Dear Charu,
You are rocking in your blog as always.Waiting for the exile!
I have stopped going to the fucking tasmac after started reading your blog. and i am also taking ginger everyday morning.and also started enjoying SULA red wine
It may be weird i feel as my GODFATHER.
But i do smoke, kindly suggest me something to sop smoking?
I know you are alwyas busy,but if u get time pls reply me.
Regards,
Sriram
அன்புள்ள ஸ்ரீராம்,
டாஸ்மாக் போவதை நிறுத்தியதற்கு வாழ்த்துக்கள். சூலா ஒய்ன் ஃப்ரெஞ்ச் ஒய்னுக்கு நிகராக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை. கிடைத்தால் மதுபான ஆலை முதலாளிகள் கொள்ளை லாபம் அடிக்க முடியாமல் போய் விடும் என்பதால் இருக்கலாம். தமிழ்நாட்டில் குடிக்கு எதிராக தலைவர்களும் காந்தியவாதிகளும் பெண்களும் பத்திரிகைகளும் போராடுவதைப் பார்க்கும் போது எனக்கு நகைப்பாக இருக்கிறது. டாஸ்மாக்கில் கிடைப்பது விஷம் போன்ற மது. அப்படிப்பட்ட மதுவை மற்ற மாநிலங்களில் விற்பதில்லை. ஆர்மி கேண்டீனில் உள்ள மது அப்படி இல்லை. பெயர் தான் ஒன்றாக இருக்கிறதே தவிர அது வேறு, இது வேறு. குடியால் பெங்களூரில் எந்தக் குடியும் கெட்டதாகத் தெரியவில்லை. விஷ மதுவைத் திறந்து வைத்து விட்டு, கள்ளுக் கடைக்குத் தடை விதித்திருக்கிறார்கள். இதை எந்த நியாயத்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை. விஷம் போன்ற மதுவைக் கொடுத்து ஒரு தலைமுறையையே அழித்து விட்டார்கள். இதற்கு மாற்றாக பூரண மது விலக்கு என்று சொல்வது காற்றில் கத்தி சுழற்றுவதைப் போல் உள்ளது. யாரும் புகைக்கக் கூடாது என்று சட்டம் போட முடியுமா? எத்தனை சட்டங்கள் காகிதத்தில் இருக்கின்றன? ஹெல்மெட் போடா விட்டால் அபராதம். காரில் சீட் பெல்ட் மாட்டாவிட்டால் அபராதம். இப்படி ஆயிரம் சட்டங்கள். எதைப் பற்றியும் யாருக்கும் கவலை இல்லை. இந்த நிலையில் பூரண மதுவிலக்கை எப்படிக் கொண்டு வர முடியும்? ஒரு தலைமுறையையே மது அடிமைகளாக ஆக்கி விட்டு திடீரென்று ஒருநாள் வந்து குடிக்காதே என்றால் எப்படிக் குடிக்காமல் இருப்பார்கள்? குடிக்காமல் இருப்பதற்கான வாழ்க்கைத் தரம் இங்கே இருக்கிறதா? குடியை விட மாபெரும் கலாச்சார சீரழிவான சினிமாவின் ஆபாசத்தைக் கட்டுப்படுத்த இங்கே ஏதாவது சட்டமோ நடைமுறைச் செயல் திட்டங்களோ இருக்கிறதா? வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய செக்ஸ் காட்சிகளை தொலைக்காட்சியில் சினிமா நடனம் என்ற பெயரில் குடும்பமே பார்த்துத் திளைக்கிறது.
அரிசியில் புழு கிடக்கிறது, நல்ல அரிசி தாருங்கள் என்றால் நீ சாப்பிடாதே என்பது போல் இருக்கிறது. காற்றில் நச்சு கலந்திருக்கிறது, பக்கத்தில் உள்ள ரசாயனக் கழிவை அப்புறப்படுத்துங்கள் என்றால் நீ சுவாசிக்காதே என்பது போல் இருக்கிறது குடிக்காதீர்கள் என்பது. அவசரத் தேவை என்னவெனில், மதுபானக் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். ரோகிகளின் கழிப்படம் போல் இருக்கின்றன அவை. அதைச் சரி செய்ய வேண்டும். அதற்கு முதல் கட்ட நடவடிக்கை, மது விநியோகத்தைத் தனியாரிடம் கொடுக்க வேண்டும். தரத்தை அதிகப்படுத்தினாலே மது அடிமைகள் குறைந்து விடுவார்கள்.
