(3) புதிய எக்ஸைல் : டாக்டர் ஸ்ரீராம் வாழ்த்து

ஹாய் சாரு,

 புதிய எக்ஸைலின் ஒரு பக்கத்தை தமிழ் இந்துவில் படித்தேன்.

“எத்தனையோ ஜீவராசிகளைக் கொன்று தின்றிருக்கிறேன். ஆனால் அந்த ஃப்ளோரானின் மரணச் சம்பவம் என்னை ரொம்பவும் அலைக்கழித்தது. உயிர் உடலை விட்டுப் பிரிவதற்குப் பதினைந்து நாட்களா ஆகும்? ஒவ்வொரு நாளும் பெருந்தேவி அதன் அருகே சென்று ஏதோ பேசுவாள்.”

இந்தப் பத்தியைப் படித்த பொழுது தானாக கண்ணீர் வந்து விட்டது. ‘Life of Pi’ படத்தில் பை புலியை மன்னிக்கும் தருணமும், அப்பொழுது புலியின் கண்களில் தெரியும் உயிர் கேட்கும் பரிதவிப்பும், இரட்சிப்பும், மன்னிப்ப்பும், இறை நிலையும்…. – மேலே உள்ள பத்தியைப் படித்த பொழுது கண்டேன்.
……………………… 

“நட்சத்திரங்களின் குளிர்மை, காற்று, மண்ணின் மணம், மரம், மகரந்தத் துகள், கடல், வானம், எரிமலை, பிரபஞ்ச வெளி, மேகம், மலையின் தனிமை, புல்லாங்குழலின் இசை, குழந்தையின் முதல் குரல், மரணமடைந்தவனைத் தன்னுள் இழுத்துக் கொள்ளும் எரிதழல், சூரிய ரேகை, நீரோடையின் சலன சங்கீதம், மழை, பூரண நிலவு, பசுவின் குரல், தவளைச் சத்தம், எரிந்து தணிந்த வனம், ஆலம் விழுது, அரச இலை, உறைபனி, அகல்விளக்கு, மலர், தென்றல்…

இது எல்லாவற்றிலும் உன்னை நான் காண்கிறேன். என் இனிய ஃப்ளோரான் மீனே… உன் உயிர் எங்கே போனது? ஒளிப் புள்ளியாக மாறி எங்கே நின்றுகொண்டிருக்கிறாய்? அங்கிருந்து என்னைக் காண்கிறாயா?”

மேல உள்ள ஒவ்வொன்றையும் ஒரிரு விநாடி நினைத்து, உணர்ந்து, பின் அதனுடன் அம்மீனையும் இணைத்துப் பார்க்கும் பொழுது, மனதில் சாந்தமும், கருணையும் பெருகுகிறது.. புதிய எக்ஸைல் அன்பை பறைசாற்றுகிறது என நினைக்கிறன்.

உங்கள் oeuvre இல் புதிய எக்ஸைல் மாஸ்டர் பீஸ் ஆக இருக்கும் என நம்புகிறேன்.

Take a bow, dear Charu.

ஸ்ரீராம்.