நான் ஏற்கனவே புதிய எக்ஸைல் நாவலைப் படித்து விட்டேன். சாரு எனக்குக் கொடுத்த பெரும் அன்பு அது. அதைப் படித்தால் ஒரு க்ளாசிக் திரைப்படத்தை பார்த்த உணர்வு வரும். அப்படியென்றால் க்ளாசிக்கைப் பார்க்கும் அளவுக்குப் பொறுமையும் வேண்டும்.
ஏன் திரைப்படம் என்கிறேன் என்பதைச் சொல்லி விடுகிறேன்.
இந்த நாவலில் முதலில் வருவது கேசவன் எனும் யானையின் கதை. இந்தக் கதை ஏன் முதலில் வருகிறது? இது நமக்குள் ஏற்படுத்தும் உணர்வுகள் என்ன?
படங்களில் வசனம் மூலம் உனர்வுகளைச் சொன்னால் அலுப்பாக இருக்கும். அதைக் காட்சி மூலமாக அல்லது செயல் மூலமாகச் சொல்வதே சிறப்பு. அதே முறையில்தான் இந்த நாவலிலும் கேசவன் யானையின் ஆச்சரியமான கிருஷ்ண சரணாகதியை உணரச் சொல்லிருக்கும் கதை. ஆனால் சரணாகதி என்கிற வார்த்தை இருக்காது. இதனால்தான் நாவலைக் காட்சி ரூபமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது என்று சொல்லுகிறேன். அதே போலதான் ஃப்ளோரான் மீன்களின் கதையும்.
சரணாகதிக்கும் நுண்ணுணர்வுக்கும் இடையிலே இந்த நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது எனது புரிதல். இதைத் தவிர உடும்புக் கதை, வவ்வால் கதை, நாய் கதை என நாவலெங்கும் பல உயிரினங்கள் வந்து போகின்றன. அது போலவே பூக்களும் மரங்களும்.
ஸீரோ டிகிரி ஒரு விதமான சவாலான படைப்பு – ஆனாலும் அதற்குள் செல்ல அறிவுத்திறன் இருந்தால் போதுமானதாக இருந்தது. ஆனால் இங்கு உணர்வு பூர்வமான புரிதலைக் கொண்டே நாவலுக்குள் செல்ல வேண்டும் என்கின்ற சவால் இருக்கிறது. இதோ இந்த ப்ளோரோன் மீன்கள் கதையே ஒரு உதாரணம்.
உணர்வு என்றாலே ஏதோ நோஞ்சான் மேட்டர் என்று பார்க்கிறவன் நான். ஆனால் இந்த நாவல் அப்படிப்பட்ட போலி உணர்வையோ அதீத உணர்வுகளையோ பேசவில்லை என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். இந்தப் பிரபஞ்ச இருத்தலின் மிக அடிப்படையான உணர்வுகளையே சொல்ல வருகிறது இந்த நாவல்.
புரட்சி, கலாசார மாற்றம், அடிமை ஒழிப்பு, அறச்சீற்றம், பெண்ணியம், தத்துவ போதனைகள், ஞானக் கருத்துகள், அடித்தட்டு மக்களின் நிலை, வாழ்க்கையின் அபத்தங்கள், இல்லாமை, ஆன்மிகம் போன்றவற்றைச் சொல்லாமல் எளிமையான – ஆனால் மறந்து போய் விட்ட நுண்ணுணர்வையும் அதன் அடி நாதமான அன்பையும் கொண்டே நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
எனவே – நமக்கு இதுவரை பழக்கப்படுத்தியிருக்கும் வார்த்தை ஜாலங்களைத் தாண்டி காட்சிகளின் மூலம் நமக்குக் கதை சொல்ல முயற்சி செய்கிறது இந்த நாவல்.