புகை பிடிப்பது கெடுதல்தான். முக்கியமாக ஐரோப்பாவில் இது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. இருக்கிறது. இப்போது சிகரெட்டுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சாலை வசதி, போக்குவரத்து வசதி, தண்ணீர், சுகாதாரம், கல்வி போன்ற மக்களின் ஆதாரமான தேவைகளைப் பூர்த்தி செய்யாத இந்திய அரசு மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவும், இன்றைய அவலமான வாழ்க்கைக்கு மக்களின் மீதே பழி போடுவதற்காகவும்தான் மிகவும் ஹிஸ்டீரிக்கலாக சினிமா தியேட்டர் தோறும் மக்களைப் பார்த்து புகைக்காதீர்கள் என்று கத்திக் கொண்டிருக்கிறது. சினிமா பார்க்கவே சகிக்க முடியவில்லை. எந்தக் கேரக்டர் சிகரெட் குடித்தாலும் புகை பிடிப்பது கேடு என்ற எழுத்துக்கள் வந்து விடுகின்றன. ஏன், பல பெண்கள் ஜட்டி பிராவோடு வந்து குத்தாட்டம் போடுகிறார்களே அந்தக் காட்சிகளிலும் “கண்களை மூடிக் கொள்ளுங்கள்… இந்தியாவில் ஏற்கனவே ஜனத்தொகை பெருத்து விட்டது” என்று ஸ்லைடு போட வேண்டியதுதானே?
ஆனாலும் நம் உடல்நலன் கருதி புகைப்பதை நிறுத்தலாம்; அல்லது, பெருமளவில் கட்டுப் படுத்திக் கொள்ளலாம். புகைப்பதை யாருடைய உதவியும் இன்றி நிறுத்தி விடலாம். அதற்கு உங்களுக்கு இருக்கும் மனோபலம் என்ன என்பதுதான் கேள்வி. மனோபலம் மட்டும் இருந்தால் ஒரு குறிப்பிட்ட தேதியை கெடுவாக வைத்து சட்டென நிறுத்தி விடலாம். மன உறுதி மட்டுமே தேவை. இந்த மன உறுதியை தியானத்தின் மூலம் பெறலாம். நான் என்னுடைய வாசகர் யாருக்கும் தியானம் கற்பித்ததில்லை. காரணம், யாருமே அதைப் பின்பற்றுவதில்லை. விதிவிலக்காக, ஒரே ஒரு சராசரி மனிதருக்குக் கற்பித்தேன். அவர் பின்பற்றுகிறார். அவர் புத்தகம் படிப்பதில்லை. ஆனால் அவரோடும் எனக்குப் பேசுவதற்கு நிறைய இருக்கும். மணிக் கணக்கில் உணவு பற்றிப் பேசிக் கொண்டிருப்போம். சமீபத்தில் கொச்சியில் the puttu என்ற கடையில் சாப்பிட்ட விதவிதமான புட்டுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். புட்டும் கொண்டைக்கடலையும் சாப்பிட அற்புதமாக இருக்கும். கொச்சியில் உள்ள மேற்படி கடையில் கொண்டைக்கடலையிலேயே மாமிசம், மீன் எல்லாம் கலந்தும் அசைவமாகவும் தருகிறார்கள் என்றார். தொட்டுக் கொள்ள தேனில் கலந்த வாழைப்பழம். இதற்காகவே ஒருமுறை கொச்சி போக வேண்டும் என்று தோன்றியது.
வேறு எங்கோ போய் விட்டேன். திரும்பவும் புகைத்தலுக்கு வருவோம். மனோதிடம் இருந்தால் புகைப்பதை விட்டு விடலாம். மனோதிடம் தியானத்தினாலும் லபிக்கும். ஒரு நாளில் 24 மணி நேரத்தில் எந்த நேரமாக இருந்தாலும் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த தியானத்தைச் செய்யலாம். நீங்கள் செல்லும் பஸ்ஸில் கூட கண்களை மூடிச் செய்யலாம்.
