அராத்துவின் புருஷன் படித்துக்கொண்டு இருக்கிறேன். நூற்றைம்பது பக்கங்கள் தாண்டியுள்ளேன். நூறு பக்கங்களைத் தாண்டியுவுடன் ஒளியின் வேகத்தில் செல்கிறது.
அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளில் ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் Further reading என்று மேலும் சில கட்டுரைகளைப் படிக்க இணைப்பு கொடுத்திருப்பார்கள் (bibliography அல்ல).
இந்தச் சிறுகுறிப்பை further reading-ஆக அணுக வேண்டுகிறேன்.
புருஷன் வெளியீட்டு விழாவில் சாருவின் உரையை அராத்து டிவியில் நேற்று பார்த்தேன். சாருவை ஒவ்வொரு முறை படிக்கும்போதும், பேசும்போதும் புதியதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். மன நோய் உள்ளவர்கள் இடம் மாறினால், வீடு மாறினால் மன நோய் சரியாக வாய்ப்பு உள்ளதை இந்த உரையில் சாரு சொல்கிறார். மேலும், நட்சத்திர விடுதிகளின் மின்தூக்கிகள் (lift), கண்ணாடி சுவர் வைத்து ஏன் திறந்த வெளி போல் உள்ளன என்று, கட்டிடக்கலைக்கும் பின் நவீனத்துவதுக்கும் உள்ள பாலத்தைப் பற்றி சாரு சொல்கிறார். (மின்தூக்கிகள் claustrophobic அல்லவா!)
தெரிதாவின் Différance-ஐ விளக்கும்போது, தன் முன் உள்ள மேஜையைக் காட்டி சாரு சொல்கிறார்: தன் தோழி ஒருவர் ஒரு திரைப்பட இயக்குனருக்கு, அவரின் மேஜையின் கீழே உட்கார்ந்து, வாய்ப்புணர்ச்சி செய்துகொண்டிருக்கும் போது, இயக்குனரின் நண்பர் உள்ளே வந்துவிடுகிறார். நண்பர் தயங்குவதைப் பார்த்து, இயக்குனர் தோழியை வெளியே செல்லப் பணிக்கிறார். இப்போது, சாரு நம்மிடம் கேட்கிறார். இனிமேல், எந்தவொரு மேஜையைப் பார்த்தாலும் அந்தத் தோழிக்கு என்ன தோன்றும்?
ஒரு திருடன் அந்த மேஜையை எப்படிப் பார்ப்பான்?
ஒரு தச்சன் ஒரு மேஜையை எப்படிப் பார்ப்பார்?
இந்த உரையைக் கேட்கும் நாம் மேஜையை எப்படிப் பார்ப்போம்?
ஒரு பூனை அந்த மேஜையை எப்படிப் பார்க்கும்?
இதையெல்லாம் சொல்லிவிட்டு, கடைசியாக சாரு கேட்கிறார்: கடவுள் ஒரு மேஜையை எப்படிப் பார்ப்பார்?
அங்கே நிற்கிறார் தலைவர்.
பிரமாதமான உரை. இணைப்பு:
சாரு நிவேதிதா உரை – அராத்து வின் புருஷன் நாவல் வெளியீட்டு விழா, கோவா.
***
இன்று ஃபோனில் bookmarks-ஐ ஒழுங்கு செய்துகொண்டிருந்தபோது, சி. மணி கவிதைகளைப் படித்தேன்.
தேனீ காண்பது
மலர்வனம்
ஆநிரை காண்பது
பசுந்தரை
காண்பது நோக்கைச்
சார்ந்தது
ஏற்கனெவே, சி. மணியின் ‘என்ன செய்வ திந்தக் கையை’ போன்ற பிரபலமான ஒன்றிரண்டு கவிதைகைளைப் படித்திருந்தாலும், இன்றுதான் இந்தக் கவிதையைப் படித்தேன். சாரு சொன்ன Différance ஞாபகம் வந்தது.
சாரு சொல்வதை இன்னும் சில கவிதைகளில் சி. மணி எழுதியுள்ளார்.
