ஒரு நாவல் ஒரு ரூபாய்!!!

நண்பர்களும் நம் இலக்கியச் சூழலும் புதிய எக்ஸைல் முன்பதிவுத் திட்டத்தின் தனித்தன்மையைப் புரிந்து கொண்டார்களா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.  ஆங்கிலத்தில் மட்டுமே புத்தகங்களுக்கு  இப்படி முன்பதிவுத் திட்டம் இருந்து வருகிறது.  தமிழிலும் இருக்கிறது என்று சில நண்பர்கள் சொல்கிறார்கள்.  அதெல்லாம் 500 ரூ புத்தகம் 400 ரூ.க்குக் கிடைக்கும் முன்பதிவு.  உண்மையான அர்த்தத்தில் அதற்குப் பெயர் முன் பதிவுத் திட்டம் அல்ல.  அது சலுகை விலை.  நீங்கள் கவனித்திருக்கலாம்.  செய்தித்தாள்களில் சில நேரங்களில் முழு பக்க விளம்பரம் வரும்.  7000 ரூ விலையுள்ள ஷூ 3000 ரூபாய்க்கு முன்பதிவு செய்யலாம்.  எப்போது?  நீங்கள் அந்த செய்தித்தாளைப் படிக்கும் அதே நாள் காலை ஏழு மணியிலிருந்து எட்டு வரை.  இதை உங்களிடம் சொல்வது உங்கள் மகனாகவோ மகளாகவோ மனைவியாகவோ இருப்பார்.  அவ்வளவுதான்.  அன்றைய காலை எந்த வேலையும் நடக்காது.  சமையல் இல்லை; குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்பும் களேபரம் இல்லை.  எல்லோரும் மடிக்கணினி முன்னே அமர்ந்து விளம்பரத்தில் உள்ள முகவரிக்கு நெட்டில் முயற்சி செய்வார்கள்.  லட்சக் கணக்கான பேர் ஒரே நேரத்தில் முயற்சி செய்யும் போது அந்தத் தொடர்பு முகவரி கிடைக்காது.  ஒரு மணி நேர ரகளைக்குள் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஆர்டர் செய்து விடலாம். 7000 ரூ விலையுள்ள ஷூ 3000 ரூபாய்க்கு நம் வீட்டுக்கு வந்து விடும்.  ஆனால் ஏற்கனவே என் பையனுக்கு நாலைந்து ஷூக்கள் இருக்கும்.  இருந்தாலும் 7000 ரூ ஷூ மூவாயிரத்துக்குக் கிடைக்கிறதே, விடலாமா?  இப்படி  ஏற்கனவே ஏழெட்டு ஷூ வீட்டில் இருக்கும் போது நமக்கு எந்தப் பயனும் இல்லாமல் ஒரு புதிய  ஷூவை அது பாதி விலைக்குக் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்தினால் வாங்குவதற்கு ஒரு பெரிய கூட்டமே இருக்கும் போது, ஏன் நம் காலம் பூராவும் நம்மோடு பயணம் செய்யப் போகும் ஞானக் களஞ்சியமான ஒரு புத்தகத்துக்கு 500 ரூ கொடுக்கக் கூடாது, அதுவும் ஆயிரம் ரூபாய் விலையுள்ள அந்தப் புத்தகம் இப்போது 500 ரூபாய்க்குக் கிடைக்கும் போது?
இப்படியாகத்தான், ஷூவுக்கு இருந்த அதே rush ஐ அதே ஆர்வத்தை புத்தக விற்பனையிலும் கொண்டு வரலாம் என்று எண்ணினோம். அதன் விளைவு தான் 1000 ரூ விலை உள்ள புதிய எக்ஸைல் 500 ரூபாய்க்கு டிசம்பர் 1 இலிருந்து டிசம்பர் 7 வரை முன் பதிவு செய்பவர்களுக்குக் கிடைக்கும் என்ற திட்டம்.  நாம் எவ்வளவு முயன்றாலும் புத்தகங்கள் ஒரு சில ஆயிரங்களே விற்கின்றன.  ஆனால் இப்படி 50% கழிவு கொடுத்து முன்பதிவுத் திட்டம் செய்தால் ஒரு நூல் 50000 பிரதிகள் விற்க சாத்தியம் உள்ளது.  தமிழ் நூல் விற்பனையில் இது ஒரு புரட்சி.  முதல் முறையாக இப்படி நடக்கிறது.  பதிப்பாளருக்கு  இதனால் ஒரு பைசா லாபம் இல்லை.  ஆனாலும் வாசிப்பு என்ற செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும் முயற்சி இது…
இன்னொரு விஷயம்.  நான் இளைஞனாக இருக்கும் போது புத்தக விற்பனையில் ராணி முத்து என்ற இதழ் நாம் கற்பனையே செய்ய முடியாத ஒரு புரட்சியைச் செய்தது.  ஒரு நாவல் ஒரு ரூபாய்.  ஜெயகாந்தனின் 400 பக்க புத்தகமெல்லாம் ஒரே ரூபாய்.க்குக் கிடைக்கும். சாணித்தாள்தான்.  ஆனாலும் அந்த விலை எங்களால் நம்பவுதற்கே கஷ்டமாக இருந்தது.    மாதம் ஒரு புத்தகம்.  ஆனால் அது எல்லாமே மறு பதிப்பு நூல்கள்.  முதல் பதிப்பு அல்ல.  அதே போல் என்னுடைய ஸீரோ டிகிரியை பாக்கெட் நாவல் அசோகன் பத்து ரூபாய்க்குப் பதிப்பித்தார்.  நூறு ரூபாய் விலை உள்ள அந்த நாவல் பத்தே ரூபாய்.  25000 பிரதிகள் போனது.  ஆனாலும் அது மூன்றாம் பதிப்பு தான்.
இப்போதுதான் தமிழ்ப் பதிப்புலக வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் பதிப்பிலேயே ஒரு நாவல் 50% தள்ளுபடியில் முன்பதிவு செய்யப்படுகிறது.  இதுதான் இந்தப் புதிய எக்ஸைல் நாவல் வெளியீட்டின் விசேஷம்.  இதற்கு ஊடகங்களும் நண்பர்களும் தான் ஆதரவு தர வேண்டும்.  எப்படியெனில் இந்தச் செய்தியை உங்கள் வாசகர்களிடமும், நண்பர்களிடமும் எடுத்துச் செல்லுங்கள்.  போதும்.    எனக்குத் தெரிந்து ஒரு நாவலை விலை கொடுத்து வாங்கிப் படிக்க தமிழில் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள்.   அவர்களை இந்தச் செய்தி சென்றடைந்தால் போதும்.
Puthiya Exile PreOrder Poster_multi color
அன்புடன்
சாரு