(4) புதிய எக்ஸைல் : லக்கிலுக் வாழ்த்து

சாரு,

தமிழ் ஹிந்துவில் ஒரு பகுதி வாசித்தேன்.

கலக்கி விட்டீர்கள்.

ஃப்ளோரான்களை செல்லப் பிராணிகளாக வளர்க்கும் பின்நவீன நகர வாழ்வியல் சூழல். வளர்ப்பவளின் பெயர் அறுபதுகளின் அரதப்பழசான ‘பெருந்தேவி’. நவீனத்துக்கும், பின்நவீனத்துக்குமான முரண், போர், இணைப்பு என்று தொடரும் உங்கள் சலிக்காத முயற்சிகளில் அடுத்த மைல்கல்.

தனித்துவ மொழிக்காக நீங்கள் நிரம்ப மெனக்கெடுவதில்லை. அதுவே சரளமாக வந்து விழுகிறது. அதை அடுக்குவதில் நீங்கள் காட்டும் கச்சிதம்தான் உங்கள் அடையாளம்.

இந்த பகுதியை வாசித்தவரை சாரு மேஜிக் மீண்டும் நிகழ்ந்திருப்பதாகவே படுகிறது. வாழ்த்துகள்!

//நட்சத்திரங்களின் குளிர்மை, காற்று, மண்ணின் மணம், மரம், மகரந்தத் துகள், கடல், வானம், எரிமலை, பிரபஞ்ச வெளி, மேகம், மலையின் தனிமை, புல்லாங்குழலின் இசை, குழந்தையின் முதல் குரல், மரணமடைந்தவனைத் தன்னுள் இழுத்துக் கொள்ளும் எரிதழல், சூரிய ரேகை, நீரோடையின் சலன சங்கீதம், மழை, பூரண நிலவு, பசுவின் குரல், தவளைச் சத்தம், எரிந்து தணிந்த வனம், ஆலம் விழுது, அரச இலை, உறைபனி, அகல்விளக்கு, மலர், தென்றல்…//

உங்கள் மொழி அமரத்துவத்தை எட்டிவிட்டது. அதற்கு சாவே இல்லை.

நன்றி!

அன்புடன்
லக்கி

டியர் யுவா,

இப்படி நீங்கள் பாராட்டி எழுதினாலும் நாவல் முழுமையும் படித்து விட்டு உங்களுடைய இப்போதைய இந்தக் கருத்து மாறலாம் என்ற இன்னொரு சாத்தியத்தையும் நான் உணர்ந்தே இருக்கிறேன்.  இருந்தாலும் உங்கள் பாராட்டு என்னை மகிழ்விக்கிறது.  மூன்று ஆண்டுகளின் உழைப்பு.  என் உடம்பையே பரிசோதனைக் கூடமாக்கி சில ஆயுர்வேத/சித்த வைத்திய சோதனைகளை மேற்கொண்டேன்.  அதன் பலன் தான் சமீபத்திய ஆஸ்பத்திரி சம்பவம்.  ஆனால் அந்தச் சோதனையில் பல அபூர்வமான விஷயங்களைத்  தெரிந்து கொண்டேன்.   அது பின்னர்…

அன்புடன்

சாரு