நமக்கு என்னவெல்லாம் பிடிக்கும்
என்னவெல்லாம் பிடிக்காது
என்று சொல்லி விளையாடும்
ஆட்டமொன்றை ஆடினோம்
முடிக்கும் தறுவாயில் சொன்னேன்
மீண்டுமொருமுறை இதே ஆட்டத்தை ஆடினால்
எனக்கு எதுவுமே நினைவிலிருக்காது தெரியுமல்லவா?
எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது
என்பது மட்டுமே ஞாபகங்களை
நிறைத்துவிடுகிறது
எனைத் தவிர மற்ற யாருக்குமே
என்ன விருப்பு வெறுப்பென்பதெதுவும்
எனக்குத் தெரியாது
நானென்ன செய்யட்டும்?
ஆட்டம் முடிந்ததும்
‘உன்னை ஒன்று கேட்டால்
எனக்காகத் தருவாயா?’
என்றாய்.
நிச்சயமாகத் தருகிறேன் என்றதும்
எனக்கே எனக்கென்று மட்டுமாய்
ஒரு கவிதை வேண்டும் என்றாய்.
முடியாது கண்ணே
என்றபடி தொடர்ந்தேன்
உனக்கே உனக்கான கவிதைக்கான
மனநிலை எனக்கு வாய்த்தாலொழிய
அந்தக் கவிதை சாத்தியமில்லை
என்றேன்.
சற்று நேரத்துக்கப்பால் நீ சொன்னாய்
நான் கேட்டு எந்த நீயுமே
இதுவரை கொடுத்ததில்லை
என்னை உயிராக நேசிக்கும் நீ உட்பட.
‘என்னவொரு ஆச்சரியம்?’
இதுவரை எந்த நீ எது கேட்டும்
மறுத்ததேயில்லை
என்றேன்.