ஊடகங்களில் புதிய எக்ஸைல்

இனிமேல் யாரும் புதிய புத்தகங்களுக்கு, இலக்கியப் படைப்புகளுக்கு சரியான விளம்பரம் கொடுப்பதில்லை என்று புகார் சொல்லவே கூடாது.  புதிய எக்ஸைலுக்குக் கிடைத்த விளம்பரம் அளவுக்குத் தமிழ் இலக்கியத்தில் வேறு எந்த நூலுக்கும் ஊடகங்களில் இந்த அளவுக்கு விளம்பரம் கொடுக்கப்பட்டதில்லை.  தினமலரில் (மின்னிதழ்) இன்னமும் விளம்பரம் ஓடிக் கொண்டிருக்கிறது.  பல லட்சம் பேர் படிக்கும் தினசரி.  தி இந்து (தமிழ்) நாளிதழில் சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை அரைப் பக்கத்துக்கு புதிய எக்ஸைலில் இருந்து ஒரு பகுதி வெளியிடப்பட்டு, புத்தகம் எங்கே கிடைக்கும் என்ற தொலைபேசி எண்ணும் தரப்பட்டது.  அந்திமழை இதழிலும் முன்பதிவுத் திட்டம் பற்றிய விளம்பரம் வந்தது.  இன்று புதிய தலைமுறை வார இதழில் அரைப் பக்கத்துக்கு புதிய எக்ஸைல் பற்றிய செய்தி வந்துள்ளது. தொலைக்காட்சி செய்திகளில் விளம்பரம் வருகிறது.  ஒரு நண்பர் நாள் முழுவதும் வருமாறு பணம் செலுத்தி விளம்பரம் செய்துள்ளார். முகநூல் நட்சத்திரமான மனுஷ்ய புத்திரன் (ஏதோ ஒரு லட்சம் பேர் அவரைப் பின் தொடருவதாகக் கேள்விப்பட்டேன்) கூட எக்ஸைல் முன்பதிவுத் திட்டம் பற்றிய செய்தியைக் கொடுத்திருக்கிறார்.  இன்னமும் விஜய் டிவி, சன் டிவி செய்திகளில்தான் விளம்பரம் கொடுக்கவில்லை.  எனவே விளம்பரப்படுத்தவில்லை என்று தயவுசெய்து இனி யாரும் சொல்லக் கூடாது.

கணேஷ் அன்பு என் உள்வட்டத்தைச் சேர்ந்த நண்பர்.  இதுபோல் நூறு பேர் உள்ளனர்.  கணேஷிடம் முன்பதிவு செய்தாகி விட்டதா என்று கேட்டேன்.  இல்லை என்றார். அதிர்ச்சியுடன் நீங்களே இப்படியா என்றேன்.  சே, சே, அது இல்லை சாரு…  ஜனவரி 5 அன்று ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினால்தானே உங்களுக்கு ராயல்டி அதிகம் கிடைக்கும் என்றார்.  வேண்டாம்; உடனே முன்பதிவு செய்து விடுங்கள் என்றேன்.  காரணம், ராயல்டி என்றால் குறைந்த பட்சம் ஆண்டுக்கு பத்து லட்சம் ரூபாய் கிடைக்க வேண்டும்.  எங்கள் தெருவில் உள்ள இஸ்திரி போடும் தொழிலாளியே “மாதம் 15000 ரூ சம்பளத்துக்கு ஆள் தேவை” என்று போர்டு போட்டு வைத்திருக்கிறார்; ஆறு மாதமாக.  எஸ்.ஏ.பி. தையல் கலைஞரோ 25,000 ரூ சம்பளத்துக்கு ஆள் தேவை என்று போர்டு போட்டு ஒரு ஆண்டாகிறது.  ஆள் கிடைக்கவில்லை.  இந்தத் தொழிலாளர்களுக்கே இவ்வளவு ஊதியம் என்றால் ஒரு நாளில் பதினெட்டு மணி நேரம் உழைக்கும் நான் அதில் இரண்டு மடங்கு மூன்று மடங்கு ஊதியமாவது எதிர்பார்ப்பது தவறில்லை தானே?  ஆனால் கிடைக்கும் ராயல்டி அந்த இஸ்திரி தொழிலாளியின் மாத ஊதியத்துக்குப் பாதி தான் வருகிறது.  எனவே கணேஷ், இப்போதைய நிலையில் ராயல்டி பற்றிப் பேசுவதில் அர்த்தமே இல்லை என்றேன்.  எப்போது பத்து லட்சம் ராயல்டி கிடைக்கிறதோ அப்போது தான் அதை ஒரு கௌரவமான ராயல்டி என்று சொல்லலாம்.  சுமார் 30 ஆண்டுகளில் அந்த நிலையை எட்டுவோம் என்று நினைக்கிறேன்.  ஆனால் என்னுடைய ஒரே நம்பிக்கை நட்சத்திரமான பத்ரி வேறு பிஸினஸ் பக்கம் போய் விடுவதாக எழுதியிருக்கிறார்.  ஞாநியோ என்ன பிஸினஸ், அரசியலா என்று கிண்டல் அடிக்கிறார்.  பெரிய தலைகள்; விளையாடுகின்றன.  நான் ஒரு தெருவோரத்து எழுத்துக்காரன்.  எனக்குத் தெரிந்த ஒரே பிஸினஸ் எழுத்து தான்.  எனவே இதை விட்டால் வேறு வழியில்லை.

எங்கோ ஆரம்பித்து எங்கோ போய் விட்டேன்.  புதிய தலைமுறை இதழில் விரைவில் வேற்றுக்கிரகவாசியின் டயரிக் குறிப்புகள் என்ற தொடரை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.  அது தொடர்பான விளம்பரம் இந்த இதழ் புதிய தலைமுறையில் வந்துள்ளது.  வாங்கிப் பயன் அடையவும்…  மின்னிதழில் படித்துக் கொள்ளலாம் என்று இருக்க வேண்டாம்.  அச்சு ஊடகத்துக்கும் ஆதரவு அளியுங்கள்…

சென்ற வாரம் தி இந்துவில் புதிய எக்ஸைல் நாவலிலிருந்து வந்த பகுதி:

http://goo.gl/AQIyfC