பூலோக சொர்க்கம் – 2

இருபத்தைந்து வயது வரை என் வாழ்க்கை பேரரசனின் வாழ்க்கையாக அமைந்தது.  அதிலிருந்து நாற்பது வயது வரை தெருநாய் வாழ்க்கை.  நாற்பதிலிருந்து எழுபது வரைதான் ஓரளவுக்கு என்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  இந்த முப்பது ஆண்டுகளில் நான் யாரிடமும் கடன் வாங்கியதில்லை என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய விஷயம். 

ஒரே ஒருமுறை என் மகனுக்காக என் நண்பரிடம் கடன் வாங்க நேர்ந்தது.  சொன்ன தேதியில் மகன் பணத்தைத் திருப்பவில்லை.  அது கூடப் பரவாயில்லை.  அது பற்றி அவன் என்னிடம் பேசவும் இல்லை.  பணத்தைப் பிறகு திருப்பிக் கொடுத்து விட்டாலும் அந்தப் பிரச்சினை பற்றி அவன் என்னிடம் பேசாதது எனக்கு இன்னமும் மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.  சொன்ன தேதியில் பணத்தைக் கொடுக்காதது பிரச்சினை அல்ல.  அது பற்றி அவன் என்னிடம் எதுவுமே சொல்லாதது, அந்தப் பிரச்சினையை அவன் எதிர்கொள்ளாதது என்னை வெகுவாக பாதித்தது.  இப்படித்தான் நான் சந்திக்கும் நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது பேரும் இருக்கிறார்கள்.  தவறு.  ஆயிரத்தில் ஒருவர்தான் பிரச்சினையை எதிர்கொள்பவராக இருக்கிறார்.   

நான் ப்ளாக் மூலம் வாசகர்களிடம் பணம் கேட்கிறேன்.  அது பண்டமாற்று.  என் எழுத்தைத் தருகிறேன்.  அதற்கு உங்களால் முடிந்தால் பணம் தாருங்கள் என்கிறேன்.  முடியாவிட்டாலும் பரவாயில்லை.  அதில் எனக்குப் புகார் எதுவும் இல்லை.

ஆனால் அப்படி பலரும் தருவதில்லை.  300 ரூ. சந்தாத் திட்டம் படுதோல்வி.  மாதத்தில் ஒரு மூன்று பேர்தான் அனுப்புகிறார்கள்.  மற்றபடி நன்கொடையாக அனுப்பும் ஒரு பத்து பேர் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.  அவர்களால்தான் என் காலம் ஓடுகிறது. 

சீனி சொல்லும் யோசனைகள் அநேகமாக எல்லாமே என் விஷயத்தில் வெற்றியாகும்.  நூற்றில் ஒன்று தோல்வி அடையும்.  ஆச்சரியம் என்னவென்றால், அந்தத் திட்டம் தோல்வி அடையும் என்பது அவர் சொல்லத் தொடங்கின உடனேயே எனக்குத் தெரிந்து விடும். 

சமீபத்தில் அப்படி நடந்தது.  ஜப்பான் பயணத்தினால் பணம் செலவாகி விட்டது.  பணம் தேவை.  என்ன செய்யலாம்?

சீனி சொன்ன யோசனைதான் சாருவுடன் சில தினங்கள்.  ஒரு லட்சம் கொடுத்தால் நான் போய் அந்த நண்பர்களோடு தங்குவேன்.  காலப்போக்கில் நூறு பேர் வருவார்கள் என்றார் சீனி.

ஒருத்தர் கூட வர மாட்டார் என்றது என் மனம்.  ஆனாலும் அதை நான் சொல்ல மாட்டேன்.  பிரமாதமான திட்டம் என்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு இன்னொரு ரவுண்டு சாக்கேயைப் போடுவேன்.  மாற்றுக் கருத்தை நான் சொல்வதே இல்லை.  அதற்கு ஒரு உளவியல் காரணம் இருக்கிறது.  பிறகு சொல்கிறேன்.

