யாதும் ஊரே; யாவரும் கேளிர்…

ரவி அண்ணன் அவர்களுக்கு, ஆசிகள் பல. என்னதான் உங்களுடைய கருத்துக்களில் இருந்து நான் வேறுபட்டாலும் நீங்கள் உடல் நலம் குன்றி இருந்த சமயத்தில் நீங்கள் பூரண குணமடைய பிரார்த்தித்த ஆயிரக்கணக்கான வாசகர்களுள், (உங்கள் ரசிகனில்லாத) நானும் ஒருவன்.

உங்களுடைய வலைப்பதிவில் என்னைக் குறிப்பிட்டு எழுதியதைப் பற்றி மீண்டும் என் கருத்தை என் வலைப்பூவில் பதிந்திருக்கிறேன்.  அதன் சுட்டி இதோ :

நன்றி
அன்புடன்
அப்துல் கையூம்
அன்புள்ள கையூம்

எனக்கு உங்கள் இப்போதைய முகத்தைப் பார்க்கும் போது நான் நாகூரில் உங்களைப் பார்த்திருக்கிறேனா, இல்லையா, எப்படிப் பார்க்காமல் இருந்திருக்க முடியும் என்றெல்லாம் குழம்புகிறேன்.
சரி, நாகூர் பற்றிய என் கருத்துக்கள் என்று நான் எழுதியிருப்பவை பற்றி:
நாகூர் பற்றி நான் பெருமை பேசினால் அது மிகப் பெரிய ஃபாஸிஸத்தில் போய் முடியும்.  எப்படி எனில், தமிழ் பேசும் பலரும் தமிழ்தான் உலகிலேயே சிறந்த மொழி என்கிறார்கள்.  நான் அவர்களிடம் அரபியும் உலகின் மிகச் சிறந்த மொழிகளில் ஒன்று என்றும், தமிழுக்கு எத்தனை பெருமைகள் உண்டோ அத்தனை பெருமையும் அரபிக்கு உண்டு என்றும் சொல்வது உண்டு.  சொல்வது மட்டும் இல்லை.  பல கட்டுரைகளில் அப்படி எழுதியிருக்கிறேன்.
தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாரதி பாடியதே பொய் என்று எழுதியிருக்கிறேன்.  ஏனென்றால் ஒவ்வொரு மொழிக்காரருக்கும் அவர் மொழி இனிதுதான்.  அதைப் புரிந்து கொள்ளாமல், அந்த சுதந்திரத்தை மாற்றானுக்குக் கொடுக்காமல் என் மொழி தான் இந்த உலகிலேயே சிறந்தது என்றும் என் மதம் தான் இந்த உலகிலேயே சிறந்தது என்றும் என் நாடுதான் இந்த உலகிலேயே சிறந்தது என்று பேசுவதும் ஃபாஸிசத்தில் கொண்டு போய் விடும்.  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே என் கொள்கை.  எனக்கு எல்லா ஊருமே என் ஊர் தான்.  இந்தப் பூமியே இறைவனின் கொடை என்கிற போது நாகூர் மட்டுமே என் ஊர் என்று சொல்ல முடியுமா? நாகூரில் 20 ஆண்டு, தில்லியில் 12 ஆண்டு.  மீதியெல்லாம் சென்னை.  ஆனால் சென்னை என் ஊரே இல்லை.  இந்த ஊர் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.  நாகூரும் தில்லியும் தான் நான் வளர்ந்த ஊர்கள்.  இது போன்ற வாசகங்களை ஒருவர் அதன் சந்தர்ப்பத்தில் வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும், அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர தமிழைத் திட்டி விட்டான், நாகூரைப் புறக்கணித்து விட்டான் என்று சொல்வது நியாயம் அல்ல.
இன்னமும் என் சுவாசத்தில் நாகூர் எஜமான் கொடுத்த காற்று தான் ஓடிக் கொண்டிருக்கிறது.  இன்னமும் நான் தர்ஹாவின் குளுந்த மண்டபத்தில்தான் அமர்ந்திருக்கிறேன்.  சென்ற வாரம் கலிஃபா சார் போன் பண்ணிப் பேசினார்.  குளிர்ந்த மண்டபம் என்று எழுதாமல் குளுந்த மண்டபம் என்று எழுதியதற்காக என்னை ஆகா ஓகோ என்று பாராட்டினார்.
என் ஆசான்களில் ஒருவர் கலிஃபா சார்.  ஒருநாள் நானும் கணேசன் என்ற பையனும் ரோட்டில் நின்று கொண்டு ஆகாயத்தைப் பார்த்து இது இன்ன நட்சத்திரம் அது அந்த நட்சத்திரம் என்று கண்டு பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென்று பின்னால் இருந்து கலிஃபா சார் குரல்.  அவரும் ஒரு மாணவனாக எங்களோடு கலந்து கொண்டு நட்சத்திர ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்.  அவருடைய கவர்ச்சியான சிரிப்பை யாரால் மறக்க முடியும்?  எப்போதும் ஒரு மனிதனால் சிரித்துக் கொண்டே இருக்க முடியுமா?  கலிஃபா சார் அதற்கு உதாரணம்.  சினீ சண்முகம் சார் மற்றவர்களை சிரிக்க வைப்பார்.
சில்லடியும் எஜமானும் நாகூர் மண்ணும் என்னுள் அழியாமல் இருக்கும்.  அதுதான் இப்போதைய புதிய எக்ஸைலை எழுத வைத்துள்ளது…
அன்புடன்
சாரு என்கிற ரவி அண்ணன்…