கண்களை மூடிக் கொள்ளுங்கள். உள்பார்வையை நெற்றிக்கு நடுவே கொண்டு வரத் தேவையில்லை. கொண்டு வந்தால் தலை வலிக்கும். அது நமக்கு வேண்டாம். எல்லா உணர்வுகளையும் தளர்வாக விடுங்கள். எதையுமே இறுக்க வேண்டாம். முக்கியமாக உடல் பாகங்களை இறுக்காதீர்கள். Relax. சிந்தனையைக் கூட கட்டிப் போடாதீர்கள். என்ன வேண்டுமானலும் வரட்டும், போகட்டும். ஒருசில நாட்களில் தானாகவே எல்லா சிந்தனைகளும் ஒடுங்கி விடும். புறக் கண்களை மூடினால் அகக்கண் தானாகவே திறக்கும். இருபது நிமிடம். ஒரு நாளில் இரண்டு முறை.
மிகச் சில தினங்களிலேயே உங்களுக்கு சரியாக இருபதாவது நிமிடத்தில் விழிப்புணர்வு வரும். ஒரு நாளில் இரண்டு முறை செய்யுங்கள். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் செய்யலாம் என்பது இந்த தியானத்தின் சிறப்பு. மனதை ஒருமுகப்படுத்த முயற்சிக்காதீர்கள். அதுவாகவே நாளடைவில் அலுத்துப் போய் அலைதலை நிறுத்தி விடும்.
சில மாதங்கள் கழித்து – அல்லது, முடிந்தால் ஆரம்ப கட்டத்திலேயே கருணை, ஞானம், மௌனம், அன்பு ஆகிய நான்கு பண்புகளை நினையுங்கள். இதெல்லாம் நீங்கள்தான் என்று நினையுங்கள். எப்படியென்றால், கருணை என்று எண்ணும் போது உங்களுடைய கண்களை அகக்கண்ணால் நோக்குங்கள். அல்லது, உங்கள் கண்களில் கவனத்தைத் திருப்புங்கள். கருணை கண்களால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். ஞானம் நான் என்று நினைக்கும் போது செவிகளில் கவனம் குவியட்டும். ஞானத்தின் கதவு செவிகள். மௌனம் நான். இப்போது உங்களுக்கே தெரிந்திருக்கும். உங்கள் வாயில் கவனம் குவியட்டும். அன்பு நான். உங்கள் இதயத்தில் அகக் கண்கள் நோக்கட்டும். இது முடிந்த பின் இதையே திரும்பச் செய்ய வேண்டாம். இது தியானத்தின் உள்ளே செல்வதற்கான வழி. அதற்குப் பின் மனம் உங்களை வழி நடத்திச் செல்லும். காட்சிகள் தெரிந்தால் பதறாதீர்கள்.
ஒருசில மாதங்களிலேயே உங்களுக்குள் ஒருவித மாற்றம் தெரிவதை உணர்வீர்கள். இந்த தியான முறை ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர், ஜக்கி வாசுதேவ் போன்ற இந்திய ஆன்மீகவாதிகளிடமிருந்து பெறப்பட்டதல்ல. மற்ற விபரங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாது.
இந்த தியானத்தின் மூலம் மனோபலம் அதிகமாகும். நீங்கள் ஒன்றை நினைத்தால் அதைப் பின்பற்றுவதற்கான பலம் கிடைக்கும். சிகரெட்டை விட நினைத்தால் விடலாம். கோபத்தை விட நினைத்தால் விடலாம்.
அப்படியும் முடியவில்லை எனில் Benson & Hedges Lights என்று ஒரு சிகரெட் இருக்கிறது. இதைக் குடித்தால் தானாகவே உங்களுக்கு சிகரெட் மீது வெறுப்பு வந்து விட்டு விடுவீர்கள். அவ்வளவு மென்மையாக இருக்கும்.
சாரு
Comments are closed.