நான் நினைத்தது போலவே அந்தத் திட்டத்தை யாருமே கண்டுகொள்ளவில்லை.  இன்னும் கொஞ்சம் சுருக்கமாக எழுதுங்கள் சாரு என்றார் ஸ்ரீராம்.  ம்ஹும்.  இதை விட சுருக்கமாக எழுத முடியாது.  நானே ரத்தக் கண்ணீரில் எம்மார் ராதாவைப் போல் ரத்தக் கண்ணீர் விட்டு எழுதியிருக்கிறேன்.  அதற்கு மேல் இதயத்தைக் கிழித்துக் காட்ட முடியாது.

ஒரே ஒரு நண்பர் ஒரு லட்சம் கொடுக்க முன்வந்தார்.  ஆனாலும் அது அந்தத் திட்டத்தினால் நடந்தது என்று சொல்ல முடியாது.  அந்த நண்பர் மாதாமாதம் எனக்கு நிதியுதவி செய்பவர். 

ஆனால் அவர் ஒரு வார்த்தை சொன்னார்.  காரணம், அவர் என் மீது கொண்டுள்ள அபரிமிதமான மரியாதை.  அன்புதான் வன்முறையாக மாறும்.  அதாவது, என் மீதான உங்கள் அன்பு உங்களிடம் இருக்கும்போது அன்பாகவே இருக்கும்.  ஆனால் அது என் வசம் இடம் பெயரும்போது வன்முறையாக மாறி விடும்.  எப்படி என்று என் அன்பு நாவலைப் படித்துப் பாருங்கள்.

ஆனால் நண்பர் என் மீது கொண்டிருப்பது மரியாதை.  அன்பை விட மரியாதை பெரியது.  அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிறார்கள்.  அன்பு, பயம் கலந்த அன்பு, மரியாதை, பக்தி.  நீங்கள் அனைவரும் என் மீது மரியாதை கொண்டிருக்கிறீர்கள்.  என் மீது பக்தி பூண்டொழுகும் ஒரு பெண் இருக்கிறாள்.  பிறகு எப்போதாவது யார் என்று சொல்கிறேன்.

”சார், எப்போதெல்லாம் உங்களுக்குப் பணம் தேவையோ அப்போதெல்லாம் என்னிடம் சொல்லுங்கள், என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.”  

இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைத்திருப்பது என் அதிர்ஷ்டம்.  என் கொடுப்பினை.

ஆனால் நான் ஒரு பைத்தியக்காரன்.  பித்தன்.  சில மாதங்களுக்கு முன்பு ஒருநாள் காலை ஆறு மணிக்கு ஒரு கோடீஸ்வரரிடமிருந்து எனக்கு ஃபோன்.  முப்பது ஆண்டு நட்பில் அது அநேகமாக இரண்டாவது அல்லது மூன்றாவது ஃபோனாக இருக்கும். 

“மாதாமாதம் உங்களுக்குத் தேவையான பணம் எவ்வளவு என்று சொல்லுங்கள், அனுப்பி வைக்கிறேன்” என்றார். 

ஐம்பதாயிரம் என்று சொல்லியிருக்க வேண்டும்.  அந்தத் தொகை அவருக்கு ஐம்பது ரூபாய் மாதிரி.  பிஸாத்து.  எனக்கு அந்த மாதம் இருபதாயிரம் ரூபாய் தேவையாக இருந்தது.  இருபதாயிரம் என்றேன். 

முடிந்தது கதை.  இப்போது அவருக்கு நான் ஃபோன் செய்து, ஹிஹி தப்பாச் சொல்லிட்டேன், அம்பதாயிரம் தேவை என்றெல்லாம் என் உயிரே போனாலும் சொல்ல மாட்டேன்.

கடவுளே எனக்கு வரம் கொடுக்க வந்தாலும் இப்படித்தான் நடக்கும்.  எனக்கு அன்றைய தினம் ஒரு பாட்டில் வைன் தேவைப்படும்.  அதைத்தான் கேட்டுத் தொலைப்பேன்.  நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு ஒரு பாட்டில் முடிந்து, இன்னொரு பாட்டில் தேவைப்படும்.  கடவுள் என்ன நமக்கு வேலைக்காரனா, தேவைப்படும்போதெல்லாம் வருவதற்கு?  நடமாடும் கடவுள் சீனிதான் அவருடைய சேமிப்பிலிருந்து எனக்கான வைனை எடுத்துக் கொடுப்பார், கொடூரமான கொலைவெறியோடு. 

