ல வேண்டும்.  அப்போதுதான் சாலை வரும்.  சாலைகளைக் கடந்து வீடு செல்ல வேண்டும்.

உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்.  இந்தப் பூமி உருண்டையில் வேறு எந்த தேசத்திலாவது இப்படி ஒரு காட்சியைக் காண முடியுமா?

வியன்னாவில் முடியும்.  ஆனால் அங்கே பள்ளிக்கூடம் வீட்டுக்கு அருகிலேதான் இருக்கும்.  இத்தனை தூரம் மெத்ரோவில் பயணம் செய்ய வேண்டியதில்லை.  வியன்னா தோக்யோவைப் போல் பெருநகரம் இல்லை. 

இந்தியாவிலோ வேறு எந்த தேசத்திலோ இப்படி ஒரு காட்சி சாத்தியமா?

இங்கே இந்தியாவில் சும்மா வீட்டுக்கு எதிரே உள்ள ஒரு காய்கடைக்குக் கூட குழந்தைகளை அனுப்ப முடியாது.  வாகனம் அடித்து விடும்.  இல்லாவிட்டால் குழந்தைத் திருடர்கள் பிடித்துக்கொண்டு போய் கண்களைக் குருடாக்கி பிச்சையெடுக்க வைப்பார்கள்!

இந்தியாவில் குழந்தைகள் எப்படி வளர்க்கப்படுகிறார்கள்?

உலகிலேயே குழந்தை வளர்ப்பில் மிக அருவருப்பான, மிக மோசமான நிலையில் இருப்பது இந்தியாதான்.

இருபத்தோரு வயது இளைஞன் ஒருவன். அவன் மனைவி ஒரு மாத காலம் வெளியூர் சென்றிருக்கிறாள். குழந்தை இல்லை.  அந்த ஒரு மாத காலமும் அந்த இளைஞனுக்கு அவன் தாயார் காலைச் சிற்றுண்டியும் மதிய உணவும் செய்து டன்ஸோ மூலம் அனுப்புகிறார்.  தாயாரும் ஒரு அலுவலகத்தில் பணி புரிபவர்.  இதை அந்த்த் தாயார் என்னிடம் சொன்னபோது குரலில் பெரும் சலிப்பு தெரிந்தது.  அவர் அதை மகிழ்ச்சியாகச் சொல்லியிருந்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பேன்.  அந்தப் பெண்மணிக்கு ஐம்பது வயது இருக்கலாம்.  ஆனால் எண்பது ஆனாலுமே அவர் மருமகள் வெளியூர் போனால் மகனுக்குக் காலைச் சிற்றுண்டியும் மதிய உணவும் சமைத்துத்தான் டன்ஸோ மூலம் அனுப்ப வேண்டியிருக்கும். 

இன்னொரு தாயார்.  மகன் வயது பதினேழு.  கராத்தேயில் கறுப்பு பெல்ட் வாங்கியவன்.  படிப்பது பன்னிரண்டாம் வகுப்பு.  வீட்டிலிருந்து ஒரு தெருவைத் தாண்டினால் பள்ளிக்கூடம்.  நடக்கும் தூரம்.  சைக்கிள் இருக்கிறது.  ஸ்கூட்டர் இருக்கிறது.  ஆனால் ஸ்கூட்டரில் செல்லக் கூடாது என்பது பள்ளிக்கூட விதி.  அம்மாதான் தினந்தோறும் ஸ்கூட்டரில் கொண்டு போய் பையனை பள்ளிக்கூடத்தில் விட வேண்டும்.  ஒருநாள் அம்மாவுக்கு ஜுரம்.  அந்த ஜுரத்திலும் அந்த அம்மாதான் அந்தத் தடிமாட்டை ஸ்கூட்டரில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்தார். 

அந்தச் சம்பவத்தை என்னால் ஏழு ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாது. 

இந்தியா முழுவதுமே நிலைமை இப்படித்தான் இருக்கிறது.  இளைஞர்கள் கடைந்தெடுத்த சுயநலமிகளாகவும் சமூக விரோதிகளாகவும் இருப்பதற்கு இப்படி வளர்க்கப்படுவதுதான் அடிப்படையான காரணம். 

இந்த ஜப்பான் பயணத்தில் இன்னொன்றையும் கண்டு பிடித்தேன்.  அதாவது, ஜப்பானியர் சமூக நலனையே தன் சொந்த நலனை விட முதன்மையாகக் கருதுகிறார்கள்.  சமூகமே முதன்மை.  தனிமனிதன் அடுத்ததுதான்.  அதனால்தான் தேசம் முழுவதும் பொது இடங்களிலும், உணவு விடுதிகளிலும், ரயில்களிலும், பஸ்களிலும் மக்கள் கைபேசியில் பேசுவதில்லை.  எல்லோருமே கைபேசியை சைலண்ட் மோடில்தான் வைத்திருக்கிறார்கள்.  அதேபோல் பொது இடங்களில் சிகரெட்டும் பிடிப்பதில்லை.  இத்தனைக்கும் உலக அளவில் ஜப்பானியர்தான் அதிகமாகப் புகைப்பவர்கள்.  ஆனால் அதற்கென்று இருக்கும் இடத்தில்தான் புகைக்கிறார்கள். 