சொல்ல விரும்பிய தெல்லாம்
சொல்லில் வருவதில்லை
சொல்ல வந்தது சொல்லில்
வந்தாலும் கேட்பதில் சிக்கல்
கனியின் இனிமை
கனியில் மட்டுமில்லை
சுவைப்போன் பசியை,
சுவைமுடிச்சைச் சார்ந்தது
எண்ணம்
வெளியீடு
கேட்டல்
இம்மூன்றும் ஒன்றல்ல
ஒன்றென்றால்
மூன்றான காலம் போல் ஒன்று.
***
பௌத்த
சந்நியாசிகளுக்கு ஒருநாள் சுபுத்தி
தந்த பதிலை இவருக்கும் தரலாம்
புரிவதற்கு
ஒன்றும் இல்லை
புரிவதற்கு ஒன்றும் இல்லை
***
பண்டிதன் எழுதுவ துதமிழ் இல்லை.அ
பண்டிதன் கணக்குப்படி;அ
பண்டிதன் எழுதுவ துதமிழ் இல்லை;இ
பண்டிதன் கணக்குப்படி. ஆ
க மொத்தம்
தமிழர் நமக்குத் தெரியவில்லை
தமிழ் எ ழு த
***
சொல்கிறார்கள்
எழுத்திலே கூடாதாம்;
பாலுணர்ச்சி கூடினால்
பச்சையாம்
வாலை இளநீரை வாய்விழியால்
வாரிப் பருகும் இவர்கள்
இளமை கொடுக்கும் துணிவில்
இடித்துக் களிக்கும் இவர்கள்
வயது வழங்கிய வாய்ப்பில்
அமர்ந்து சிலிர்க்கும் இவர்கள்
இருவரைக் கட்டிலேற்ற ஊதி
முழக்கியூர் கூட்டும் இவர்கள்
இருளில் ரகசியமாய் வெட்கி
மருவி மயங்கும் இவர்கள்
பிறகு தவழவிட்டு ஊரெல்லாம்
பெருமை உரைக்கும் இவர்கள்
எல்லாம் இவர்கள்தான் – வேறு யார்
சொல்வார்கள்? கூடாதாம்; பச்சையாம்
எழுத்திலே பச்சை எழுத்தாளன்
மனத்திலே பச்சையென்றாகுமா?
நாடகத்தில்
பாத்திரங்கள் பேச்செல்லாம்
ஆசிரியர்
பேச்சா?
நரகம் எனது நரகமா?
நரகத்
தலைவன் நரகமா?”
“பலவகை ஆறுகள்
எனக்குள் இருக்கும் கடலில்
கலக்கும்;
எழுபவை கடல்முகில்”
***
கொலைகாரர்கள்
புகழாசை பிடித்தாட்ட போர் மீது சென்று எண்ணற்றோரைக் கொன்று வெற்றி
வீரன் எனப் பெயர் பெற்ற கொலைகாரன்.
மதம், கடவுள் என்று பேசி நாலாயிரம் பேர்களைக் கழுவேற்றினவர்கள்.
சோழ அரசர்களை imperialists என சாரு அடிக்கடி சொல்வது இங்கே நினைவுக்கு வந்தது.
***
புருஷன் பின்னட்டையில் அராத்துவின் புகைப்படம் பார்க்கும் போது ‘அடடா, இது சாருவின் சிந்தனைப் பள்ளிக்கு எதிரான விசயமாச்சே’ என்று நினைத்தேன். சாருவின் உரையில், அடையாளமே இல்லாத ஐந்தாயிரம் வருடத் தமிழ் எழுத்தாளனை ஒரு ராக் ஸ்டார் போல் பிரதிநிதித்துவப்படுத்தும் அராத்துவின் எண்ணம் பற்றி சொன்னார்.
ஐம்பது வருடங்கள் முன் இப்படிப்பட்டக் கவிதைகளை எழுதியவரின் புகைப்படத்தை இணையத்தில் தேடினால், கூகுள் முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி. மணியின் புகைப்படங்களைக் காட்டுகிறது.
சி. மணியின் இரண்டே இரண்டு ஸ்டாம்ப் சைஸ் படங்கள் மட்டுமே கிடைத்தன.
ஸ்ரீராம், சென்னை