எனக்கு இருப்பது ஒருவித அடிமை மனோபாவம் என நினைக்கிறேன்.  இதை நீங்கள் ஆழமாக யோசிக்க வேண்டும்.  உங்கள் வீட்டுக்கு என்னை அழைக்கிறீர்கள்.  அங்கே ஒரு சோஃபா இருக்கிறது.  நான் அதன் ஒரு ஓரத்தில், அதுவும் விளிம்பில்தான் அமர்வேன்.  இதுவே ஒரு பிராமணர் என்றால் அந்த சோஃபாவையே சிம்மாசனமாக நினைத்து நன்றாக முதுகை பின்னே சாய்த்து தலையை நிமிர்த்தியபடி – முடிந்தால் கால் மேல் கால் போட்டு உட்காருவார். தெய்வதுக்கு நிகராகக் கருதப்பட்ட அரசர்களையே காலைத் தொட்டு வணங்க வைத்த இனம்.

ஆனால் நாலாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்ந்த மரபணு என்னுள் இருக்கிறது.  அது அப்படித்தான் வேலை செய்யும்.  நல்லவேளை, என் ரத்த உறவில் எனக்கு வாரிசுகள் இல்லை.  இந்த மரபணு அடிமை மனோபாவம் என்னோடு ஒழிந்தது. 

அதனால்தான் அந்தக் கோடீஸ்வர நண்பரிடம் ஐம்பதாயிரம் கேட்காமல் இருபதாயிரம் கேட்டது.  ஐம்பதாயிரம் என்று என் நாவில் வந்திருந்தால் நான் உங்களிடம் பணம் கேட்கும் பிரச்சினையே வந்திருக்காது.  விடுங்கள், விதியை மாற்ற முடியாது.

இப்போது என் நண்பருக்கு வருகிறேன். 

இதுவரை நான் யாரிடமும் தனிப்பட்ட முறையில் பணம் கேட்டதே கிடையாது.  அதனால் எப்போது எனக்குப் பணம் தேவைப்படுகிறதோ அப்போது அந்த நண்பரிடம் பணம் கேட்கும் மனநிலை எனக்கு வாய்க்கவே வாய்க்காது. 

ஒரே ஒரு முறை கேட்டிருக்கிறேன்.  ஒரு நண்பர் அடிக்கடி என்னிடம் ஏதாவது உதவி தேவையானால் கேளுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார். 

எனக்கு என்ன உதவி?  இறையருளால் எல்லாமே இருக்கிறது.  பயணங்களுக்காகப் பணம் தேவை. 

மாதாமாதம் உங்களால் முடிந்த ஒரு குறைந்த பட்சத் தொகையை அனுப்புங்கள் என்று நண்பருக்கு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினேன். நண்பர் அதற்கு பதிலே அனுப்பவில்லை.  ஓ, அவருக்கு மன உளைச்சல் தந்து விட்டோம் போலிருக்கிறதே என்று வருந்தினேன். 

நான் யாருக்கும் எந்த சிரமமும் கொடுக்கக் கூடாது என்று நினைப்பவன்.  ஜப்பான் போயிருந்தபோது கூட யாரும் எனக்காக அறை வாடகை கொடுத்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.  பலரும் இது போன்ற விஷயங்களில் கமுக்கமாக இருப்பதை கவனிக்கிறேன்.  நான் அப்படி அல்ல.  மற்ற விஷயங்களைப் போலவே பண விஷயத்திலும் மிக வெளிப்படையானவன். 