இங்கே இந்தியாவில் ரயில் பயணங்களை நரகமாக்குவது மற்றவர்களின் தொலைபேசி உரையாடல்கள்தான்.  நாலு ஊருக்குக் கேட்பது போல் கத்துவார்கள்.  இத்தனைக்கும் படித்தவர்கள்.  பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்கள்.

பெரியவர்களைப் பார்த்தே வளர்வதால் ஜப்பானியக் குழந்தைகள் அதிகமாகக் கத்துவதில்லை.  பொதுவாக இந்தியக் குடியிருப்புக்கு அருகில் ஜப்பானியர் வசிப்பதில்லை.  காரணம், இந்தியக் குழந்தைகள்.  ஜப்பானியக் குழந்தைகள் ஆறு மணி ஆனால் வீட்டுக்கு வந்து விடும்.  இந்தியக் குழந்தைகள் இரவு எட்டு மணி வரை அந்தப் பிராந்தியத்தையே சுழற்றி அடிப்பது போல் கத்திக் கொண்டிருக்கும். 

இந்தியர்களுக்கு சமூகத்தை விட, தேசத்தை விட தங்கள் குடும்ப நலன்தான் முக்கியம். ஜப்பானியருக்கு சமூகம் முக்கியம், தேசம் முக்கியம்.  இந்த விஷயத்தினால்தான் ஜப்பான் பூலோக சொர்க்கமாகத் திகழ்கிறது.

ஜப்பானில் கொரோனா சமயத்தில் அரசாங்கம் எந்த உத்தரவும் போடாமலேயே மக்கள் முகத்திரை அணியத் தொடங்கினார்கள்.  இப்போதும் ஜப்பானில் அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை எந்த சட்டத் திருத்தமும் கொண்டு வரப்படவில்லை.   ஒரே காரணம்தான்.  சட்டம் போடாமலேயே மக்கள் சமூக ஒழுங்கைப் பின்பற்றுபவர்களாகவும், மற்றவர்களுக்கு இடைஞ்சல் தராமலும் வாழ்கிறார்கள்.    

மற்றொரு நாள் நண்பர் கமலக்கண்ணனோடு தோக்யோ மெத்ரோவில் வந்து கொண்டிருந்தேன்.  மாலை நேரம்.  ரயிலில் கூட்டம் இல்லை.  இருக்கைகள் சில காலியாக இருந்தன.  அப்போது பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இருக்கைகளில் அமராமல் நின்றுகொண்டிருந்தாள்.  சாதாரணமாக நிற்கவில்லை.  அங்குமிங்கும் ஆடியபடி, அடிக்கடி இடம் மாற்றியபடி அலைந்து கொண்டிருந்தாள்.  மது அருந்தியிருக்கிறாளோ என்ற் சந்தேகப்பட்டேன்.  ஜப்பானில் அது சாத்தியம் இல்லை.  அவளிடம் பள்ளிக்கூடப் பை இருந்தது. 

அவளை யாருமே கண்டுகொள்ளவில்லை.  நான் மட்டும் நான் பார்ப்பது யாருக்கும் தெரியாதபடி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.  அப்போது கமல் சொன்னார், அவள் கழுத்தில் ஒரு அடையாள அட்டை தொங்குகிறதே, கவனித்தீர்களா?

ஆமாம். 

(நம் ஊரில் ஐ.டி. தொழிலில் இருப்பவர்கள் அணிந்திருப்பது போல் இருந்தது.  அதனால் அது ஒன்றும் அசாதாரணமாகத் தெரியவில்லை.)

”அவள் மனவளர்ச்சி குன்றியவள், அதைத் தெரிவிப்பதற்காகத்தான் அந்த அடையாள அட்டை” என்றார் கமல்.

அதிர்ந்து போனேன்.  இதெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லை.  மன வளர்ச்சி குன்றிய பெண் குழந்தைகள் கூட ஜப்பானில் தனியாகப் பள்ளிக்கூடம் போய் வர முடிகிறது.

எந்த தேசத்தில் தெருவில் நாய்கள் அனாதையாக அலைந்து கொண்டிருக்கிறதோ அந்த தேசம் நரகம். 

எந்த தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் இரவு பகல் எந்நேரமும் சுதந்திரமாக நடமாட முடிகிறதோ அந்த தேசம் சொர்க்கம். 

அதனால்தான் ஜப்பான் பூலோக சொர்க்கம்.

இதைத் தெரிந்து கொள்வதற்காக எத்தனை லட்சம் வேண்டுமானாலும் செலவு செய்யலாம். 

அதனால்தான் எனக்குப் பணம் தேவைப்படுகிறது.

***

இப்போதெல்லாம் சந்தா, நன்கொடை எதுவும் வருவதில்லை. கவனியுங்கள்.

சந்தா மற்றும் நன்கொடை அனுப்புவதற்கான விவரம் கீழே:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai