எதேச்சையாய் சந்தித்த தோழி,
என்ன செய்கிறாய் என்றாள்.
காதல் செய்கிறேன்,
காதல் கவிதைகள் எழுதுகிறேன்
என்றேன்
சற்றே நாடகத்தனமாக
கண்களில் பளபளப்புடன்.
எப்போதும் நீ இப்படித்தான்
இத்தனை வயதிலும்,
இன்னும் க்ளிஷேக்களில்
விளையாடுகிறாய்.
’எப்போதும் இப்படித்தான்
நான் என்ன சொன்னாலும்
நீ மட்டுமல்ல,
யாரும் நம்புவதில்லை
அதனாலே இப்போது
சற்று தயக்கத்தோடே சொல்கிறேன்…
கொஞ்ச காலம்
நான் நிலவுடன் டேட்டிங் செய்தேன்.’
அவள் கண்கள் விரிந்தன
’நிலவு! இது என்ன
உன் புதிய hipster கவிதையா?’
’இல்லை, இல்லை,
நிலவு என்னைத் தீவிரமாகக் காதலித்தது
நானும் அதுவும் சேர்ந்து
ஒரு erotic நாவல் எழுதினோம்.’
‘முடித்ததும் அனுப்பி வை’
எனச் சொல்லிவிட்டுப் பிரிந்தாள்
தோழி
ஒரு நாள் நிலவும் நானும்
சல்லாபித்திருந்தபோது
கேட்டேன்,
‘நீ இங்கே இருக்கும்போது
வானில் தெரிவது எப்படி?’
’அது என் பிம்பம்
கொஞ்ச நாள்
பூமியும் வானமும்
என் இன்ஸ்டா ரீல்ஸை
பார்த்து மகிழட்டும்’
என்றது நிலவு நக்கலுடன்.
காலம் சில கடந்து
நிலவு அதன்
Cosmic Airbnbக்கு சென்றது
நான் ஒரு மெலோடிராமா நாயகனாக
கவிதையெழுதி
துக்கம் தீர்த்தேன்
தீர்க்கத் தீர்க்கக் தீராமல்
திரும்பிய துக்கத்தை
முடிவுறாத கவிதைகளால்
எதிர்கொண்டேன்
நிலவு ஒரு cosmic DM அனுப்பியது
’எது எது துக்கமோ அது
அதை விலக்குவது
என் ஃபார்முலா’
நான் பதில் அனுப்பினேன்
’உன்னை விலக்கினால்
துக்கம் விலகும்
கூடவே
உயிரும் விலகும்
வேறு ஃபார்முலா அனுப்பு,
என் brand கெடாமல்.’
நிலவின் பதில்
‘காதல் ஒரு மொழி
ஒரு பிரதி
நம்ப முடியாத
ஆனால்
தவிர்க்க முடியாத நாடகம்
நான் ஒரு metaphor
துக்கம் உன் narrative arc
உன் கவிதைகள்
உன் performance.’
பின்குறிப்பு:
பின்நவீனத்துவக் காதலன்
தன் கவிதைகளை
இன்ஸ்டாவில் பதிவேற்றி
லைக்குகளையும் காமெண்ட்டுகளையும்
எண்ணிக்கொண்டிருக்கிறான்