எனவே நண்பர்களே, எனக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்று விரும்பினால் அனுப்புங்கள்.  உங்கள் பணம் உங்களுக்கு ஞானமாகத் திரும்பி வரும்.  உதாரணம், சாருவுடன் சில தினங்கள், பூலோக சொர்க்கம்.  இதெல்லாம் பணத்தைப் பணம் என்று பாராமல் எட்டு லட்சம் பத்து லட்சம் என்று செலவு செய்து சேகரித்தவை.  இதில் நான் மட்டும் அடக்கம் அல்ல. தோக்யோவில் வசிக்கும் செந்தில்குமார் என்னோடு காலை நான்கு மணி வரை பேசிக்கொண்டிருப்பார்.  ஏழு மணிக்கு அவர் அலுவலகம் கிளம்ப வேண்டும்.  அதுவும் அறுபது கிலோமீட்டர் தூரம் அவரே கார் ஓட்ட வேண்டும்.  முத்துப் பிரகாஷும் இப்படியே.  ஒரு வாரம் வீட்டில் லீவு போட்டு விட்டு எங்களோடு வந்து விட்டார்.  அடுத்தது, கமலக்கண்ணன்.  க்யோத்தோவில் விஞ்ஞானி கணேஷ்.  இப்படியெல்லாம் மற்ற நண்பர்களும் சேர்ந்துதான் என் செயல்பாடுகளுக்குத் துணை நின்றார்கள். 

ஒரு லட்சம் திட்டம் பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்ட ஒரே ஒரு நண்பரைத் தவிர வேறு யாரும் செவி சாய்க்கவில்லை என்று எழுதினேன் அல்லவா?  இல்லை.  வேறு ஒரு நண்பரும் எனக்குக் கடிதம் எழுதினார். 

அந்தக் கடிதம்:

அன்புள்ள சாரு,

வணக்கம்.  தங்களை கட்டாயமாக சந்தித்தே ஆக வேண்டும் என்று நினைத்திருந்தேன். தங்களின் “சாருவுடன் சில தினங்கள்” என்ற கட்டுரை என் ஆவலை மேலும் தூண்டுகிறது, எப்படி ஒரு புத்தகத்தின் வருகைக்காகக் காத்திருக்கிறோமோ அது போல தங்களைச் சந்திக்க ஆவலாக உள்ளேன் சாரு.

ஆனால், காரைக்காலைச் சேர்ந்த நான் சென்னையில்  சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன்.  அன்றாடச் செலவுகளுக்கே மிகவும் சிரமமாக இருக்கும் நிலையில் என்னால் தாங்கள் குறிப்பிட்டுள்ள தொகையைச் செலுத்த இயலாது சாரு. 

தாங்கள் என்னைப் போன்ற மாணவர்களிடம் அப்படி எதிர்ப்பார்க்கவும் மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.

தங்களுடன் கொஞ்சம் சிவபானத்தோடு உரையாட வேண்டும் என்று எனக்கு ஆசை.  (இதைத் தங்களிடம் கேட்பதற்கு எவ்விதத்  தயக்கமும் இல்லை. ஏனெனில் தங்களைப் போல அதற்கு அடிமையாகாமல் கையாளுவதற்கு நான் கற்றுக்கொண்டேன்.  அதற்குக் காரணம் வாசிப்பதும், தங்களைப் போன்றவர்களின் எழுத்துக்களும் என்று கூட சொல்லலாம்.   இப்படிப்பட்ட ஆசான் யாருக்குக் கிடைப்பார்? ஆகவே தவறாகப் புரிந்துகொள்ள மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும் சாரு.)

சிவபானத்தோடு தங்களோடு உரையடுவது மிகவும் பிரியமானதாக அமையும் சாரு. 

தங்களின் பதிலுக்குக் காத்திருக்கிறேன் என் அன்பு சாரு,

பிரியத்துடன்:

—————

காரைக்கால்.

பாருங்கள், என் வேண்டுகோள் யாரைப் போய்ச் சேர்கிறது என்று!  இந்த மாணவரை நான் காலையில் நடைப் பயிற்சி போகும் போது வந்து சேர்ந்து கொள்ளும்படி சொல்லியிருக்கிறேன். 

சிவபானம் என்று தம்பி எதைச் சொல்கிறார் என்று தெரியவில்லை.  சிவபானம் என்றால் கஞ்சா.  அது தடை செய்யப்பட்ட வஸ்து.  அதைப் புகைக்க வாய்ப்பே இல்லை.  மது என்றால், அதுவும் சாத்தியம் இல்லை.  நான் ஒரு கலகக்காரனாகப் பெயர் எடுத்திருந்தாலும், வாழ்வில் ஒழுங்கைப் பின்பற்றுபவன்.  மாணவர்களோடு மது அருந்துவதில்லை என்பது நான் பின்பற்றும் ஒழுங்குகளில் ஒன்று.  ஒழுங்கு என்றால் ஒழுக்கம் அல்ல, டிஸிப்ளின்.  மாணவப் பருவத்தில் குடிப்பவர்கள் பழக்கம் இல்லாததால் வாந்தி எடுத்து விடுவார்கள்.  அதுதான் காரணம்.  நானெல்லாம் இருபத்தெட்டு வயதில்தான் குடிக்க ஆரம்பித்தேன். 

எனவே நண்பர்களே, பணம் அனுப்ப வேண்டும் என்று தோன்றினால் அனுப்பி வையுங்கள்.  அதிலும் உங்களை சிரமப்படுத்திக்கொண்டு அனுப்ப வேண்டாம்.  பணம் அனுப்பும் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் ஒரு இருபதே பேர்தான் இருப்பார்கள்.  அவர்கள்தான் விடாப்பிடியாக, தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.  அவர்களுக்கு என் சலூட். 

ஜப்பானைப் பற்றிய பல கண்டுபிடிப்புகளை எழுதியிருக்கிறேன்.  அதுதான் ஞானம். 

இன்னும் ஒரு விஷயம் இருக்கிறது.  ஹருகி முராகாமி இன்று ஜாக்கி சான் அளவுக்கு உலகப் புகழ் பெற்றிருக்கிறார்.  அவருக்கு நோபல் கொடுத்தால் அதன் காரணமாக ஒரு வாசகர் கூட அவருக்கு அதிகப்படியாக சேர மாட்டார்.  ஏனென்றால், அந்த அளவுக்கு எல்லோராலும் அறியப்பட்ட எழுத்தாளராக விளங்குகிறார்.  இன்று இந்தியாவில் இளைஞர்கள் அதிகம் வாசிக்கும் எழுத்தாளர் ஹருகி முராகாமிதான்.  இன்னொரு விவரம்.  இந்திய இளம் பெண்களின் கனவு நாயகன் யார் என்று வாக்கெடுப்பு செய்தால் ஹிந்தி நடிகர்களை விட அதிக வாக்கு எடுக்கக் கூடியவர் ஹருகி முராகாமிதான். 

இதற்குக் காரணம் என்னவென்றால், ஜப்பானியர்தான்.  ஜப்பானில் கோடிக்கணக்கான பேர் ஹருகி முராகாமியை வாசிக்கிறார்கள்.  அதன் காரணமாகத்தான் நியூயார்க்கர் பத்திரிகைக்காரன் ஹருகி வீட்டு வாசலை வந்து தட்டுகிறான். 

ஹருகி முராகாமியெல்லாம் சும்மா பிசாத்து.  யூகியோ மிஷிமா ஜப்பானில் ஒரு பேரரசனைப் போல் வாழ்ந்தவர்.  காரணம், அவர் நாவல்களை அத்தனை ஜப்பானியரும் வாங்கிப் படித்தார்கள்.  பேரரசன் என்றால் புரிகிறதா?  ஷாஜஹானைப் போல் வாழ்ந்தார் மிஷிமா.  தனக்கென்று ஒரு ராணுவம் வைத்திருந்தார்.  அரசாங்கத்தையே கவிழ்க்க ஒரு ராணுவக் கலகம் செய்தார். 

இப்போதும் ஒரு ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளரான ரியூ முராகாமி தன்னுடைய ஒவ்வொரு நாவலையும் வைத்துத் திரைப்படம் எடுக்கிறார்.  நாவலிலிருந்து வரும் ராயல்டியில் அவரால் ஒரு திரைப்படமே எடுக்க முடிகிறது. 

காரணம், கோடிக்கணக்கான ஜப்பானியர் புத்தகங்களை வாங்குகிறார்கள்.  ஆனால் யோசியுங்கள், கல்கியும் சுஜாதாவும் இங்கே எழுத்துலக சூப்பர் ஸ்டார்களாக விளங்கியவர்கள்.  சுஜாதா ஆறு வாரப் பத்திரிகைகளில் எழுதினார்.  ஆனால் பைபாஸ் சர்ஜரி செய்து கொள்ள அவரிடம் பணம் இல்லை.  மணி ரத்னம் கொடுத்தார். 

இது ஏன்?

பத்திரிகைத் தொடருக்கு சுஜாதாவுக்கு வாரம் இருநூறு ரூபாய் கொடுத்திருப்பார்கள்.  புதிதாக எழுத வரும் ஒரு இளைஞனுக்கும் இருநூறுதான்.  சுஜாதாவுக்கும் இருநூறுதான். 

ஆனால் ஜப்பானில் புத்தகமாக வாங்கிப் படிக்கிறார்கள்.  யோசித்துப் பாருங்கள்.  என் நாவலை ஒரு கோடி தமிழர்கள் வாங்கிப் படிக்கிறார்கள் என்றால் இப்படியா நான் உங்களிடம் காசு கேட்டுக்கொண்டிருப்பேன்?  பாவ்லோ கொய்லோ மாதிரி ஒரு தீவை வாங்கிக்கொண்டு போயிருப்பேன்.  இங்கேயும் தீவு வாங்குகிறார்கள்.  யார்?  சாமியார்கள். தமிழ் எழுத்தாளனுக்குக் கிடைத்தது மட்டும் உஞ்ச விருத்தி. 

சரி, ஜப்பானில் மட்டும் ஏன் எழுத்தாளர்களை கோடிக்கணக்கான பேர் வாசிக்கிறார்கள்?

நீங்கள் என்னிடம் சீலே உதாரணத்தைக் காண்பிக்கலாம்.  ஆனால் அது பொருந்தாது.  ஸ்பானிஷ் எழுத்தாளர்களும் கோடீஸ்வரராக இருக்கிறார்கள் என்றால் ஸ்பானிஷ் உலக நாடுகள் பலவற்றில் பேசப்படுகிறது.  ஆனால் ஜப்பானிய மொழி அப்படி அல்ல. 

மட்டுமல்லாமல் சீலேவுக்கும் ஜப்பானுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.  சீலேயில் எழுத்தாளன் என்றால் அவன் ஒரு வழிபாட்டு பிம்பம்.  (தமிழ்நாட்டில் சினிமா நடிகன் மாதிரி.) அவன் எந்த மொழி எழுத்தாளனாக இருந்தாலும் சரி, எழுத்தாளன் என்றால் அவனோடு நடனமாடவும் – குறைந்த பட்சம் ஒரு காஃபியாவது குடிக்க அங்குள்ள பெண்கள் பிரியப்படுகிறார்கள்.  ஆனால் ஜப்பானில் அப்படி அல்ல.  ஜப்பானில் எந்த இடத்திலும் ஹீரோ வொர்ஷிப் கிடையாது.  புத்தனைத் தவிர அவர்கள் வேறு எவரையும் வழிபடுவது இல்லை.  நாம் சாதாரணமாக நம் சாதனைகள் பற்றிச் சொன்னால் கூட அதைத் தற்பெருமையாகக் கருதி முகம் சுளிக்கிறார்கள்.  எழுத்தாளன் என்றால் புருவம் உயரும் என்றாலும் சீலே மாதிரி வழிபாடு எல்லாம் கிடையாது.  ஆனாலும் ஜப்பானில் நாவல்கள் கோடிக்கணக்கில் விற்பனை ஆகின்றன.

ஏன்? எப்படி?

அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.  அது இந்த ஜப்பானியப் பயணத்தின் போது நான் கண்டு பிடித்தது. 

இந்த இரண்டு கட்டுரைகளுக்கும் உங்கள் எதிர்வினை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து விட்டு அது பற்றி எழுதுகிறேன்.   

***

சந்தா மற்றும் நன்கொடை அனுப்புவதற்கான விவரம் கீழே:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai